Published:Updated:

`விவசாயிகளுக்கு நிலத்தை கொடுங்கள்!' - சிமென்ட் ஆலைக்கு எதிராக கொந்தளித்த வேல்முருகன்

`விவசாயிகளுக்கு நிலத்தை கொடுங்கள்!' - சிமென்ட் ஆலைக்கு எதிராக கொந்தளித்த வேல்முருகன்
`விவசாயிகளுக்கு நிலத்தை கொடுங்கள்!' - சிமென்ட் ஆலைக்கு எதிராக கொந்தளித்த வேல்முருகன்

``இம்மக்கள் அழிவதற்கு முக்கியக் காரணம் சிமென்ட் ஆலைகள்தான். விவசாயிகளை மிரட்டிக் குறைந்த விலையில் நிலங்களை அபகரித்திருத்து வைத்திருக்கிறார்கள். இதைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் இல்லையேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்'' என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார் வேல்முருகன்.

அரியலூர் அண்ணா சிலை அருகில் சிமென்ட் ஆலைகளைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்பு வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அரியலூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகளும் 166-க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பல்வேறு நோய் நொடிகளைச் சுமந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த சிமென்ட் ஆலைகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சுரண்டி பிழைத்துக்கொண்டிருக்கிறது. நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதே போல் சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் கனரக வாகனங்களால் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சிமென்ட் ஆலைகள் சுண்ணாம்புக் கல் சுரங்கத்திலிருந்து இயக்கப்படும் கனரக வாகனங்களுக்குத் தனியாகச் சாலை அமைத்து இயக்கிக்கொள்ள வேண்டும்.

அதேபோல் விவசாயிகளை ஏமாற்றிக் குறைந்த விலைக்கு வாங்கிய நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50 லட்சம் அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டும். சிமென்ட் ஆலைகள் ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் நீர்நிலைகளை மாவட்ட நிர்வாகம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கட்டாய வேலைவாய்ப்பு சட்டம் இயற்ற வேண்டும். தனியார் மற்றும் அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு 80 சதவிகித வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 28-ம் தேதி ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்படும்'' என எச்சரித்தார்.