Published:Updated:

ஆக்கிரமிப்பில் கோவை கருமத்தம்பட்டி சாலை... துணைபோகும் அரசியல் கட்சிகள்!

ஓரிடத்தில் 10 விபத்துகள் நடந்தாலே, அதை மார்க் செய்து விபத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இங்கு 12 பேர் உயிரிழந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

ஆக்கிரமிப்பில் கோவை கருமத்தம்பட்டி சாலை... துணைபோகும் அரசியல் கட்சிகள்!
ஆக்கிரமிப்பில் கோவை கருமத்தம்பட்டி சாலை... துணைபோகும் அரசியல் கட்சிகள்!

மாநில உரிமைகளுக்காகவும், மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் ஒன்றுசேராத அரசியல் கட்சிகள், தேர்தலுக்காகவும், வாக்களித்த மக்களுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவதற்காகவும் ஒன்றுசேரும் என்பதற்குச் சமீபத்திய உதாரணம்தான் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை விவகாரம். 

செங்கப்பள்ளி – வாளையார் தேசிய நெடுஞ்சாலை சுமார் ரூ.850 கோடி செலவில் அமைக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, இந்த வழித்தடத்தில் பயணித்த அனைவருமே கடும் சிரமத்தை அனுபவித்தனர். பயன்பாட்டுக்குப் பிறகு நிம்மதியடைந்தனர். ஆனால், கருமத்தம்பட்டி மக்கள் அந்தச் சாலை பயன்பாட்டுக்குப் பிறகும் தினசரி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மற்ற பகுதிகளைப்போல, கருமத்தம்பட்டியிலும் 60 மீட்டருக்குச் சாலை அமைக்கப்படும் வகையில்தான் வரைபடம் தயாராகியிருந்தது. அந்தப் பகுதியில் 36 சென்ட் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைவரும் சாலையை அகலப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றம் வரை சென்றனர். இதற்கு மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் சாலையை அகலப்படுத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றின. அப்போதைய காங்கிரஸ் எம்.பி பிரபுவும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகக் கடிதம் வழங்கினார். இப்போதைய புதுச்சேரி முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமியும் சாலையை அகலப்படுத்தக் கூடாது என்று பரிந்துரை வழங்கினார்.

நாராயணசாமி பரிந்துரை

இதனால், கருமத்தம்பட்டி பகுதியில் மட்டும் 800 மீட்டர் தொலைவுக்குச் சாலை 45 அடிக்குக் குறுகலாகப் போடப்பட்டது. இதன் விளைவாகப் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி கருமத்தம்பட்டி பகுதி அதிகளவு சாலை விபத்துகளைச் சந்தித்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை இந்த 800 மீட்டர் தொலைவில் மொத்தம் 48 விபத்துகள் நடந்துள்ளன. இதில், இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். 23 பேர் காயமடைந்திருக்கிறார்கள். எனவே, கருமத்தம்பட்டியில் 45 மீட்டரில் உள்ள சாலையை, 60 மீட்டருக்கு அகலப்படுத்த வேண்டும் என்று கருமத்தம்பட்டி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதுகுறித்து அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், ``இந்த வழித்தடத்தில் நிமிடத்துக்கு ஒரு பேருந்து சென்றுகொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் நிழற்குடை, கழிவறை என்று எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு விவசாயச் சங்க கோவை மாவட்டத் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகருமான சு.பழனிச்சாமி உட்பட ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு, ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லி கோட்டாட்சியர் உத்தரவிட்டும், தற்போதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. தங்களின் சுயநலத்துக்காக, அரசியல் கட்சிகள் அப்பாவி மக்களுடன் விளையாடி வருகின்றன. கடந்த தேர்தலின்போது, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாலையை அகலப்படுத்துவதாக உறுதியளித்தார். இதுதொடர்பாக அவர் வெற்றி பெற்று அமைச்சரானவுடன் டெல்லியில் சந்தித்து மீண்டும் மனு அளித்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலையை அகலப்படுத்த போதுமான இடம் இருந்தும் ஆக்கிரமிப்பாளர்களுக்காக, சாலையை அகலப்படுத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர். ஓரிடத்தில் 10 விபத்துகள் நடந்தாலே, அதை மார்க் செய்து விபத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இங்கு 12 பேர் உயிரிழந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதற்காகப் போராட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்டால், `போக்குவரத்து நெருக்கடி ஏற்படும், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும்' என்று போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். தினம் தினமே இந்தப் பகுதி போக்குவரத்து நெருக்கடியில்தான் திணறி வருகிறது. பணபலம் படைத்தவர்கள் தங்களது வலிமையைப் பயன்படுத்தி இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டால், இப்படி ஒரு திட்டம் கொண்டு வந்ததற்கான அவசியமே இல்லாமல் போய்விடும். 

மருத்துவமனை, கல்லூரிகள், வணிக வளாகங்கள் இருப்பதால், சாலையை அகலப்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால், அவர்கள் சொல்லும் பகுதியில் அப்படி எதுவுமே இல்லை. மேலும், பல மக்களும் சாலையை அகலப்படுத்த தங்களது நிலத்தைத் தர தயாராகவே இருக்கின்றனர். தற்போது, கோவை எம்.பி நாகராஜன் மற்றும் தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சாலையை விரிவுபடுத்த பரிந்துரை கடிதம் வழங்கியுள்ளனர். எனவே, இந்தப் பகுதியில் 45 மீட்டர் உள்ள சாலையை 60 மீட்டராக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

60 மீ சாலையுடன், கருமத்தம்பட்டி 45 மீ சாலை ஒப்பீடு

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை கோவை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``சாலையை அகலப்படுத்தும் கோரிக்கை தொடர்பாக ஆய்வுசெய்து வருகிறோம். விரைவில், இதற்கான பரிந்துரையை மேலிடத்துக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.

இலவசங்களை வழங்குவதற்கு மட்டுமல்ல, பலியாகும் ஒவ்வோர் அப்பாவி உயிருக்கும் இந்த அரசியல் கட்சிகள்தாம் பொறுப்பு.