Published:Updated:

முகிலன் கடைசியாக எழுப்பிய கேள்விகள் இவைதாம் ! #WhereIsMugilan

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைத் திட்டமிட்டு வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளது தூத்துக்குடி காவல்துறை என்பதையும் அதற்குக் காரணமானவர்கள் தென்மண்டல காவல்துறை தலைவர் சைலேஷ் குமார் யாதவ்,  எஸ்.பி அருண்குமார், டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கார் போன்றோர் என்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார் முகிலன். அவை வெளியிடப்பட்ட நாளான கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரவிலிருந்து முகிலனைக் காணவில்லை.

முகிலன் கடைசியாக எழுப்பிய கேள்விகள் இவைதாம் ! #WhereIsMugilan
முகிலன் கடைசியாக எழுப்பிய கேள்விகள் இவைதாம் ! #WhereIsMugilan

க்களுக்காகப் போராடும் இயக்கங்களை, தனிமனிதர்களை எப்படியாவது சரிகட்டியாக வேண்டும். அவர்களின் போராட்டங்களை மழுங்கடிக்க வேண்டும். அதைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் ஏதாவதொரு கட்டத்தில் அந்தப் போராட்டங்கள் மக்களின் எழுச்சியாக உருவெடுக்கும். போராட்டங்களைக் கலவரத்தின் மூலமாக ஒடுக்கலாம். துப்பாக்கிச் சூட்டை ஆயுதமாகக் கையிலெடுத்து இல்லாமல் ஆக்கலாம். ஆனால், எழுச்சிகள் அப்படியானதல்ல. அது உரிமைகளைக் கோருவதற்கான முயற்சி. தம் உரிமைகளைப் பெறும்வரை அந்த முயற்சி ஓயாது. அத்தகைய எழுச்சிக்கான விதைகளை விதைத்துக்கொண்டிருந்தவர் சூழலியல் மற்றும் மனித உரிமைப் போராளி முகிலன். அவரது முயற்சிகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒடுக்கப்பட்டுக்கொண்டேயிருக்க அவரும் அதை உடைத்து எழுந்துகொண்டேயிருந்தார். முகிலன் மட்டுமல்ல; தமிழகம் முழுக்கப் பல்வேறு சூழலியல் போராளிகள் அத்தகைய போராட்டங்களை வழிநடத்திக்கொண்டிருந்தனர்.

பண முதலைகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் அடியாட்களாகப் பணிபுரியும் அதிகார வர்க்கத்தின் இலக்கு இவர்கள்தாம். இவர்களை அடக்கிவிட்டால் மக்களின் எழுச்சி மழுங்கடிக்கப்படும். அவர்களின் போராட்டங்களை இல்லாமல் செய்வது, அதன் பிறகு அவ்வளவு கடினமானதாக இருக்காது. அதனால் முதலில் இவர்களை அடக்கியாக வேண்டும். அதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருக்கின்றன. எதற்கும் உடன்படாதவர்களை மக்களின் உரிமை மீட்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமை ஆகியவையே முக்கியமென்று போராடுபவர்களை எதைக் கொண்டும் அடக்கிவிட முடியாது. அத்தகைய போராளிகளின் நீண்ட பட்டியலைக் கொண்டது தமிழகம். அவர்கள் அனைவருக்கும் தரப்படும் மிரட்டலாகவே முகிலன் காணாமல் போனதைப் பார்க்க வேண்டும். இந்தப் பிரச்னை முகிலனுக்கு மட்டுமானதல்ல. தமிழகத்தின் சூழலியல் போராளிகள் அனைவருக்குமான எச்சரிக்கை. இனி யார் இதுமாதிரி கேள்வி கேட்டுக்கொண்டு வந்தாலும் அவர்களுக்கும் இதுதான் நிலை என்றதோர் எச்சரிக்கை. அந்த எச்சரிக்கை முகிலன் விதைத்த விதையை விருட்சமாக்கும் என்பதைச் சிந்திக்காமல் செயல்படுகிறது ஆளும் வர்க்கம். விருட்சத்தின் வளர்ச்சி தொடங்கிவிட்டது. 

இன்று காலை 10 மணிக்கு சேப்பாக்கத்தில் அனைத்துக் கட்சிகளும், சூழலியல், சமூக, மனித உரிமைப் போராளிகளும் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்தான் அதற்கான ஆரம்பம். ஆலோசனைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதைப் பார்க்கும் முன் அவர் காணாமல் போனதன் பின்புலத்தை அலச வேண்டும். அதற்கு ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து அவர் வெளியிட்ட ஆதாரங்களைப் பற்றித் தெரிய வேண்டும். அதில் அவர் முன்வைத்த கேள்விகள் இதோ.

``தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் சென்றடைவதற்கு முன்னரே, காலை 11.50-க்கு தென்மண்டல காவல்துறைத் தலைவர் சைலேஷ் குமார் யாதவ் வந்துள்ளார். அவர் பார்வையிட்டுச் செல்லும்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த செங்கற்களை, சவுக்குக் கட்டைகளை அப்புறப்படுத்தச் சொல்லாமல் அசட்டையாகச் சென்றுள்ளார். அவற்றை வைத்துதான் அங்கு வந்திருந்த அடியாட்கள் வாகனங்களை, பொருள்களை அடித்து நொறுக்குகிறார்கள். சைலேஷ் குமார் யாதவ், கேமரா ஒன்றுக்கு அருகிலிருந்த பன்னிரண்டு அடி உயரம் கொண்ட ஏணியைக் கவனித்திருந்தும் அதை அப்புறப்படுத்தச் சொல்லவில்லை. அங்கிருந்த ஏணியில் ஏறியவர் கேமரா ஒன்று மற்றும் இரண்டை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளார். மக்கள் கலவரம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று கூறி அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதன்பேரில் பார்வையிட்டுச் சென்ற சைலேஷ் குமார் யாதவ் அவற்றை அப்புறப்படுத்தச் சொல்லாதது ஏன் என்ற சந்தேகம் எழுகிறது. 

கலவரம் செய்வதற்கான, கேமராக்களை உடைப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்த கறுப்புச் சட்டை, கறுப்பு பேன்ட் மற்றும் தலையில் தொப்பி அணிந்த ஆறடி உயரமுள்ள மனிதர் யார்? அவருடைய உத்தரவின் பேரில்தான் அனைத்து சதிவேலைகளும் அங்கு நடைபெற்றுள்ளன. அவற்றுக்கு உதவியது அங்கிருந்த ஏணியும், குவிக்கப்பட்ட பொருள்களும். எனில், வேண்டுமென்றே அவை அங்கு குவிக்கப்பட்டனவா! 11:55:24 மணிக்குத்தான் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்கள். கேமராக்கள் உடைக்கப்பட்ட 15 நொடிகளுக்குள் சொல்லி வைத்தாற்போல் ஆட்சியர் அலுவலகத்துக்கு மேற்குப் பகுதியிலிருந்த காவலர்கள் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்குகிறார்கள். காணொலிப் பதிவுகள் இது ஒரு காவல்துறை அதிகாரியின் தலைமையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு என்பதைக் காட்டுகிறது. சரியாக 11:57:50 மணிக்குக் காவல்துறை துப்பாக்கிச்சூட்டைத் தொடங்குகிறது. அது தொடங்கிய ஒரு நிமிடம் பதினான்கு விநாடிகளுக்குள் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தைவிட்டு வெளியேறுகின்றனர். காவல்துறையால் வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் உள்ளே நுழைய முயல்கிறார்கள். ஆனால், அவர்களால் மீண்டும் நுழைய முடியவில்லை.

12:05:52 மணிக்கு மக்களைத் துரத்திச் சென்ற பெரும்பாலான காவலர்களும் எஸ்.பி-யும் மேற்குப் புறத்திலுள்ள கட்டடத்துக்குத் திரும்பிவிட்டனர். மற்றவர்கள் மக்கள் மீண்டும் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். சரியாக 12:06:54 மணிக்கு ஆட்சியர் அலுவகத்தின் முன்வாயிலுக்கு ஒரு கும்பல் வருகிறது.

மக்கள் அனைவரையும் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றிய பின்னர் 12:06 மணிக்குக் காவல்துறை ஸ்டெர்லைட்டின் அடியாள் கும்பலின் கையில் அந்த இடத்தை விட்டுவிட்டது. உள்ளே என்ன நடந்தது என்ற உண்மை போராடியவர்களுக்கோ மற்றவர்களுக்கோ தெரிய விடாமல் காவல்துறை தடுத்துவிட்டது. அதனால், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்மீது போடப்பட்ட பொய் வழக்குகளை மக்களும் ஊடகங்களும் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கேமராக்கள் ஒன்றும் இரண்டும் உடைக்கப்படும் சமயத்திலும், துப்பாக்கிச்சூடு தொடங்கிய சமயத்திலும் அங்கு தீ வைக்கும் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. டி.ஐ.ஜி, எஸ்.பி ஆகியோர் அங்கிருந்து வெளியேறியபோதும், காவலர்கள் மீண்டும் திரும்பியபோதும் எந்தத் தீ வைப்புச் சம்பவங்களும் நிகழவில்லை. 12.06 மணிக்கு மேல் இந்தச் சம்பவங்கள் அரங்கேறியிருக்க, துணை வட்டாட்சியர் சேகர் மூலமாக 11 மணிக்கே போராட்டக்காரர்கள் தீ வைப்பு நிகழ்த்திவிட்டதாகவும் அதனால் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாகவும் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 11.48 மணிக்குத் தீ வைக்கப்பட்டதாகத் திருநெல்வேலி காவல்துறை உதவி ஆணையர் புகார் அளித்ததாகவும் அதனால் 11.50 மணிக்குத் தீயணைப்பு வாகனங்களை அனுப்பியதாகவும் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் போலியான ஆவணத்தைத் தாக்கல் செய்தவர் தீயணைப்புத்துறை அதிகாரி சண்முகம்.’’

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைத் திட்டமிட்டு வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளது தூத்துக்குடி காவல்துறை என்பதையும் அதற்குக் காரணமானவர்கள் தென்மண்டல காவல்துறை தலைவர் சைலேஷ் குமார் யாதவ்,  எஸ்.பி அருண்குமார், டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கார் போன்றோர் என்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார் முகிலன். அவை வெளியிடப்பட்ட நாளான கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரவிலிருந்து முகிலனைக் காணவில்லை. ஏற்கெனவே தமிழகத்தின் சூழலியல் போராளிகள் மீதான தாக்குதலும் அவர்களையும் அவர்களின் போராட்டங்களையும் ஒடுக்குவதற்கான முயற்சிகளையும் மறைமுகமாக அரசு மேற்கொண்டு வருகிறதோ என்ற சந்தேகங்கள் நிலவிவரும் நிலையில் இந்த ஆள்கடத்தல் நிகழ்ந்துள்ளது.

முகிலன் காணாமல் போய் 10 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த சிறு தகவல்கூடத் தெரியவில்லை. அவரைத் தேடுவதற்கான முயற்சியில் முழுவீச்சில் தமிழக காவல்துறையும் இறங்கியதாகத் தெரியவில்லை. தற்போதுதான் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் கூலிப்படையோ அல்லது ஆலையின் தூண்டுதலால் தமிழகக் காவல்துறையோ இந்தக் கடத்தலைச் செய்திருக்கலாமென்று தமிழகக் கட்சிகளும் சூழலியல் செயற்பாட்டாளர்களும் அஞ்சுகின்றனர். முகிலன் தொடர்பாக அடுத்து என்ன செய்யலாமென்று திட்டமிடுவதற்காக இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் அவரால் அம்பலப்படுத்தப்பட்ட தென்மண்டல காவல்துறை தலைவர், திருநெல்வேலி மண்டலக் காவல்துறை துணைத் தலைவர், மாவட்டக் கண்காணிப்பாளர் ஆகியோரே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அஞ்சுகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சி.பி.ஐ உறுப்பினர் தோழர் நல்லகண்ணு ஐயாவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த வேல்முருகனும், ``தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக அனைத்து அரசியல் இயக்கங்கள், கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் இணைந்து அடுத்தகட்ட நகர்வாக வருகின்ற மார்ச் 2-ம் தேதி சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த உள்ளோம். `தமிழக அரசே! முகிலன் எங்கே’ என்ற கேள்வியோடும் மக்களுக்காகப் போராடும் முகிலனை மக்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறும். எந்தக் கட்சிக் கொடியும் இல்லாமல் நடைபெறப்போகும் இந்தப் போராட்டத்தில் அனைவருடைய ஒரே கோரிக்கை காணாமல்போன முகிலனைக் கண்டுபிடித்துத் தர வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என்பதே’’ என்று கூறினர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்த 13 உயிர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டுமென்று போராடினார் முகிலன். தூத்துக்குடி மக்களுக்கு எதிரான ஆளும் அதிகார வர்க்கங்களின் அடக்குமுறையை, கொடுமைகளை வெளியுலகுக்குக் கொண்டு வரவே அவர் முயன்றார். இன்று அவர் கடத்தப்பட்டிருப்பதும் அந்த முயற்சியின் ஒரு தொடர்ச்சியே. இப்படியான சூழலியல் செயற்பாட்டாளர்களின் முயற்சிகளையும் அவர்கள் உருவாக்கவிருக்கும் எழுச்சிகளையும் ஒடுக்க நினைக்கின்றன அதிகார வர்க்கங்கள். அதற்காக அவர்கள்மீது பல்வேறு அவதூறுகளையும் பரப்பிக்கொண்டுதான் இருக்கின்றன. மிக முக்கியமான செயற்பாட்டாளர்களான ஃபாத்திமா பாபு, முகிலன் போன்றோரைச் சரிகட்ட முடியாமல் போகும்போது இயக்கங்களுக்குள் சிலரை விலைக்கு வாங்கி, அவர்கள் மூலமாகப் பல அவதூறு தகவல்களைப் பரப்புவதில் முனைகிறார்கள். பிரச்னைகளைத் திசை திருப்பவும், போராட்டங்களின் வீரியத்தை மழுங்கடிக்கவும் இத்தகைய சதிவேலைகள் எவ்வளவுதான் நடந்தாலும் உண்மைகளை எப்போதும் மறைத்தே வைத்திருக்க முடியாது. அதற்கான உதாரணம்தான் முகிலன் கொண்டுவந்த `கொளுத்தியது யார், ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்’ முன்வைத்த ஆதாரங்கள். அது வெளியான உடனே முகிலன் கடத்தப்பட்டார். தற்போது அவர் வெளியிட்ட ஆதாரங்களைப் பேசுவதையும் தாண்டி அவர் குறித்து மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். 

உண்மையில் முகிலன் கடத்தப்பட்டதற்குப் பின்புலத்தில் இருக்கக்கூடிய மூலகாரணமான துப்பாக்கிச்சூடு ஆதாரங்களைத்தான் முன்வைக்க வேண்டும். அதன்மூலம் முகிலன் கடத்தப்படுவதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கவும், அவர் வெளியிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உண்மைகள் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் மறைக்கப்படலாம். ஆனால், மறக்கப்பட்டுவிடக் கூடாது.