Published:Updated:

சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்!

சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்!
பிரீமியம் ஸ்டோரி
சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்!

உழவு வரலாறு

சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்!

உழவு வரலாறு

Published:Updated:
சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்!
பிரீமியம் ஸ்டோரி
சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்!

ம் முன்னோர் உழவுத் தொழிலை முதன்மையாக கொண்டே இயங்கினர். ஒவ்வொரு சமூகமும் உழவோடு ஏதோவொருவகையில் தொடர்பு கொண்டிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னைப் பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டல வேளாளர்கள் பல நூற்றாண்டுகளாக நெல் விளைவித்து வருவதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இந்த வேளாளர் சமூகம் குறித்து எழுத்தாளரும் ஆய்வாளருமான ரெங்கையா முருகனிடம் பேசினோம்.

சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்!

“காஞ்சிபுரத்தின் ஆதி வரலாறு நெல்லோடு தொடங்குகிறது. இதைச் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சிவபெருமான் உமையம்மையாருக்குச் சிவாகமங்களின் உண்மைகளை அருளினார். அவற்றைச் செவிமடுத்த அம்மையார் இறைவன் உயிர்களிடத்து விரும்புவது சிவபூசை ஒன்றினையே என்பதறிந்து, அவர் உபதேசித்தருளியபடி காஞ்சிபுரத்தில் உள்ள ஒற்றை மாமரத்தின் கீழ் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்து, இறைவனை நோக்கி தவமிருந்தார். அம்மையின் பூசனைக்கு மகிழ்ந்த சிவபெருமான், நாட்டில் அறம் வளர்க்கும் வித்தாகப் பயன்படுத்துமாறு இருநாழி நெல்லை வழங்கினார்.

அறம் வளர்க்க இருநாழி (பழைய அளவீட்டுக் கருவி) நெல்லைப் பெற்ற உமையவள், அங்கிருந்த வேளாளரிடம் அதை அளித்து, அதில் ஒரு நாழி நெல்லை இப்பூவுலகினர் நுகரும் பொருட்டுப் பசுத் தருமமாகவும், மற்றொரு நாழி நெல்லைப் பதி தருமமாகவும் பயன்படுத்துமாறு ஆணையிட்டார். இச்செய்தியைச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ளார். நெல்லைக் கொடுத்து அறம் வளர்க்க சொன்ன அம்மையார் காமாட்சியம்மைதான் ‘அறம் வளர்த்த நாயகி’ என்று அழைக்கப்படுகிறார்.

இவ்வுலகில் மண்ணில் விளைந்துதான் அனைத்து விதைகளும் வெளிவந்துள்ளன. நெல்லும் அதுபோன்றதுதான். ஆனால், காஞ்சியில் உள்ள வேளாளர்கள் உழவுத்தொழில் மூலமோ, அத்தொழில் புரிவோர் மூலமோ நெல்லைப் பெறவில்லை. அம்மையிடமிருந்து விளைவிக்காமலேயே நெல்லைப் பெற்றதால், இக்குடிமக்கள் ‘நெல் விளையார் கோத்திரம்’ என்று பெயரிட்டுக் கொண்டனர். விளைவிக்காமலே நெல்லுக்கு உரிமையாளர் ஆயினர் என்பது இவர்களது பெருமை. அம்மையிடம் பெற்ற இருநாழி நெல்லை உழவுத் தொழில் மூலம் பன்மடங்கு பெருக்கி, நெல் விளைவித்த இக்குடியினர் தங்களை ‘நெல் விளையார்’ (நெல்லை விளைவிக்காதவர்)என்று அழைத்துக் கொண்டது பொருள் செறிந்த உண்மையாகும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்!

நடைமுறை ரீதியாகப் பார்த்தால், நெல்லுக்குப் பெயர்பெற்ற ‘ஒற்ற தேசம்’ என்றழைக்கப்படும் இன்றைய ஒடிசாவுக்கும் காஞ்சிபுரத்துக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தக் காலத்தில் தமிழகத்திலிருந்து வடதிசை நோக்கிச் செல்வோருக்கு காஞ்சிபுரம் முக்கிய வழித்தடமாக விளங்கியிருக்கிறது. இதன்மூலம் ஒடிசாவின் நெல் காஞ்சிபுரத்துக்கு வந்திருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதுசம்பந்தமான ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன.

இது நிகழ்ந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.மு.60-ம் ஆண்டில் இரண்டாம் கரிகாலன் என்ற பெருமன்னன் தன் சேனைகளுடன் வடதிசை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். வழியில் கானகத்தின் வழியே செல்லும்போது ‘சிந்துமேதன்’ என்னும் வேடன் ஒருவன் அரசன் முன்பு வந்து, அக்கானகத்தின் நடுவில் தான் ஒரு வளமிக்க நகரம் இருப்பதைக் கண்டதாகக் கூறினான். அவனுடன் சென்ற அரசன் அக்கானகத்தின் நடுவில் இருந்த இந்தக் காஞ்சி மாநகரத்தைக் கண்டு வியப்புற்றான்.

சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்!

இப்பகுதியை மேலும் வளமாக்கச் சீலமும் சிறப்பும்மிக்க, ஆன்மிக உயர்வு கொண்ட வேளாண் குடிமக்களைப் இப்புதிய நாட்டில் குடியேற்றினான். அவ்வாறு அவன் தேர்ந்தெடுத்த குடும்பங்களின் எண்ணிக்கை 48,000 ஆகும். அவர்கள் அவன் வகுத்த தேர்வுகளில் முதன்மையாக வந்தமையால், அவர்கள் முதன்மையார்கள் அல்லது முதலியார்கள் எனப் பெயர் பெற்றனர். இன்னொன்று ‘முதல் ஏர் பூட்டுவோர்’ முதலியார் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பெயர் காரணம் பற்றி உமாபதி சிவாசாரியார் சில பாடல்களைப் பாடியுள்ளார். புதிய குடியேற்றப் பகுதியில் ஆட்சி செம்மையாக இயங்க அப்பகுதியை 24 கோட்டங்களாகப் பிரித்தான். இதில் 79 நாடுகளும், 1,900 ஊர்களும் (நத்தங்களும்) இடம்பெற்றன. தங்கள் தேவைக்கு மட்டுமே நெல் விளைவித்து வந்த வேளாளர்கள், பிறகு நெல் சாகுபடியை மிகப்பெரிய அளவில் பரவலாக்கினர்.

நாடெங்கும் சோழன்முனந் தெரிந்தே ஏற்றும்
நற்குடிநாற் பத்தெண்ணா யிரத்து வந்த
கூடல்கிழான் புரிசைகிழான் குலவு சீர்வெண்
குளப்பாக்கி ழான்வரிசைக் குளத்து ளான்முன்
தேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழச்
சேக்கிழார் குடியிலிருந்த தேசமுய்யப்
பாடல்புரி அருண்மொழித்தே வரும்பி னந்தம்
பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார்.

- சேக்கிழார் புராணம்-12


கரிகாற்சோழன் உருவாக்கிய முதன்மையான வேளாண் குடிகளில் நெல் விளையார் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும் அடக்கம். பெரிய புராணம் முழுமைக்கும் விரிவுரை எழுதிய கோயம்புத்தூர் சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணியன், மதுரை பி.டி.ராஜன் ஆகியோர் இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இந்தக் கோத்திரத்தைப் போன்று வேறு சில கோத்திரத்தாரும் ஆதியிலேயே காஞ்சி நகரில் வாழ்ந்து வந்தனர் என்று தெரிகிறது. இது சம்பந்தமாக ‘தொண்டை மண்டலமும் தொல்குடியும்’ என்ற நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இப்படிக் கரிகால் சோழன் உருவாக்கிய உழுதுண்ணும் தொழிலை மட்டும் மேற்கொண்டு வந்த தொண்டை மண்டல வேளாள மரபினர் உழுதுண்போர் என்றும் உழுவித்துண்போர் என்றும் இரு பிரிவினராக வாழ நேர்ந்தது. காரணம் கோட்டத் தலைமை, படைப்பிரிவு என அலுவல் சார்ந்த தொழில்களை மன்னராட்சியில் மேற்கொண்டனர். தங்கள் நிலங்களைக் குறைந்த குத்தகைத் தொகைக்குப் பிறரிடம் ஒப்புவித்தார்கள். நிலப்பரப்பு மிகுந்திருந்தால் குறைந்த தொகைக்குக் குத்தகைக் கொடுப்பினும், இவர்களுக்குப் பெரும் அளவில் வருமானம் கிடைத்தது. இவ்வாறு இருதரப்பிலும் செல்வம் பெருகியது. இதன்மூலம் உழுவித்துண்போர் என்ற பிரிவினர் தோன்றினர்.

சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்!

அதன்பிறகு காஞ்சிபுரம் மாவட்டம், மெய்ப்பேடு (தற்போது மப்பேடு) என்னும் கிராமத்தில் பிறந்து மன்னர்களுக்கு ஆலோசகராக விளங்கியவர் அரிய நாயகம். இவர் விஜயநகரப் பேரரசு ஆட்சி செய்த மதுரை, காஞ்சிபுரம், கொங்கு மண்டலம் எனப் பல பகுதிகளிலும் தொண்டை மண்டல வேளாளர்கள் அலுவல் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அலுவல் பணி மட்டுமில்லாமல் நெல் சாகுபடியைத் தங்கள் ஆட்சிக்குக் கீழுள்ள பகுதிகளில் பரவலாக்குவதற்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகள் நெல் சாகுபடியில் முன்னணியில் இருக்கின்றன. அதற்குக் காரணம் தொண்டை மண்டல வேளாளர்கள்தான். அதை இன்றும் உயிர்ப்போடு முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். சித்திரைக்கும் நெல் சாகுபடிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதுசம்பந்தமாக அமரர் கவிஞர் பழனிவேள் சொன்ன தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நெய்தல் நிலக் கடல் வணிகர்களுக்கும் மருதநில நெல் உற்பத்தியாளர்களுக்கும் முல்லை நிலத்துக்காரர்களுக்கும் சித்திரை மாதம் மிகவும் முக்கியமானது. நெல் உற்பத்தி செய்ய நீர், மண், வெப்பம் போன்றவை சரிவிகிதமாகத் தேவை என்பது தமிழர் கணிப்பு. சற்றேறக் குறைய ஏழுமாத அளவிற்கு நீளும் நெல் பயிரிடும் காலம், ஒவ்வோர் ஆண்டிலும் முக்கியமான நிகழ்வு. இந்நிகழ்வு வெற்றியடைந்ததன் உவகையும் அறிவிப்பும் கொண்டாட்டமுமே தைப்பொங்கல். பொங்கலுக்கு முன்பு போகியன்று பழையதைக் கழிப்பது என்பது புத்தாண்டின் குறியீடாக அல்ல, புதிய விளைச்சலைச் சேமித்துப் பாதுகாக்கக் குதிர் முதலானவற்றில் மீந்திருக்கும் பழைய தானியங்களைக் காலிசெய்து சுத்தமாக்குவது.

பங்குனி மாதத்துக்குள் அறுவடையை முடித்து, சித்திரைப் புதுமழையில் பொன்னேர் பூட்டும் மரபு ஒரு புதிய தொடக்கத்திற்கான குறியீடு.

வட இந்தியாவில் காற்றடிக் காலத்தை அடிப்படையாகக் கொண்ட வைகாசி விசாகமே ஆண்டுப் பிறப்பாக இருக்கிறது. தெலுங்கர்களுக்கும் கன்னடர்களுக்கும் வருடப் பிறப்புப் பங்குனியில் (யுகாதி) தொடங்குகிறது. பரசுராம ஆண்டைப் பராமரிக்கும் மலையாளிகள் சித்திரை விசுவையே வருடப் பிறப்பாகக் கருதுகின்றனர். குமரிக்குக் கீழே இலங்கையிலிருந்து மேலே உஜ்ஜயினி (மத்தியப் பிரதேசம்) வரை நிலநடுக்கோட்டை வெட்டும் புள்ளியில் சூரியனின் இருப்பும் நகர்வும் சித்திரையில் கணக்கிடப்பட்டு, விவசாயப் பணிகள் மேற்கொள்ள நாள்கள் குறிக்கப்படுகிறது. தமிழர்கள் பின்பற்றும் 60 ஆண்டுக் கணக்கு வியாழ வட்டம் என்பது இந்தியாவில் வேறெங்கும் நடைமுறையில் இல்லாதது. இது பாலி மொழியிலிருந்து பௌத்த சமண ஆதிக்கத்துக்குப்பின் விவசாய நடைமுறைக்காகவே தமிழகம் வந்தது.

ஒரு விவசாயி தன்னுடைய பயிர் தொழில்நுட்பத்தை முழுமையாகத் தன் சந்ததிக்குக் கடத்த ஆகும் காலத்தைக் 60 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். அதேபோலச் சித்திரையில் நிகழும் வியாழப் பெயர்ச்சி பருவநிலை மாற்றத்தைக் குறிப்பது. வானியல் காலக் கணக்கு சோதிடனுக்கானதல்ல. சோதிடத் தேவை என்பது 280 நாள்களோடு முடிந்துவிடுகிறது. வானியல் கணக்கு விவசாயத்தையும் கடல் வாணிபத்தையும் சார்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று விரிவாகச் சொல்லி முடித்தார்.

த.ஜெயகுமார் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி, பெ.ராக்கேஷ்

தொண்டை மண்டலம் பெயர்க் காரணம்!

க்காலத்தில் நாகர் என்ற ஓரினத்தவர் இலங்கையிலும் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் இருந்தனர். இவர்கள் பாம்பின் உருவைத் தங்கள் இலச்சினையாகக் கொண்டிருந்தனர். இவர்கள் காலத்திய சிலைகள் இப்போதும் சென்னைத் தொல்பொருட்காட்சி சாலையில் உள்ளன. சோழ அரசர்களுள் ஒருவர், தான் இளைஞனாக இருந்தபோது ஒருமுறை இந்நாகர்கள் வசிக்கும் பகுதியில் சென்று சில நாள்கள் தங்கினார். அங்கு நாக இனத்து மங்கை ஒருத்தியைக் கண்டு காதலித்துக் களவு முறையில் அவளுடன் சில காலம் வாழ்ந்து வந்தார்.  அதன்பயனாக அவள் ஓர் ஆண்மகவை ஈன்றாள். அம்மன்னன் உடனடியாக நாடு திரும்ப வேண்டியவனானான். அக்காதலியின் வேண்டுகோள்படி அக்குழந்தைக்கு உரிய காலத்தில் நாட்டின் அரசை நல்குவதாக வாக்களித்தார். அதற்கு ரகசிய அடையாளமாக அச்சிறுவன் ‘ஆதொண்டைக் கொடி’யை (தற்போது ‘ஆதண்டங்காய்’ என்றழைக்கப்படுகிறது) சூடி வருமாறு, அந்த நாக இனத்துக் காதலியிடம் தெரிவித்துவிட்டு சோழநாடு திரும்பிவிட்டான்.

குறித்த காலத்தில் இவ்விளவரசன் ஆதொண்டைக் கொடியுடன் கடல் கடந்து வந்து தன் தந்தையிடம் சேர்ந்தான். அரசன் அவனைக் கல்வி கேள்விகளிலும், போர்க்கலையிலும் நாடாளும் கலையிலும் வல்லவனாக்கினான். பிறகு, சோழப் பேரரசின் வடக்கு மண்டலமான காஞ்சிபுரத்தைத் தலைமையாகக் கொண்ட பகுதிக்கு அரசனாக்கினான் சோழன். ஆதொண்டைக் கொடியை அடையாளமாகக் கொண்ட இந்த மன்னன், தொண்டைமான் என்று அழைக்கப்பட்டார்.

இளமையிலேயே கடல்வழி வந்து தன் தந்தையை அடைந்ததால் இளந்திரையன் என்றும், ஆதொண்டைச் சக்கரவர்த்தி என்றும் அழைக்கப்பெற்றான். இவன் ஆண்டப் பகுதி தொண்டை நாடாகி பிறகு தொண்டை மண்டலமானது. தொண்டை மண்டலத்தை ஆண்ட கடைசி சோழ மன்னன் இளங்கிள்ளி ஆவார். கி.மு.60-ல் தொடங்கிய இரண்டாம் காரிகாற் சோழனின் ஆட்சி கி.பி.250-ல் முடிவு பெற்றது. சுமார் 300 ஆண்டுகாலம் சோழர்கள் காஞ்சிபுரத்தை ஆட்சிப் புரிந்தனர். இளங்கிள்ளிக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் வலிமை குன்றிவர்களாக இருந்தமையால் தொண்டை நாட்டைக் களப்பிரரும் பல்லவர்களும் கைப்பற்றிக் கொண்டனர்

நெல்லைச் சாட்சியாகக் கொண்டு திருமணம்...

கோ
வையில் வசித்து வரும் நெல் விளையார் கோத்திரத்தைச் சேர்ந்த சிவசுப்ரமணியனிடம் பேசினோம்.

“இந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக இருக்கிறார்கள். மன்னர் ஆட்சிக் காலத்தில் உழவுத் தொழிலிலிருந்து அலுவல் ரீதியான வேலைகளுக்குச் சென்றபோது, இந்தக் கோத்திரத்தாரின் இடம்பெயர்வு தொடங்கியது. 

சித்திரை மாத மகிமை... உழவில் உருவான தொண்டை மண்டலம்!

இன்றும் சிலர் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் கோத்திரத்தில் பெண் எடுக்க மாட்டோம். பிற கோத்திரத்திலிருந்துதான் பெண் எடுப்போம், கொடுப்போம். இன்றும் எங்கள் திருமண விழாக்களில் மரக்காவில் நெல் நிரப்பி, நெல்லைச் சாட்சியாகக் கொண்டு தாலி கட்டுவது வழக்கத்தில் இருக்கிறது. திருமணம் முடிந்தபிறகு மரக்காலில் உள்ள நெல்லை விதைக்கத்தான் கொடுப்போம். அந்த விதைகள் முளைத்து பயிர்களாகச் செழிப்பதுபோல் வாழ்க்கையும் செழிக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் குறியீடாக இது பார்க்கப்படுகிறது” என்றார்.

சித்திரைத் திருவிழாவில் நெல்மணி தோரணங்கள்!

துரை சித்திரைத் திருவிழாவின்போது சோழவந்தான் அருகேயுள்ள தேனூர் மண்டகப்படியைச் சுற்றி நெல் மணிகள் கதிர்களோடு தோரணங்களாகத் தொங்கவிடப்படுவது வழக்கம். சித்திரை விழா முடிவில் அழகர் இம்மண்டபத்தைச் சுற்றி விடைபெற்றுச் செல்லும்போது, சப்பரத்தின் மேல் உள்ள நெல் மணித்தோரணங்களைப் பட்டர் அறுத்துவிட்டுச் செல்வார்.

அந்த நெல் மணிகள் உதிர்ந்து, பூமியில் அவை நாற்றுகளாக முளைக்கும். மதுரை மக்கள் முளைத்த நாற்றுகளைச் சென்று பார்வையிடுவர். நாற்றுகள் செழித்து வளர்ந்திருந்தால், அந்த வருடம் விவசாயம் செழிக்கும் என நம்பினர். அதேபோன்று நெல் விதைகளின் முளைப்புத் தன்மையையும் விவசாயிகள் அறிந்துகொள்வர். சித்திரைத் திருவிழாவின் ஓர் அங்கமாக இருந்த இந்நிகழ்வு கடந்த 50 ஆண்டுகளாக நடைபெறுவதில்லை என்பது வருந்தத்தக்கது.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism