Published:Updated:

``நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ சொந்தவீடு இருக்கு?’’ - நெகிழும் வேல்முருகன் #WhatSpiritualityMeansToMe

``நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ சொந்தவீடு இருக்கு?’’ - நெகிழும் வேல்முருகன் #WhatSpiritualityMeansToMe
``நூறு ரூபாயோட வந்தேன்... இப்போ சொந்தவீடு இருக்கு?’’ - நெகிழும் வேல்முருகன் #WhatSpiritualityMeansToMe

``நூறு ரூபா காசோட சென்னைக்குப் பிழைப்பு தேடி வந்த எனக்கு சொந்தவீடும் பி.எம்.டபிள்யூ காரும் இருக்குன்னா அதுக்குக் காரணம் நான் தினமும் கும்பிடுற முருகனோட அருள்தான்’’ கண்கள் அரும்ப, நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் வேல்முருகன். நாட்டுப்புறப் பாடகர், பின்னணிப் பாடகர் என முகங்கள் கொண்ட வேல்முருகன் தீவிர முருகபக்தர். தன் ஆன்மிகத் தேடல் குறித்து விரிவாகப் பேசுகிறார் வேல்முருகன். 

``எனக்குச் சொந்த ஊர் விருத்தாசலத்துக்குப் பக்கத்துல இருக்கிற முதனை கிராமம். அந்தக் காலத்துல திருவண்ணாமலையில கார்த்திகை தீபம் ஏத்துறப்போ எங்க ஊர்லயிருந்து கொண்டுபோற நெய்யைத்தான் முதல்ல ஊத்துவாங்களாம். அதனால எங்க ஊர் பேரு `முதல் நெய்’னு ஆச்சு. காலப்போக்குல `முதனை’னு ஆயிடுச்சு. 

அப்பா தனசேகரன் தவில் வாசிக்கிறவர். எங்க ஊர்ல தைப்பூச விழா ரொம்ப சிறப்பா நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேல், காவடியெல்லாம் எடுத்துக்கிட்டு 18 கிலோ மீட்டர் தூரம் நடந்துபோய் பிரார்த்தனையை நிறைவேத்துவாங்க. ஊரே திரண்டுபோய் கலந்துக்கும். 1980-ல் அப்படியொரு தைப்பூசத்திருவிழா. எங்க அம்மா நிறைமாச கர்ப்பிணியா இருந்ததால திருவிழாவுக்குப் போகமுடியலை. பாட்டி மட்டும் துணைக்கு இருந்தாங்க. 

காலையில 11 மணிக்கெல்லாம் அம்மாவுக்கு வலி வந்துடுச்சு. எங்க பாட்டிதான் பக்கத்துல இருந்து பிரசவம் பார்த்தாங்க. ரத்தவாடைக்கு நாய், பூனை வந்துடக் கூடாதுனு வீட்டைச் சுத்தி மிளகாய் தூளைக் கொட்டிவெச்சாங்களாம். அப்புறம் திருவிழாவுக்குப் போனவங்கக்கிட்ட குழந்தை பொறந்திருக்கிற செய்திய சொல்லி அனுப்பிச்சிருக்காங்க. 

அப்புறம் மைக்குல ``தவில்காரர் தனசேகரன் எங்கிருந்தாலும் வீட்டுக்குச் செல்லவும். அவருக்கு ஆண்குழந்தை பொறந்திருக்கு’’னு சொல்ல, அப்பா வீட்டுக்கு வந்திருக்கார். அன்றைக்குப் பொறந்த குழந்தைதான் நான். பொறக்கும்போதே மைக்குல அறிவிப்பு வந்ததாலோ என்னவோ, நான் இன்றைக்கு மைக்கோடே திரியிறேன். 

பூசத்திருவிழாவுல பக்தர்கள் கொண்டுபோற வேலை குளத்துல வச்சு தீர்த்தமாடுவாங்க. சரியா அந்த நேரத்துல பிறந்ததால எனக்கு `வேல்முருகன்’னு பேர் வெச்சாங்க.
ஸ்கூல் படிக்கும்போது பாடுறது, லீவு நாள்ல ஆடு மாடு மேய்க்கும்போது பாடுறதுனு பாட்டாவே கிடந்தேன். ஐ.டி.ஐ படிச்சிட்டு, மியூசிக்குல இருந்த ஆர்வத்துல அடையாறு இசைப் பயிற்சிக் கல்லூரியில சேர்ந்து படிச்சேன்.
ஒரு முறை ஏவி.எம் ஸ்டூடியோவில விநாடி வினா நிகழ்ச்சிக்கான டிவி ஷோ நடந்துச்சு. எனக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத அந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு ஒரு பாட்டு பாடினேன். 

அந்தப் பாட்டை தற்செயலா கேட்ட டைரக்டர் சசிகுமார் சார் `இந்தக் குரல் நல்லா இருக்கு’னு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்கிட்டே சொல்லியிருக்கார். 
அப்படித்தான் சுப்பிரமணியபுரத்துல `மதுரை குலுங்க’ பாடல் பாடுற வாய்ப்பு கிடைச்சுது. திருவிழா நேரத்துல பொறந்த எனக்கு சினிமாவுல முதல்பாட்டே திருவிழா பாட்டுதான். அதுவும் நான் கும்பிடுற முருகன் பேர் கொண்ட `சுப்பிரமணியபுரம்’ங்கிற படத்துல. இதுவரைக்கும் 300 பாட்டுக்குமேல சினிமாவுல பாடிட்டேன்.   

நூறு ரூபா காசோட சென்னைக்குப் பிழைப்பு தேடி வந்த எனக்கு சொந்தவீடும் பி.எம்.டபிள்யூ காரும் இருக்குன்னா அதுக்குக் காரணம், நான் தினமும் கும்பிடுற முருகனோட அருள்தான். வருஷத்துல அஞ்சாறு மாசம் முருகனுக்கு மாலை போட்டு விரதமிருந்து பழநிக்குப் போயிட்டு வருவேன்...’’ என்று நெகிழ்கிறார் வேல்முருகன்.