Published:Updated:

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!
பிரீமியம் ஸ்டோரி
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

6 தொட்டிகள்... மாதம் ரூ. 2,50,000 லாபம்!பண்ணைத்தொழில்

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

6 தொட்டிகள்... மாதம் ரூ. 2,50,000 லாபம்!பண்ணைத்தொழில்

Published:Updated:
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!
பிரீமியம் ஸ்டோரி
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

ந்த இதழில் சுருள்பாசி எனப்படும் ஸ்பைருலினா (Spirulina) வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் எடுத்து வரும் சுப்பையா குறித்துப் பார்ப்போம். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள போலம்பட்டி எனும் கிராமத்தில்தான் ஸ்பைருலினா வளர்ப்புப் பண்ணை அமைத்திருக்கிறார், சுப்பையா. ஒரு காலை வேளையில் திருச்சியிலிருந்து போலம்பட்டி நோக்கிப் புறப்பட்டோம். இலுப்பூர் தாண்டி போலம்பட்டி செல்லும் பிரிவு சாலையில் நமக்காகக் காத்திருந்த சுப்பையா, பண்ணைக்கு அழைத்துச் சென்றார். பண்ணையைச் சுற்றிக்காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

“எனக்குச் சொந்த ஊர் இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்துல இருக்குற புதூர் கிராமம். நான் மாஸ்டர் டிகிரி முடிச்சதும் சிங்கப்பூர் போய், அங்க ஒரு ஹோட்டல் நடத்திட்டு இருந்தேன். என்னோட ஹோட்டலுக்குச் சாப்பிட வர்றவங்க நிறைய பேர் கையில ஒரு மாத்திரை டப்பாவோடு வருவாங்க. பச்சை கலர்ல இருக்குற அந்த மாத்திரை அல்லது கேப்ஸ்யூலைச் சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் ‘காலை உணவு’ சாப்பிடுவாங்க. ஆனா, அது ஏதோ நோய்க்கான மாத்திரை இல்லைங்கிறது மட்டும் எனக்குப் புரிஞ்சது. அவங்க வெச்சுருந்த மாத்திரை டப்பாவுல ‘சயனோ பாக்டீரியா’னு போட்டிருக்கும்.அது பத்தித் தெரிஞ்சுக்கலாம்னு, ஹோட்டலோட ரெகுலர் கஸ்டமர் ஒருத்தர்கிட்ட அதுபத்திக் கேட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

அவர்தான் ‘இதோட பேர் ஸ்பைருலினா. இதுல ஊட்டச் சத்துக்கள், தாதுச்சத்துக்கள், புரதமெல்லாம் நிறைய இருக்கு. இதைத் தொடர்ந்து சாப்பிடுறப்போ உடம்புக்கு எதிர்ப்புச்சக்தி கிடைக்கும். சீனா, தாய்லாந்து நாடுகள்ல அதிகளவு இதை உற்பத்தி பண்றாங்க. உங்க இந்தியாவுலேயே அதிக அளவு இது உற்பத்தி ஆகுது’னு சொன்னார். அப்போ இருந்தே எனக்கு ஸ்பைருலினா மேல ஆர்வம் வந்துடுச்சு.

தொடர்ந்து அதுபத்தின தகவல்களைத் திரட்ட ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம்தான், ஸ்பைருலினா வளர்ப்பு ஒரு பணம் கொழிக்கிற தொழில்னும் தெரிஞ்சுக்கிட்டேன். சிங்கப்பூர்ல இருக்கும்போதே, ஊர் திரும்பி பெரிய அளவுல ஒரு ஸ்பைருலினா பண்ணை அமைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது பணியாளர்கள் அனைவருக்கும் தேநீர் தயாரித்துக் கொண்டு வந்தனர்.

அதைப் பருகி முடித்த பிறகு பேச ஆரம்பித்த சுப்பையா, “சிங்கப்பூர்ல இருந்து 2011-ஆம் வருஷம் ஊர் திரும்பினேன். வந்தவுடனே ஸ்பைருலினா வளர்ப்பு பத்தித் தேட ஆரம்பிச்சேன். சில பண்ணைகளுக்குப் போனப்போ, உள்ளேயே விடலை. வளர்ப்பு முறையை ரொம்ப ரகசியமா வெச்சுருந்தாங்க. கிட்டத்தட்ட மூணு வருஷம் அலைஞ்சு, காஞ்சிபுரம் மாவட்டம், சிறுசேரிக்குப் பக்கத்துல இருக்கிற நத்தம் கிராமத்துல ‘ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்’ மூலமா அதுக்கான பயிற்சி கொடுக்குறாங்கனு தெரிஞ்சுக்கிட்டேன். உடனே அங்க கிளம்பிப் போய்த் தங்கிப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அங்க எனக்குப் பயிற்சிக் கொடுத்தவர், அந்த மையத்தோட வருவாய் ஊக்குவிப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்தின ராஜசிங்கம் சார்தான். ரொம்ப பொறுமையா சொல்லிக்கொடுத்தார். அவர் கொடுத்த ஊக்கத்துல உடனே ஸ்பைருலினா வளர்ப்புல இறங்கணும்னு முடிவு பண்ணி, அதுக்கான இடம் தேட ஆரம்பிச்சேன்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

2015-ஆம் வருஷம், இந்த எட்டு ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்தது. கையில வெச்சுருந்த பணம், மனைவியோட நகைகளை அடகு வெச்சுக் கிடைச்ச பணம் எல்லாத்தையும் போட்டு, இந்த இடத்தை வாங்கினேன். தேவையான தண்ணீர் வசதி, மின்சார வசதிகளை ஏற்படுத்திட்டு ஸ்பைருலினா வளர்ப்புக்கான தொட்டிகளை அமைச்சேன். ஆரம்பத்துல, 10 அடிக்கு 20 அடி அளவுல 6 தொட்டிகளை அமைச்சு பயிற்சியில கத்துக்கிட்டபடி ஸ்பைருலினா வளர்ப்பை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல மாசத்துக்கு 70 கிலோ அளவுல காய்ந்த ஸ்பைருலினா கிடைச்சது.

நான் உற்பத்தி செஞ்ச ஸ்பைருலினாவை உள்ளூர்லயே மார்க்கெட் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். அதனால, ஸ்கூல் ஸ்கூலாகப் போய் ஆசிரியர்களைச் சந்திச்சு ஸ்பைருலினா பத்தி எடுத்துச் சொன்னேன். அவங்க மூலமா மாணவர்கள்கிட்ட சொல்ல வெச்சேன். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்துலயும், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்துலயும் சில பாடப்புத்தகங்கள்ல ஸ்பைருலினா பத்தின விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் ஆசிரியர்கள்கிட்ட எடுத்துச் சொன்னப்போ, ஆர்வத்தோடு கேட்டாங்க. மாணவர்கள்கிட்டயும் எடுத்துச் சொன்னாங்க. நிறைய ஆசிரியர்கள் எங்ககிட்ட ஸ்பைருலினாவைத் தொடர்ந்து வாங்க ஆரம்பிச்சாங்க. இங்க பக்கத்துல இருக்குற சில டாக்டர்களும், நோயாளிகளுக்குப் ஸ்பைருலினாவைப் பரிந்துரைக்கிறாங்க. என்னோட நண்பர்களும் உறவினர்களும் அவங்களுக்குத் தெரிஞ்சவங்கிட்ட ஸ்பைருலினா பத்தி எடுத்துச் சொல்லி வாங்க வைக்கிறாங்க. அதனால, எனக்கு விற்பனை நல்லபடியா நடக்குது” என்ற சுப்பையா, தொட்டிகளைக் காட்டியபடியே பேச்சைத் தொடர்ந்தார்...

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

“தமிழ்நாடு முழுக்க இப்போ நான் ஸ்பைருலினா அனுப்புறேன். தமிழகத்தைத் தாண்டி ஹரியானா மாநிலத்துல சில நகரங்களுக்கும், அஹமதாபாத்துக்கும் ஸ்பைருலினாவை அனுப்பிட்டு இருக்கேன்.

ஸ்பைருலினா பவுடரா மட்டும் இல்லாம கேப்ஸ்யூல், ஹேர் ஆயில், ஃபேஸ் பேக், சாஃப்ட் ஜெல், சாக்லேட், கடலை மிட்டாய்னு மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களையும் தயாரிச்சு விற்பனை செஞ்சுட்டுருக்கேன். இப்போ சோப்பு, ஷாம்பூ ரெண்டையும் தயாரிச்சுருக்கேன். அதை இன்னும் மார்க்கெட் பண்ண ஆரம்பிக்கலை. ஸ்பைருலினாவை மதிப்புக்கூட்டி விற்பனை செய்றப்போ வருமானம் அதிகரிக்குது” என்ற சுப்பையா வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.


“இப்போ மாசத்துக்கு 150 கிலோ அளவு காய்ந்த ஸ்பைருலினா உற்பத்தி செஞ்சுட்டுருக்கேன். அதுல 100 கிலோ அளவை நேரடியா விற்பனை செஞ்சுட்டுருக்கேன். மீதி ஐம்பது கிலோவை மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். ஒரு கிலோ ஸ்பைருலினா 1,500 ரூபாய்ங்கிற விலையில 100 கிலோ ஸ்பைருலினா விற்பனை மூலமா, மாசம் 1,50,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. 

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை மூலமா மாசம் 2,50,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஒரு மாசத்துக்கு மொத்த வருமானம் 4,00,000 ரூபாய்.ஒரு கிலோ ஸ்பைருலினா உற்பத்திக்கு, மின்சாரக் கட்டணம், வேலையாள் சம்பளம், ஊட்டத்துக்கான இடுபொருள்கள் எல்லாம் சேர்த்து 350 ரூபாய்ச் செலவாகும். அந்த வகையில 150 கிலோ ஸ்பைருலினா உற்பத்திக்கு 52,500 ரூபாய் செலவு. 50 கிலோ ஸ்பைருலினாவை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களா மாத்துறதுக்கு... மூலப்பொருள்கள், மின்சாரக் கட்டணம், வேலையாள் சம்பளம், போக்குவரத்து எல்லாம் சேர்த்து 1,00,000 ரூபாய் வரை செலவாகும். இந்தச் செலவுகள் போக, மாசத்துக்கு 2,50,000 ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்குது. மதிப்புக்கூட்டலுக்காக எந்த ரிஸ்கும் எடுக்காம, அப்படியே ஸ்பைருலினா பவுடராவே விற்பனை செஞ்சாலும் மாசம் எனக்கு 1,00,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சுடும்” என்றார், சுப்பையா.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

நிறைவாகப் பேசிய சுப்பையா, “நிலத்துக்கான முதலீட்டைத் தவிர, தொட்டிகள் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட முதலீடு 3 லட்சம் ரூபாய் வரை ஆனது. ஆரம்பத்தில் குறைந்த அளவு மகசூல்தான் கிடைக்கும். படிப்படியாக மகசூலின் அளவு அதிகரிக்கும். முறையான பயிற்சியும், சரியான பராமரிப்பும் இருந்தா, இந்த வருமானம் சாத்தியம்தான். இந்த மாதிரி ஒரு பண்ணை இருக்குறதைக் கேள்விப்பட்டு மாவட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டாங்க. புதுக்கோட்டை கலெக்டர் என்னைப் பாராட்டியிருக்கார். அடுத்ததா மாவட்ட தொழில் முதலீட்டுக் கழக அதிகாரிகள் வந்து பார்வையிட்டாங்க. என்னோட பண்ணை அமைப்பு, வருமானம் எல்லாத்தையும் பார்த்துட்டு, எனக்கு இப்போ 1,50,00,000 (ஒன்றரை கோடி) ரூபாய் கடன் கொடுக்குறதாகச் சொல்லியிருக்காங்க. 

அதுல எனக்கு 30,00,000 ரூபாய் மானியம் கிடைக்கும். அதனால, மாசம் 1 டன் அளவு ஸ்பைருலினா உற்பத்தி செய்ற அளவுக்குப் பண்ணையை விரிவுபடுத்தறதுக்கான வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். அதுக்காக 120 அடி நீளம், 20 அடி அகலத்துல 4 தொட்டிகளைக் கட்டியிருக்கேன். இந்தத் தொட்டிகள் மூலமா, மாசம் 1 டன் அளவுக்கு மேல ஸ்பைருலினா உற்பத்தி பண்ண முடியும். ஒரு டன் இலக்கை அடைஞ்சுட்டா மாசம் 25,00,000 ரூபாய்க்கு மேல வருமானம் எடுத்துடுவேன்” என்று கண்களில் நம்பிக்கை பொங்கச் சொல்லி விடைகொடுத்தார்.  

தொடர்புக்கு, சுப்பையா, செல்போன்: 97887 91706.

ஜி.பிரபு படங்கள்: வீ.சிவக்குமார்

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

‘நீர்க்கீரை’ எனும் ஸ்பைருலினா!

சு
ப்பையாவுக்கு ஸ்பைருலினா வளர்ப்புப் பயிற்சி அளித்த ரத்தின ராஜசிங்கத்திடம் பேசினோம். “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகுந்த ஆர்வத்துடன் எங்களிடம் பயிற்சி எடுக்க வந்தார், சுப்பையா. மூன்று நாள்கள் இங்கு தங்கி முழுமையாகப் பயிற்சி எடுத்த சமயத்தில், அவர் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கவில்லை. காலையில் எழுந்தவுடன் அவராகவே போய் ஸ்பைருலினா வளர்ப்புத் தொட்டிகளில் வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிடுவார். அந்தளவுக்கு முழு ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்துக் கொண்டார். பயிற்சி முடித்த கையோடு, உடனடியாகப் பண்ணையை அமைத்துவிட்டார். அவர் பண்ணை துவங்கியபோது நாங்கள் நேரில் சென்று வாழ்த்திட்டு வந்தோம். இன்று வரை எங்களோடு தொடர்பிலிருக்கிறார். எங்களிடம் பயிற்சி எடுத்துச் சிறப்பான முறையில் ஸ்பைருலினா உற்பத்தி செய்பவர்களில் சுப்பையாவும் ஒருவர். அவர் தேர்ந்த அனுபவம் கொண்டிருப்பதால், அவரையே நாங்கள் பயிற்சி கொடுக்கச் சொல்லியதில் சிறந்த முறையில் பயிற்சியும் கொடுத்து வருகிறார். ஈழத்திலிருந்து வந்த நாங்கள் கற்ற கலையைத் தமிழ்நாட்டினருக்குச் சொல்லிக்கொடுத்தோம். அவர்கள் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதில் பெருமை கொள்கிறோம். நாங்கள் மீண்டும் எங்கள் தாய்நாட்டுக்குச் சென்றுவிட்டாலும்… சுப்பையா போன்றவர்களால் தமிழகத்தில் ஸ்பைருலினா உற்பத்தி சிறப்பாக நடக்கும் என்பதிலும், தமிழக மக்களுக்குப் பயிற்சி தொடர்ந்து கிடைக்கும் என்பதிலும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்ற ரத்தின ராஜசிங்கம் ஸ்பைருலினா குறித்த சில தகவல்களைச் சொன்னார்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!

“ஸ்பைருலினா என்பது பச்சை மற்றும் நீல வண்ணங்கள் கலந்த ஒரு பாசி வகை. 1965-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவில்லாமல், தவித்து மெலிந்து போயினர். ஆனாலும் அந்தச் சமயத்தில் மடகாஸ்கர் தீவுப்பகுதியில் உள்ள ‘சார்டு’ எனும் பகுதியில் உள்ள மக்கள் உணவுப்பற்றாக்குறையால், பாதிப்புக்குள்ளாகவில்லை. அப்பகுதியிலிருந்த ஒரு நீர்நிலையில் கிடைத்த தண்ணீரை மட்டுமே பருகி அவர்கள் பசி போக்கி வந்தனர். ஆனாலும் அவர்களுக்குச் சத்துப் பற்றாக்குறை ஏற்படவில்லை. இந்த விஷயத்தை அந்நாட்டுக்கு ஆய்வு சென்றிருந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்து… அந்த நீரை ஆய்வு செய்தது. அப்போது, அந்த நீரில் பெருமளவு ஸ்பைருலினா இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்தே, ஸ்பைருலினா குறித்து உலகின் பல நாடுகளில் தொடர் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பல ஆராய்ச்சிகளை மையமாக வைத்து, ‘இது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவு’ என ஐ.நா. சபை அங்கீகாரம் அளித்துள்ளது. விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஸ்பைருலினாவை உணவாகப் பயன்படுத்துவது குறித்து ‘நாசா’ அமைப்பு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் 1 கிலோ ஸ்பைருலினாவில்... 1,000 கிலோ அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள சத்துப் பொருள்கள் அடங்கியுள்ளன’ என்று கண்டறியப்பட்டுள்ளது. நாசாவின் ஆராய்ச்சிக்குப் பிறகுதான் உலகின் பல நாடுகள் ஸ்பைருலினா மீது கண் வைத்துள்ளன.

ஸ்பைருலினாவில், புரோட்டீன், பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, வைட்டமின் டி, வைட்டமின் கே, குளோரோஃபில் மற்றும் பலவித தாதுக்கள் உட்பட அத்தியாவசியமான சத்துகள் நிறைந்துள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்து இளமை குன்றாமல் இருக்கும். இது உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

குறிப்பாக டிரைகிளிசரைடு எனும் கொழுப்பைக் குறைக்கிறது. இதனால், நீரிழிவு நோய் வருவது தடுக்கப்படுகிறது. இது புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. மனிதர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சரி செய்ய இது பரிந்துரைக்கப்படுகிறது. அதிகரிக்கும் மக்கள்தொகை காரணமாக அதிக உணவுத்தேவை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் இயற்கைச் சீற்றங்களால் உணவு உற்பத்தி வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் உலகின் பல நாடுகள் மாற்று உணவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அப்படிப்பட்ட மாற்று உணவுகளில் முக்கிய இடம் ஸ்பைருலினாவுக்கு உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. நம் மக்கள் இதைப் பாசி என்று சொன்னால் உண்ணத் தயங்குகிறார்கள் என்பதால் தற்போது இதை ‘நீர்க்கீரை’ என்ற பதத்தில் நாங்கள் அழைத்து வருகிறோம்” என்று சொல்லிமுடித்தார்.

சூரிய ஒளி மிகவும் அவசியம்!

ஸ்
பைருலினா வளர்ப்பு முறைகள் குறித்துச் சுப்பையா சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஸ்பைருலினா வளர்ப்புக்கு சூரிய ஒளி மிகவும் அவசியம். 27 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் பகுதிகள்தான் ஸ்பைருலினா வளர்ப்புக்கு ஏற்றவை. அந்த வகையில் தமிழகத்தின் சூழலுக்கு ஸ்பைருலினா வளர்ப்பு மிகவும் ஏற்றதாக உள்ளது. அதிகப் போக்குவரத்து உள்ள பகுதிகள் மற்றும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் ஸ்பைருலினாவை வளர்க்கக் கூடாது. ஸ்பைருலினாவுக்கு அதிகத் தண்ணீர் தேவைப்படும் என்றும் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு முறைதான் தொட்டிகளை நிரப்ப வேண்டியிருக்கும். தொடர்ந்து சூரிய வெப்பத்தால் தண்ணீர் ஆவியாகும்பட்சத்தில்... தேவையான அளவு தண்ணீர் தொட்டியில் இருக்குமாறு பராமரித்து வந்தால் போதுமானது. ஆண்டுக்கு ஒருமுறை தொட்டியில் உள்ள நீர் முழுவதையும் வெளியேற்றி தொட்டியைக் காய வைத்து மீண்டும் ஸ்பைருலினா வளர்ப்பைத் தொடங்கலாம்.

பிளாஸ்டிக் மற்றும் சிமென்ட் தொட்டிகளில் ஸ்பைருலினாவை வளர்க்கலாம். தொட்டிகளின் நீள, அகலங்களை நாம் கையாள்வதற்கு எளிதான அளவில் அமைத்துக் கொள்ளலாம். நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது பெரிய அளவில் நீள்வட்ட வடிவிலான தொட்டிகளில் வளர்க்கலாம். பொதுவாக 10 அடி நீளம், 5 அடி அகலம், ஒன்றரை அடி உயரம் இருக்குமாறு தொட்டிகளை அமைத்துக் கொள்ளலாம். தொட்டிகளில் 25 சென்டிமீட்டர் உயரத்துக்குத் தண்ணீர் இருந்தால் போதுமானது. மழைக்காலங்களில் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொண்டால், தொட்டி நிரம்பி வழியாது. தொட்டியில் ஆழ்துளைக்கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவது நல்லது.

தொட்டியைச் சுத்தமாகக் கழுவி வெயிலில் காயவிட்டு அதில் 25 சென்டிமீட்டர் உயரத்துக்குத் தண்ணீரை நிரப்ப வேண்டும். அதில், பாசி வளர்வதற்கான உரக்கலவையைச் சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் தாய்ப்பாசி என்ற விகிதத்தில், தொட்டியில் உள்ள தண்ணீரின் அளவுக்கேற்ப ஸ்பைருலினா தாய்ப்பாசியைச் சேர்க்க வேண்டும். இப்பணிகளை அதிகாலை நேரத்தில்தான் மேற்கொள்ள வேண்டும்.

தொட்டியில் உள்ள நீரின் காரத்தன்மை 8.5 முதல் 10.5 அலகுகள் வரை இருக்குமாறு பராமரிக்க வேண்டும். தண்ணீரின் உயரம் எப்போதும் 23 சென்டிமீட்டர் முதல் 25 சென்டிமீட்டர் வரை இருக்குமாறு பராமரித்து வர வேண்டும். தண்ணீரின் வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸுக்கு அதிகமாகக்கூடாது. அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தொட்டியிலுள்ள நீரைக் கலக்கி விட வேண்டும். மிக அதிகமான வெயில் உள்ள இடங்களாக இருந்தால் கூரை, நிழல்வலை போன்றவற்றின் மூலம் மறைப்பை ஏற்படுத்தி அதிக அளவு வெயில் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமானால், ஸ்பைருலினா வளர்ச்சி குன்றும். பாசியின் செல்கள் உடைந்து தண்ணீரின் நிறம் மாறுவதோடு, துர்நாற்றமும் வீசும். தொட்டியில் காற்றின் மூலம் சேரும் தூசிகள், இலைகள் மற்றும் செத்து விழும் பூச்சிகள் போன்றவற்றைத் தினமும் அகற்றி வர வேண்டும்.

தாய்ப்பாசி விட்ட 7 முதல் 10 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து தினமும் அறுவடை செய்யலாம். காலை நேரம் (6 மணி முதல் 8 மணிக்குள்) வெயில் ஏறுவதற்கு முன் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யும் முன் கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டு அறுவடை செய்யும் கருவிகளான சல்லடைகள், வாளிகள் போன்றவற்றையும் கிருமி நீக்கம் செய்து கொள்ள வேண்டும். தொட்டியின் குறுக்கே கட்டைகளை வைத்து அதில் ஃபோல்டிங் சில்க் சல்லடையை வைத்து, அதன் மேல் சற்று பெரிய துளை உள்ள சல்லடையை வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது தொட்டியில் உள்ள தண்ணீரை வாளியால் அள்ளி சல்லடைகளில் ஊற்ற வேண்டும். மேலே உள்ள பெரிய துளைகள் உள்ள சல்லடையில் தூசி, தும்புகள் தங்கிவிடும். இரண்டாவது சல்லடையில் நுண்ணியத் துளைகள்தான் இருக்கும். அதில் தண்ணீர் மட்டும் கீழே வடிந்து பாசி அப்படியே தங்கிவிடும். பிறகு பாசியை வழித்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். அறுவடை முடிந்த பிறகு ஒவ்வொரு தொட்டியிலும் கிடைத்த ஈரப்பாசியின் எடைக்கேற்ற விகிதத்தில் உரக்கலவையைத் தொட்டியில் இட வேண்டும்.

அறுவடை செய்த ஈரப்பாசியை நன்கு நீரில் அலசி பிறகு வலைக்குள் வைத்து அழுத்தம் கொடுத்துச் செல்களுக்கு இடையில் உள்ள உப்பு நீரை வெளியேற்ற வேண்டும். அடுத்து இடியாப்பம் பிழியும் குழல் போன்ற ஓர் உபகரணத்தில் பாசியைப் போட்டு அழுத்திப் பிழிந்து வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். பிறகு, உலர்ந்த பாசியை மாவு அரைக்கும் எந்திரம் மூலமாகப் பொடியாக்கி காற்றுப் புகாத புட்டியில் சேகரித்து வைக்க வேண்டும். பத்துக் கிராம் ஈரப்பாசியிலிருந்து ஒரு கிராம் உலர் பாசி கிடைக்கும்.

பண்ணையை எப்படி அடைவது?

ணப்பாறையிலிருந்து விராலிமலை வழியாகப் புதுக்கோட்டை செல்லும் சாலையில் இருக்கிறது, இலுப்பூர். இலுப்பூரிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதர் தெரசா கல்லூரியை ஒட்டி இடதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போலம்பட்டி கிராமத்தில் இருக்கிறது, சுப்பையாவின் பண்ணை. திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலை மூலமாக விராலிமலை-புதுக்கோட்டை சாலையை அடைந்தும் இலுப்பூர் செல்ல முடியும்.

கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்!

“ஸ்
பைருலினா வளர்ப்புல இறங்குறதுக்கு முன்னாடி சில விஷயங்களைக் கவனிக்கணும். நாம சொந்த நிலத்துல வளர்ப்பை ஆரம்பிச்சாலும் சரி, புதுசா நிலம் வாங்கி வளர்ப்பை ஆரம்பிச்சாலும் சரி… அந்தப்பகுதி மக்கள்கிட்ட நாம செய்யப்போற விஷயங்களை முன்கூட்டியே சொல்லிடுறது நல்லது. ஸ்பைருலினா வளர்ப்புக்கு நாம நிறைய தொட்டிகள் கட்டுவோம்.

அந்தத் தொட்டிகளை நிரப்புறதுக்கு, ‘அதிகளவு நிலத்தடி நீரை உறிஞ்சுவாங்களோ’னு சுத்துப்பட்டு விவசாயிகள் பயப்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதில்லாம தொட்டியில தண்ணீர் பாசி கலந்து பச்சை நிறமா இருக்கும். அதனாலயும் ஏதோ ரசாயனம் உபயோகப்படுத்துறோம்னு விவசாயிகள் பயப்படலாம். தொழிலாளர்கள் வேலைக்கு வர பயப்படலாம். அதனால, ஸ்பைருலினா பத்தியும் அதோட பயன்கள், வளர்ப்பு முறைகள், தண்ணீர் பயன்பாடு பத்தியெல்லாம் முன்கூட்டியே எடுத்துச் சொல்லிட்டா தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்” என்கிறார், சுப்பையா.

செயற்கையும் இயற்கையும்!

ஆரம்பக்கட்டத்தில் சேர்க்க வேண்டிய உரங்கள்:

சோடியம் பைகார்பனேட் - 8 கிராம்

சோடியம் குளோரைடு    - 5 கிராம்

யூரியா - 0.2 கிராம்

பொட்டாசியம் சல்பேட்    - 0.5 கிராம்

மெக்னீசியம் சல்பேட் - 0.16 கிராம்

பாஸ்பாரிக் அமிலம் -    0.052 மில்லி லிட்டர்

ஃபெர்ரஸ் சல்பேட் - 0.05 மில்லி லிட்டர்

மேற்கண்ட அளவு ஒரு லிட்டர் தண்ணீருக்கானது. தொட்டியில் நிரப்பப்படும் மொத்தத் தண்ணீருக்கு இணையாக, மேற்கண்ட பொருள்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் அறுவடை முடிந்த பிறகு தொட்டியில் சேர்க்க வேண்டிய உரங்கள்!

சோடியம் பைகார்பனேட் - 6 கிராம்

யூரியா - 0.38 கிராம்

பொட்டாசியம் சல்பேட்    - 0.3 கிராம்

மெக்னீசியம் சல்பேட்    - 0.3 கிராம்

பாஸ்பாரிக் அமிலம் -    0.032 மில்லி லிட்டர்

ஃபெர்ரஸ் சல்பேட் - 0.05 மில்லி லிட்டர்

10 கிராம் ஈரப்பாசி அறுவடையானால், மேற்கண்ட அளவில் உரங்களைத் தொட்டியில் சேர்க்க வேண்டும். அறுவடையாகும் ஈரப்பாசியின் அளவுக்கேற்ப மேற்கண்ட உரங்களின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

பாசி வளர்ப்பில் மிகக்குறைந்த அளவுதான் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை முறையில் சாண எரிவாயுக்கழிவு மூலம் பாசி உற்பத்தி செய்ய முடியும். ஆனால், வணிக ரீதியில் வளர்க்கும்போது, மேற்கண்ட ரசாயனங்களைச் சேர்த்தால் உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது. இந்த ரசாயனங்களின் அளவு, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட அளவுதான் என்பதால், ஏற்றுமதிக்கும் பிரச்னை இருக்காது.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism