Published:Updated:

திருக்காரவாசல்! தமிழகத்தின் இரண்டாவது நெடுவாசலா?! #HydroCarbon

திருக்காரவாசல்! தமிழகத்தின் இரண்டாவது நெடுவாசலா?! #HydroCarbon
திருக்காரவாசல்! தமிழகத்தின் இரண்டாவது நெடுவாசலா?! #HydroCarbon

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் உங்களுக்கு நினைவில் இருக்கும். பசுமை வளம் கொழிக்கும் தங்களின் நிலத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கக் கூடாது. அது வறண்ட பூமி ஆகி விடும் என அந்தப் பகுதி மக்கள் நூறு நாள்களுக்கும் மேலாக தங்கள் ஊரில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதே திட்டம் தற்போது திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் பகுதியில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதை அறிந்த திருக்காரவாசல் பொதுமக்கள் அந்தத் திட்டத்தை எதிர்த்து பல்வேறு விதமான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். களநிலவரம் அறிய அங்குள்ள கிராமவாசிகளிடம் இது தொடர்பாகப் பேசினோம். நமக்கு முதலில் பதிலளிக்க முன் வந்தவர் மணியன். விவசாயத்தைத் தவிர வேறு எதுவும் அறிந்திராத குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர், ``நான் இந்த கிராமத்திலதான் இருக்கேன். எனக்கு விவசாயத்தைத் தவிர, வேற எதுவும் தெரியாது, இந்த ஊரு, என்னோட வயல், வீடு இதுதான் என்னோட உலகம். இப்போ ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக, எங்க நிலத்தை விட்டு எங்களை அப்புறப்படுத்தறாங்க. தாய்ப்பால் அதிகம் வேணும் என்பதற்காக தாயைக் கொல்ல முடியுமா? அப்படித்தான் எங்களுக்கு இந்த நிலம். இதை ஒரு நாளும் அழிக்க விடமாட்டோம்” என்றார். 

திருக்காரவாசல்! தமிழகத்தின் இரண்டாவது நெடுவாசலா?! #HydroCarbon

வயலில் அறுவடை செய்துகொண்டிருந்த விவசாயக் குடும்பத்தைச் சந்தித்தோம். நெல்லை அள்ளிப்போட்டுக்கொண்டு நம்மோடு பேசினார் அந்தக் குடும்பத் தலைவர். எங்களுக்கு குலதெய்வமே இந்த நிலம்தான். இதுதான் எங்க கோயில். இந்த நிலத்தை விட்டுட்டு நாங்க எங்க போவோம். எங்களுக்கு என்ன பிரச்னை வரப்போறதுன்னுகூட முழுசா தெரியாது. `ஹைட்ரோகார்பன்' இந்தப் பேரக் கூட எங்களுக்குச் சொல்லத் தெரியாது. எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாமே விவசாயம்தான். அதுக்கு ஒண்ணுன்னா நாங்க உயிரைக்கூட கொடுக்கத் தயங்கமாட்டோம்” என்றார். 

திருக்காரவாசல்! தமிழகத்தின் இரண்டாவது நெடுவாசலா?! #HydroCarbon

இதைப் பற்றி முழுவிவரம் அறிந்த அந்தப் பகுதி மக்கள், ``மரக்காணம் தொடங்கி கடலூர்வரை, 1794 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் பரங்கிப்பேட்டை தொடங்கி வேளாங்கண்ணி அருகில் உள்ள புஷ்பவனம் வரையில் 2,574 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் கடலோரக் கிராமங்களையொட்டிய ஆழமற்ற கடற்பரப்பிலும் ஹைட்ரோகார்பன் எடுத்துக்கொள்ள வேதாந்தாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் திருக்காரவாசல் கிராமமும் அடங்கும். அந்தப் பகுதியில் `நீரியல் விரிசல்’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலத்திற்கு அடியிலிருந்து மீத்தேன் வாயு எடுப்பார்கள். இதற்காக 6,000 அடி ஆழம்வரை மண்ணிற்குக் கீழே செங்குத்தாக குழாய்களைப் பதித்து, அக்குழாய்களிலிருந்து கிடக்கையில்வைத்த கோழிக்கால் போல எட்டுத் திசையிலும் 2 கிலோமீட்டர் தொலைவிற்குக் குழாய்களைப் பதித்துள்ளனர். லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரையும் பலநூறு டன் நச்சு ரசாயனங்களையும் கலந்து உயர் அழுத்தத்தில் பூமிக்குள் செலுத்தி ஒவ்வொரு முறையும் நிலத்திற்கு அடியில் செயற்கையான நிலநடுக்கத்தை ஏற்படுத்தி, ஹைட்ரோகார்பன் எடுப்பார்கள். வெளியேறும் நச்சுக் கரைசல்களை நிலத்திற்கு மேலே ஆறுகளிலும், குளங்களிலும் பாய்ச்சுவார்கள். மீத்தேன் எடுப்பதற்கு முன்னர் 3,000 அடியிலேயே பெட்ரோலியத்தை எடுத்துக்கொள்வார்கள். இதை மொத்தமாக எடுத்து முடிக்க 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும். அதற்குள் இங்குள்ள குளங்களும், நீர்நிலைகளும் நிலம் மற்றும் ஆற்று நீரும் நஞ்சாகிக் குடிப்பதற்கோ, பாசனம் செய்வதற்கோ உகந்ததாக இல்லாமல் மாறி விடும், விவசாயம் செய்ய வழியின்றி தவிக்கும் நிலை ஏற்படும். உள்ளூரை விட்டு வெளியேற வேண்டிய நிலைவரும். பிறகு நிலத்திற்கு அடியில் பல லட்சம் டன் நிலக்கரியை எடுத்துச்செல்வதற்கும் சேர்த்துதான் இந்த ஒப்பந்தம். சாத்தப்பாடி, குறிஞ்சிப்பாடி, விராலூர், பின்னலூர் ,ஐயப்பா டி, கொத்தட்டை, புதுப்பேட்டை, நஞ்சை மகத்து வாழ்க்கை, வில்லியநல்லூர் உள்ளிட்ட பல கிராமங்கள், இதுபோன்ற நடவடிக்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன” என்கின்றனர் ஆதங்கத்துடன்,

சூழலியல் ஆர்வலர் பேராசிரியர் த.ஜெயராமன் சொல்லும் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. ``இந்த பூமி வானம் பார்த்து விளைந்தது. இதில் விவசாயம்தான் நடக்க வேண்டும். வேறு எந்தத் திட்டத்துக்கும் இடமில்லை. விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமை. விவசாயம் இல்லையென்றால் இன்றைக்கு உலகம் இல்லை”. எனவே விவசாயத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.