Published:Updated:

வால்கண்டா போர்... தண்டனை கிணறு... ரஞ்சன்குடி கோட்டை தெரியுமா?

வால்கண்டா போர்...  தண்டனை கிணறு... ரஞ்சன்குடி கோட்டை தெரியுமா?
வால்கண்டா போர்... தண்டனை கிணறு... ரஞ்சன்குடி கோட்டை தெரியுமா?

கோடை விடுமுறைக்கு ஊட்டி போகலாமா, கொடைக்கானல் போகலாமா என இப்போதே திட்டமிட ஆரம்பித்திருப்பீர்கள். விடுமுறை பயனுள்ளதாக அமைய, பல வரலாற்றுத் தகவல்களை தெரிந்துகொள்வதும் அவசியம்! அந்த வகையில், பெரம்பலூரில் உள்ள ரஞ்சன்குடி கோட்டையைப் பற்றி தெரிந்துகொள்வோமா!


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. இது, பல போர்கள் நடந்ததற்கான சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக்கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. 

வரலாறு 

பிற்கால பாண்டிய மன்னனின் வம்சாவளியில் வந்த தூங்கானை மறவன், 1,600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்டையைக் கட்டினார். பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டதற்குச் சான்றாக மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக அந்தக் காலத்தில் அகழியும் மதில்சுவர்களும் வைத்து, சுமார் 57.5 ஏக்கர் அளவில் இந்த ரஞ்சன்குடி கோட்டை அமைந்துள்ளது. தூங்கானை மறவன் நோய்வாய்ப்பட்டிருந்ததால் (குஷ்டம்)  இந்தக் கோட்டையின் வேலை முடிக்கப்படாமல் இருந்துள்ளது. கோட்டை முற்றுபெறாத நிலையில் மன்னன் இறந்துவிட்டான். அவருடைய சமாதி இங்கு உள்ளது.

சேர, சோழ, பாண்டியர்கள், போஜலர்கள், விஜய நகர மன்னர், நாயக்கர்கள் இந்தப் பகுதியை ஆட்சிசெய்தனர். அந்த மன்னர்கள் கோயில் கட்டுவதில் ஆர்வமாக இருந்ததால், இந்தக் கோட்டையைச் சீரமைக்கவில்லை. 1680-ல் முகலாயர்கள் படையெடுப்பில் இந்தப் பகுதியைக் கைப்பற்றினார்கள். பிறகு, முதல் நாவப் டெல்லி முகமதுகான் இந்தக் கோட்டையைச் சீரமைத்துக் கட்ட ஆரம்பித்தார். அவருடைய சமாதியும் இந்தக் கோட்டையில்தான் உள்ளது.

அதன் பிறகு முஸ்லிம்கள் இந்தக் கோட்டையை ஆட்சிசெய்தனர். 1733-ல் ஆற்காடு நவாப் தோஸ்த்தலி கட்டுப்பாட்டில் வந்தது இந்தக் கோட்டை. 1735-ல் அவருடைய மகன் சப்தர் அலிக்கு இந்தக் கோட்டையின் பொறுப்பைக் கொடுத்தார் தோஸ்த்தலி. சப்தர் அலிதான் இந்தக் கோட்டையின் முற்றுபெறாமல் இருந்த வேலைகளைச் செய்து முடித்தார்.

முகமது அலி இந்தக் கோட்டையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, இவருக்கும் தோஸ்த்தலியின் மருமகனான சந்தா சாகிப்புக்கும் 1751-ல் போர் நடைபெற்றது. இதில் முகமது அலிக்கு க்ளைவ் ஆங்கிலேயர்களும், சந்தாசாகிப்க்கு ப்ரஞ்சு படைகளும் சாதகமாக இருந்தன. 1751-ல் இந்தக் கோட்டையில் பெரிய போர் நடைபெற்றது. அந்தப் போரின் பெயர் `வால்கண்டா போர்'. போரில் இறந்தவர்கள் எல்லோரையும் இந்தக் கோட்டைக்கு வடபுறத்தில் உள்ள சப்தர் ஜங்மகான் என்ற பகுதியில் புதைக்கப்பட்டனர். இந்த வால்கண்டா போர், இந்தக் கோட்டையில் நடைபெற்றபோது இந்தக் கோட்டை சேதமடைந்தது. இந்தப் போரில் முகமது அலி படை வெற்றிபெற்றது.

முகமது அலி ஓய்வுபெற்ற பிறகு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இந்தக் கோட்டை வந்தது. 1946-ல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அன்று முதல் இன்று வரை இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்தான் இந்தக் கோட்டை உள்ளது.               

கோட்டையின் அமைப்பு:

கோட்டை மதில் சுவர்கள் மூன்று அடுக்குகள்கொண்டவை. மேலிருந்து பார்க்கும்போது அரைக்கோள வடிவத்தில் இருக்கும். கோட்டை வெளிப்புறத்தில் மதில்சுவர்களையொட்டி அகழி இருக்கிறது. அகழிக்குத் தேவையான தண்ணீர், அருகில் உள்ள நீரோடையிலிருந்து கொண்டுவரப்படுகிறது. 

கோட்டையின் முதல் தளத்தில் வழிபாடு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தில் உள்ள தூணில் சிவபெருமானை, பசு வணங்குவது போன்ற சிற்பமும், பல்வேறு வகையிலான சிறு சிறு சிற்பங்களும் உள்ளன. அதேபோல் இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்துவதற்காகப் பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. இரு மதத்தவர் தொடர்புடைய விஷயங்கள் இந்தக் கோட்டையில் நிறைய இருப்பது வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

இந்தக் கோட்டையில் தண்டனை கிணறு ஒன்று உள்ளது. அந்தக் காலத்தில் குற்றம் செய்த ஆண், பெண் இருவரையும் உயிரிழக்கும் வரை தண்டனை கிணற்றில் போட்டுவிடுவார்கள். இதை வரலாற்று ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் கோட்டையில் தற்காப்பு வழியும் உள்ளது. இவை மட்டுமல்லாமல் கொடிமேடை, பீரங்கிமேடை, வெடிமருந்துக் கிடங்கு ஆகியவை மேல் கோட்டையில் அமைந்துள்ளன. கீழ் கோட்டையில் நுழைவுவாயிலுக்கு அருகில் ஒரு மண்டபம், எதிர்புறம் தண்டனை கிணறு, பள்ளிவாசல் ஆகியவை உள்ளன. இதற்கு தென்புறத்தில் வட்டவடிவமான மூன்று தடயங்களும், தற்காப்பு வழியும் உள்ளன. 

கோட்டையில் உள்ள மண்டபத்தின் அருகில் சுரங்கப்பாதை உள்ளது. போர்கள் உச்சகட்டம் அடையும்போது அரசர்கள் தப்பிச் செல்வதற்காக சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கத்திலிருந்து நகரின் மையப் பகுதிக்கும், ஊரின் எல்லைக்கும் செல்வதற்கு பாதைகள் உள்ளன. இதை தற்போது தொல்லியல் துறை  மூடிவைத்துள்ளது.

உட்கோட்டையில் இரண்டு குளங்களும், முரசுமேடை, பள்ளிவாசல், உப்பளப் பாத்திகள் உள்ளன. காலப்போக்கில் உப்பளப் பாத்திகள் எல்லாம் மண்மூடிப்போய் அழியும் நிலையில் உள்ளன. இந்தக் கோட்டையில் குடிநீர்க் கிணறு மற்றும் 9 கிணறுகள் உள்ளன. அநேகக் கிணறுகள் மண்மூடியே காணப்படுகின்றன. மழைநீர் சேகரிப்பு குளமும் உள்ளது. இந்தக் கோட்டையைப் பற்றிய கல்வெட்டு, வாலிகண்டாபுரத்தில் உள்ள வாலிஸ்வரன் ஆலயத்தில் உள்ளது.

வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கும் ஓர் இடமாக ரஞ்சன்குடி கோட்டை இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக வரலாற்றுச் சுவடுகள் தெரிவிக்கின்றன. வரக்கூடிய கோடை விடுமுறையை உறவுகளுடனான குதூகலத்துடன், அரிய தகவல்களைத் தாங்கி நிற்கும் இதுபோன்ற பெரிய இடங்களுக்கும் சென்று வருவோமா!