
தங்க மங்கை
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றது. ஆசிய தடகள அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்தத் தொடர், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. 2017-ம் ஆண்டு இந்தியாவில் நடந்தபோது, 12 தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தனர் இந்திய தடகள வீரர்கள். இந்த ஆண்டும், இந்திய தடகள நட்சத்திரங்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்தத் தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கமாகவும் இது அமைந்தது.
பந்தயம் தொடங்கியபோது ஆறாவது இடத்தில் இருந்த கோமதி, தனது புயல் வேக ஓட்டத்தால், பந்தய தூரத்தை 2 நிமிடங்கள் 02.70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பேருந்து வசதிகூட இல்லாத ஊர். தந்தை மாரிமுத்து, சில வருடங்களுக்கு முன் இறந்துபோனார். தாய் ராஜாத்தி, விவசாயக் கூலி வேலைக்குச் சென்று நான்கு பிள்ளைகளைக் காப்பாற்றினார். கோமதி கடைசி மகள்.

அதிகாலை 5:30 மணிக்கும், மாலை 5 மணி அளவிலும் நடக்கும் தடகள பயிற்சிக்காக தினமும் 30 கிலோமீட்டர் பயணம் செய்தவர். வறுமையைக்கு நடுவே திறமையை நம்பி, பதக்கக் கனவை துரத்தினார். அவரது விடாமுயற்சிக்குக் கிடைத்தது, ஆசிய பதக்கம். அடுத்து என்ன ஒலிம்பிக்தான்!

இதேபோல, பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடங்கள் 14.46 விநாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். பெண்கள், கலப்பு 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் என இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. கலப்பு அணியில் இடம்பெற்ற 4 பேரில் தமிழக வீரர் ஆரோக்யராஜீவும் ஒருவர்.

ஹெப்டத்லான், ஈட்டி எறிதல், தடையோட்டம் என 4 நாள்கள் நடந்த போட்டிகளின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 17 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது. 11 தங்கப் பதக்கங்களுடன் பஹரைன் முதல் இடத்திலும், 9, 5 தங்கப் பதக்கங்களுடன் சீனா, ஜப்பான் நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் பெற்றன.