Published:Updated:

வீட்டில் புறக்கணிக்கணிப்பு, ஃபேஷன் துறையில் அங்கீகாரம்"-திருநங்கை மேக்கப் ஆர்டிஸ்ட் கயல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீட்டில் புறக்கணிக்கணிப்பு, ஃபேஷன் துறையில் அங்கீகாரம்"-திருநங்கை மேக்கப் ஆர்டிஸ்ட் கயல்
வீட்டில் புறக்கணிக்கணிப்பு, ஃபேஷன் துறையில் அங்கீகாரம்"-திருநங்கை மேக்கப் ஆர்டிஸ்ட் கயல்

மாடலிங் செய்யும் பெண்களுக்களுக்கான மேக்கப்,ஃபேஷன் ஷோக்களில் ரேம்ப் வாக் செய்யும் பெண்களுக்கான மேக்கப் என இப்போது பிஸி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரேம்ப் வாக்,மாடலிங்,டிசைனிங் என... ஃபேஷன் துறையிலும் இப்போது  திருநங்கைகள் தங்களுக்கான அடையாளத்தைப் பதிக்க தொடங்கி உள்ளனர். அந்த வகையில் மேக்கப் ஆர்டிஸ்டாக பணி புரியும் கயல், தான் கடந்த வந்த பாதையை நம்மிடம் பகிர்கிறார்.

"எனக்குச் சொந்த ஊர் தேனி. ஏழாம் வகுப்பு படிக்கும்போதே என் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தை உணர ஆரம்பிச்சேன். நான் வெளியே காண்பிச்சது கிடையாது. ஆனாலும், என் நடை, செயல்பாடுகள் என்னைக் காட்டிக்கொடுக்க ஆரம்பிச்சது.  உடல் செய்கைகளில் இப்படி ஒரு மாற்றம் எதற்காக என்று நான் உணர்வதற்கு முன்பே, இந்தச் சமுதாயம் என்னைக் கேலி கிண்டல்களுக்கு ஆளாக்கத்தொடங்கிடுச்சு. ஏதாவது சந்தேகம் வந்தால் கூகுள் பண்ணி தெரிஞ்சுக்க, இப்ப மாதிரி அப்பெல்லாம் ஆன்லைன் வசதிகள் இல்ல .என்னோட உடம்புக்குள்ள என்ன நடக்குது, எதுக்கு எல்லாரும் கிண்டல் பண்றாங்க. இது எப்போ சரியாகும்னு நிறைய நாள் சின்ன வயசில் அழுதுருக்கேன். ஆனாலும், வீட்டில் சொன்னது இல்ல. ஒருவேளை சொன்னா, அவங்களும் ஒதுக்கிருவாங்களோன்னு பயம்.

பத்தாம் வகுப்பு வரை நான்தான் கிளாஸ் டாப்பர். ஆனால், அதன் பின் புறக்கணிப்பு, ஏளனங்கள் ஒரு பக்கம், உடல் மாற்றம்  ஒரு பக்கம் என ஸ்ட்ரெஸ் அதிகமாகி, படிப்பில் கவனம் செலுத்த முடியாமப் போச்சு. ஆனாலும், எல்லாத்தையும் சமாளிச்சிகிட்டு பி.சி.ஏ படிச்சி முடிச்சேன். காலேஜ்ல படிக்கும்போது நிறைய கேலி கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கேன். அந்தச் சமயத்தில் என்னை முழுசா புரிஞ்சுகிட்ட சில நண்பர்கள், எனக்குப் பக்கபலமாக இருந்தாங்க. நான் சோர்ந்து போகும்போதெல்லாம் "இது உன் தப்பு இல்ல, நீ கூனிக் குறுக வேண்டிய எந்த அவசியமும் இல்ல, தைரியமா சமூகத்தை எதிர்த்து நில்லு"னு சொல்லுவாங்க.மனசால் நான் உறுதியாக இருந்தாலும், மற்றவர்களின் ஏளனப்பார்வை என் தன்னம்பிக்கையை மொத்தமா உடைச்சு போட்டுருக்கு பல சமயங்களில். கல்லூரி படிப்பு முடிந்ததும் வீட்டில் உண்மையைச் சொல்லி என்னை ஏத்துக்கச் சொன்னேன்.ஆனா, அதுக்கு அவங்க தயாராக இல்ல. 'பையனாகவே வாழு'னு சொன்னாங்க. ஊரையும் ஏமாத்தி, என்னையும் ஏமாத்திக்க எனக்குப் பிடிக்கல. அதனால, வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்.

தேனியிலிருந்து சென்னை வந்த எனக்கு, சென்னையில் இருந்த என் ப்ரெண்ட்ஸ் அவங்க வீட்டில் தங்கவைத்து அவங்கள்ல ஒருத்தராக என்னைப் பார்த்துக்கிட்டாங்க. நிறைய இடங்கள்ல வேலை தேடிப் பார்த்தேன். திருநங்கை என்பதால படிப்புக்கு ஏற்ற வேலை எங்கேயும் கிடைக்கல, கடைசியா ஒரு சலூனில் வேலைக்குச் சேர்ந்தேன். அதன் பின் எனக்கே மேக்கப் மீது ஆர்வம் வர ஆரம்பிச்சது. சலூனில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து அட்வான்ஸ்டு பியூட்டிஷியன் கோர்ஸ் படித்தேன். வேலைக்காகத் தினமும் எத்தனையோ பார்லர்கள் ஏறி இறங்கினேன். ஆனால், 'வாடிக்கையாளர்கள் ஏத்துக்க மாட்டாங்க'னு திருப்பி அனுப்பியிருவாங்க. நான்கு மாத தேடலுக்கு பின், பியூட்டிஷியன் வேலை கிடைச்சது. அழகு சார்ந்த ரசனை இருந்ததால், அடுத்தடுத்து சில மேக்கப் கோர்ஸ்கள் படிச்சி, என்னை  இன்னும் தகுதிப்படுத்திகிட்டேன். அடுத்தகட்ட வளர்ச்சி பற்றி யோசித்தபோதுதான் மேக்கப் ஆர்டிஸ்ட் துறை பற்றி தெரிய வந்தது. மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கான சில பயிற்சிகள் எடுத்து, மேக்கப் ஆர்டிஸ்டாக உருவெடுத்தேன். எனக்கு முன் மாடலிங்,ஃபேஷன் ஷோ என நிறைய வாய்ப்புகள் பரவிக்கிடந்தது. பிரபல நிறுவனங்களின் விளம்பர ஷூட்களில் அசிஸ்டன்ட் மேக்கப் ஆர்டிஸ்டாகப் பணியாற்றினேன்.  ஆனால் என் திறமையை அங்கீகரிக்கப் படலையேனு ஏக்கமும் இருக்கு" என்றவர் மேக்கப் ஆர்டிஸ்டாகப் பணி புரிவதில் உள்ள சிக்கல்களைப் பகிர்கிறார்.

" திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குச் சில சமயம் அசிஸ்டன்ட் மேக்கப் ஆர்டிஸ்டாகப் போவேன். ஆனால், சில பெண்கள் ஒரு திருநங்கை தனக்கு மேக்கப் செய்து விடுவதை ஏத்துக்க மாட்டாங்க. அவங்க கிட்ட வாதம் பண்ணாமல், அமைதியா அந்த இடத்தை விட்டு வெளியேறிடுவேன். என்னைத் தனிப்பட்ட முறையில அங்கீகரிக்கணும்னு நான் நினைக்கல, ஆனால், நான் செய்யும் தொழிலில் என்னோட திறமையை அங்கீகரிக்கக்கூடாதான்னு அழுகை வரும். ஆனால், இப்போ அது பழகிப்போச்சு.மேக்கப் துறையைப் பொறுத்த வரை டிரெண்டில் இருப்பதை அப்டேட் செய்து கொண்டே இருந்தால் மட்டும்தான் ஃபீல்ட் அவுட் ஆகாமல் இருக்க முடியும் என்பதால், கிடைக்கிற வருமானத்தில் நிறைய கத்துக்கிறேன்.விதியை ஜெயிக்க தன்னம்பிக்கை இருந்தால் போதும்" என்கிறார் மகிழ்ச்சியுடன். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு