Published:Updated:

இந்தப் பள்ளியே பாடம்தான்!

இந்தப் பள்ளியே பாடம்தான்!

பிரீமியம் ஸ்டோரி

குறைந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதற்காகப் போராடி வரும் அரசுப் பள்ளிகள், நூறு சதவிகித ரிசல்ட் காண்பித்துக் கல்லா கட்டுவதற்காக ராணுவக் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் தனியார் பள்ளிகள் இரண்டுவகைகளையும் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில், கேரளாவில் உள்ள ஓர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், அந்தப் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது, மருத்துவ உதவி செய்வது என்று அசத்தி வருகின்றனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் இருக்கிறது சிட்டிலஞ்சேரி கிராமம். அங்கு வயல்கள் சூழ அமைந்திருக்கிறது எம்.என்.கே.எம் மேல்நிலைப்பள்ளி. அரசு உதவி பெற்று அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளியில்தான், மதிப்பெண்ணைக் கடந்து, சக மனிதனின் வலியைப் பகிரும் வாழ்க்கைப் பாடம் எடுத்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நுழைந்ததும், காய்கறித் தோட்டம், வயல்வெளி போன்றவை வரவேற்க,  “நாம் முகவரி மாறி வந்துவிட்டோமா?” என்ற சந்தேகத்தை வரவைத்தது. “சார், இது ஸ்கூல்தான்” என்று மாணவர்கள் உறுதி செய்தபிறகு உள்ளே சென்று பேசினோம்.

“என்.எஸ்.எஸ் மூலம் பல்வேறு சமூகச் சேவைகளைச்  செய்துவருகிறோம். மாணவர்களே தங்களது சொந்த உழைப்பின் மூலம் ஐந்து பேருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். இதற்காக, விவசாயம் செய்வது, பினாயில், சோப், ஊதுபத்தி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வது என்று முழுக்க முழுக்க மாணவர்களின் பங்களிப்பில் இந்தப் பணிகள் நடந்துவருகின்றன. இதுதவிர, வடக்கஞ்சேரிப் பகுதியில் பேருந்து நிறுத்தத்துக்கான நிழற்குடை கட்டித்தந்தது, காலே வைக்க முடியாமல் குப்பைகளால் நிரப்பப்பட்டிருந்த சிட்டிலஞ்சேரிப் பேருந்து நிலையத்தை பளிச்சென மாற்றியமைத்தது என்று ஏராளமான பணிகள் செய்துவருகின்றனர். மாணவர்கள் வெறும் நான்கு சுவர்களில் அமர்ந்து பாடம் படித்து, தேர்வு எழுதி வந்தால் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் எப்படித் தெரியும்?  சமூகத்தில் என்ன மாதிரியான பிரச்னைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து, அதைச் சரி செய்வதற்கான வழியையும் இப்போதே தெரிந்துகொண்டால், படித்து முடித்துவிட்டு வெளியில் வரும்போது மாணவர்கள் எந்தப் பிரச்னையையும் சமாளிக்கும் பக்குவத்தைப் பெற்றிருப்பார்கள்.

இந்தப் பள்ளியே பாடம்தான்!

எங்கள் பள்ளி 11.20 ஏக்கரில் இயங்கிவருகிறது. இதனால், பள்ளி வளாகத்தில் வைத்தே காய்கறி, நெல் விவசாயம் செய்துவருகிறோம். இதையெல்லாம் மாணவர்கள்தான் நடத்தி வருகின்றனர். இதில் கிடைக்கும் பணத்தை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்திவருகிறோம். இங்கு நானூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 95 சதவிகிதம் ரிசல்ட் கொடுத்து வருகிறோம்”  என்று அழுத்தமான குரலில் சொல்லி முடித்தார் தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன்.

“மாணவர்களால் இதெல்லாம் சாத்தியம் தானா?” என்று நாம் கேட்டதற்கு, பள்ளியில் சிறப்பு அனுமதி வாங்கிவிட்டு நம் கண்முன் தங்களது பணிகளை வேக வேகமாகச் செய்யத் தொடங்கினார்கள்.

மாணவிகள் பினாயில், சோப்பு, ஊதுபத்தி தயாரிக்கும் வேலைகளில் இறங்க, மாணவர்கள் காய்கறித் தோட்டம், கோழி வளர்ப்பு போன்றவற்றுக்கு நம்மை நேரடியாக அழைத்துச் சென்று களப்பணியில் இறங்கினார்கள். மாணவர்கள் களப்பணியில் இறங்கும்போது, எந்த இடத்திலும் ஒரு நிமிடம்கூட நிற்காமல், சுறுசுறுப்பாக நடந்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டே இருந்தார் சோலி செபாஸ்டியன் டீச்சர். அவர்தான் என்.எஸ்.எஸ் பிரிவுக்குப் பொறுப்பு.

“என்.எஸ்.எஸ் மாணவர்கள் தங்களது பகுதியில் உள்ள ஓர் ஏழைக் குடும்பத்தைக் கண்டறிந்து, அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்குமே மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால், நாங்கள் ஐந்து பேருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளோம். முதலில் இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்தோம். நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். அங்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்தோம். மரம் நடுவது, அங்கன்வாடி கட்டடங்களைச் சீரமைப்பது, பிளாஸ்டிக் தடுப்பு குறித்து விழிப்புணர்வு தருவது என்று செய்துவந்தோம். ஐந்து பேருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளோம். இதற்கு நில தானம், கட்டுமான உபகரணங்கள் என்று பல்வேறு இடங்களிலிருந்து ஸ்பான்சர்கள் கிடைத்தன.  மொத்தம் இருபத்தைந்து லட்சம் ரூபாய் செலவானது.

கேரள வெள்ளத்தின்போது, எங்கள் மாணவர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். புற்றுநோயாளிகள், டயாலிஸிஸ் நோயாளிகள் என்று தேடி தேடி அவர்களுக்கான மருத்துவ உதவி செய்துவருகின்றனர். நாம் மனது வைத்தால் இதற்கு மேலும் செய்ய முடியும்.   மொபைல் போனும், பாடத்திட்டமும் மட்டுமே வாழ்க்கை இல்லை. நாம் சுயநல வாழ்க்கைக்கு மாறிவருகிறோம். சமூக அக்கறை என்பது மிகவும் குறைந்துவிட்டது. எனவே, இதுபோன்ற விஷயங்களில் மாணவர்களைக் கவனம் செலுத்த வைப்பதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்” என்று உறுதியாகச் சொல்கிறார் சோலி செபாஸ்டியன்.

“நான் ப்ளஸ் டூ படிக்கிறேன். என்.எஸ்.எஸ்-இல் இருப்பதால், தினசரி வீட்டுக்குச் செல்ல இரவு 8 மணி ஆகிவிடும். விடுமுறை நாள்களிலும் இங்கு வந்துவிடுவேன். இதனால், எனக்குப் படிப்பு வராது என்று சொல்வார்கள். ஆனால், நான் படிப்பில் 96 சதவிகிதம் மதிப்பெண் எடுத்துள்ளேன். இங்கு நாங்களே விவசாயம் செய்யப் பழகிவிட்டோம். நாங்கள் தத்தெடுத்துள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குத் தோட்டம் அமைத்துக் கொடுத்துள்ளோம்.

இந்தப் பள்ளியே பாடம்தான்!

எங்கள் பள்ளிக்கு அருகே, ஒருவரின் வீடு தீ விபத்தில் எரிந்துவிட்டது. அந்த வீட்டில் இருந்த சிறுமி தீக்காயங்களால் இரண்டு ஆண்டுகள் படுத்த படுக்கையாகிவிட்டாள். நாங்கள், அவர்களுக்கு வீடும் கட்டிக் கொடுத்து, அந்த சிறுமி நலம் பெற மருத்துவ உதவியும் செய்தோம். தற்போது, அந்தச் சிறுமி பூரண குணமாகி எங்களது பள்ளியிலேயே படித்துவருகிறார். அந்த வீட்டின்  புதுமனை புகுவிழாவின்போது, ‘நீங்கதான்பா எங்களுக்குத் தெய்வம்’ என்று அந்தப் பாட்டி கண்கலங்கியபடி சொன்னார். அவர் சொன்ன அந்த நொடி, எங்களது எல்லா வலிகளும் பறந்து, தெய்வத்தை நாங்கள் உணர்ந்தோம். வெறும் படிப்பின் மூலம் மட்டுமே இந்த அனுபவங்களைப் பெற முடியாது. கல்வியை மட்டும் நோக்கி ஓடுவதால் பல பெரிய  கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்துவிட்டது. எனவே, என்.எஸ்.எஸ் என்பது மாணவர்களுக்கு அவசியம். அனைத்துப் பள்ளிகளிலும் இதை எட்டாம் வகுப்பில் இருந்தே அமல்படுத்த வேண்டும். அப்போது இன்னும் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும்” என்று நம்பிக்கையுடன் முடித்தார் மாணவர் பிரனேஷ்.

“சின்ன வயதிலிருந்தே சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை. இதனால், என்.எஸ்.எஸ்-இல் சேரலாம் என்று நினைத்தபோது பலர், ‘வேண்டாம், படிப்பு கெட்டுவிடும்’ என்று கூறினர். நண்பர்கள், டீச்சர் நம்பிக்கை கொடுத்தால்தான் அவற்றையெல்லாம் கடந்து என்.எஸ்.எஸ் வந்தேன். முதலிலெல்லாம் மேடை ஏறுவதற்கே நடுக்கமாக இருக்கும். தற்போது, மற்ற மாணவர்களுக்கும், கிராமப் பகுதிகளில் உள்ள சிறுவர்களுக்கும் என்னால் ஆலோசனை வழங்க முடிகிறது. நண்பர்களுடன் ஆழமாகப் பழக முடிகிறது.

சிறிய குடிசை வீட்டில் இருப்பவர்கள் எங்களைச் சிரித்த முகத்துடன் வரவேற்று, எங்கள் பொருள்களை நாங்கள் சொன்ன தொகையைவிட, அதிக விலை கொடுத்து வாங்கினார்கள். பங்களாவில் விற்கச் செல்லும்போது, ஒரு மாதிரி பார்த்துவிட்டு, டபார் என்று கதவை அடைப்பார்கள். மனிதர்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை உணர முடிந்தது. எல்லாம் முடிந்து, நாங்கள் கட்டி முடித்த வீட்டுக்குள் நுழைந்தபோது கிடைத்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை” என்று சொன்ன பிளஸ் 1 மாணவி ஸ்நேகா கண்களில் அவ்வளவு பரவசம்.

கல்வியின் அர்த்தம் என்பதை உணர்த்தும் இவர்களே மாண்புமிகு மாணவர்கள்.

இந்தப் பள்ளியே பாடம்தான்!

இது தமிழரின் விதை!

எம்.
என்.கிருஷ்ணய்யர் என்பவரால் தொடங்கப்பட்டது இந்தப் பள்ளி.  அவரின் பூர்வீகம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலம் கிராமம். தொழிலுக்காக, அவர்களின் குடும்பம் அங்கிருந்து சிட்டிலஞ்சேரிக்கு நகர்ந்துள்ளது. இந்தப் பள்ளி தொடங்கப்பட்ட போது, இந்தப் பள்ளி தமிழகத்தில்தான் இருந்தது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, இந்தப் பகுதி கேரளாவுக்குச் சென்றுவிட்டது. தற்போது, எம்.என்.பாலசுப்பிரமணியம் என்பவர் இந்தப் பள்ளியின் தாளாளராக இருக்கிறார்.

- இரா.குருபிரசாத், படங்கள்: கே.அருண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு