Published:Updated:

சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்

சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்

ரோல் மாடல்

மிஷல் ஒபாமா

முக்கியத்துவமிக்க முதுகெலும்பு!

சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்

மெரிக்காவின் முன்னாள் முதல் குடும்பத் தலைவியான மிஷல், அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் முதுகெலும்பு என்றே அழைக்கப்படுகிறவர். சிகாகோவில் மிகச் சாதாரண ஆப்பிரிக்க - அமெரிக்க குடும்பம் ஒன்றில் பிறந்த மிஷல், சட்டப் படிப்பை முடித்து சிட்லி ஆஸ்டின் என்ற சட்ட நிறுவனத்தில் பணியாற்றியபோது அவருடைய பாஸ், பராக் ஒபாமா. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஊடகம் மற்றும் உலகின் மொத்த கவனமும் இந்தக் குடும்பத்தின்மீது இருந்திருக்கிறது.

ஆனாலும், தன் மகள்கள் மாலியா மற்றும் சாஷா இருவரையும் பிசியாகவே வைத்துக்கொண்டார். கால்பந்து, நடனம், டிராமா, ஜிம்னாஸ்டிக்ஸ், பியானோ, டென்னிஸ் என்று இரு பெண்களும் ஓடி ஓடி கற்றுக்கொண்டார்கள். அறப்பணிகளிலும் மகள்களை ஈடுபடுத்திக்கொண்டார் மிஷல். லைபீரியா, மொராக்கோ, ஸ்பெயின் என்று பெண் குழந்தைகளுக்கான முன்னேற்றப் பணிகளை மிஷல் எங்கு சென்றாலும், மாலியாவும் சாஷாவும் உடன் சென்றார்கள். முன்னாள் அதிபரின் மகள்கள் என்ற எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி, மாலியா ஹாலிவுட்டின் சிறு ஸ்டூடியோக்களிலும், சாஷா ரெஸ்ட்டாரன்ட் ஒன்றிலும் பணியாற்றியிருக்கி றார்கள். சமீபத்தில் வெளியிட்டுள்ள சுயசரிதைப் புத்தகம் ஒன்றில், தன் இரு மகள்களும் ஐ.வி.எஃப் முறையில் பிறந்தவர்கள் என்று கூறியிருக்கிறார் மிஷல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செரீனா வில்லியம்ஸ்

விளையாட்டு தேவதை!

சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்

கோதரிகள் வீனஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் வரும் வரை டென்னிஸ் என்பது அமெரிக்காவில் பெரும்பாலும் ஆங்கிலேயர் விளையாடும் கேளிக்கையாகவே இருந்தது. ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண்களான இந்த ஜோடியே, ‘பவர் செர்வ்’ என்றால் என்ன என்று உலகுக்குப் புரியவைத்தது. அமெரிக்க பில்லியனர் அலெக்சிஸ் ஒஹானியனை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட செரீனா, ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிகளில் இரண்டு மாத கர்ப்பிணியாகவும் விளையாடி கோப்பையைக் கைப்பற்றினார். பெரும் இடைஞ்சல்களைக் கடந்தே, மகள் ஒலிம்பியா அறுவைசிகிச்சை மூலம் பிறந்தாள். குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கடும் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட, அப்போதுதான் போடப்பட்ட தையல் பிரிந்து, மீண்டும் தைக்கப்பட்டது.

குழந்தை பிறந்த பின் உண்டாகும் ‘போஸ்ட் பார்டம் டிப்ரஷன்’ என்ற மனநோய்க்கு உள்ளானதாகக் குறிப்பிட்டுள்ள செரீனா, மகள் ஒலிம்பியாவின் சிறு அசைவுகள் மற்றும் விளையாட்டை ரசித்து, தன் சமூக வலைதள பக்கங்களில் பதிந்துவருகிறார். மீண்டும் 2018 முதல் விளையாடத் தொடங்கி, இந்த ஆண்டு மகளிர் டென்னிஸின் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். சமீபத்தில், மகள் ஒலிம்பியா டென்னிஸ் மட்டையைத் தூக்கிப் போட்டு விளையாடுவதைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் செரீனா.

மெலிண்டா கேட்ஸ்

தடையில்லா தன்னார்வம்!

சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்

“வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு என்பது, `தனக்கான இணையை ஒருவர் சரியாகத் தேர்ந்தெடுப்பதுதான்' என்று எங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்கிறோம்” என்கிறார்கள், உலகின் நம்பர் ஒன் பணக்காரத் தம்பதியான பில் கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா. ஜெனிஃபர், ஃபீப் ஆகிய இரண்டு மகள்கள் மற்றும் ரோரி என்கிற மகன் இந்தத் தம்பதிக்கு உண்டு. “என் சகோதரர்கள் செய்யும் எதையும் பெண் பிள்ளைகளாகிய நாங்களும் செய்யலாம்; எந்தத் தடையும் இல்லை என்று எனக்கு சொல்லித் தந்தது என் பெற்றோர்தான். அதையே நானும் என் பிள்ளைகளுக்குக் கற்றுத் தந்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார், உலகின் மிகப்பெரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் சி.ஈ.ஓ மெலிண்டா.

தொடர்ச்சியாக, பில்லின் பணியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து பயணித்தாலும், 1997-ம் ஆண்டு தன் குழந்தைகளை சரிவர கவனிக்க முடியவில்லை என்று காரணம் காட்டி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் பதவியிலிருந்து விலகினார். தங்கள் சொத்துகளில் பெரும்பங்கை நலத்திட்டங்களுக்கு ஒதுக்கி, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் மூலம் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு உதவிவரும் இந்த ஜோடி, அவர்கள் குழந்தைகளையும் தன்னார்வத் தொண்டுப் பணிகளில் இணைத்துவருகின்றனர்.

ஜே.கே.ரௌலிங்

அற்புத எழுத்தம்மா!

சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்

பிறரைச் சார்ந்து வாழும் அபலை வாழ்க்கையில் இருந்து உலகின் முதல் பில்லியனர் எழுத்தாளர் என்கிற இடத்துக்கு வர ஜே.கே.ரௌலிங் அடைந்த சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஹாரி பாட்டர் தொடரின் முதல் கதையை எழுதியது முதல், அவரது முதல் புத்தக வெளியீடு வரையான ஏழு ஆண்டுகளில்... தாயாரின் மரணம், முதல் குழந்தைப் பிறப்பு, விவாகரத்து என்று பல திருப்பங்களைச் சந்தித்துவிட்டார் ரௌலிங். ஜெசிகா, டேவிட் மற்றும் மெக்கன்சி ஆகிய மூன்று குழந்தைகளுக்கு ரௌலிங் தாய். முதல் கணவருடன் ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக வீட்டைவிட்டு விரட்டப்பட்ட ரௌலிங், கைக்குழந்தையுடன் எடின்பர்க் நகரத்தின் கஃபேக்களில் அமர்ந்து எழுதத் தொடங்கியிருந்தார்.

கல்லூரிப் படிப்பு முடித்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னும், எதிலும் வெற்றிபெற முடியவில்லை என்கிற எண்ணமே தீவிர எழுத்தின் பக்கம் அவரைத் தள்ளியது. கைக்குழந்தையுடன் நகரில் சுற்றித்திரிந்து எழுதும் அளவுக்கு, எந்தக் காரணத்தைக் கொண்டும் தன் செலிபிரிட்டி நிழல் தன் குழந்தைகள் மேல் விழக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ரௌலிங். “என் குழந்தைகள், அவர்களின் நண்பர்களைப் போல அமைதியாக வாழ்வதையே நான் விரும்புகிறேன். ஊடகக் கவனம் அவர்கள் மேல் விழுவதை நான் விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார். இன்றும் நாவல்கள் எழுதிக் குவித்துவரும் ரௌலிங், தன் குழந்தைகள்மீது எந்த ஊடக கவனமும் படாமல் பார்த்துக்கொள்கிறார்.

ஹெலனா மோரிஸ்ஸே

சமத்துவ நிர்வாகி!

சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்

`போர்டு ரூம் ஈக்குவாலிட்டி' என்கிற தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகக் குழுக்களில் ஆண் பெண் சமத்துவத்தைப் பேசியும் எழுதியும் வருபவர், ஹெலனா மோரிஸ்ஸே. நியூட்டன் மேனேஜ்மென்ட், மெலன் மேனேஜ்மென்ட், கேப்பிட்டல் ஹவுஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் போன்ற முதலீட்டு நிறுவனங்களில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய மோரிஸ்ஸேவுக்கு, மொத்தம் ஒன்பது குழந்தைகள். தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை பரபரப்பாக அலுவலகத்தில் இயங்கும் ஹெலனாவுக்கு, வீட்டு நிர்வாகம் மற்றும் குழந்தை வளர்ப்பில் கைகொடுக்கும் கை அவரது கணவர் ரிச்சர்டு. நான்காவது குழந்தை பிறந்ததும் தன் பணியை ராஜினாமா செய்துவிட்ட ரிச்சர்டு, அதன்பின் முழு நேரமும் குழந்தைகளைக் கவனிக்கும் ‘ஸ்டே அட் ஹோம்’ கணவர் ஆனார்.

“என் குழந்தைகளில் இருவர், திருமணம் முடித்து தனியே வசிக்கின்றனர். இருவர் பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர். ஒருவன் போர்டிங் பள்ளியில் இருக்கிறான். மீதமுள்ள நான்கு பெண் குழந்தைகள் மட்டுமே வீட்டில் இருக்கிறார்கள். தினமும் வீட்டில் மாட்டியிருக்கும் வெள்ளை போர்டில் யார் யாரை பிக் - அப் செய்ய வேண்டும்; யாருக்கு அன்று என்ன பணி என்று எழுதிவிடுகிறேன். அதன்படி பணி களை ஒழுங்குபடுத்திக்கொள்கிறோம்” என்று கூறுகிறார், ஹெலனா.

ஷெரில் சான்ட்பெர்க்

துயரங்களைத் துரத்தியவர்!

சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்

2012-ம் ஆண்டு, உலகின் டாப் 100 ‘இன்ஃப்ளூ யென்ஷியல் ஆளுமைகள்’ பட்டியலில் இடம்பிடித்தவர், ஷெரில். 50 வயதான ஷெரில், அமெரிக்க கூகுள் நிறுவனத்தின் தலைமை ஆப்பரேட்டிங் அதிகாரி. 1993-ம் ஆண்டு, பிரயன் காஃப் என்பவரைத் திருமணம் செய்த ஷெரில், அடுத்த ஆண்டே பிரிந்தார். 2004-ம் ஆண்டு, யாஹூ நிறுவனத்தில் பணியாற்றிய டேவ் கோல்ட்பெர்க்கை மணந்தார். வாழ்க்கை சுமுகமாக போய்க்கொண்டிருந்த நிலையில், மெக்ஸிகோவுக்கு ஒரு பார்ட்டிக்காக இந்தத் தம்பதி சென்றனர். அங்கு உடற்பயிற்சி செய்யச் சென்ற டேவ், நெஞ்சுவலியால் ட்ரெட் மில்லின் அருகிலேயே சுருண்டுவிழுந்து இறந்தார்.

அன்று இரவே கணவரின் இறந்த உடலுடன் வீடு திரும்பிய ஷெரில், கணவர் இறந்ததை இரண்டு குழந்தைகளிடமும் வெளிப்படுத்தினார். அவரது துணிவையும் தன்னம்பிக்கையையும், உலகம் அடுத்த பத்தாவது நாள் உணர்ந்துகொண்டது. கணவர் இறந்து பத்தே நாள்களில் பணிக்குத் திரும்பினார் ஷெரில். ஆனால், குழந்தைகளை எப்படி மீட்டெடுப்பது என்பதுதான் புரிபடவில்லை. நண்பர் ஆடம் ஸ்மித், “உன் துக்கம் உன் குழந்தைகளைப் பாதிக்கும், மீளவிடாமல் செய்யும்” என்று கூறியதை நினைவில்கொண்டார். கணவர் டேவ் குறித்த நினைவுகளை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அசைபோடுவதை வீடியோக்கள் எடுத்து சேமித்துக்கொண்டார். அவ்வப்போது தந்தை இல்லாத வெறுமையை விரட்ட, தன் குழந்தைகளுக்கு அவற்றையே போட்டுக்காட்டினார். டேவின் 48-வது பிறந்தநாள் அன்று அவருக்கு எழுதிய கடிதங்களை பலூனில் கட்டி பறக்கவிட்டனர் குழந்தைகள் இருவரும். உற்சாகத் துள்ளலுடன் வாழ்க்கையைத் தொடர்கிறது தந்தையுமானவளைக் கொண்ட குடும்பம்.

ஏஞ்சலினா ஜோலி

தன்னிகரற்ற தனி ஒருவர்!

சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்

2001-ம் ஆண்டு, `லாரா கிராஃப்ட்: டூம்ப் ரைடர்' படத்தின் படப்பிடிப்பு கம்போடியாவில் நடைபெற்றபோதுதான், பிரபல ஹாலிவுட் நடிகையும் ஐ.நா-வின் அகதிகளுக்கான சிறப்புத் தூதரான ஏஞ்சலினா ஜோலிக்கு, `ஏன் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளக் கூடாது' என்று தோன்றியது. அடுத்த ஆண்டே, கம்போடியாவின் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து மேட்டாக்ஸ் என்ற சிறுவனைத் தத்தெடுத்தார். அதற்குள், முதல் கணவருடன் விவாகரத்து ஏற்பட்டிருக்க, இரண்டாவது கணவர் பாப் தார்ன்டனின் வேண்டுகோளை மறுத்து, மேட்டாக்ஸை ‘சிங்கிள் மாம்’ என்று காட்டி தத்தெடுத்துக்கொண்டார். தார்ன்டன், அடுத்த மூன்றே மாதங்களில் பிரிந்துவிட, தனியே மகனை வளர்த்தார்.

2005-ம் ஆண்டு, சகரா என்ற எத்தியோப்பியக் குழந்தையை ஜோலியும் அவரது அப்போதைய கணவரும் நடிகருமான பிராட் பிட் இணைந்து தத்தெடுத்தனர். 2006-ம் ஆண்டு, தம்பதியின் முதல் குழந்தை ஷைலோ பிறக்க, அடுத்த ஆண்டு வியட்நாமிலிருந்து பேக்ஸ் என்ற ஆண் குழந்தையைத் தத்தெடுத்தனர். 2008-ம் ஆண்டு, நாக்ஸ் மற்றும் விவியன் ஆகிய இரட்டையர் பிறக்க, ஆறு குழந்தைகளுக்குத் தாயாகி, பொறுப்புடன் கவனித்துக்கொண்டதுடன் படங்களில் நடித்தும், ஐ.நா-வுடன் இணைந்து தொண்டுப் பணிகளையும் செய்துவருகிறார். இடையே பிராட் பிட்டுக்கும் ஜோலிக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று, இருவரும் சட்டப்படி பிரிந்தனர். பரபரப்பான சூழலுக்கு இடையிலும் ஆறு குழந்தைகளையும் தனியொருவராக வளர்த்துவருகிறார் ஜோலி.

கேத்தரின் ஜாக்சன்

திறமைக்கு மரியாதை!

சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்

எம்.ஜே என்ற மைக்கேல் ஜாக்சனை யாருக்குத் தான் தெரியாது. ஆனால், அந்த ஜீனியஸின் தாயான கேத்தரின், ஒரு சிறு இசைக்குழுவையே பெற்று வளர்த்தெடுத்து உயர்த்தியவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சிறுவயதிலேயே போலியோ பாதிப்புக்குள்ளான கேத்தரினால் இன்றுவரை சரிவர நடக்க முடியவில்லை. ஆனால், ஜோசப் ஜாக்சனை காதல் திருமணம் செய்துகொண்ட கேத்தரின் தன் 10 குழந்தைகளிலும் அவரவருக்கு இருந்த தனிச் சிறப்பைக் கண்டுகொண்டார்.

நான்கு வயதான மைக்கேல், ரேடியோவில் பாட்டு கேட்டு, அதன்படியே பாடிக்கொண்டே ஆடிய விதத்தைப் பார்த்து அசந்துபோன கேத்தரின், கணவரிடம் மகனை இசை நடனப் பள்ளியில் சேர்க்கச் சொல்லி வலியுறுத்தினார். ஏழு வயதான மைக்கேல், அப்போதே ‘ஜாக்சன் ஃபைவ்’ என்கிற குடும்ப பேண்டின் தலைவர். அதன்பின், ‘தி ஜாக்சன்ஸ்’ குழு உருவாகி, அமெரிக்கா முழுவதும் இந்தக் குடும்பத்தின் இசையில் மூழ்கியது. 1985-ம் ஆண்டு, ‘மதர் ஆஃப் தி இயர்’ விருது வென்றார் கேத்தரின். ஜெர்மைன், லா டோயா, மைக்கேல், ஜேனட் என்று அந்தக் குடும்பத்தில் திறமைக்குப் பஞ்சமில்லை. மைக்கேல் ஜாக்சனின் மறைவுக்குப் பின் அவரது குழந்தைகளைப் பராமரிக்கும் பணியும் கேத்தரினிடமே வந்தது. இப்போது, உடல்நலக் குறைவால் அவதியுற்று வருகிறார் கேத்தரின்.

ஜேன் வைல்டு ஹாக்கிங்

நட்பு நாயகி!

சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்

லகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் மனைவியாக 30 ஆண்டுகள் வாழ்ந்து, ஒரு கட்டத்தில் வேறுவழியின்றி விவாகரத்தும் பெற்றவர், ஜேன் வைல்டு ஹாக்கிங். ஸ்டீஃபன் ஹாக்கிங் மீது கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காதல் வயப்பட்டார் ஜேன். அப்போது, திடகாத்திரமாக இருந்த ஸ்டீஃபனுக்கு மோட்டார் நியூரான் நோய் தாக்கியிருக்கிறது என்றும், அதனால் விரைவில் அவர் உடல் பாகங்கள் அசைவை இழந்துவிடும் என்று அறிந்தும், மணம் முடித்துக்கொண்ட ஜேன், உண்மையில் வியப்புக்குரியவர். தன் கண்முன்னே கணவர் கொஞ்சம் கொஞ்சமாக சக்கர நாற்காலியில் முடங்கிப்போனாலும், ராபர்ட், லூசி, திமோத்தி என்ற மூன்று குழந்தைகள் பிறக்க, அவர்களைக் கண்ணும் கருத்துமாக கணவருடன் சேர்த்தே கவனித்துக் கொண்டார்.

ஒருகட்டத்தில், இந்த வாழ்க்கை சலிப்புத் தட்டவே, 1990-ம் ஆண்டு, இந்தத் தம்பதி பிரிந்தனர்.  1995-ம் ஆண்டு, விவாகரத்து கிடைத்தது. முப்பதாண்டு தாம்பத்தியம் குறித்து ‘மியூசிக் டு மூவ் தி ஸ்டார்ஸ்’ என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஜேன்.

ஸ்டீஃபன், தன் நர்சான எலைன் மேசனைத் திருமணம் செய்துகொள்ள, இவரும் ஜானதன் ஜோன்ஸ் என்பவரை மணம் புரிந்தார். ஸ்டீஃபன் எலைனை விவாகரத்து செய்துவிட, மீண்டும் நட்புடன் அவருடன் நேரம் செலவிட்டுக் கவனித்துவந்தார் ஜேன். ஸ்டீஃபன் மரணிக்கும் வரை அவர்களுக்குள் ஆரோக்கியமான நட்பு இருந்தது.

ஜெசிந்தா ஆர்டர்ன்

தாய்மையின் திறமை!

சூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்

தொலைக்காட்சி வீ.ஜே-யான கணவர் கிளார்க் கேஃபோர்டை, சிக்கலான ‘பாதுகாப்பு திருத்த மசோதா’ நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்க வந்தபோது சந்தித்தார், எம்.பி-யான ஜெசிந்தா. சூழலியலாளரான கிளார்க்கின் நேர்மை சட்டென பிடித்துவிட, இருவருமே காதல் வயப்பட்டனர்.

நியூசிலாந்தின் பிரதமராகப் பதவியேற்றபோது  ஜெசிந்தாவுக்கு வயது 37-தான். “செய்யும் வேலைக்கும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்தப் பெண்ணும் அதுகுறித்து யாருக்கும் பதில் சொல்லவேண்டிய தேவையும் இல்லை” என்று ஒரு பேட்டியில் காட்டமாகச் சொன்ன ஜெசிந்தா, `பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றுக்கொண்ட இரண்டாவது உலகத் தலைவர்' என்கிற பெருமையையும் பெற்றார்.

திருமணம் செய்துகொள்ளாமலேயே நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமான தம்பதியாக, ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கிறது இந்த ஜோடி. மனைவி ஜெசிந்தா நாட்டுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் வேளையில், 2018-ம் ஆண்டு பிறந்த தங்கள் மகளை வீட்டில் இருந்து கவனித்துக்கொள்கிறார் கிளார்க். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டை அடுத்து, ஜெசிந்தா மேற்கொண்ட நடவடிக்கைகளை உலகே பாராட்டிவருகிறது.