Published:Updated:

6 கேமராக்கள்; ஃபோல்டு டிஸ்ப்ளே... புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்த சாம்சங் #GalaxyFold

ஸ்மார்ட்போன்களின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது சாம்சங்.

6 கேமராக்கள்; ஃபோல்டு டிஸ்ப்ளே... புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்த சாம்சங் #GalaxyFold
6 கேமராக்கள்; ஃபோல்டு டிஸ்ப்ளே... புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்த சாம்சங் #GalaxyFold

மொபைல் சந்தையைப் பொறுத்தவரையில் அதிகம் கவனிக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுக விழாக்களாக இரண்டைக் கூறலாம் ஒன்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுக நிகழ்ச்சி; மற்றொன்று கூகுள் பிக்ஸல். இவற்றிற்கடுத்தபடியாக அதிகம் கவனம் ஈர்ப்பது சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சிதான். வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்புகள் இந்த வருடம் ரொம்பவே அதிகம். இந்த வருடத்திற்கான கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.30  மணிக்கு சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கேட்ஜெட்களின் பட்டியல் இங்கே.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ( Samsung Galaxy Fold)

நிகழ்ச்சியில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்டது இந்த ஸ்மார்ட்போன்தான். டிஸ்ப்ளேவை இரண்டாக மடக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இது. இந்த ஸ்மார்ட்போனை பல வருடங்களாகவே உருவாக்க முயற்சி செய்து வந்தது சாம்சங். இறுதியாக தற்போது அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இரண்டு சிறிய ஸ்மார்ட்போன்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்தது போலத் தோற்றமளிக்கிறது கேலக்ஸி ஃபோல்டு. வெளிப்புறத்தில் உள்ள பகுதியில் 4.6-இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. அப்படியே திருப்பினால் சாதாரண ஸ்மார்ட்போனைப் போன்ற பின்புறம் இருக்கிறது. இதன் வெளிப்புறத்தில் இருக்கும் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்த முடியும் என்பதால் அதுவே ஒரு ஸ்மார்ட்போனைப் போலத்தான் செயல்படுகிறது.

இது மடக்கி வைக்கப்பட்ட போது கையடக்கமாக இருக்கும். பெரிய திரை தேவைப்படும் பட்சத்தில் விரித்துக் கொள்ள முடியும். அப்போது 7.3 இன்ச் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்த முடியும். ஒரு நாளைக்கு 100 தடவைக்கு மேல் இதை மடக்க வேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதன் மடக்கும் வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறது சாம்சங். எனவே, எத்தனை தடவை இதைப் பயன்படுத்தினாலும் பிரச்னை ஏற்படாது. பெரிய திரை இருப்பதால் சிறப்பான முறையில் திரை அனுபவத்தைப் பெற முடியும். மேலும், இதில் ஒரே நேரத்தில் மூன்று ஆப்களையும் பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்போனில் மொத்தம் ஆறு கேமராக்கள் உள்ளன. முன்புறமாக ஒன்று, பின்புறம் மூன்று மற்றும் உட்புறமாக இரண்டு என ஸ்மார்ட்போனின் அனைத்துப் பக்கங்களிலும் கேமராக்கள் உள்ளன.

12 GB ரேம் மற்றும் 512 GB இன்டர்னல் மெமரி இதில் உள்ளது. மேலும் 4,380 mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியானதிலேயே விலை அதிகமான சாம்சங் ஸ்மார்ட்போன் இதுவாகத்தான் இருக்கும். இதன் விலை $1,980 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 1.4 லட்சத்தைத் தொடும். கேலக்ஸி ஃபோல்ட் மூலமாக அடுத்த தலைமுறைக்கான புதிய ஸ்மார்ட்போன் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.

இந்த நிகழ்ச்சியில் அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட்டது S10 பிளஸ் ஸ்மார்ட்போன். இதுவரை வெளியான கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் முற்றிலுமாக புதிய வடிவமைப்பைக் கொண்டது. இதற்கு முன்பு வெளியான கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் நாட்ச் இருந்ததில்லை. இந்த முறையும் இல்லை அதற்குப் பதிலாக டிஸ்ப்ளேவில் கேமராவுக்கு மட்டும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேவில் வலது மூலையில் டூயல் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற சென்சார்கள் அனைத்தும் டிஸ்ப்ளேவுக்கு அடியில்தான். எப்போதும் பின்புறமாக இருக்கும் பிங்கர் பிரின்ட் சென்சாருக்குப் பதிலாக அல்ட்ராசோனிக் சென்சாரை இந்த ஸ்மார்போனில் கொடுத்துள்ளது சாம்சங். டிஸ்ப்ளேவுக்கு அடியில் மற்ற ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சென்சார் போல இது கிடையாது முற்றிலும் மேம்பட்டது. எனவே இதனால் பாதுகாப்பும் அதிகம் என்கிறது சாம்சங். 

6.4- இன்ச் QHD+ AMOLED டிஸ்ப்ளே இதில் உள்ளது. பின்புறமாக மூன்று கேமராக்களும் முன்புறம் டூயல் கேமராவும் இதில் இருக்கிறது. 12 GB,8 GB ரேம் மற்றும் 512,128 / 512GB மற்றும் அதிகபட்சமாக 1TB இன்டர்னல் மெமரி கொண்ட வேரியன்ட்டும் விற்பனைக்கு வருகிறது. இதில் 4,500 mAh பேட்டரி இருக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் மட்டுமன்றி இதில் உள்ள பவர் ஷேரிங் தொழில்நுட்பம் மூலமாக மற்ற வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட மற்ற கேட்ஜெட்களையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். மற்ற இரண்டு் ஸ்மார்ட்போன்களான S10 மற்றும் S10 E ஆகியவற்றுக்கும் இடையே சில மாற்றங்கள் மட்டுமே உள்ளன. மூன்று ஸ்மார்ட்போன்களிலும் Exynos 9820 என்ற புராஸசரே பயன்படுத்தப்பட்டுள்ளது. S10 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவும், S10 E-யில் 5.8 இன்ச் டிஸ்ப்ளேவும் உள்ளது. S10 E ஸ்மார்ட்போனில் மட்டும் ஃபிங்கர் பிரின்ட் சென்சர் பவர் பட்டனுடன் இணைத்து தரப்பட்டுள்ளது. இதில் பின்புறம் டூயல் கேமராவும் முன்புறம் ஒரு கேமராவும் தரப்பட்டள்ளது. 3,100 mAh பேட்டரி இதில் உள்ளது. மூன்று ஸ்மார்ட்போன்களிலும் விலை குறைவானது S10 E தான். இதன் விலை $749.99 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 53,300 ரூபாய். 

அடுத்ததாக S10 ஸ்மார்ட்போனின் விலை $899.99 டாலர்கள், இந்திய மதிப்பில் 63,000 ரூபாய். S10 ஸ்மார்ட்போனின் விலை $ 999.99 டாலர்கள், இந்திய ரூபாய் மதிப்பில் 71,000. S10 5G என்ற 5G தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியானாலும் அதன் விற்பனை குறித்த தகவல்கள் இல்லை. இவை தவிர புதிய ஸமார்ட் வாட்ச், பிட் பேன்ட் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகியவையும் நேற்றைய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன.