Published:Updated:

ஓவியங்களால் திரும்பிப் பார்க்க வைக்கும் புதுவை அரசுப் பள்ளி! #CelebrateGovtSchool

ஓவியங்களால் திரும்பிப் பார்க்க வைக்கும் புதுவை அரசுப் பள்ளி! #CelebrateGovtSchool
ஓவியங்களால் திரும்பிப் பார்க்க வைக்கும் புதுவை அரசுப் பள்ளி! #CelebrateGovtSchool

அரசுப் பள்ளிகள் கல்வியை முற்றிலும் இலவசமாக அளித்தும், பல பெற்றோர்கள் தனியார் பள்ளியைத் தேடிச் செல்வதற்கான காரணங்களில் ஒன்று, அப்பள்ளிகளின் தோற்றம். மாணவர்களை மட்டுமல்ல, பொதுமக்களையும் ஈர்க்கும் விதத்தில் வண்ணமயமாக்கி இருப்பார்கள் தனியார் நிறுவனத்தினர். அரசுப் பள்ளிகளையும் வண்ணமயமாக்கும் முயற்சிகளில் சில ஆசிரியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், இவர்கள் சில தனியார் பள்ளிகளைப் போல, மக்களைக் கவர்வதாக மட்டும் அல்லாமல், மாணவர்களுக்குப் பயனுள்ள விதமாக தங்கள் முயற்சியை அமைத்துக்கொள்கின்றனர். அப்படியான சிறப்பான பங்களிப்பைச் செய்துவருபவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சங்கர தேவியும் ஒருவர்.

புதுச்சேரி, அபிஷேகப்பாக்கம், அரசுத் தொடக்கப்பள்ளியைக் கடந்துச்செல்பவர்கள், பல வண்ணங்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை ஆர்வத்துடன் கண்டு மகிழ்கின்றனர். சிலர் அதனோடு புகைப்படங்களும் எடுத்துக்கொள்கின்றனர். இதற்கு காரணமான, அப்பள்ளியின் ஆசிரியை து.சங்கர தேவியிடம் பேசினேன். 

 ``நானும் என் தோழியும் சக ஆசிரியையுமான நித்யாவும் எங்கள் பள்ளியை மேலும் அழக்காக்குவதற்கு ஓவியங்கள் வரையலாம் என முடிவு செய்தோம். அதற்காக யாரைத் தொடர்புகொள்வது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், எப்படியாவது பலரையும் திரும்பிப் பார்க்கும் விதத்தில் பள்ளியை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. ஒருநாள், கலை ஆசிரியர் உமாபதி சாரைப் பார்த்து, `பள்ளியின் சுவரின் அவுட்லைன் வரைந்து தர முடியுமா?' என்று கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்க, நாங்கள் முதல் படியில் ஏறத் தொடங்கினோம். எங்கள் பள்ளி மிகப் பிரமாண்டமானது. 180 மாணவர்கள் படிக்கிறார்கள். இரண்டு மாடிக் கட்டடம். இவ்வளவு பெரிய பள்ளிக்கு நாம் நினைத்தவாறு ஓவியம் வரையும் வேலையைச் செய்ய முடியுமா என்ற தயக்கம் இருந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியை குணா மேடம், தந்த ஊக்கம், அந்தத் தயக்கத்தைப் போக்கி விட்டது. 

டிசம்பர் மாதத்தில் கிடைத்த அரையாண்டு விடுமுறை தினங்களில் வேலையை முடிக்கத் திட்டமிட்டோம். வரைவதற்கு ஓவியர்களைத் தேடுவது ஒருபுறம் என்றால், செலவுகளுக்கு ஸ்பான்ஸர்களைத் தேடுவது இன்னொரு பக்கம். மாணவர்களின் பெற்றோர் இருவரும், சில நண்பர்களும் செலவுகளுக்கு உதவ முன் வர, வரைவதற்கு பாரதியார் பல்கலைக்கழக மாணவர் களமிறங்க பரபரப்புடன் பணிகளைத் தொடக்கினோம். வரைய வேண்டிய ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டோம். ஒவ்வொரு வகுப்புக்கும் அவற்றிற்கு உரிய பாடங்களையும் மனதில் வைத்துக்கொண்டு ஓவியங்களை வரையச் செய்தோம். மேலும், மாணவர்களுக்குப் பிடித்த பறவைகள், விலங்குகளையும் வரைய மறக்கவில்லை. புத்தாண்டு தினத்தில்கூட ஓய்வு எடுக்கவில்லை. சுமார் ஒன்பது நாள்கள் வரைந்து, பள்ளியின் உள் பகுதியில் ஓவியங்களால் அழகுப் படுத்திவிட்டோம். 

விடுமுறை முடிந்து, பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஆச்சர்யத்தால் திகைத்தார்கள். ஒவ்வோர் ஓவியத்தையும் தொட்டு, ரசித்து மகிழ்ந்தார்கள். பாடம் நடத்தும்போது அதற்குப் பொருத்தமான ஓவியங்கள் எங்கு வரையப்பட்டிருக்கின்றன என்பதைத் தேடுவதை ஒரு விளையாட்டு போல எங்கள் பள்ளியில் மாறிவிட்டது. எங்களின் அடுத்த வேட்டையை, கிடைக்கும் விடுமுறை தினங்களில் தொடர்ந்தோம். இப்போது வரை, கீழ்த்தளம் மற்றும் முதல் தளத்தில் ஒரு வகுப்பறை வரை நாங்கள் திட்டமிட்டவாறு ஓவியங்களை வரைந்துவிட்டோம். மீதமிருக்கும் பகுதிகளை விரைவில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் பள்ளியின் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அதைச் சாத்தியப்படுத்தும் என உறுதியாக நம்புகிறோம். எங்கள் பள்ளியில் வரைந்திருப்பவற்றைப் பார்க்க, மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். அருகிலிருக்கும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் வந்து பார்த்துவிட்டு, `நாங்க படிச்சப்ப, ஏன் டீச்சர் இப்படியெல்லாம் வரையல' எனக் கேட்கிறார்கள்.

ஓவியம் மட்டுமல்ல, சிபிஎஸ்பி பாடத்திட்டம் உள்ள எங்கள் பள்ளிக்கு, தனியார் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளைக்கூடச் சேர்க்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களின் கற்றலில் கவனம் எடுக்கிறோம். அதற்கு எங்கள் பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கையே சாட்சி" என்கிறார் ஆசிரியர் சங்கர தேவி நம்பிக்கையோடு.