Published:Updated:

ரூ.5 லட்சத்துக்கு 500cc ஆஃப்ரோடு பைக் - விற்பனைக்கு வந்தது பெனெல்லி TRK502...

ரூ.5 லட்சத்துக்கு 500cc ஆஃப்ரோடு பைக் - விற்பனைக்கு வந்தது பெனெல்லி TRK502...
ரூ.5 லட்சத்துக்கு 500cc ஆஃப்ரோடு பைக் - விற்பனைக்கு வந்தது பெனெல்லி TRK502...

பெனெல்லி இந்தியா நிறுவனத்தின் அட்வென்சர் பைக்குகளான TRK502 மற்றும் TRK502X பைக்குகள் விற்பனைக்கு வந்துவிட்டன. ஸ்டாண்டர்டு மாடலான TRK502, 5 லட்ச ரூபாய் விலைக்கும், டாப் ஸ்பெக் மாடல் TRK502X 5.40 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்ஷோரூம் விலைக்கும் விற்பனைக்கு வந்துள்ளன. இரண்டு பைக்குகளும் தொழில்நுட்ப ரீதியாக ஒன்றுதான் என்றாலும் 502X, ஆஃப் ரோடுக்கு அதிகம் பயன்படும்படியான சில அம்சங்களுடன் வந்துள்ளது. 

மஹாவீர் குழுமத்துடன் இணைந்த பிறகு, பெனெல்லியில் இருந்து விற்பனைக்கு வரும் முதல் பைக் இது. ஸ்டாண்டர்ட் மற்றும் X மாடல் இரண்டிலும் 499.6cc DOHC பேரலல் ட்வின் இன்ஜின் உள்ளது. இது 47.5bhp பவர் மற்றும் 46Nm டார்க் உருவாக்ககூடியது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியில் வருகிறது. ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃபிரேம் மற்றும் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் இதில் இருக்கின்றது. 

502X ஆஃப் ரோடில் அதிகம் பயணிக்க உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 19 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் ஒயர் ஸ்போக் வீல் உள்ளன. 502 மாடலில் அலாய் வீல்ஸ் வருகின்றன. 50மி.மீ USD ஃபோர்க் முன்பக்கமும், மோனோஷாக் சஸ்பென்ஷன் பின்பக்கமும் வருகிறது. பின்பக்க சஸ்பென்ஷனில் Rebound மற்றும் pre-load அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். பிரேக்கைப் பொறுத்தவரை முன்பக்கம் 320 மி.மீ ட்வின் டிஸ்க், பின்பக்கம் 260 மி.மீ டிஸ்க் உள்ளது. ஏபிஎஸ் அஃப் செய்துகொள்ளும் வசதியைக் கொடுத்துள்ளார்கள். 

800 மி.மீ சீட் உயரமும், 190 மி.மீ கிரவுண்டு கிளியரன்ஸும் கொண்டுள்ளது 502. X மாடலில் சீட் உயரம் 840மி.மீ மற்றும் கி.கிளியரன்ஸ் 220மி.மீ உள்ளது. டயரிலும் இரண்டு பைக்குகளுக்கு இடையே வித்தியாசம் இருக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலில்120/70-17 மற்றும் 160/60-17 அளவு கொண்ட பிரெல்லி டயர்கள் உள்ளன. X மாடலில் 110/80-19 மற்றும் 150/70-17 மெட்ஜிலர் டயர்கள் உள்ளன. 235 கிலோ எடை கொண்டுள்ளது TRK502 மாடல்கள். தற்போது செக்மென்ட்டிலேயே அதிக எடை கொண்ட பைக் இதுதான். இதைவிட இருமடங்கு பவர் கொண்ட ட்ரையம்ப் டைகர் 800XCx விட 5 கிலோ எடை அதிகம். 

TRK502 மாடல் பைக்குகள் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, கவாஸகி வெர்சிஸ் 650, SWM சூப்பர் டூயல் T மற்றும் சுஸூகி V Strom 650XT பைக்குகளைவிட, விலை குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.