Published:Updated:

``பறவைகளை இங்கதான் முழுசாப் புரிஞ்சுக்கிறோம்!" - அரசுப் பள்ளி மாணவர்களின் சூழலியல் கல்வி

மாணவர்களுக்குச் சூழலியல் கல்வி எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகின்றனர் இந்த மாணவர்கள்.

``பறவைகளை இங்கதான் முழுசாப் புரிஞ்சுக்கிறோம்!" - அரசுப் பள்ளி மாணவர்களின் சூழலியல் கல்வி
``பறவைகளை இங்கதான் முழுசாப் புரிஞ்சுக்கிறோம்!" - அரசுப் பள்ளி மாணவர்களின் சூழலியல் கல்வி

மது சுற்றுச்சூழல் பிரச்னைகளை நன்கறிந்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தச் செய்ய ஒட்டுமொத்தமாக இணைந்து பங்களிப்பதுதான் இங்குள்ள மிகப்பெரிய சவாலாகும். பல மொழிகள், மதங்கள் கடந்து நாம் ஒரு சேர நிற்பது, ஒன்றுக்காகத்தான். அது இயற்கையைக் காப்பாற்றுவதும், அதைப்பற்றித் தெரிந்துகொள்வதும்தான். கல்வி அனைவருக்கும் கிடைத்துவிடும். ஆனால் அந்தப் படிப்பினை ஏதாவது வகையில் சமூகத்தில் உட்புகுத்திப் பார்க்கவேண்டும். அதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைப்பதில்லை. இதற்கு ஒரே தீர்வாக அமைவது களப்பணி மட்டும்தான். ஒரு சூழல் வளமானது என்பதை அங்கு வாழும் பறவைகளும் பட்டாம்பூச்சிகளும்தாம் தீர்மானிக்கின்றன.

காட்டுயிர்கள் கணக்கெடுப்பு, விலங்குகள் ஆராய்ச்சி, யானைகள், புலிகள் கண்காணிப்பு எனச் செய்து வரும் உலகளாவிய இயற்கை நிதியம் (WWF - world wide fund for nature india) அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் என்ற இயற்கை சார்ந்த கல்வியை அளித்து வருகிறது. இதுபற்றி மேலும் அறிந்து கொள்ள wwf-ன் சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் சரவணனிடம் பேசினோம் அவர் கூறுகையில், ``முதன்முதலில் இயற்கை பற்றிய கல்வியை நேச்சுரல் க்ளப் மொமன்ட் ஆஃப் இந்தியா மூலம் செயல்படுத்தினோம். அதன் மூலம் மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் கல்வி, களப்பயணம், முகாம் என அனைத்தும் செய்தோம். பிறகு இதில் சில மாற்றங்களைக்  கொண்டுவந்து கடந்த நான்கு வருடங்களாக மாணவர்களுக்கு இயற்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தி வருகிறோம். 

பள்ளி மாணவர்களுக்கிடையே கடந்த பத்து வருடங்களாகக் கானுயிர் விநாடி-வினா போட்டிகள் நடத்தி அவர்களிடம் சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை அதன் வழியாக அதிகரிக்கச் செய்கிறோம். களப்பயணத்தின் மூலம் அவர்கள் புத்தகத்தில் பார்த்த பறவைகள் மற்றும் பல்லுயிரிகளை நேரடியாக வனத்தில் காண்பதால் நெருக்கமாக உணர்கிறார்கள். மேலும் பள்ளிகளில் காணொலி மூலமாகவும், குறும்படம் வாயிலாகவும், மரம் நடுதலாலும் அவர்களுக்குச் சுற்றுப்புறம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சென்னை மற்றும் கோவை பள்ளி மாணவர்களுக்குக் களப்பயணத்தின் வழியாக காட்டுயிர்கள் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறோம்.

கோவையில் மட்டும் 20 மாநகராட்சிப் பள்ளிகளை தேர்வு செய்து களப்பயணத்திற்கு அழைத்துச் செல்கிறோம். அடுத்தபடியாக இப்பள்ளிகளில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி அவர்களைச் சுற்றுப்புறங்களில் இருக்கும் பறவைகளைப் பற்றிக் கணக்கெடுப்பு செய்ய வைக்கிறோம். நாம் ஏற்கெனவே இயற்கையைத் தொலைத்துவிட்டோம். ஆனால், நம் வருங்காலச் சந்ததிகளுக்கு முறையான சுற்றுச்சூழல் கல்வி அளிப்பதன் மூலம் இது சூழல் பாதுகாப்பைச் சாத்தியமாக்கலாம். சுற்றுச்சூழல் அனைவரும் பெரிதும் அக்கறை கொள்ள வேண்டிய ஒரு துறையேயாகும்" என்று நம்மிடம் பகிர்ந்தார்.

மாணவர்களின் இயற்கை ஆர்வம் மற்றும் களப்பயணம் பற்றி பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் அவர்களிடம் பேசினோம். அவர் கூறுகையில், நாம் உயிர் வாழத் தேவையான நீரையும், உயிர்வளியையும் பெற்றுத் தருவது காடுகள்தான். இத்தகைய காடுகள் உயிர் தன்மையுடன் இருக்க காட்டுயிர்கள் அவசியம். நம்மைச் சுற்றியும் உள்ள சூழல் வளம் மிக்கதாக இருக்கிறதா என்பதை அதனுடன் இணைந்து வாழும் பறவை வகைகளின் எண்ணிக்கையும், பட்டாம்பூச்சி வகைகளின் எண்ணிக்கையும் எளிதாகக் காட்டித் தருகிறது.  பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் சுதந்திரமாக வாழ்பவை. வாழ்விடச் சூழலில் அவற்றுக்கு ஆபத்து என்று தெரிந்தால் அவை வேறு இடங்களுக்குப் பறந்து சென்றுவிடும். எனவே, நம்மைச் சுற்றிலும் வாழும் பறவைகளையும், பட்டாம்பூச்சிகளையும் காண்பதின் மூலமாக அப்பகுதியின் மண்வளம், நீர்வளம், காற்று, தாவரங்கள், பூச்சிகள், ஊர்வன போன்றவை எத்தனை ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்பதை எளிதாக அறியலாம். 

மலைவாழ் மக்களும், கிராமப்புற மக்களுமே இன்றைக்கும் இயற்கைக்கு அருகில் வாழும் வாய்ப்பைப் பெற்று உள்ளனர். நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் வாழும் நடுத்தர, எளிய மக்களுக்குச் சூழல் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. அதனால் கோவையில் இருக்கிற அரசுப் பள்ளி மாணவர்களை ஒருநாள் இயற்கை வளம் மிக்க அரசு தோட்டப்பண்ணை போன்ற இடங்களுக்குக் களப்பயணம் அழைத்துச் செல்கிறோம். அங்குள்ள புதிய வகை பறவைகள், பூச்சியினங்கள், பட்டாம் பூச்சிகள், மரங்கள், பூக்கள் என ஒருநாள் முழுவதும் இயற்கையோடு வாழச்செய்கிறோம். பறவையினத்தை எப்படிக் கணக்கெடுப்பு செய்வது, அடையாளம் எப்படிக் காண்பது, அவற்றின்  குணாதிசயங்கள் என எல்லாவற்றையும் முடிந்தளவு கற்றுக்கொடுக்கிறோம். இதன் மூலம் இயந்திரமாக இயங்கும் நகரத்தில் எதை இழக்கிறோம் என்பதை மாணவர்களுக்குப் புரிய செய்கிறோம். அப்போது ஒரு பசுமை நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தெளிவும், பல்லுயிர்ச் சூழலின் அவசியத்தையும் மாணவர்கள் தெளிவாக அறிந்து கொள்கின்றனர். இதுபோன்ற சூழல் அறிவைப் பெற்றுத்தரும் களப் பயணம், பின்னர் அவர்களின் வாழ்வில் ஒரு நாளோடு மட்டும் முடிவதில்லை. அவர்களின் வாழ்நாளெல்லாம் வீடுகளிலும்,பள்ளிகளிலும் தினம்தோறும் பார்க்கும் பறவைகளையும், பட்டாம் பூச்சிகளையும் பற்றி அவர்களும் உணர்ந்து, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பார்கள் என்கிறார் நம்பிக்கையான குரலில்.

அரசுப் பள்ளி ஆசிரியர் மகாதேவி கூறுகையில், ``நாங்கள் புத்தகத்தில் இருக்கும் பாடங்களையும் அதில் உள்ள தாவரங்கள் பற்றியும்தான் சொல்லிக்கொடுக்கிறோம். ஆனால், இந்தக் களப்பயணத்தில் எங்களுடைய மாணவர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி தங்களுடைய திறமைகளையும் இயற்கை சார்ந்த அறிவையும் வளர்த்துக்கொண்டனர். இவர்கள் ஒரு நாளில் இவ்வளவு கற்றுக்கொள்ள முடியும் என்றால் சுற்றுச்சூழல் கல்வியை ஒரு பாடமாக அமைத்து மாதத்திற்கு இரு களப்பயணமாக அறிவித்தால் வருங்கால  மாணவர்கள் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதின் நோக்கத்தைத் தெரிந்துகொள்வார்கள்" என்றார்.

இக்களப்பயணம் பற்றி அரசுப் பள்ளி மாணவன் சுந்தரபாண்டியன் கூறுகையில், ``இயற்கை அதை நேசி என்பது முக்கியக் குறிக்கோள். ஒரு நாள் பயணத்தில் பறவைகள் பற்றியும் பட்டாம் பூச்சிகள் பற்றியும் தெரிந்து கொண்டேன். பறவைகள் குறித்து முழுதாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. காட்டு அணிலான மலபார் அணிலை இதுவரை நான் பார்த்ததில்லை. இன்றுதான் பார்க்கிறேன். பறவைகள் சத்தம், காடுகளின் வாசம் ஆகியவற்றை உணர்ந்தேன். அங்கே ஒரு பறவையின் சத்தம், அது என்ன பறவை என்கிற ஆர்வத்தை எனக்குள் இன்னும் அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் பாடங்களை மட்டுமே படித்த நான் முதல் முறையாக உண்மையான சுற்றுச்சூழல் கல்வியைப் படித்தேன் என்பதில் திருப்தியடைந்தேன்.நான் வருங்காலத்தில் இயற்கை ஆர்வலராக வருவேன்" என்று உறுதியளித்தார்.

மாணவருக்கு நமது சார்பாக ஆயிரம் பூங்கொத்துகள்..!