Election bannerElection banner
Published:Updated:

மாரத்தான் பங்கேற்பாளர், தமிழ் உச்சரிப்பு சொல்லித் தருபவர், பட்டிமன்ற பேச்சாளர், நடிகை... 68 வயது மீனலதாவின் கதை

மாரத்தான் பங்கேற்பாளர், தமிழ் உச்சரிப்பு சொல்லித் தருபவர், பட்டிமன்ற பேச்சாளர், நடிகை... 68 வயது மீனலதாவின் கதை
மாரத்தான் பங்கேற்பாளர், தமிழ் உச்சரிப்பு சொல்லித் தருபவர், பட்டிமன்ற பேச்சாளர், நடிகை... 68 வயது மீனலதாவின் கதை

``ஷில்பா ஷெட்டிக்குப் பாட்டியா ஒரு மசாலா விளம்பரத்தில் நடிச்சிருக்கேன். ஒரு டிவி விளம்பரத்துக்காக ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் உச்சரிப்பு சொல்லிக் கொடுத்திருக்கேன்.''

சில பெண்கள், அவர்கள் தொட்ட அத்தனை விஷயங்களிலும் ஜொலிப்பார்கள். அது பன்முகத் தன்மை தந்த வரம். அப்படியொரு வரம் பெற்றவர்தான் மீனலதா. தமிழ்நாட்டில் பிறந்து, மும்பையில் செட்டிலாகி, நாடகம், மாரத்தான் பங்கேற்பாளர், விளம்பரங்களில் நடிக்கிற தமிழ் தெரியாத நடிகைகளுக்குத் தமிழ் உச்சரிப்பு சொல்லித்தருவது, கர்நாடக கச்சேரிகளுக்கு ஜட்ஜாகப் போவது, பட்டிமன்றப் பேச்சாளர், இரண்டு தமிழ்த் திரைப்படங்களில் நடித்தது என்று ரவுண்ட் த கிளாக் பிஸியாக இருக்கும் இந்த இளைஞிக்கு வயது ஜஸ்ட் 68 தான். உங்கள் வீட்டுக் கடிகாரத்திலும் 24 மணி நேரம்தானே. எப்படி இத்தனை விஷயங்களையும் செய்ய முடிகிறது என்றோம். கலகலப்பாகப் பேச ஆரம்பித்தார் மீனலதா.

``நான்  குற்றாலம் பக்கத்துல தென்காசியில் பிறந்தவ. எனக்கு சின்ன வயசுல இருந்து நடிக்கிறதும் பாடறதும் ரொம்பப் பிடிக்கும். பாட்டுக் கத்துக்கிட்டேன். ஆனா, நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைக்கலை. படிச்சு முடிச்சு, கல்யாணமாகி மும்பைக்கு வந்துட்டேன். மும்பையில் அரசு டெலிபோன் டிபார்ட்மென்ட்டில் ஆஃபீசர் உத்தியோகமும் கிடைச்சது. ஒரு பையன், பொண்ணு என்று ரெண்டு குழந்தைகளையும் பிறந்தாங்க. இருந்தாலும் மனசுக்குள்ள இருந்த நடிப்பு ஆசை மட்டும் தீரவே இல்லை''என்கிற மீனலதா, மும்பைக்கு வந்த புதிதில் மொழி தெரியாமல் தான் பட்ட சில சங்கடங்களையும் பகிர்ந்துகொண்டார். 

``மும்பைக்கு வந்த புதுசுல அடிப்படை இந்தியும், யெஸ், நோ இங்கிலீஷூம்தான் தெரியும். டென்த் வரைக்கும் தமிழ் மீடியத்தில் படிச்சவ நான். வேலைக்குச் சேர்ந்த புதிதில், இந்தி, ஆங்கிலம் புரியும்னாலும் திருப்பிப் பேச தெரியாதுங்கிறதால், ஆஃபீஸில் இருக்கிற தமிழ்க்காரங்ககிட்ட மட்டும் பேசுவேன். இதனால, மராட்டிக்காரங்க என்னை, `ஏன் மேடம் உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா'ன்னு கேலி பண்ணுவாங்க. `ஐ நோ இங்கிலீஷ்'னு சொல்லிட்டுப் போயிடுவேன். அதுக்கு மேலே கோவையா பேசத் தெரியாது'' என்றவர் தான் கலைத்துறைக்கு வந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

``பிள்ளைங்க வளருகிற வரைக்கும் ஆஃபீஸில் நடக்கிற கல்ச்சுரல்ஸ் மீட் எல்லாத்திலும் பங்கெடுத்துப்பேன். பிள்ளைங்க வளர்ந்துட்டப் பிறகு, ஆஃபீஸ் டைம் முடிஞ்சதுக்கப்புறம் டிராமா பிராக்டிஸ்க்குப் போவேன். முதல் டிராமா ஆதி சங்கரர் பற்றிய கதை. அதுல நான் ஆதி சங்கரரோட அம்மாவா நடிச்சேன்'' என்று பெருமிதப்படுகிற மீனலதா, அதன் பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்களாக ஆன்மிகம், சமூகம், நகைச்சுவை என்று பல தளங்களில் பல ஸ்டேஜ் டிராமாக்களில் நடித்து வருகிறார். தவிர, ஆஃபீஸ் வேலையிலும் மீனா சோடை போனவர் கிடையாது. சின்சியர் வொர்க்கருக்கான அவார்டும் வாங்கியிருக்கிறார். 

``எனக்கு ஏழெட்டு வயசு இருக்கிறப்போ, `பாவை விளக்கு' படத்தில் சிவாஜிக்கு மகளா நடிக்கக் கூப்பிட்டாங்களாம். அப்ப எங்கப்பா விடலை. ஆனா, இப்ப `துப்பாக்கி' படத்தில் விஜய், காஜலை பெண்ப் பார்க்கிற சீனில் பொண்ணு வீட்டு சொந்தக்காரங்களில் ஒருத்தரா ப்ளூ கலர் பட்டுப்புடவையில் நிற்பேன். `தலைவா'வில் விஜய்கூட ஐந்தாறு சீனில் வந்தேன்'' என்பவர், விளம்பரங்களில் நடிப்பதோடு, விளம்பரங்களில் நடிக்கிற நடிகைகளுக்கு தமிழ் உச்சரிப்பும் சொல்லிக் கொடுத்து வருகிறார். 

``ஷில்பா ஷெட்டிக்கு பாட்டியா ஒரு மசாலா விளம்பரத்தில் நடிச்சிருக்கேன். ஒரு டிவி விளம்பரத்துக்காக ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் உச்சரிப்பு சொல்லிக் கொடுத்திருக்கேன். ஸ்ருதி என்கிட்ட, `அம்மா எனக்குத் தமிழ் தெரியும். நீங்க மொத்த சென்டன்ஸையும் வாசிங்க. நான் கேட்டுக்கிறேன். அது போதும்'னு சொன்னாங்க'' என்கிற இந்தப் பன்முக கலைஞி, தற்போது ஒரு இந்தி வெப் சீரியஸில் (ikki gai) ஹீரோயினுக்கு அத்தையாக நடித்து வருகிறார். மகளிர் தினத்துக்காக ஒரு டிராமாவுக்கு ஸ்கிரிப்ட்டும் ரெடி செய்துகொண்டிருக்கிறார். 

வாழ்த்துகள் மீனாம்மா!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு