பிரீமியம் ஸ்டோரி

ரஜினி டெண்டுல்கர்

இன்றும் ஒரு மிடில்கிளாஸ் தாய்!

சூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா

ன்றாம் வகுப்பு பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்துக்கு டெண்டுல்கரை அழைத்துச்சென்றார், அவர் தாய் ரஜினி. அடுத்த நாளே பள்ளியிலிருந்து அழைப்பு வர, ஓடிய ரஜினிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முந்தைய தினம் பள்ளிக்கு வந்த தன் தாயின் உருவத்தை உடன்படித்த மாணவி கிண்டல் செய்ய, அவரை அடித்து நொறுக்கிவிட்டார் டெண்டுல்கர். அந்தச் சிறுமி கூறியதைத் தான் பொருட்படுத்தவில்லை என்று மகனுக்கு உணர்த்தினார் ரஜினி. சிறுவயதிலேயே மகனின் திறமையை அடையாளம் கண்டுகொண்டு, மூத்த மகன் அஜித்தின் வழிகாட்டலின்படி, ரமாகாந்த் அச்ரேகரிடம் சச்சின் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளச் செய்தார்.

மகன் உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் என்றாலும், எல்.ஐ.சி-யின் சான்டாகுரூஸ் பகுதி அலுவலகத்தில் பணி ஓய்வு பெறும்வரை ஆட்டோவிலும் நடையிலும் சென்று வேலை செய்துகொண்டிருந்தார் ரஜினி. இன்றும் ஒரு மிடில் கிளாஸ் தாயாகவே வாழ்கிறார். “பெண்களுக்கு நான் சொல்வது இதுதான்... வேலைக்குச் செல்லுங்கள். ஆனால், குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள். அது உங்கள் கடமையும் கூட” என்கிற ரஜினி, மகன் பாரத ரத்னா விருது வாங்கியபோது மிகவும் மகிழ்ந்ததாகக் கூறுகிறார்.

கரீமா பேகம்

இசை மீது நம்பிக்கை!

சூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா

“நான் இசையமைப்பாளராக வேண்டும் என்பது என் அம்மாவின் கனவு” என்றே எப்போதும் சொல்லி வருகிறார், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 43 வயதில் கணவர் ஆர்.கே.சேகர் இறந்துபோக, நான்கு குழந்தைகளுடன் திணறிவிட்டார் கஸ்தூரி என்ற கரீமா. கணவரின் பொக்கிஷங்களான இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தில் குடும்பத்தை நடத்தவேண்டிய சூழல். ஆனாலும், ரஹ்மானின் திறமையைக் கண்டுபிடித்துவிட்ட கரீமா, மகனை எப்படியாவது இசையமைப்பாளர் ஆக்கியே தீர்வது என்று முடிவெடுத்தார். இளையராஜாவிடம் கீபோர்டு வாசிக்கும் பணிக்குச் சென்றார், 16 வயது சிறுவன் ரஹ்மான். 11-ம் வகுப்பில் மகனின் படிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலை வந்தபோதும்கூட, இசை அவனைக் காப்பாற்றும் என்றே நம்பினார் கரீமா. அவரது நம்பிக்கை ஜெயித்தது.

சிறுவயதில் தங்கை உடல்நலம் பாதிப்படைய, `அவரை மீட்டது சூஃபி இஸ்லாம்' என்று நம்பிய ரஹ்மான், மதம் மாறினார். 1989-ம் ஆண்டு, மொத்த குடும்பமும் மதம் மாறியது, தாய் கரீமா உள்பட. மகன் ஆஸ்கர் விருது, கிராமி விருது, கோல்டன் குளோப் விருது, பத்மபூஷண் என விருதுகளை வாங்கிக் குவிக்க, மகிழ்ச்சியில் திளைக்கிறார் கரீமா!

பத்மா லட்சுமி

அவமானங்களைத் தாண்டிய அம்மா!

சூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா

16 வயதில் பாலியல் வன்புணர்வுக்குள்ளான பத்மா, அது குறித்து தன்னால் 2018-ம் ஆண்டில்தான் வெளியே பேச முடிந்தது என்று கூறியிருக்கிறார். சென்னையில் ஓர் ஆண்டு படிக்க அனுப்பப்பட்டபோது, தன் பாட்டியின் சமையல் சுவையையும் கைப்பக்குவத்தையும் உணர்ந்திருக்கிறார். அமெரிக்காவில் பழுப்புநிறச் சருமம் கொண்டு வளர்ந்ததால் நேரிட்ட அவமானங்களைச் சமாளித்து மீண்ட பத்மாவை எண்டோமெட்ரியோசிஸ் நோய் தாக்க, அதையும் தாண்டி மாடலிங், சமையற்கலை, எழுத்து, நடிப்பு என்று பல துறைகளில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியுடன் விவாகரத்தில் முடிந்த திருமணம், அடுத்து தியோடர் ஃப்ராஸ்ட்மேனுடன் பிரிவு, டெல் நிறுவனத் தலைவர் மைக்கேல் டெல்லின் சகோதரர் ஆடம் டெல்லுடன் காதல் என்று சென்ற பத்மாவின் வாழ்க்கையை, டெல் மற்றும் பத்மாவின் மகள் கிருஷ்ண தியாலட்சுமி பிறந்து புரட்டிப்போட்டாள். பிறந்து ஆறே வாரங்கள் ஆன குழந்தையுடன் `டாப் செஃப்' நிகழ்ச்சியின் செட்டில் ஆஜரானார் பத்மா. அன்று முதல் இந்த அம்மா-மகள் ஜோடி, கேக் செய்வதில் தொடங்கி, ஹாலிடே வரை ஒரே மாதிரி ஆடை அணிந்து, ஒன்றாகவே பயணிக்கிறது. சிங்கிள் மதர் பத்மா, தன் எட்டு வயது மகளே தனக்கு மன நிம்மதியைத் தருவதாகக் கூறுகிறார்.

சுஷ்மிதா சென்

இதயத்தில் இணைந்தவர்!

சூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா

1994-ம் ஆண்டு, `மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்ற சுஷ்மிதா, அதற்கடுத்து பாலிவுட், கோலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். நடிகையாகவும் பிரபஞ்ச அழகியாகவும் புகழின் உச்சத்தில் இருந்த சுஷ்மிதா சென், 2000-வது ஆண்டு, ரினி என்ற குழந்தையைத் தத்தெடுத்தார்.

“என் வயிற்றில் பிறந்த குழந்தை இல்லை என்றாலும், என் இதயத்தில் இருந்து பிறந்த செல்ல மகள் இவள்” என்று கூறினார். தொடர்ச்சியாக காதல்களில் கட்டுண்டு கிடந்தாலும், குழந்தை ரினியை பாசமான, அன்பான தாயாக வளர்த்து வந்தார் சுஷ்மிதா.

அடுத்து 2010-ம் ஆண்டு, அலிசா என்ற பெண் குழந்தையையும் தத்தெடுத்த சுஷ்மிதா, இருவரையும் சொந்தக் குழந்தைகளாகவே வளர்த்துவருகிறார். 18 வயது நிரம்பிய ரினியின் தோல்விகளில் தேற்றும் சுஷ்மிதா, வழிகாட்டியாகவும் இருக்கிறார். அதே நேரம் மாடலிங், நடிப்பு, அழகிப் போட்டிகளுக்கான குரூமிங் என்று தனக்குப் பிடித்தமான பணிகளையும் கனகச்சிதமாகச் செய்துவருகிறார்.

சுஜாதா வி குமார்

உழைக்கும் உள்ளம்!

சூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா

கூகுள் இந்தியாவின் மார்க்கெட்டிங் தலைமைப் பதவியில் இருப்பவர், சுஜாதா குமார். இரு குழந்தைகளின் அன்புத் தாய். “நான் எப்போதுமே வொர்க்கிங் வுமனாகத்தான் இருந்திருக்கிறேன். இதில் சவால்கள் உண்டுதான். பெண்களாக நம்மை நாமே நிறைய கேள்விகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், பெண்களாக நாம் வாழ்ந்தாக வேண்டும்; நம் துறையில் சாதிக்க வேண்டும். பெண்கள், தங்கள் மனதுக்குப் பிடித்த துறைகளில் சாதிக்க முன்வர வேண்டும்” என்கிறார் சுஜாதா.

பி அண்டு ஜி நோக்கியா, ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, கோக் என்று பல பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ள சுஜாதா, துணை பிராண்டு மேனேஜர் என்கிற சாதாரண இடத்தில்தான் தன் பணியைத் தொடங்கினார். டெல்லியின் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பயின்றவர், கசியாபாத்தில் மேலாண்மை உயர் படிப்பைத் தொடர்ந்தார். பணியையும் குடும்பத்தையும் சரிசமமாக நிர்வகிக்கும் திறமை இயல்பாகவே இவரிடம் உள்ளது.

தயா கௌர்

வீராங்கனைகளின் வீராங்கனை!

சூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா

திகாலை 4 மணிக்கு தொடங்குகிறது தயாவின் நாள். பசுக்களிடம் பால் கறப்பது, பட்டியைச் சுத்தம்செய்வது, சமையல் என்று பரபரப்பாக இருக்கிறார். ஹரியானாவின் மிகச் சாதாரண குடும்பப் பெண்ணான தயாவின் மகள்கள் நால்வர்தான், இன்று இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனைகள். ஃபோகாட் சிஸ்டர்ஸ் என்று அன்புடன் நாடே அழைக்கும் கீதா, பபிதா, ரிது, சங்கீதா சகோதரிகள், காமன்வெல்த் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரை மெடல்களைக் குவித்துவருகின்றனர். தந்தை மகாவீர், இந்தப் பெண்களை 2002-ம் ஆண்டு முதல் கிராமங்களில் நடக்கும் `டங்கல்' என்ற மல்யுத்தப் போட்டிகளில் ஆண்களுடன் போட்டியிடக் களமிறக்கும்போது, உறுதுணையாக நின்றவர் தயா.

ஊரே கூடிவந்து, பெண் குழந்தைகளை வளர்க்கும் முறை சரியில்லை என்று தூற்றிய போதும், ஏளனம் செய்தபோதும், அமைதியாகவே இருந்தார் தயா. “இன்று என் மகள்கள் மெடல்கள் வென்று வரும்போது, அன்று பேசியவர்கள் அமைதியாகப் போவதைப் பார்க்கிறேன்” என்று சொல்கிறார். “உங்கள் பெண்களைப் போல எங்கள் மகள்களையும் மல்யுத்த வீராங்கனைகள் ஆக்க வேண்டும்” என்று சொல்லும் அம்மாக்களை இன்று அதிகம் சந்திப்பதாகச் சொல்லி மகிழ்கிறார் தயா.

டெஸ்ஸி தாமஸ்

அறிவியல் அம்மா!

சூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா

ந்தியாவின் ‘மிசைல் வுமன்’ (ஏவுகணைப் பெண்) என்று பட்டம் சூட்டப்பட்டுள்ள டெஸ்ஸி, கிடைத்த நேரம் முழுக்க ஆய்வுக்காகச் செலவிட்டவர். ஆனாலும், மகன் தேஜஸ் படேலின் ஆசையான கால்பந்து ஆட்டத்தைத் தொடர தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார். கணவர் சரோஜ் குமார் படேல் இந்திய கப்பற்படையில் அதிகாரி என்பதால், பெரும்பாலும் மகனை தனியாகவே பார்த்துக்கொள்ளும்படி அமைந்தது. கடும் காய்ச்சலில் மகன் தவித்த போதும், குடும்பத்தினரிடம் குழந்தையை விட்டுவிட்டு அக்னி ஏவுகணையை டெஸ்டிங் செய்ய நேர்ந்ததை விவரிக்கிறார் டெஸ்ஸி.

“என் அம்மாவின் சாதனையை நினைத்துப் பெருமைப்படுகிறேன். என்ன பணியாக இருந்தாலும், எனக்குத் தேவையென்றால், முக்கியத்துவம் கொடுத்து வந்து நிற்பார் அம்மா” என்று சொல்கிறார், மகன் தேஜஸ். மகனின் படிப்பு, தன் பணி என இரண்டையும் சரிவர செய்ய வருடக்கணக்காக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைத்ததை நினைவுகூர்கிறார் டெஸ்ஸி.

மேரி கோம்

தன்னம்பிக்கை தாரகை!

சூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா

“ஒவ்வொரு முறை நான் விளையாடப் போகும்போதும், என் மகன்கள் மூவரும் நான் எப்போது திரும்பி வருவேன் என்ற கேள்வியைத்தான் கேட்பார்கள். என்னதான் பரிசு கிடைத்தாலும், என் மெடல்கள்மீதுதான் எனக்கு தீராத காதல்” என்கிறார், மேரி கோம். திருமணமானதும் தன் குத்துச்சண்டைப் போட்டிகள், பயிற்சிகள் எல்லாவற்றிலும் இருந்து தற்காலிகமாக விலகினார் மேரி. குழந்தைகளை வளர்த்தெடுத்து, தங்கள் பணியை அவர்களே செய்யும் அளவுக்கு தெளிந்த பிறகே பாக்ஸிங் ரிங் பக்கம் மீண்டும் தலைகாட்டினார்.

30 வயது, மூன்று குழந்தைகளுக்குப் பின் கடும் பயிற்சி, முயற்சி என்று குத்துச் சண்டைக்குத் திரும்ப மேரி அதிகம் உழைக்க வேண்டியது இருந்தது. ஆனாலும், இன்று மேரி ஐந்து முறை உலக குத்துச் சண்டை சாம்பியன், ராஜ்ய சபா உறுப்பினர். கால்பந்து வீரரான கணவர் ஆன்லர், தன் கால்பந்துக் காதலை மனைவிக்காக விட்டுக் கொடுத்து, வீட்டிலிருந்து குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள, போட்டிகளில் தங்கமும் வெள்ளியும் குவித்துவருகிறார் மேரி.

மெஹபூபா முஃப்தி

துணிவும் கனிவும்!

சூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா

ம்மு - காஷ்மீர் போன்ற கலவர பூமியின் முதல்வராகத் தொடர்ச்சியாக நாற்காலியில் உட்காருவதற்கு, ஒரு பெண்ணுக்குத் துணிவும் தன்னம்பிக்கையும் எவ்வளவு வேண்டும் என்பதை நாம் அறிவோம். இளம் வயதிலேயே தங்கை ருபையா சயீது தீவிரவாதிகளால் கடத்தப்பட, ஊடகங்களின் பார்வை மெஹபூபாவின் மேல் விழுந்தது. அன்றைய காலகட்டத்தில் துணிவுடன் பேட்டிகள் தந்து, அரசுமீது அழுத்தம் கொடுத்து தங்கையை மீட்டார்கள், மெஹபூபாவும் தந்தை முஃப்தி முகமது சயீதும். அதன் பின், தந்தையின் ஆசைக்காக உறவுக்காரரான ஜாவித்தை திருமணம் செய்துகொண்டு, இல்திஜா, இர்திகா ஆகிய இரு பெண்களுக்குத் தாயானார் மெஹபூபா.

தீவிர அரசியலிலும் குதித்தார். தந்தை முஃப்தி முகமதின் நிழலாக அவரை எங்கும் தொடர்ந்த மெஹபூபா, 1996-ம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் படிப்படியாக முன்னேறினார். 2016-ம் ஆண்டு, காஷ்மீரின் முதல் பெண் முதல்வராகவும் பொறுப்பேற்றார். தீவிர அரசியல் வாழ்க்கை ஈடுபாட்டால், கணவருடன் விவாகரத்தும் நடக்க, தனி ஆளாக நின்று குடும்பம், அரசியல் இரண்டையும் சமாளித்தார். மகள் இல்திஜா, லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனிலும், இர்திகா, பாலிவுட்டிலும் தங்கள் முத்திரையைப் பதித்துவருகின்றனர். “எங்கள் அம்மா பெண்களுக்கு ஒரு ரோல் மாடல். எங்களுக்கு அனைத்துசு தந்திரமும் எப்போதும் உண்டு” என்கிறார் மகள் இல்திஜா.

சுதா மூர்த்தி

எழுத்தும் எளிமையும்!

சூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா

ணினிப் பொறியாளர், அறிவியலாளர், இன்ஃபோசிஸ் என்கிற பிரமாண்டத்தை உருவாக்கிய குழுவின் உறுப்பினர் என்பதைத் தாண்டி, சுதா மூர்த்தியை அறிந்தவர்கள் வியப்பது அவரது எளிமை மற்றும் தன்னடக்கத்தைக் கண்டுதான். தொடர்ச்சியாகப் பணியாற்றி வந்தாலும், மகள் அக்ஷதா மற்றும் மகன் ரோகன் இருவரையும் சரியாகவே கவனித்து வளர்த்திருக்கிறார் சுதா. குழந்தைகள் இருவரும் படித்து, தங்கள் சுய வருமானத்தில் குடும்பம் நடத்திவர, மற்ற குழந்தைகள் மேல் தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறார் சுதா. தொடர்ச்சியாக குழந்தைகள் மற்றும் மகளிர் நலனுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பணியாற்றும் சுதா, சிறந்த குழந்தை இலக்கிய எழுத்தாளரும்கூட.

-நிவேதிதாலூயிஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு