Published:Updated:

``ஷூட்டிங்குக்காக கைதட்டி காசு வாங்கின நிமிஷத்தை மறக்க முடியாது!''- திருநங்கை ஜீவா

``ஷூட்டிங்குக்காக கைதட்டி காசு வாங்கின நிமிஷத்தை மறக்க முடியாது!''- திருநங்கை ஜீவா
``ஷூட்டிங்குக்காக கைதட்டி காசு வாங்கின நிமிஷத்தை மறக்க முடியாது!''- திருநங்கை ஜீவா

``ஷூட்டிங்குக்காக கைதட்டி காசு வாங்கின நிமிஷத்தை மறக்க முடியாது!''- திருநங்கை ஜீவா

பேருந்துகளிலோ அல்லது ரயில்களிலோ பயணம் செய்யும்பொழுது நம் அருகே ஒரு திருநங்கை வந்து கைதட்டி காசு கேட்கும்போது நாம் என்ன செய்வோம். சிலர் அவர்களிடமிருக்கும் சில்லறைகளைக் கொடுப்பார்கள். சிலர் சிடு சிடுவென முகத்தை வைத்துக்கொள்வார்கள். வேறு சிலரோ தூங்குவதுபோல நடிப்பார்கள். 'ஏம்மா எதுக்கு உங்களுக்கெல்லாம் இப்புடி ஒரு பொழப்பு. எங்கேயாவது போய் வேலை பாத்து பொழைச்சுக்கலாமே' என்று வெளிப்படையாகவே அவர்களைத் திட்டுபவர்களும் உண்டு. ஆனால், அவர்கள் ஏன் அப்படி கைதட்டி காசு கேட்கிறார்கள். தவறு யாரிடத்தில் இருக்கிறது. திருநங்கைகள் செய்யும் தவறெல்லாம் நாம் செய்யும் ஏதோ ஒரு தவற்றின் எதிர்வினைதானே என்பதை உணர வைத்திருக்கிறது 'பிளாட்ஃபார்ம் நம்பர் 9' என்ற குறும்படம். 

``உண்மையிலேயே நான் இந்த ஸ்க்ரிப்ட்ல நடிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டேன். ஏன்னா, எங்க திருநங்கை சொசைட்டி இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா முன்னோக்கி வந்துக்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல திரும்பவும் பிச்சை எடுக்கிறது, பாலியல் தொழில் பண்றது மாதிரியான கேரக்டர்ல நடிச்சு நம்ம சொசைட்டிய ஏன் நாமளே கலங்கப்படுத்தணும்னு நினைச்சேன். ஆனாலும், அமர் என்னை விடவே இல்ல. அதனால, ஒரு ரெண்டு மாசம் டைம் வேணும்னு சொல்லியிருந்தேன். ஆறு மாசம் ஓடிடுச்சு. அப்பறம்தான் நாம ஒரு ஆர்ட்டிஸ்ட்தானே. எந்தக் கேரக்டர் கொடுத்தா என்ன. நாம அதுல நடிச்சிக்கொடுக்கிறது மட்டும்தான் நம்ம வேலைன்னு நினைச்சு ஓ.கே சொன்னேன்.

அடுத்த ரெண்டாவது நாளே ஷூட்டிங். முதல் நாள் ஷூட்டிங்கே ட்ரெயின்ல பிச்சை எடுக்கிறதுதான். ஆனா, ட்ரெயின்ல இருந்த யாருக்கும் ஷூட்டிங்னு தெரியலை. நான் சீரியஸாவே எல்லார்கிட்டயும் போய் கைதட்டி காசு கேட்டேன். உண்மையிலேயே நான் காசு கேட்குறதா நினைச்சு எல்லாரும் காசு போட்டாங்க. நான் எதுவுமே கண்டுக்காம வாங்கிட்டுப் போயிட்டேன். என்னோட டயலாக் சீன் வந்தப்போ உணர்ச்சிவசப்பட்டு வேகமா கத்தினேன். அப்போதான் எல்லாரும் செம ஷாக் ஆனாங்க. என்னடா இந்தப் பொண்ணு இவ்வளவு நேரமா அமைதியா காசு வாங்கிட்டுப் போயிட்டு அந்தப் பையன்கிட்ட போயி சத்தம் போடுதேன்னு தப்பா நினைச்சாங்க. அப்பறமாதான் எல்லாருக்கும் அது ஷூட்டிங்னு தெரிய வந்துச்சு.

என்னதான் ஷூட்டிங்குக்காக இருந்தாலும் நான் கை தட்டி காசு வாங்கின அந்த நிமிஷத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது.  நான் ஒரு திருநங்கைதான். ஆனா, என்னிக்குமே யார்கிட்டயும் இப்படி கை தட்டி காசு கேட்டதில்ல. அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அடுத்த நாள் ஷூட்டிங்ல செக்யூரிட்டி வந்துட்டாரு. பசங்க எல்லாரும் அமைதியா உக்காந்துட்டாங்க. டி.டி.ஆர் என்கிட்ட வந்து என்னம்மா புதுசா இருக்க. எந்த ஏரியான்னு கேட்டாரு. சார், நானே புதுசு சார். விட்டுருங்க சார்னு சொல்லிட்டு ட்ரெயின் நின்னதும் இறங்கி ஓடி வந்துட்டேன். இந்த மாதிரி நிறைய அனுபவம் புதுசா இருந்துச்சு. அதோட, என்னைப் பாத்து கொரங்குக்கு புடவை கட்டுன மாதிரி இருக்க. நீ எல்லாம் எப்படிசினிமால சாதிப்பன்னு சொன்னவங்களுக்கு மத்தியில இன்னிக்கு ஒரு ஆர்ட்டிஸ்ட்டா நான் எல்லார் மனசுலயும் இடம்பிடிச்சிருக்கேன். இதோட, இன்னும் நிறைய சோஷியல் கண்டென்ட் பிலிம்ஸ்ல நடிச்சு எனக்கான இடத்தைத் தக்க வெச்சிக்கணும்னு நினைக்கிறேன். எங்களைக் கேலி பண்றதுக்காகவே ஒன்பது நம்பரை யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதை உடைக்கணும்னு  நினைச்சுத்தான் இந்த டைட்டிலுக்கு ஓ.கே சொன்னோம்” என்கிறார் திருநங்கை ஜீவா சுப்பிரமணியம். 

'ஏன் தம்பி ரேஷன் கார்டு, அரிசி, பருப்பு, கல்வி இதெல்லாம் உங்களுக்கு இலவசமா கிடைச்சா அதை உரிமைன்னு சொல்லுவீங்க. அதுவே எங்களுக்குக் கிடைச்சா அதுக்கு பேரு சலுகையா' என்றொரு வசனம் இப்படத்தில் வரும். ஜீவாவும் நம்மிடம் அதையேதான் கேட்கிறார். ``எங்களுக்கு இந்தச் சமூகத்து மேலதான் கோவம். நீங்க எங்களை சமமா நடத்துனீங்கன்னா நாங்க ஏன் உங்க மேல கோவப்படப் போறோம். எங்களை எப்போ உங்கள்ல ஒருத்தரா மதிக்கப்போறீங்க”. அவரின் இந்தக் கேள்விக்கு நம்மிடம்தான் பதில் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு