Published:Updated:

க்ரெட்டாவுக்குப் போட்டியாக சீனாவிலிருந்து ஒரு எஸ்யூவி?! #MotorVikatanSpyShots #Baojun510

க்ரெட்டா போலவே, Baojun 510 காரிலும் Semi Open பனரோமிக் சன்ரூஃப் இருக்கிறது! இதில் பல விஷயங்கள், Hector எஸ்யூவியில் இருப்பவையே.

க்ரெட்டாவுக்குப் போட்டியாக சீனாவிலிருந்து ஒரு எஸ்யூவி?! #MotorVikatanSpyShots #Baojun510
க்ரெட்டாவுக்குப் போட்டியாக சீனாவிலிருந்து ஒரு எஸ்யூவி?! #MotorVikatanSpyShots #Baojun510

MG மோட்டார்ஸ்... ஜூன் 2019-ல் இந்தியாவில் டயர் பதிக்க இருக்கிறது. ஒவ்வொரு செக்மென்ட்டிலும் ப்ரீமியம் கார்களைக் களமிறக்கும் முடிவில் இருக்கும் இந்த பிரிட்டன் நிறுவனம், இந்தியாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் எஸ்யூவி வகை கார்களையே முதலில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அதற்கேற்ப சர்வதேசச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் Baojun 530 எஸ்யூவியை இந்தியச் சந்தைக்கு ஏற்ப மாற்றியமைத்து, Hector என்ற பெயரில் அதை அந்த நிறுவனம் இங்கே முதல் மாடலாக வெளியிட உள்ளது. தற்போது தீவிரமான டெஸ்ட்டிங்கில் அந்த கார் இருக்கும் நிலையில், மற்றுமொரு எஸ்யூவியையும் (#Baojun510) சத்தமில்லாமல் டெஸ்ட் செய்துகொண்டிருக்கிறது MG மோட்டார்ஸ். புனேவில் இதைப் படம்பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான ஜெகதிஷ் பிரபாகரன். 

Baojun 510: வரலாறு என்ன சொல்கிறது?

டாடாவுக்கு JLR, மஹிந்திராவுக்கு ஸாங்யாங் எப்படியோ, SAIC குழுமத்துக்குக் (Shanghai Automotive Industry Corporation) கீழே வருபவைதான் MG (Morris Garages) மற்றும் Baojun ஆகிய கார் நிறுவனங்கள். ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, காரின் பின்பக்கத்தில் LHD (Left Hand Drive) என எழுதப்பட்டிருக்கிறது. எனவே, இந்தியச் சாலைகளுக்கு ஏற்றபடியாக இது இருக்கிறதா என்பதற்கான சோதனை ஓட்டம் செய்யப்படுகிறது என எடுத்துக்கொள்ளலாம். 2016-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற Auto Guangzhou மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட Baojun 510, கடந்தாண்டில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டது. 4,220மிமீ நீளம்/1,740மிமீ அகலம்/1,615மிமீ உயரம்/2,550மிமீ வீல்பேஸ் எனும் அளவில் இருக்கும் இந்த எஸ்யூவி, க்ரெட்டாவுக்குச் சமமான சைஸில் உள்ளது (4,270 மிமீ நீளம்/1,780மிமீ அகலம்/1,665மிமீ உயரம்/2,590மிமீ வீல்பேஸ்). ஆகவே கேபின் இடவசதி மற்றும் சிறப்பம்சங்களில், ஹூண்டாய் அளவுக்கு Baojun 510 இருக்கும் என நம்பலாம். 

ஸ்பை படங்களில் என்ன தெரிகிறது?

லேட்டஸ்ட் கார்களில் இருப்பதுபோலவே, Baojun 510 எஸ்யூவியிலும் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் DRL இடம் பெயர்ந்திருக்கின்றன. இவற்றை க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய அகலமான க்ரில் ஒன்றிணைக்கிறது. எஸ்யூவி என்பதை உணர்த்தும் விதமாக, பம்பர்களில் Diffuser இடம்பெற்றுள்ளது. அலாய் வீல்கள், இண்டிகேட்டர்களுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக், LED டெயில் லைட்ஸ், பின்பக்க வைப்பர் மற்றும் Defogger, Shark Fin Antenna, ரூஃப் ரெயில் ஆகியவை வெளிப்புற அம்சங்கள். சீனாவில் ஸ்போர்ட்டியான டிசைனுக்குப் பெயர்பெற்ற Baojun 510 எஸ்யூவியின் சிறப்பான NVH அளவிற்கு, 34 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உயர்ரக Sound Insulation மெட்டீரியல்கள் உதவுகின்றன. சீனாவில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு வரும் முன்பு, 4 லட்சம் கிமீக்கு டெஸ்ட் செய்யப்பட்டது. தவிர இன்ஜினை மட்டுமே, 10 மணிநேரத்துக்குப் பரிசோதனை செய்திருக்கிறது Baojun. க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப காரின் சேஸி மற்றும் கட்டுமானத்தை, அந்த நிறுவனப் பொறியாளர்கள் குழு அமைத்திருக்கிறது.  

காரின் கேபினில் என்ன ஸ்பெஷல்?

க்ரெட்டா போலவே, Baojun 510 காரிலும் Semi Open பனரோமிக் சன்ரூஃப் இருக்கிறது! இதில் பல விஷயங்கள், Hector எஸ்யூவியில் இருப்பவையே.

இன்ஜின் - கியர்பாக்ஸ் 

115bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மட்டுமே,  Baojun 510 எஸ்யூவியில் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் Hector காரிலும் இடம்பெறும். சீனாவில் இதே இன்ஜின், ஸ்டீயரிங் வீலில் இருக்கும் Paddle Shifters உடன்கூடிய iAMT ஆப்ஷனுடனும் Baojun 510 விற்பனையாகிறது. இந்தியாவில் ஒரு எஸ்யூவியின் வெற்றிக்குத் துணைநிற்பது டீசல் இன்ஜின் என்ற அடிப்படையில், இதிலும் டீசல் இன்ஜின் பொருத்தப்படலாம். அது Hector எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினாக இருக்கலாம். ஒருவேளை இது பயன்பாட்டுக்கு வந்தால், Baojun 510 சைஸை வைத்துப் பார்க்கும்போது 140bhp பவரை வெளிப்படுத்தும் விதத்தில் இன்ஜின் De-tune செய்யப்படலாம். ஏனெனில் அளவில் பெரிய Hector-ல் இதே இன்ஜின், 170bhp பவரை வெளிப்படுத்தும்.

3 மேனுவல் வேரியன்ட்கள் மற்றும் 2 ஆட்டோமேட்டிக் வேரியன்ட்கள் என மொத்தம் 5 வேரியன்ட்களில் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது Baojun 510. 2017-ம் ஆண்டின் முதல் 8 மாதத்தில் மட்டும், 1,53,771 கார்களை சீனாவில் விற்பனை ஆகியிருந்தன! அதாவது அந்தச் சந்தையில் அதிகமாக விற்பனையாகும் Baojun நிறுவனத்தின் இரண்டாவது மாடல் இதுதான். MG மோட்டார் இந்தியா (SAIC)-க்குச் சொந்தமாக குஜராத்தின் Halol நகரத்தில் இருக்கும் கார் தொழிற்சாலையில்தான், Hector மற்றும் Baojun 510m உற்பத்தி செய்யப்படும். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, சரியான விலை - போதுமான டீலர் நெட்வோர்க் - சிறப்பான பிராண்ட் மதிப்பு - கட்டுப்படியாகக் கூடிய பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றை MG மோட்டார்ஸ் இந்தியாவில் ஒருசேர வழங்கினால், இந்த எஸ்யூவி வெற்றியடைவதற்கான சாத்தியம் இருக்கிறது.