Published:Updated:

சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு

சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு

ஹேப்பி மதர்ஸ் டே!

அற்புதம்மாள்

ஓர் அற்புதம்!

சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு

‘சும்மா விசாரிக்கத்தான் அழைச்சிட்டுப் போறோம்... நாளைக்கு அனுப்பிடுவோம்’ - அற்புதம்மாளிடம் இப்படிச் சொல்லித்தான், பேரறிவாளனை அழைத்துச்சென்றது காவல் துறை. 28 ஆண்டுகளாகியும் அனுப்பப்படாத மகனுக்காகக் காத்திருக்கிறார் இந்தத் தாய். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அளிக்கப்பட்டவர் பேரறிவாளன். அவர் கைதான நாளிலிருந்து வழக்கு தொடர்பாகவும், மகனைப் பார்க்கவும் சிறைக்கும் வீட்டுக்குமாக இவரின் கால்கள் நடந்து தேய்கின்றன. அந்த வழக்கில் தன் மகன் குற்றவாளி அல்லர் என, கால் நூற்றாண்டுக்கு வழக்கு மன்றத்திலும் பொதுச் சமூகத்திலும் முழங்கிவருகிறார்.

`பெரிய தலைவரின் கொலை' என சுற்றமும் நட்பும் விலக, ஒற்றை மனுஷியாகத் தன் மகன் விடுதலைக் காற்றை சுவாசிக்கப் போராடிவருகிறார். இரண்டு கைகளிலும் வழக்குக்கான கோப்புகள் நிறைந்த கட்டைப்பையோடு இவர் நடந்துசெல்லும் காட்சியைக் காணும் கல் நெஞ்சர்களும் கலங்கித்தான் போவார்கள். மகனைப் பற்றி பேசத் தொடங்கிய 5 நிமிடங்களில் கண்ணீர் ஊற்றெடுக்கும் இவரின் இளகிய மனம், நீதிமன்றக் கதவுகளைத் தட்டி, எழுவரின் மரண தண்டனைக்கும் எதிராக இடைவிடாது போராடும் வலிய மனமும்கூட.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேவகி

மகளைச் சுமக்கும் மனுஷி!

சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு

யிலாடுதுறையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மேக்கரிமங்கலம்தான் பாரதியின் ஊர். வயது 18. ஆனால், உயரம் இரண்டரை அடி. ஆனபோதும் கல்வி கற்கும் ஆவல்கொண்டார். தன் மகளின் ஆசைக்குத் தன்னைக் கரைத்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார், அவரின் அம்மா தேவகி. கூலி வேலை செய்துதான் குடும்பத்தை நடத்தும் சூழல்.

அதிகாலையில் பால் கறந்து, வாடிக்கையாளர்கள் வீடுகளில் கொடுப்பார். அடுத்து வீட்டு வேலை முடித்து, மகள் பாரதியை இடுப்பில் சுமந்துசெல்வார். மகளைப் பேருந்தில் ஏற்றிக்கொண்டு, மயிலாடுதுறையில் இறங்கி, அங்கிருந்து கல்லூரிக்கு மகளைத் தூக்கிச் செல்வார். கல்லூரி முடியும்வரை காத்திருந்து, வீட்டுக்கு அழைத்துவருவார் தேவகி.

வீட்டுக்கு வந்ததும், சமையல் வேலைகளையும், வீட்டுச் செலவுகளுக்காக வளர்த்துவரும் மாட்டையும் கவனிக்க வேண்டும். தேவகியின் ஒருநாள் என்பது சராசரிப் பெண்களின் ஒருநாள் அல்ல. மகள் பள்ளியில் படிக்கும்போதிருந்தே இப்படித்தான். 14 ஆண்டுகள் மகளை தூக்கிச் சுமந்து, அவருக்குக் கல்வி எனும் பெரும் துணையை அளிக்கப் போராடிவரும் தேவகியின் தாய்மை, சமூகத்தால் பாராட்டப்படவும் போற்றப்படவும் வேண்டியது.

விஜயலக்ஷ்மி

உறங்காத நெஞ்சம்!

சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு

கிரிக்கெட் டீம் கேப்டன், நீச்சல் வீராங்கனை என்று துள்ளித்திரிந்த தன் 20 வயது மகள், எதிர்பாராத விபத்தில் கழுத்தின் கீழே எந்தச் செயல்பாடும் இல்லாமல் வீல் சேரில் முடங்கிப்போனால், சராசரி அம்மாக்களாக இருந்தால் அழுவார்கள்; தலைவிதியை நொந்துகொள்வார்கள். ப்ரீத்தியின் அம்மா விஜயலக்ஷ்மியோ, ‘உன்னைப்போலவே தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க ஓர் அமைப்பைத் தொடங்கு’ என்று மகளை உத்வேகப்படுத்தினார்.

‘ஆசைப்பட்ட மெடிசின் கோர்ஸ் படிக்க முடியவில்லையென்றால் பிஹெச்.டி செய்’ என்று, பல போராட்டங்களைக் கடந்து மகளை ஐஐடி-யில் சேர்த்தார். நாட்டிலேயே, 90%  உடலுறுப்புகள் செயலிழந்த நிலையில் ஐஐடி-யில் படிக்கிற ஒரே மாணவி ப்ரீத்திதான். விஜயலக்ஷ்மி இரவுகளில் 8 மணி நேரம் தூங்கி 20 வருடங்கள் ஆகின்றனவாம். 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மகளை எழுப்பித் திருப்பிவிடவில்லையென்றால், படுக்கைப்புண் வந்துவிடுமாம். தன் மகளுக்கு மோட்டி வேட்டராக மட்டுமல்லாமல் கை கால்களாகவும் இயங்கிக்கொண்டிருக்கும் தெய்வத்தாய் இவர்.

ஜீவா

சாதிக்கத் தூண்டும் போராளி!

சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு

‘உங்க பொண்ணு எப்ப வேணும்னாலும் சாகலாம்’ என்று மருத்துவர்கள் சொன்ன பின்பும், 17 வருடங்களாக மகளின் மரணத்தை எதிர்த்துப் போராடும் அற்புதத்தாய், கடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட ஜீவா ஜாக்குலின். பிறப்பிலேயே அட்ரினல் சுரப்பி இல்லாமல் பிறந்த இவரின் மகள் ஏஞ்சலின் ஷெர்லினை எல்லோரும் பரிதாபப் பார்வையும் ஏளனப் பார்வையுமாகப் பார்த்தனர். தன் உடல்நிலையையும் மீறி, நடனத்தின்மீது ஆசைகொண்ட தன் மகளை, 13 முறை நடனத்தில் உலக சாதனை புரியத் தூண்டிய அற்புத சக்தி, ஜீவாவின் தாய்மையில் புதைந்துகிடக்கிறது.

நடனமாடினால் ரத்த அழுத்தம் அதிகரித்து ஏஞ்சலினின் உடல்நிலை பாதிக்கப்படும் என மருத்துவர்கள் சொன்ன பின்பும்கூட, வாழும் ஒரு வாழ்க்கையில் தன் மகளின் நடன ஆசைக்கு உயிர்கொடுத்து, சாதனைகளைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். கைதட்டல்களுக்கு மத்தியில் மேடையில் மகள் ஆடும் ஒவ்வொரு நொடியும் மனதில் பதற்றத்துடனும், கைகளில் மருந்து பாட்டில்களுடனும் நிற்கும் ஜீவாவின் தைரியத்தை, 17 வருடங்களாக எமனாலும் அசைத்துப்பார்க்க முடியவில்லை. `சாகும்வரை என் மகள் சாதனை படைப்பாள்’ எனத் தாய்மை யின் வலிமையை வார்த்தைகளில் கடத்தும் ஜீவா, தன்னுடைய துணிச்சலால் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.

செலீனா

தன்னம்பிக்கை தங்கம்!

சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு

சிங்கிள் பேரன்ட்டாக எத்தனையோ ஏளனங்களை எதிர்கொண்டாலும், அத்தனை வலிகளையும் தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஏணியாக்கியவர் செலீனா. மற்றவர்களின் வார்த்தைகளை மனத்தில் போட்டு குழப்பிக்கொள்ளாமல், மகளின் மாடலிங் கனவுகளுக்கு உயிர்கொடுத்தவர்.

‘டஸ்கி அழகி’ என இன்று எல்லோராலும் கொண்டாடப்படும் அனுக்ரீத்தி, தான் சிவப்பாக இல்லை எனச் சிறு வயதில் வருத்தப்பட்டபோது, `அழகு நிறத்தில் இல்லை; திறமையிலும் தன்னம்பிக்கையிலும் இருக்கிறது’ என நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார் இந்த அம்மா. அதுதான் அனுக்ரீத்தியை ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வெல்லச்செய்து, உலக அழகிப் போட்டிவரை கொண்டுசென்றது.

தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு மேடையிலும் ‘நான் சிங்கிள் மதரின் மகள்’ என பெருமையுடன் சொல்லிவருகிறார் அனுக்ரீத்தி. ஆண் துணையின்றி தனிமனுஷியாகப் போராடி, உலகத்தின் வெளிச்சத்தைத் தன் மகளின் மீது விழச்செய்த இந்தத் தாயின் தன்னம்பிக்கை, இணையில்லாதது.

சீதா

நாடோடி மக்களின் நாயகி!

சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு

பொறியியல் பட்டதாரியான நாடோடி சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண், ஸ்வேதா. அவரின் அம்மா, சீதா. திருச்சி தேவராயனேரி நாடோடி சமூகக் காலனியைச் சேர்ந்த இவர், தன் மகளுக்கு மட்டுமல்லாது தன் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி உரிமைக்காக 35 வருடங்களாகப் போராடிவருபவர். தம் மக்களுக்கான ஒரு முன்னுதாரணப் பெற்றோராக, பெண் ஸ்வேதாவையும் பையன் அருணையும் நன்றாகப் படிக்கவைத்தனர் சீதாவும் அவர் கணவரும். நாடோடி சமூக மக்களுக்கு ஏராளமான சலுகைகள் இருந்தாலும், அதைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்காது. இதையெல்லாம் கல்வியால்தான் மாற்ற முடியும் என்று, நாடோடியாகத் திரிந்த தங்கள் இனக் குழந்தைகள் படிக்க, ‘திருவள்ளுவர் குருகுலம்’ என்கிற `உண்டு-உறைவிடப்'பள்ளியை ஆரம்பித்து நடத்திவருகிறார் சீதா. மேலும், இந்தச் சமுதாயத்தில் அதிகமாக நடக்கும் குழந்தைத் திருமணங்களையும் தடுத்திருக்கிறார்.

சீதாவின் கணவர் இறந்துவிட்டார். ஸ்வேதா பொறியியல் படிப்பை முடித்தபோது கைநிறையும் சம்பளத்துடன் வேலை கிடைத்தும், அவர் அதை யெல்லாம் தவிர்த்து, தன் கணவர் ராஜசேகரனுடன் சேர்ந்து பெரம்பலூர் மாவட்டம் எறையூர் பகுதியில் தன் இன மக்களுக்காகக் கல்விச் சேவை செய்துவருகிறார். ‘இன்னும் ஆயிரமாயிரம் ஸ்வேதாக்கள் வரணும்’ என்கிறார் சீதா.

ஜான்சி

பட்டை தீட்டிய வைரம்!

சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு

வ்வொரு தாய்க்கும் தன் குழந்தையின் எதிர்காலம்குறித்து ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனால், தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகத் தன் நிகழ்காலத்தை அர்ப்பணித்தவர் ஜான்சி. தன் குழந்தைகளின் திறமைக்கான அங்கீகாரத்தை மதிப்பெண்ணில் தேடாமல், பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே பாடங்கள் கற்கும் 'ஹோம் ஸ்கூலிங்' முறையில் அவர்களைப் பட்டைதீட்டினார். இசையில் அவர்களை மெருகேற்றினார். அதற்காகத் தன் நேரம் முழுவதையும் அர்ப்பணித்தார். இந்த துணிச்சலான முடிவைப் பலர் விமர்சனம்செய்ய, பலர் எச்சரிக்க, அவர்களுக்கெல்லாம் இப்போது தன் மகன் லிடியன் மூலம் பதில் சொல்லி யிருக்கிறார் ஜான்சி.

அமெரிக்காவில் நடந்த உலகளவிலான இசை நிகழ்ச்சியில் டைட்டில் வென்று, உலகின் கவனம், ஏழு கோடி ரூபாய் பரிசு, பிரபலங்களின் பாராட்டுகள் என அனைத்தையும் தனதாக்கி, தன் பெற்றோர் தன்மீது வைத்த நம்பிக்கைக்கு அர்த்தம் உண்டாக்கியிருக்கிறான் லிடியன். லிடியனின் அத்தனை முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருந்த ஜான்சி, குழந்தை வளர்ப்பில் முன்மாதிரி அம்மா.

ரமா

இசை தேவதையின் தாய்!

சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு

`சூப்பர் சிங்கர் ஜூனியர் 6' நிகழ்ச்சியில் அனைவரையும் ஈர்த்த சுட்டி நாயகி, தேஜஸ் ஸ்ரீதத்தா. மாற்றுத்திறன் குழந்தையான தேஜுவை வெளிஉலகத்துக்குக் கொண்டுவந்து, அவளுடைய கனவுகளுக்கு சிறகுகள் கொடுத்தவர், அவள் அம்மா ரமா. ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்துகொண்டிருந்தவர் ரமா. தேஜுவுக்கு ஆட்டிஸப் பாதிப்புள்ளது எனத் தெரியவந்தபோது, தன் கரியரை விட்டுவிட்டு மகளுக்காகவே வாழத் தொடங்கினார். இந்த உலகத்தில் தன் மகள் யாரையும் எதிர்பார்க்காமல் தற்சார்பு மனுஷியாக, தனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற உயரிய எண்ணத்துடன் அவளை வளர்க்கிறார்.

தேஜுவிடம் உள்ள திறமையை அடையாளம் கண்டு, அதில் கவனம்செலுத்தி இன்று மிகப்பெரிய மேடையில் தன் தேவதையை நிறுத்தி அழகுபார்த்திருக்கிறார். `இனிமேல் பாடமாட்டேன்னு தேஜு சொல்லிட்டானா, அடுத்து அவளுக்கு என்ன பிடிக்குதுங்கிறதைக் கண்டுபிடிச்சு, அதில் என் மகளை வளர்த்தெடுப்பேன்' என்று சொல்லும் ரமா, மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்குப் பாய்ச்சுகிறார், நம்பிக்கை ஒளி.

 ராஜேஸ்வரி

கனவை நனவாக்கிய ஆணிவேர்!

சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு

பூத்துக்குலுங்கும் மரங்களுடைய ஆணிவேர், எப்போதுமே உலகின் கண்களுக்குத் தெரிவதில்லை. ராஜேஸ்வரி விஜய், அப்படிப்பட்ட ஆணிவேர்களில் ஒருவர். நடிகர் 'தலைவாசல்' விஜய்யின் மனைவி. இந்தத் தம்பதியின் மகனும் மகளும் நீச்சலைத் தங்கள் எதிர்காலமாகத் தேர்வுசெய்தனர். அம்மாவாக, தன் பிள்ளைகளின் கல்விக்குப் பொறுப்பெடுத்துக்கொண்டதுபோல, அவர்களின் லட்சியத்துக்கும் பொறுப்பெடுத்துக்கொண்டார் ராஜேஸ்வரி.

பிள்ளைகளின் கோச்சிங்குக்காக தினமும் அதிகாலையில் உறக்கத்தை இழப்பது, அவர்கள் சாம்பியன்ஷிப் போட்டிக்காகச் செல்லும் ஊர்களுக்கும் நாடுகளுக்கும் உடல் வருத்தம் பார்க்காமல் உடன் செல்வது, தங்கும் ஹோட்டல்களில் வேண்டிக் கேட்டுக்கொண்டு, தன் பிள்ளைகளுக்கான சத்துணவைத் தானே சமைப்பது, வீட்டு பட்ஜெட்டைக் குறைத்து, ஆயிரக்கணக்கில் விலைகொடுத்து பிள்ளைகளுக்கான நீச்சல் உடைகளை வாங்கியது என இந்த அன்பு அம்மாவின் அத்தனை அசைவுகளுமே பிள்ளைகளைச் சிகரத்தை நோக்கி நகர்த்துவதாகவே இருந்தன. மகன் ஜெய்வந்த் உலக அளவில் வெண்கலப்பதக்கம் பெற்றவர்; மகள் ஜெயவீணா இந்தியாவின் அதிவேக நீச்சல் வீராங்கனை. பிள்ளைகளின் கனவுகளை நனவாக்கிய ஆணிவேர் அம்மா, ராஜேஸ்வரி.

மேனகா

பொறுப்பான அம்மா!

சூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு

மிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் இப்போதைய முன்னணி நடிகை, கீர்த்தி சுரேஷ். இவருக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக இருப்பவர், அம்மா மேனகா சுரேஷ். 1980-களில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர், திருமணத்துக்குப் பிறகு கணவரின் சினிமா தயாரிப்பு வேலைகளிலும் பிஸிதான். ஆனாலும், அன்று முதல் இன்றுவரை, `பொறுப்பான அம்மா' என்பதே இவரின் முதல் அடையாளம்.

தன் ரீ-என்ட்ரி வாய்ப்பு முதல் தன் விருப்பங்கள் வரை பலவற்றை மகள்களுக்காகத் தியாகம் செய்திருக்கிறார். படிப்பு, கரியர் உட்பட மகள்களின் எல்லா ஆசைகளுக்கும் உடன் நின்று ஊக்கம் கொடுத்துவருகிறார். இவர்களின் `ரேவதி கலா மந்திர் ஃபிலிம் அகாடமி'யின் பொறுப்பை கவனித்துவரும் மூத்த மகள் ரேவதி சுரேஷ், சினிமா இயக்குநராகும் பாதையில் வேகமாகப் பயணிக்கிறார். இவரின் ஆலோசனையால், இளைய மகள் கீர்த்தி சுரேஷ், நடிப்பு முதல் ஆட்டிட்யூட் வரை மெருகேறிக்கொண்டே வருகிறார். 'எங்கம்மாதான் எங்களின் முதல் இன்ஸ்பிரேஷன்' என்கிறார்கள் மகள்கள். `ரேவதி, கீர்த்தியின் அம்மா மேனகா என்ற அடையாளமே எனக்கு மிக மகிழ்வானதாக இருக்கிறது' என்று சொல்லும் மேனகாதான், இவரின் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் நம்பிக்கைத் தூண்.

-சி.ஆனந்தகுமார், வி.எஸ்.சரவணன், கு.ஆனந்தராஜ், சு.சூர்யா கோமதி, ஆ.சாந்தி கணேஷ், வெ.வித்யா காயத்ரி

படம்: தே.தீட்ஷித்