Published:Updated:

அழிந்துகொண்டிருக்கும் பாறு கழுகுகள்... பாதுகாக்கப்படவேண்டிய ஆகாய மருத்துவர்கள் இவர்கள்!

பாறு கழுகுகளின் அளப்பரிய சூழலியல் சேவைகளைத் தெரிந்திருந்தும்கூட அவற்றை அழியவிட்ட மனித இனத்துக்கு மன்னிப்பே கிடையாது. அழகியலில் 'அசிங்கம்' என்ற அடைமொழியை மட்டுமே பெற்றுவிட்ட இவற்றின் அற்புதங்களைப் புரிந்துகொள்ள விடாமல் அந்தச் சிந்தனையே நம்மை மட்டுப்படுத்திவிட்டது.

அழிந்துகொண்டிருக்கும் பாறு கழுகுகள்... பாதுகாக்கப்படவேண்டிய ஆகாய மருத்துவர்கள் இவர்கள்!
அழிந்துகொண்டிருக்கும் பாறு கழுகுகள்... பாதுகாக்கப்படவேண்டிய ஆகாய மருத்துவர்கள் இவர்கள்!

"அந்தக் கழுகுகள் தினமும் வரும். அவற்றுக்குச் சர்க்கரைப் பொங்கல் தொடங்கி அனைத்தையுமே படைப்போம். வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டுச் சந்தோஷமாகப் பறந்துவிடும். எங்கள் படையலுக்காக ஆசையாய்ப் பறந்துவந்த அந்தக் கழுகுகளைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதும். அவற்றின் வரவால் திருக்கழுக்குன்றமே செழித்திருந்தது. ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக அவை வருவதே இல்லை. அதனால், ஊரும் வெறிச்சோடிப் போய்விட்டது. அப்போதிருந்த கூட்டம் இப்போது இல்லை"

திருக்கழுக்குன்றம் மக்களின் இந்தக் கவலைக்குக் காரணம் பிணந்தின்னிக் கழுகுகள். ஆம், தீயசக்தியாக அசிங்கத்தின் மரணத்தின் அடையாளங்களாக நாம் சொல்லிக் கொண்டிருக்கும் அதே கழுகுகள்தான். பாறு கழுகுகள் என்று அழகான தமிழ் பெயர் இருந்தும் அவற்றின் ஊன் உண்ணும் பழக்கத்தின் காரணமாக இந்தப் பெயர் புழக்கத்துக்கு வந்துவிட்டது. திருக்கழுக்குன்றம் கோயிலில் ஒரு காலத்தில் தினமும் பார்க்கப்பட்டவை பாறு கழுகுகள். கடந்த இருபது ஆண்டுகளாக அவற்றை அங்கு பார்க்க முடியவில்லை. அங்கு மட்டுமில்லை, தமிழக வானம் முழுக்க நூற்றுக்கணக்கில் அவை வட்டமிட்டுக் கொண்டிருந்தன. எங்கு பார்க்கினும் காகங்களோடு இவையும் மாமிசக் கடைகளில் குப்பை மேடுகளில் சுற்றுத் திரிந்து கொண்டிருந்தன. அப்படி பரவலாக ஆயிரக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருந்த பறவைகள் இப்போது எங்கே சென்றன? கடைசியாக நீங்கள் பாறு கழுகைப் பார்த்தது எப்போது? நீங்கள் பாறு கழுகைப் பார்த்திருக்கிறீர்களா?

இன்று அவற்றின் எண்ணிக்கையே சில நூறுகளில்தான் தமிழகத்தில் வாழ்கின்றன. அவற்றின் இந்நிலைக்குக் காரணமென்ன?

Photo Courtesy: Vaibhavcho

1980-கள் வரையிலுமே இந்தியாவில் லட்சக்கணக்கில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தப் பாறுகள் இப்போது 90 சதவிகித இடங்களில் இல்லாமல் போய்விட்டன. இந்தியாவில் சில ஆயிரங்களில்தான் பாறு கழுகுகள் இப்போது வாழ்கின்றன. தமிழகத்தில் சுமார் முந்நூறு கழுகுகளே வாழ்கின்றன. அவையும் சத்தியமங்கலம் மற்றும் மாயாறு படுகையில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த அளவுக்கு அதிவேகமான அழிவைச் சந்தித்த அவலம் இயற்கை வரலாற்றில் வேறு எந்தப் பறவைக்குமே நிகழ்ந்ததில்லை. அந்தக் கொடுமை இவற்றுக்கு நிகழ்ந்தன. அந்த அதிவேக அழிவுக்குக் காரணம் மனிதர்கள். நாம் பயன்படுத்திய வலி நிவாரண மருந்துகள்தான் இதற்குக் காரணம். இவை கொத்துக் கொத்தாகச் செத்து விழுவதை முதலில் வெளி உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியவர்கள் அசாமைச் சேர்ந்த மாட்டுத்தோல் விற்பனையாளர்களே. அதன்பிறகு அதற்கான காரணங்கள் பலவாறாக அலசப்பட்டுத் தற்போது பல்வேறு ஆய்வுமுடிவுகளும் ஆலோசனைகளும் நாடு முழுக்கப் பல்வேறு ஆய்வாளர்களால் சொல்லப்பட்டு வருகின்றன.

2003-ம் ஆண்டு புத்தபெஸ்ட் நகரத்தில் ஊனுண்ணிப் பறவைகளுக்கான மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் இரண்டு அறிவியலாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தனர். அங்கிருந்த அனைத்து ஆய்வாளர்களுமே அதிர்ச்சியில் உரைந்தனர். ஒரு மருந்து, அதுவும் சாதாரண வலி நிவாரணி மருந்து, இவ்வளவு பெரிய அழிவுக்குக் காரணமாகும் என்பதை யாராலுமே நம்ப முடியவில்லை. டைக்ளோபினாக் (Diclofenac) என்பது மாடுகளுக்குக் கொடுக்கப்படும் வலி நிவாரண மருந்துகள். எவ்வளவு அழுகிய சடலமாக இருந்தாலும் பாறுகள் சாப்பிட்டுவிடும். தொற்று நோய்கள் தாக்கப்பட்ட விலங்குகளின் சடலங்களைச் சாப்பிட்டாலும் அவற்றுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. எத்தகைய நோய்க் கிருமியாக இருந்தாலும் அவற்றைச் செரிமானம் செய்யப் போதுமான அமிலங்கள் பாறுக்களின் வயிற்றில் உள்ளன. ரேபிஸ் போன்ற நோய்களால் இறக்கும் நாய்கள் மனிதர்களும் மற்ற விலங்குகளுக்கும் கூட அதைப் பரப்பி விடுகின்றன. அவற்றின் சடலத்தைச் சாப்பிடும் பாறுகள் அந்த நோய்க்கிருமிகளையும் அழித்து நம்மைப் பாதுகாத்து வந்தன. இன்று அவற்றின் எண்ணிக்கைக் குறைவு மனிதர்கள் மத்தியில் ரேபிஸ் போன்ற நோய்களை அதிகப்படுத்தி வருகின்றது.

எப்பேர்ப்பட்ட சடலத்தையும் உண்டு செறித்துவிடும் எந்தப் பாறு கழுகாலுமே டைக்ளோபினாக் என்ற மருந்தைச் செரிக்க வைக்க முடியவில்லை. மாடுகளுக்கு வலி நிவாரணியாகப் பயன்படும் இந்த மருந்து இவற்றுக்கு எமனாக வந்து நின்றது. நாடு முழுவதும் மாடுகளுக்கு அவை கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்க இவையும் அந்த மருந்தை உட்கொண்ட மாட்டு மாமிசங்களைத் தின்று செத்துக் கொண்டேயிருந்தன. டைக்ளோபினாக்கை உட்கொண்டு எவ்வளவு ஆண்டுகளானாலும் அவற்றின் மிச்சம் மாட்டின் உடலில் நிரந்தரமாகத் தங்கிவிடும். அவை இறந்தபின் அவற்றை உண்ணும் கழுகுகளுக்கும் அந்த வீரியம் பரவிவிடும். நாம் மருந்தாக நினைக்கும் பொருள், எந்தவித நச்சுக்கும் பாதிக்கப்படாத பறவையையே கொல்லும் நச்சுத்தன்மை கொண்டவை என்பதை எப்படி அறிஞர் சமூகம் தக்க ஆதாரங்களின்றி ஒப்புக்கொள்ளும். அதற்கான ஆதாரங்களைத்தான் தங்கள் ஆய்வு முடிவுகளாக அந்த மாநாட்டில் வெளியிட்டனர் அறிவியலாளர்களான ஓக்ஸ் மற்றும் முனிர் விராணி.

"பாறுகளின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் நான் நடந்து செல்லும்போது அவற்றின் எலும்புகள் என் காலில் பட்டு முறிந்த சத்தம் என் காதுகளில் கேட்டது"

மைக் பாண்டே என்ற புகழ்பெற்ற காட்டுயிர் ஒளிப்படக்காரர் ராஜஸ்தானில் பாறு கழுகுகளை ஆவணம் செய்யச் சென்றிருந்தபோது அவர் கண்ட காட்சியை இப்படியாக வர்ணிக்கிறார். இதைவிட விவரமான வேதனை நிரம்பிய விளக்கத்தைப் பாறு கழுகுகளின் அழிவுக்கு யாராலும் கூறமுடியாது என்றே தோன்றுகிறது.

Photo Courtesy: Chitra2016

இந்த மருந்து ஏற்படுத்திய அழிவால் தற்போது இந்தியாவில் வாழ்ந்த 99 சதவிகிதப் பாறுகள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் ஒரு சதவிகிதப் பாறு கழுகுகளையாவது காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம் நம் மத்தியில் எழுந்துள்ளது. அதற்காகப் பல்வேறு பகுதிகளில் பல்வேறு ஆய்வாளர்களும் பல கானுயிர் ஆர்வலர்களும் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அத்தகைய ஒருவரும் பாறு கழுகுகள் பாதுகாப்புக்காக இயங்கிவரும் அருளகம் அமைப்பைச் சேர்ந்தவரும் 'பாறு கழுகுகளும் பழங்குடியினரும்' நூலின் ஆசிரியருமான சு.பாரதிதாசனைச் சந்தித்துப் பேசினோம், "பாறு கழுகளின் எண்ணிக்கை குறைந்ததில் வலி நிவாரண மருந்துகளுக்குப் பெரும் பங்கு உள்ளது. வாழ்க்கை முழுவதும் ஒரே துணையோடு வாழும் பழக்கம் கொண்டவை. ஆண்டுக்கு ஒரேயொரு முட்டைதான் இடும். அதுவும், தனக்கு அதிகமான உணவு கிடைக்கும் காலகட்டத்தைப் பொறுத்தே குஞ்சுகளுக்குத் தேவையான உணவு கிடைக்குமா என்பதைப் பொறுத்தே அவை முட்டையிடுகின்றன. மாயாறு படுகையில் சராசரியாக 38 முதல் 40 கூடுகள் வரை இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். ஒவ்வோர் ஆண்டும் அவற்றின் எண்ணிக்கை கூடுவதும் குறைவதுமாகவே இருக்கிறது. அளவில் பெரிய பறவை என்பதால் கூட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குஞ்சுகளை வைத்துப் பாதுகாக்க முடியாது. ஒரேயொரு முட்டையிடுவதற்கு அதுகூடக் காரணமாக இருக்கலாம். இந்தத் தன்மையே அவற்றின் எண்ணிக்கை விரைவாக உயர்வதற்குத் தடங்கலாகவும் இருக்கிறது. 

டைக்ளோபினாக் போன்ற வலி நிவாரணிகள் வலியையோ அதற்கான மூல காரணத்தையோ குணப்படுத்தாது. வலியை மரத்துப்போகச் செய்யும். தொண்ணூறுகளில் தொடங்கிய உலகமயமாக்கல் இந்த மருந்தை மிக அதிகமாகப் புழக்கத்தில் கொண்டுவந்தது. மக்கள் அதை மாடுகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பெரும்பாலும் மடி வீக்கம், சுளுக்கு, காய்ச்சல் என்று அனைத்துக்குமே இதைப் பயன்படுத்தினார்கள். அவை பாறுகளுக்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. மாடுகளைப் புதைப்பதெல்லாம் கடந்த சில ஆண்டுகளில் வந்ததே. ஏன் இப்போதுகூட வன எல்லைகளில் வாழும் மக்கள் இறக்கும் மாடுகளை அப்படியே போட்டு விடுவார்கள். விலங்குகளும் ஊனுண்ணிப் பறவைகளும் அவற்றை உண்டு இடத்தைச் சுத்தப்படுத்திவிடும். பாறுகள் பூமியின் மிகச் சிறந்த தூய்மையாளர்கள். சுகாதாரம் பற்றி மனிதன் சிந்திக்காமலே இருந்துவிட்டாலும் அவனுக்கான சுத்தமான இடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் பாறு கழுகுகள் பெரும்பங்கு வகிக்கும். முன்பெல்லாம், நாம் இறக்கும் மாடுகளை அப்படியே போட்டுவிடுவோம். பாறுகள் அந்தச் சடலத்தை மொத்தமாக உண்டுவிட்டு இருந்த சுவடு தெரியாமல் சுத்தப்படுத்திவிடும். எலும்புகளைக்கூட விட்டுவைக்காமல் சாப்பிடும் எலும்புண்ணிகளான தாடிப் பாறுகளும் இருக்கவே செய்கின்றன. சுற்றத்தைத் தூய்மையாக்கி நம்மை நோய்களிலிருந்து காக்கும் இவற்றை ஆகாய மருத்துவர் என்றே சொல்லலாம். இப்படியாக ஊணுண்ண வரும் பாறுகள் சடலத்தில் படிந்திருக்கும் டைக்ளோபினாக்கையும் சேர்த்தே உண்ணுகின்றன. அந்த மருந்தில் இருக்கும் நச்சுத்தன்மைதான் பாறுகள் கொத்துக் கொத்தாக இறக்கக் காரணமாகின. இப்போது பெரும்பாலும் அவற்றின் பயன்பாடு குறைந்துவிட்டது. ஆனாலும், முழு முற்றாக நின்றுவிடவில்லை. சட்டப்பூர்வமாகத் தடைசெய்யப் பட்டுவிட்டாலும் ஆங்காங்கே அவற்றின் விற்பனையும் பயன்பாடும் இருக்கத்தான் செய்கிறது. இதை அப்புறப்படுத்தவும் முழுவீச்சில் போராடிக் கொண்டிருக்கிறோம். மக்கள் மத்தியில் அதற்கான விழிப்புஉணர்வு பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

இவற்றுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்துவது டைக்ளோபினாக் மட்டுமில்லை. அசிக்ளோபினாக் (Aceclofenac), ஃப்லுநிக்சின் (Fluinixin), நிமிசுலைட் (Nimesulide) போன்ற மருந்துகளும் அவற்றின் அழிவுக்குக் காரணமாகிக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் இன்னமும் பயன்பாட்டில் இருக்கும் சில வலி நிவாரணிகள். இவற்றைப் போன்ற ஆபத்தான மருந்துகள் என்னென்ன இருக்கிறது என்ற ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது தமிழகத்தில் எங்குமே பாறு கழுகுகள் தென்படுவதே இல்லையா? தென்படுகின்றன. ஆங்காங்கே மக்களால் பார்க்கப்பட்டு மீட்கவும் படுகின்றன. தமிழகத்தில் இப்போது வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, மஞ்சள் முகப் பாறு, செந்தலைப் பாறு என்ற நான்கு வகைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சேர்த்தே தற்போது சுமார் முந்நூறுதான் உள்ளது. காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற பகுதிகளில் மஞ்சள் முகப் பாறுகள் அவ்வவ்ப்போது தென்பட்டு வருகின்றன. அதுகுறித்த பதிவுகளை ஆரோக்கியமானதாகக் கருதினாலும் அவற்றின் பாதுகாப்பு எந்தளவுக்கு உறுதிசெய்யப் பட்டுள்ளது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் பறக்க முடியாமல் தவித்த மஞ்சள் முகப் பாறு ஒன்று மீட்கப்பட்டது. இளம் பறவையாக இருந்த அதை மீட்டு கிண்டி சிறுவர் பூங்காவில் இப்போதுவரை பராமரித்து வருகிறது வனத்துறை. மூன்றாண்டுகளுக்கு முன்னர் பறக்க முடியாமல் தவித்த அது தற்போது நன்கு வளர்ந்து ஆரோக்கியமாகவே இருக்கிறது.

Photo Courtesy: Rakeshkdogra

பல்லாயிரம் அடிகள் உயரத்தில் பறக்கக்கூடிய பாறு கழுகுகளைக் கூண்டிலேயே அடைத்து வைத்திருக்கக் கூடாது என்றும் அதைச் சுதந்திரமாகப் பறக்க விட வேண்டுமென்றும் லண்டனைச் சேர்ந்த பறவையியலாளர் முயன்று வருகிறார். கிண்டியில் இருக்கும் மஞ்சள் முகப் பாறு வகை குறித்து அவரைச் சந்தித்துப் பேசினோம், "நான் 2008-ம் ஆண்டிலிருந்து இங்கு வந்துபோகிறேன். அதை அங்கு கொண்டு வந்ததிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். முன்பு இருந்ததைவிடத் தற்போது மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. சில உடற்பயிற்சிகளைச் செய்ய வைத்து சில நாள்களுக்குக் காப்பிடத்திலேயே பறக்க வைத்தாலே போதும். இவற்றை இரண்டு மாதங்களுக்குச் செய்தாலே மீண்டும் அது தன் பறக்கும் திறனை அடைந்து பறக்கத் தொடங்கிவிடும். காப்பிடத்திலேயே வைத்திருந்தால் அவற்றின் திறன் குறைந்து காலப்போக்கில் பறக்க தேவையே இல்லாத நிலை ஏற்படலாம். அதற்கு நாம் வாய்ப்பளிக்கக் கூடாது" என்கிறார் வால்டன் வுல்லார்டு பிரவுன் (Walton Woollard Browne).

பாறு கழுகுகள் பாதுகாப்பு எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு அதுகுறித்த புரிதலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவேண்டியது. அதைவிட முக்கியம் தவறான புரிதல் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது. ஆனால், நாம் வரையும் பல்வேறு சித்திரங்களும் நம் உதாரணங்களும் பாறுகளை வில்லனாகவே சித்தரிக்கும் வகையில் அமையும்போது அவற்றைப் பற்றிய நேர்மறையான சிந்தனையே மக்கள் மத்தியில் ஏற்படாமல் போவதற்கும் வாய்ப்புண்டு. சமீபத்தில் நடந்த புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் குறித்துப் பிரபல நாளிதழ் ஒன்றில் கருத்துச் சித்திரம் ஒன்று வரையப்பட்டது. அதில் பாறு கழுகொன்று கோழிக் குஞ்சுகளை உயிருடன் தின்று கொண்டிருப்பது போன்ற சித்திரம் வரையப்பட்டிருக்கும். பாறு கழுகைத் தீவிரவாதம் போலச் சித்தரித்து வரையப்படும் இந்த மாதிரியான சித்திரங்கள் மக்கள் மத்தியில் தவறான புரிதலையே ஏற்படுத்துகின்றன. பாறு கழுகுகள் இறந்த சடலங்களை மட்டுமே உண்ணக்கூடியவை. அதையுணராமல் இப்படியாக உயிருடன் இருக்கும் கோழிக் குஞ்சுகளை உண்பது போன்ற பிரதிபலிப்புகளை நாம் உருவாக்கும்போது அது அரசியல்ரீதியாகத்தானே என்று வெறுமனே கடந்துபோக முடிவதில்லை. கற்பனைகள் இயற்கையின் வரைமுறைகளை மீறுவதாக அமையும்போது அத்தகைய மனப்பான்மையையே மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தும். அதன்மூலம் சித்திரங்களில் நாம் குறிப்பிடும் உயிரினங்கள் குறித்தும் அம்மாதிரியான கருத்துகளே மக்கள் மத்தியில் உருவாகத் தொடங்கிவிடும். அது அந்த உயிரினங்களின் பாதுகாப்பு முயற்சிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அத்தகைய தவறான சித்தரிப்புகள் பாறுகள் விஷயத்தில் பெருமளவில் நடந்துள்ளன. இதுவும் ஆபத்துதான். சரியான தகவலைப் பரப்பாமல் விடுவதைவிட ஆபத்தானது தவறான புரிதல்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது. 

Photo Courtesy: Arindam Aditya

பாறுகள் 99 சதவிகிதம் அழிந்துவிட்ட நிலையில் தற்போதுதான் தென்னிந்தியாவில் பாறுகள் பாதுகாப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக வரும் மார்ச் மாதம் பதினைந்து முதல் பதினேழாம் தேதிவரை பாறு கழுகுகள் கணக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. அதன்மூலம் பாறு வகைகளின் எண்ணிக்கையும் அவற்றின் வாழிடமும் பதிவு செய்யப்பட்டு தொடர்ச்சியான பாதுகாப்புக்குள் கொண்டுவரப்படும். அதோடு ரேடியோ டேக்கிங் (Radio Tagging) போன்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அவை கண்காணிக்கப்படும். இந்த முயற்சிகளை முழுவீச்சில் மேற்கொண்டால் நாம் பார்க்க முடியாமல் போன, நாம் பாதுகாக்கத் தவறிய பாறுகள் நம் வருங்காலச் சந்ததிகளின் கண்களிலாவது நிச்சயம் தென்படும். அதற்குத் தேவையெல்லாம் அவற்றின் மீதான அக்கறையும் பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வு மிகுந்த செயற்பாடுகளும் மட்டுமே. அதை நாமும் செய்வோம் அரசாங்கத்தையும் செய்யத் தூண்டுவோம்.