Published:Updated:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை அனுமதிக்க கூடாது  - பி.சி.சி.ஐ. கடிதம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை அனுமதிக்க கூடாது  - பி.சி.சி.ஐ. கடிதம்!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை அனுமதிக்க கூடாது  - பி.சி.சி.ஐ. கடிதம்!

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ. அமைப்பு தீர்மானித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், கடந்த 14-ம் தேதி நடைபெற்ற தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இத்தாக்குதலுக்கு, பாகிஸ்தானின் ஜெய்ஷ்  இ  முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சையதுக்கு, பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு அளிப்பதை இந்தியா உட்பட பெரும்பாலான உலக நாடுகள் கண்டித்துள்ளன. புல்வாமா தீவிரவாதத் தாக்குதலின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 200 சதவிகிதம் வரி விதித்து மத்திய அரசு அதிரடி காட்டியது. இத்தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பு இருப்பதை உறுதி செய்யும் ஆவணங்களை சர்வதேச நாடுகளின் பார்வைக்கு இந்தியா கொண்டு சென்றுள்ளது. உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடைபெறும் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பி.சி.சி.ஐ. அமைப்பு கடிதம் எழுத முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை நடைபெறவுள்ள பி.சி.சி.ஐ. உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், பாகிஸ்தானை தடை செய்யக் கோரும் தீர்மானம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கானின் புகைப்படம் கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் கிளப் அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டது. இந்த நிலையில், பி.சி.சி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களும், நினைவுப் பரிசுகளும் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டுள்ளன.