Published:Updated:

இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? #VikatanInfographics

14,000 கோடி ரூபாய் மதிப்பில் முகேஷ் அம்பானி வீடு கட்டி வாழும் இதே இந்தியாவின் மற்றொரு பகுதியான ஜார்க்கண்ட் மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் வாழ்கிறார் பாகியா பிர்ஜெய்ன்.

இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? #VikatanInfographics
இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? #VikatanInfographics

முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர். மும்பையில் இருக்கிறது முகேஷ் அம்பானியின் வீடு. 'அன்டிலியா' என்று அழைக்கப்படும் அந்த வீடு, 27 தளங்களைக் கொண்டது. சர்வ வசதிகளையும் கொண்ட அந்த வீட்டில், ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்களையும் 168 கார்களையும் நிறுத்திக்கொள்ள முடியும். இப்படியான நவீன அரண்மனையில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரான 6 பேர் மட்டும் வசித்து வருகின்றனர். 14,000 கோடி ரூபாய் மதிப்பில் முகேஷ் அம்பானி வீடு கட்டி வாழும் இதே இந்தியாவின் மற்றொரு பகுதியான ஜார்க்கண்ட் மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் வாழ்கிறார், பாக்கியா பிர்ஜெய்ன்.

பாக்கியாவின் 80 வயது தாய் புத்தினி பிர்ஜெய்ன் கடந்த மாதம் பட்டினியால் இறந்துபோனார். 3 நாள்கள் எதையும் உண்ணாமல் இறந்த புத்தினியிடம் ரேஷன் அட்டை கிடையாது; ஆதார் அடையாள அட்டையும் கிடையாது. புத்தினி, 'பிர்ஜெயா' என்று அழைக்கப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். 'பிர்ஜெயா' பழங்குடியினர், 'பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய குறிப்பிடத்தக்கப் பழங்குடியினர்' என்ற அட்டவணையின்கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். '6 முறை விண்ணப்பித்தும் எங்களுக்கு ரேஷன் அட்டை வழங்கப்படவில்லை' என்று கூறுகிறார், பாக்கியா பிர்ஜெய்ன். கடந்த 2 ஆண்டுகளில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 பேர் பட்டினியால் இறந்துள்ளனர்.

உலகம் முழுவதும் நிலவும் பொருளாதாரச் சமத்துவமின்மையைப் பற்றி ஒவ்வோர் ஆண்டும் அறிக்கை வெளியிடுகிறது, சர்வதேச நிறுவனமான 'ஆக்ஸ்பாம்'. இந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின் எண்கள் மிரளவைக்கின்றன. இந்தியாவின் பொருளாதாரப் படிநிலையின் உச்சத்தில் இருக்கும், 1 சதவிகிதச் செல்வந்தர்கள் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சேர்த்த சொத்தின் மதிப்பு 21 லட்சம் கோடி ரூபாய். இந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்தியத் தேசத்துக்கும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட் தொகை 27 லட்சம் கோடி ரூபாய். இந்தியப் பணக்காரர்களின் வளர்ச்சி, போட்டியில் விரைவில் இந்திய பட்ஜெட்டைத் தாண்டிவிடக்கூடும். 

இந்த டாப் 1 சதவிகித பணக்காரர்கள் இந்தியாவின் 73 சதவிகித சொத்துகளை அனுபவித்துக் கொண்டிருக்க, 67 கோடி இந்தியர்கள், தங்கள் மொத்தச் சொத்துகளில் 1 சதவிகித முன்னேற்றத்தை மட்டுமே அனுபவித்துள்ளனர். 67 கோடி என்பது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பாதியைக் குறிக்கும். 

இந்தியாவின் முன்னணி ஆடை நிறுவனத்தின் உயர் அதிகாரி பெறும் சம்பளத்தைப் பெற, இந்தியாவின் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்த ஒரு தினக்கூலி 941 ஆண்டுகள் தொடர்ந்து உழைக்க வேண்டும்; அதே அந்தக் கிராமப்புற தினக்கூலியின் வாழ்நாள் சம்பளத்தைப் பெற, அந்த உயர் அதிகாரி 18 நாள்கள் உழைத்தால் போதும் என்கிறது இந்த ஆய்வறிக்கை. 

இந்திய மக்களிடையே இப்படியான கடுமையான ஏற்றத்தாழ்வு நிலவுவதற்குக் காரணமாக இருக்கிறது, இந்தியாவின் சாதி அமைப்பு. தனி மனிதர்களிடம் செல்வம் குவியவும், அதற்குச் சக மனிதர்களைச் சுரண்டவும் இந்தியாவில் மதரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்கும் முறையாக இருக்கிறது சாதி. இந்திய அரசு மேற்கொண்ட ஆய்வில், இந்தியா முழுவதும் எந்தெந்த வகுப்புகளிடையே சொத்து பரவலாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். இந்தியாவில் தனி மனிதர்களின் பொருளாதாரத்தையும், சமூக அந்தஸ்தையும் தீர்மானிக்கும் சக்தியாக நிலவும் சாதியைத் தகர்ப்பது சமத்துவமின்மையைப் பெருமளவில் குறைக்கும்.       

சாதிய முறைக்கு அடுத்து, ஆணாதிக்கம் பொருளாதாரச் சமத்துவமின்மைக்குக் காரணமாக இருக்கின்றது. இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களில், 4 பேர் மட்டுமே பெண்கள். அவர்களிலும் மூவர் தங்கள் குடும்பச் சொத்துக்கு வாரிசாக இருப்பவர்கள். இந்தியாவில் அனைத்துப் பெண்களின் நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஐ.நா. சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'இந்தியாவில் சராசரியாக ஒரு தலித் பெண் மற்றோர் உயர்சாதிப் பெண்ணைவிட 15 ஆண்டுகள் குறைவாக வாழ்கிறார்' எனக் கூறப்பட்டுள்ளது. 

இப்படியாக நிலவும் மிகப்பெரிய சமத்துவமின்மையைத் தீர்க்க, ஆக்ஸ்பாம் நிறுவனம் பெரும் பணக்காரர்கள் நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடுமையாக வரி விதிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், நடைமுறையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு, நிலம் கையகப்படுத்துதல், இலவச மின்சாரம் முதலான சலுகைகளைத் தொடர்ந்து அளித்து வருகின்றன, ஆட்சி செய்யும் கட்சிகள். அதே நேரத்தில், தங்கள் வாழ்க்கை முழுவதையும் உழைப்பாகக் கொடுக்கும் சாமான்யன்மீது ஜி.எஸ்.டி, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு முதலானவை விழுகின்றன.  

அரசின் சலுகைகளோடு, மக்களின் பெரும்பான்மை சொத்துகளை அனுபவித்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் கட்சிகளுக்குப் பண உதவி செய்கின்றன. அதிக பணம் செலவிடும் கட்சிகள் தேர்தலில் சாமான்ய மக்களின் ஆதரவுடன் வெல்கின்றன. உருவாக்கப்படும் அரசாங்கம், தங்களுக்கு நிதியளித்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகத் திட்டங்கள் வகுக்கின்றன. மீண்டும் மீண்டும், இந்தச் சமத்துவமின்மை மட்டும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது.