கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

சென்னை to பர்மா... யமஹா RX போல வருமா?!

சென்னை to பர்மா... யமஹா RX போல வருமா?!
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை to பர்மா... யமஹா RX போல வருமா?!

சென்னை to பர்மா... யமஹா RX போல வருமா?!

ரு பைக்கின் விலை, காலம் போகப் போக குறைந்துகொண்டே போகும். ஆனால் யமஹா RX பைக்கின் விலை மட்டும் கூடிக்கொண்டே போகிறது! 80-களில் புது பைக்காக 40,000 ரூபாய்க்கு விற்பனையான RX-135, இப்போது பழைய பைக் சந்தையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்வரை விற்பனையாகிறது. இத்தனை பெருமைகள் கொண்ட RX135 பைக்கில், சென்னையில் இருந்து பர்மாவுக்குச் சென்று வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம்.

‘‘எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்தாலும், 2 ஸ்ட்ரோக் RX-135 பைக்கில் கிடைக்கிற திருப்தி வேறு எங்கும் கிடைக்காது’’ எனும் ஸ்ரீராம், இப்போது தினமும் பயன்படுத்தும் பைக் RX-135தான். கல்லூரி படிக்கும்போது மூன்றாவது ஓனராக வாங்கிய இந்த பைக்கில், கன்னியாகுமரி முதல் இமயமலை வரை பயணம் செய்து விட்டார். அதன்பிறகுதான் இந்த பர்மா பயணம்.

சென்னை to பர்மா... யமஹா RX போல வருமா?!

முதலில் சென்னை-பாண்டிச்சேரி போன்ற சின்னச் சின்னப் பயணங்களுக்கு RX135-யைப் பயன்படுத்தியவர், அதன் மீது நம்பிக்கை வளர, பயண தூரங்களையும் விரிவாக்கிக் கொண்டார். ‘‘நேபாளத்துல இந்த பைக்கைப் பார்த்தாலே நிறுத்தி வச்சிப் பேசுறாங்க’’ என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் ஸ்ரீராம்.

பீகாரில் பைக் சேஸி இரண்டு துண்டாக உடைந்தது, மைனஸ் டிகிரி குளிரில் பைக் ஓட்டியது, 380 மீட்டர் சஸ்பென்ஷன் பாலத்தில் பைக் ஓட்டியது, காட்டுப் பகுதியில் சென்று கிளர்ச்சியாளர்களிடம் மாட்டிக் கொண்டது, எமா டாட்ஷி எனும் பூட்டான் பாரம்பரிய உணவை ருசித்தது, டார்ஜிலிங் என்ஃபீல்டு ரைடிங் கிளப்பின் உதவி, பர்மா தமிழ்ச் சங்கத்தின் பாசப்போராட்டம், கானின் தாஸ் எனும் மெக்கானிக்கின் அரவணைப்பு, பெட்ரோல் பங்க்கில் படுத்துத் தூங்கிய அனுபவம், கிராமவாசிகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என பலப்பல அனுபவங்களைக் கொடுத்துள்ளது RX-135.

சென்னை to பர்மா... யமஹா RX போல வருமா?!

30 நாள் என்று திட்டமிட்டுக் கிளம்பியவர், பயணத்தை 73 நாள்கள் தொடர்ந்திருக்கிறார்.இந்தப் பயணத்தின் மூலம் பைக் மீது மட்டுமல்ல, மக்கள் மீதும் தனக்கு நம்பிக்கை அதிகரித்து விட்டதாகச் சொல்கிறார் ஸ்ரீராம்.  ‘‘பரத்வாஜ் தயாலானு ஒருத்தர், முதன் முறையா 2006-ல் ஹீரோ ஹோண்டா கரீஸ்மாவில் உலகத்தைச் சுத்திவந்தார். M80, வெஸ்பாவிலும் கூட உலகத்தைச் சுத்தியிருக்காங்க. உலகத்தைச் சுத்திவர, சூப்பர் பைக்தான் வேணும்னு இல்லை. நம் பைக்கைப் புரிஞ்சிக்கிட்டு அதைப் பயன்படுத்துறதுலதான் விஷயமே இருக்கு. தன்னிச்சையா இருக்கப் பழகிக்கோங்க... அதேசமயம் உதவி கேட்கவும் தயங்காதீங்க!’’ என்று சொல்லும் ஸ்ரீராம், அடுத்த பைக் வாங்க முயற்சி செய்யவில்லையாம். தனது வாழ்நாள் முழுக்க இப்போதும் எப்போதும் RX135-ல்தான் பயணமாம்.

-  ரஞ்சித் ரூஸோ