Published:Updated:

`தரமான சமூகத்தை உருவாக்க ஆசைப்படுகிறேன்!'- மாணவர்களிடம் நெகிழ்ந்த சகாயம் ஐஏஎஸ்

`தரமான சமூகத்தை உருவாக்க ஆசைப்படுகிறேன்!'- மாணவர்களிடம் நெகிழ்ந்த சகாயம் ஐஏஎஸ்
`தரமான சமூகத்தை உருவாக்க ஆசைப்படுகிறேன்!'- மாணவர்களிடம் நெகிழ்ந்த சகாயம் ஐஏஎஸ்

"தரமான சமூகத்தை உருவாக்க ஆசைப்படுகிறேன். இதற்கு நீங்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என சகாயம் ஐஏஎஸ் நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார்.

அரியலூர் நிர்மலா காந்தி பள்ளியில், 'மக்கள் பாதை' இயக்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த இயக்கத்தின் தலைவர் சகாயம் ஐஏஎஸ் கலந்துகொண்டார். பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த சகாயம் ஐஏஎஸ், பசுமையைப் போற்றும் வகையில் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். அவர் பேசும்போது, "மாணவப் பருவத்திலிருந்து பல்வேறு காரியங்களுக்காக லஞ்சம் தருவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் மட்டுமே சமுதாயம் மேம்படும். தாய்மொழியாம் தமிழை வளர்க்கவும் மாணவ சமுதாயம் பாடுபட வேண்டும்" என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சகாயம் ஐஏஎஸ், "மக்கள் பாதை இயக்கத்தின் சார்பில், 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற பாதையில் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாகத் தற்போது தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின்மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் லஞ்சம் வாங்குவதில்லை எனவும், நேர்மையாக எனது பணியைச் செய்வேன் எனவும் உறுதிமொழி எடுத்துவரும் சூழ்நிலையைப் பார்க்கிறோம். பல கிராமங்களில் தற்போது வேலைவாய்ப்பு பெற்றுவரும் கிராம நிர்வாக அலுவலர்கள், லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற சொற்றொடரைத் தங்களது அலுவலகத்தில் வைத்திருப்பதைப் பார்க்கிறேன்.

லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மாற்றங்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. ஒருகாலத்தில் நேர்மையாக இருந்த நிர்வாகம் எப்படி ஊழல்மயமாக மாறியதோ, அதேபோல ஊழல் மாயமாகி இருக்கக்கூடிய இந்த நிர்வாகம், நேர்மையானதாக மாறும் காலம் வெகு விரைவில் வரும். லஞ்சம் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா என்பது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். சமூக மற்றும் சமுதாய மேம்பாட்டிற்குத் தடையாகவும், நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாகவும் லஞ்சம் இருப்பதாக நான் நம்புகிறேன். என்னைப் பொருத்தவரை நேர்மையான சூழல் அரசியலிலும் நிர்வாகத்திலும் மற்றும் சமூகத்தில் உருவாக வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்.