Published:Updated:

“பிரமாண்ட செட் போட்டார்... இருக்க ஒரு வீடில்லை!”

“பிரமாண்ட செட் போட்டார்... இருக்க ஒரு வீடில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“பிரமாண்ட செட் போட்டார்... இருக்க ஒரு வீடில்லை!”

“பிரமாண்ட செட் போட்டார்... இருக்க ஒரு வீடில்லை!”

“பிரமாண்ட செட் போட்டார்... இருக்க ஒரு வீடில்லை!”

“பிரமாண்ட செட் போட்டார்... இருக்க ஒரு வீடில்லை!”

Published:Updated:
“பிரமாண்ட செட் போட்டார்... இருக்க ஒரு வீடில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“பிரமாண்ட செட் போட்டார்... இருக்க ஒரு வீடில்லை!”

திரைத்துறையிலிருப்பவர்கள் மட்டுமன்றி ஓவியர்கள் பலருக்கும் பரிச்சயமான பெயர் ‘கிருஷ்ணமூர்த்தி’ தமிழ், மலையாளம், கன்னடம், வங்காளம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் 60-க்கும் அதிகமான படங்களில் புரொடெக்ஷன் டிசைனராக, கலை இயக்குநராக, காஸ்ட்யூம் டிசைனராகப்  பணிபுரிந்தவர். இன்று வாங்கிய விருதுகளையும், சேகரித்து வைத்த கலைப்பொருள்களையும் வைக்க வீடில்லாமல் அனைத்தையும் அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

“நாங்க ஹோமுக்குப் போகப்போறோம். புக்ஸ், ஆர்ட் வொர்க்லாம் கொஞ்ச பேரிடம் கொடுத்துட்டேன். இந்த அவார்டெல்லாம் யாரிடம் கொடுக்கு றதுன்னு தெரில” என அப்பாவியாக 5 தேசிய விருதுப் பதக்கங்களைக் எடுத்துக் காண்பித்தார். அலமாரியை அலங்கரிக்க வேண்டிய அவ்விருதுகள் பழுப்பேறிக் கிடந்தன. கலை இயக்கத்துக்கா கவே கொ ண்டாடப்ப ட்ட பல படங்களின் ‘செட் மேக்கிங்’ படங்களும், தேசிய விருதுச் சான்றிதழ்களும் குப்பைத் தொட்டியில் வீசுவதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

“பிரமாண்ட செட் போட்டார்... இருக்க ஒரு வீடில்லை!”

காக்கி நிற அட்டைப்பெட்டிகளில் வீட்டிலிருந்த துணிகள், சில பாத்திரங்களை வைத்துக் கட்டிக்கொண்டிருந்தார் அவரின் மனைவி ராஜலட்சுமி. முதிய தம்பதி தனிமையில் வசிக்கும் வீட்டிற்கே உண்டான கனத்த மௌனத்துடன், நான்கு அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த அவர்களின் ஒட்டுமொத்த உடைமையும் அந்தச் சூழலை இன்னும் இறுக்கமாக்கியது.  5 தேசிய விருதுகள், 10-க்கும் மேற்பட்ட தமிழக, கேரள அரசின் மாநில விருதுகள் என 40-க்கும் மேற்பட்ட விருதுகள், பதக்கங்கள் என நாற்பதாண்டு சாதனைகளும் பழைய டிரங்குப் பெட்டிக்குள் அடைபட மறுத்துப் பிதுங்கி நின்றன.

பூம்புகாரில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர். ‘சிற்பி’ தனபாலின் மாணவர். கன்னட சினிமா உலகின் பிதாமகனாகப் போற்றப்படும் ஜி.வி.ஐயரின் அழைப்பின் பேரில் அவரது ‘ஹம்ச கீதா’ என்ற படத்தில் கலை இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தின் கலை இயக்கம் கவனம் பெறவே தொடர்ச்சியாக  பரதன், ஹரிஹரன், அஜயன் எனக் கொண்டாடப்பட்ட  இயக்குநர்களின் படங்களில் பணிபுரிய ஆரம்பித்தார். அவர் பணிபுரிந்த படங்கள் பலவும் ‘பீரியட்’ படங்கள். 

ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தில் வீடுகள் எப்படி இருந்ததோ அதேபோன்ற வீடுகளை ஸ்டூடியோக்களில் உருவாக்கியிருக்கிறார். 16-ம் நூற்றாண்டை  மையப்படுத்திய ‘ஒரு வடக்கன் வீரகதா’ வுக்காக வாள், கேடயம், துப்பாக்கி, பானை, வளையல் என நாடு முழுவதும் சுற்றித்திரிந்து சேகரித்திருக்கிறார். பாரதி வாழ்ந்த இடங்களைக் கண்டுபிடித்து ‘பாரதி’ படத்துக்கு உயிர்கொடுத்தவரும் கிருஷ்ணமூர்த்திதான்.

‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்தின் பிரமாண்ட செட்டுகள், வடிவேலுவின் வித்தியாசமான மீசை எல்லாம் கிருஷ்ண மூர்த்தியின் கைவண்ணங்கள்தாம். தீராத தேடலும், கச்சிதமான தொழில் நேர்த்தியும்  பாரதிராஜா, பாலுமகேந்திரா, கிரீஷ் கர்னாட் எனப் பல இயக்குநர்களைக் கிருஷ்ணமூர்த்தியின் நண்பர்களாக்கியது.

“பிரமாண்ட செட் போட்டார்... இருக்க ஒரு வீடில்லை!”

படங்கள் இல்லாத நாள்களில் நாடகங்களுக்குக் கலை இயக்கம் செய்துள்ளார். சில நாடகங்களை அவரே எழுதி, இயக்கியுமுள்ளார். தாமதமாகத்தான் திருமணம் செய்துள்ளார். தனக்கான ஊதியத்தைப் பொருட்படுத்தாமல் வேலையில் நேர்த்தியைக் கூட்டியிருக்கிறார். தாம் நேசித்த கலையை உயிராய்க்  கருதி வாழ்ந்தவர்களுக்கு அந்திமகாலத்தில் என்ன நடக்குமோ அதுதான்  இவருக்கும் நடந்துள்ளது. எங்களிடம் எதுவும் பேசாமல் பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்த கிருஷ்ண மூர்த்தியின் மனைவியிடம், “சாரைப் பத்தி... சாரோட வொர்க்க பத்தி நிறைய பேரு பாராட்டு றாங்களேம்மா...’’ என்றதும் வெறுமையாகச் சிரித்தார்.

“40 வருஷத்துக்கும் மேல சினிமால வேலை பாக்குறாரு. சொந்தமா வீடுகூட இல்ல. அவங்க அம்மா இடத்துல கட்டின ஒரு வீட்டையும் வித்துட்டோம். பெரிய கலைஞர்தான். ஆனா சம்பாதிக்கறதுல கோட்டை விட்டுட்டாரே. விருது விருதா வாங்கிட்டு வந்தாரு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ‘ஹார்ட் அட்டாக்’ வந்தப்ப தனி ஆளா நான்தான் அவரை ஆஸ்பிட்டலுக்குத் தூக்கிட்டு ஓடினேன். அவரை ஆபரேஷன் தியேட்டர்ல அட்மிட் பண்ணிட்டு வீட்டுக்கு ஓடிவந்து வீடு முழுக்கத் தேடுறேன்.  வீட்டுல ஒரு பைசா காசில்ல. சரி, எதையாவது எடுத்து வித்துரலாம்னா... பெயின்டிங், பிரஷ், போட்டோஸ், புக்னுதான் கிடக்கு. விக்கிறதுக்குனு எந்தப் பொருளும்  இல்ல. தேடித் தேடிப் பாத்து கடைசியா அவரோட கலைமாமணி விருதை எடுத்து வித்துட்டேன்” என்றவர் சேலைத்  தலைப்பை வாயில் பொத்திக் கேவி அழத் தொடங்கினார்.

“பிரமாண்ட செட் போட்டார்... இருக்க ஒரு வீடில்லை!”

“பெரிய பெரிய செட்டெல்லாம் போட்டாருன்னு போட்டோ காட்டுவாரு. ஆனா நாம இருக்கறதுக்கு ஒரு வீடு இல்லையேன்னுதான் எனக்குத் தோணும். சினிமாக்காரங்கன்னு நெறைய பேர் வீடு தர மாட்டாங்க. எனக்கும் வயசாயிருச்சு. இவரை சரியா பாத்துக்க முடியலைன்னு  ஹோமுக்குப் போலாம்னு முடிவு பண்ணினப்ப கூட சிரிச்சுகிட்டே போலாம்னு சொல்றாரு” என்று விம்முகிறார்.

“பெரிசா சம்பாதிக்கல. அதனால் என் மனைவியை சரியா பாத்துக்க முடிலைங்கிற வருத்தம் எனக்கும் உண்டு. ஆனா, இந்தனை வருஷம் நான் ஆத்மார்த்தமா உழைச்ச உழைப்பு அந்தப் படங்கள்ல பத்திரமா இருக்குன்ற நிம்மதி இருக்கு” எனப் பெருமிதம் பொங்கப் பேசுகிறார். எதையோ பார்த்துவிட்டு,  கைத்தாங்கலாக எழுந்தவர், தடுமாறிச் சென்று ஒரு புகைப்படத்தை எடுத்து வந்து காண்பித்தார். “ ‘சங்கமம்’ படத்துல வர்ற பாட்டுக்காகப் போட்ட செட் இது. அந்தப் பாட்டுகூட நல்ல பாட்டுப்பா” என்றவருக்கு யூடியூபில் அந்தப் பாடலைப் போட்டுக் காண்பித்தோம். ‘`மழைத்துளி மழைத்துளி’’ எனப் பாடல் ஒலிக்க, கிருஷ்ணமூர்த்தி  வாஞ்சையோடு மொபைலைப் பற்றிக்கொண்டார். எம்.எஸ்.வி-யின் குரலில் ‘`கலைக்கொரு தோல்வி கிடையாது... கிடையாது... கிடையாது...’’ எனப் பாடல் வரிகள் ஒலிக்க... கிருஷ்ணமூர்த்தியின் கண்களில் வழிந்த கண்ணீர் அவரது உதட்டுப் புன்னகையைக் கடந்துசென்றது.

- சக்தி தமிழ்ச்செல்வன்,  படம்: தே.அசோக்குமார்