Published:Updated:

நீதி கேட்டால் இதுதான் கிடைக்கும் - ஷேலா ரஷீத்

நீதி கேட்டால் இதுதான் கிடைக்கும் - ஷேலா ரஷீத்
நீதி கேட்டால் இதுதான் கிடைக்கும் - ஷேலா ரஷீத்

புல்வாமா தாக்குதலுக்குப் பின் நாட்டின் பல்வேறு இடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீரி மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள். டேராடூனில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்த காஷ்மீரி பெண்களுக்கு ஒரு கும்பல் விடுதிக்கு வெளியிலிருந்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ஜே.என்.யூ முன்னாள் மாணவர் தலைவர் ஷேலா ரஷீத். வதந்தி பரப்பியதாகவும், சிறுபான்மை மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் ஷேலா மீது எஃப். ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது டேராடூன் காவல்துறை. எஃப்.ஐ.ஆர் ஆவணத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``நீதி கேட்டால், பா.ஜ.கவின் ஆட்சியில் இதுதான் கிடைக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

புல்வாமா தாக்குதல் நடந்த அடுத்தடுத்த நாள்களில், ஜம்முவில் காஷ்மீரி வணிகர்களையும், மாணவர்களையும் சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் தாக்கியிருக்கிறார்கள். ஜம்மு நகரத்தின் குஜ்ஜார் காலனியில் 15 கார்கள் கொளுத்தப்பட்டிருக்கின்றன. ஹரியானா மாநிலத்தின் வாடகை குடியிருப்புகளில் தங்கியிருந்த காஷ்மீரி மாணவர்கள். தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குள்ளாக விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள், அவர்களது உடைமைகளோடு. யாருடைய கண்களிலும்படாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சமூக வலைதளங்களிலும், தொலைபேசியிலும் காஷ்மீரிலிருந்து நாட்டின் எல்லா மூலைகளுக்கும் செய்திகள் சென்றுகொண்டிருக்கின்றன.

காஷ்மீரி மாணவர்கள் மீதும் மற்றவர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களையும், அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் மன உளைச்சல்களையும் பற்றிச் செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். சொந்த நாட்டு ``தேசபக்தர்களிடம்!” இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் `இஸ்லாமிய தீவிரவாதம்’ என்று டைட்டில் போட்டு வரும் வாட்ஸ் அப் ஃபார்வேடுகளும் சேர்ந்துகொள்கின்றன. செய்தி தொடங்கும்போதும், முடியும்போதும் மூவர்ணக் கொடி எமோஜியுடன் ஒரு ஜெய்ஹிந்த்.

காஷ்மீரில் 30 வருடங்களாக நீடித்து வரும் இந்த ராணுவக் கட்டுப்பாட்டு நிலையில் கூட, 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை பலி கொண்டிருக்கும் இந்தத் தாக்குதல் இந்த நாட்டிற்கு மட்டுமல்ல, மொத்த மனித இனத்துக்குமான சோகம்தான். மக்களுக்கு, முக்கியமாக சமூக வலைதளங்களில் இயங்குபவர்களுக்கு இந்தத் தீவிரவாதத் தாக்குதல் கொடுத்திருக்கும் அதிர்ச்சியைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இந்த செலக்டிவ் தேசபக்தி காஷ்மீரின் சாமான்ய மக்களின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களின்போதும், உள்நாட்டில் வாழ்வாதாரத்திற்காக மக்கள் வதைபடும்போதும், சுடப்படும்போதும், பெரும்பான்மை மதத் தீவிரவாதத்தால் மக்கள் ஒடுக்கப்படும்போதும் வராமல் இருப்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.