Published:Updated:

பெண்கள், குழந்தைகள் நலன்: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

பெண்கள், குழந்தைகள் நலன்: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள், குழந்தைகள் நலன்: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா

பெண்கள், குழந்தைகள் நலன்: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா

Published:Updated:
பெண்கள், குழந்தைகள் நலன்: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள், குழந்தைகள் நலன்: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

டுத்து அமையப்போவது காங்கிரஸ் அரசா, பா.ஜ.க அரசா, கூட்டணி அரசா என்பதற்கான விடை, மே 23-ல் தெரிந்துவிடும். எந்த அரசாக இருந்தாலும், புதிய அரசு கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் எவை என்பது குறித்து அலசும் மினி தொடர் இது. இந்த வாரம் பெண் மற்றும் குழந்தைகள் நலன் குறித்து அலசுகிறார், பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா.

மே மாத இறுதியில், மத்தியில் புதிய ஆட்சி அமைந்துவிடும். யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது அடுத்த விஷயம். இப்போது நாம் பேசப்போவது, புதிய ஆட்சியாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி. தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற, தேர்தலை முன்னிட்டு பின்னுக்குத் தள்ளப்பட்ட விஷயங்களில் முக்கியமானவை, பல்கலைக்கழக மாணவிகளைப் பேராசிரியர் நிர்மலாதேவி யாரோ சில பெரிய மனிதர்களின் பாலியல் இச்சைகளை, வக்கிரங்களைப் பூர்த்திசெய்ய அழைத்ததும், பொள்ளாச்சிப் பாலியல் வன்முறையும்தான். இதே காலகட்டத்தில் சிறுமிகள் உட்பட பல பெண்கள் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், அவற்றிலிருந்து மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளும் அதிக அளவில் வேறுபடுகின்றன. இக்குற்றங்களின் தன்மையைப் பகுத்துப் பார்த்தால் இவற்றுக்கான தீர்வுகளை நோக்கிச் சிந்திக்க இயலும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தனிப்பெண்கள் பாதிக்கப்படுவதை முதலில் எடுத்துக்கொள்வோம். இத்தகைய குற்றங்களில் 80 சதவிகிதத்துக்கும் மேலாகப் பெண்களின் தனிமை அல்லது சமுதாயத்தில் அவர்களின் விளிம்பு நிலை இவற்றைப் பயன்படுத்தி நடைபெறுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வேலைக்காக வரும் பெண்கள் தனிப்பெண்களாகவே பார்க்கப்படுகின்றனர். அதனாலேயே இவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. ஆளரவமற்ற இடங்களில் அகப்படும்போது வக்கிரக்காரர்கள் இவர்களைத் தங்கள் மிருக வெறிக்குப் பலியாக்கிவிடுகின்றனர். இப்படி நகரவெளிகளில் நடைபெறும் ஒவ்வொரு வன்முறைச் செயலுக்கும் அரசு நேரடிக் குற்றவாளியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகள் நலன்: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

பணிபுரியும் பெண்களுக்கு அரசு இல்லங்கள்!

நகரங்களில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வது என்பது அரசாங்கத்தால் மட்டுமே முடியும். அந்தப் பெண்களின் எண்ணிக்கை, அவர்களுக்கிருக்கும் தங்குமிடங்கள் பற்றி அரசிடம் என்ன விதமான தகவல்கள் சேகரிப்பிலிருக்கின்றன அல்லது இன்றுவரை அவர்கள் அதற்கு ஏதாவது முயற்சி செய்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. அத்தகைய தகவல் வங்கி உடனே ஏற்படுத்தப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து பெண்களுக்கான தங்குமிடங்கள், ஓய்விடங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் மிக மிக அதிக எண்ணிக்கையில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டு அல்லது பதிவு செய்யப்பட்டு, தொடர் பராமரிப்பு அல்லது கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கெனத் தனி அரசு எந்திரங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நகரங்களில் எந்தவோர் இடத்திலும் எந்தவொரு பெண்ணுக்கும் தான் சென்று தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகத் தங்க ஓர் அரசு இல்லம் இருக்கிறது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டு அது முழுமையாகச் செயற்படுத்தப்பட வேண்டும். வரவிருக்கும் அரசின் முதல் வேலைத்திட்டமாக இது அமைய வேண்டும்.

சிறுமியர் பாதுகாப்பு!

இதைக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்று பொதுப்படுத்தி, சிறுவர்களையும் உள்ளடக்கிச் சிந்திக்கலாம். பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு மையங்களிலேயே குழந்தைகளுக்கான பாதுகாப்பையும் அளிக்கலாம். குறிப்பாக, வேலைக்குப் போகும் தாய்மார்களின் குழந்தைகள் நேரடியாக அரசாங்கத்தின் பாதுகாப்புக்குள் வர வேண்டும். இது சாத்தியமற்றதுபோலத் தோன்றலாம். ஆனால், டிஜிட்டல் யுகம் என்கிறார்களே, அதில் ஏன் இது சாத்தியப்படாது?

கல்வி நிலையங்களில் பாலின நீதிக்கல்வி தரப்பட வேண்டும். இதற்கெனத் தனி வகுப்புகள், பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். திரைப்படங்களில் பெண்ணைப் பின்தொடர்ந்து வற்புறுத்திக் காதலித்து அதில் கதாநாயகர்கள் வெற்றிபெறுவதுபோலக் காண்பிக்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும். ஏற்கெனவே  உள்ள படங்களிலும் இக்காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். அரசின் செய்தித்துறை சார்பாக ஆண் குழந்தைகளை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுப்பது பற்றிய விளம்பரங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் வெளியிடப்பட்டு அனைத்து ஊடகங்களிலும் தவறாது வெளிவரச் செய்ய வேண்டும். குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனநிலையை மோசமாக பாதிக்கும் அனைத்து இணையதளங்களும் இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கை மத்திய அரசின் முதல் நடவடிக்கையாக இருத்தல் வேண்டும்.

பெண்கள், குழந்தைகள் நலன்: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

சாதியமைப்பும் காவல் துறையும்!

பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பாதிக்கப்படும்போது அதிகார வர்க்கம் அலட்சியமாக நடந்துகொள்வதைத் தவிர்க்க, காவல் நிலையங்களில் அந்தந்தப் பகுதியிலுள்ள பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் நியமிக்கப்படக் கூடாது. மேலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் புகார் அளிக்க நேரடியாக மேலதிகாரிகளிடம் செல்ல வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

கூட்டு வன்முறை மற்றும் பாலியல் காட்சி வியாபாரம்!

நாம் முதலிலேயே குறிப்பிட்டதுபோல, மாணவிகளையும் இளம்பெண்களையும் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் தாக்குதல் வெறும் தனிநபர் பாலியல் தேவையிலிருந்து மட்டும் நடைபெறுவதில்லை. இதன் புள்ளிகள் சர்வதேச வியாபாரச் சந்தையுடன் இணைகின்றன. உலகின் பணக்காரர்கள் நடத்தும் வெறியாட்டத்தின் பகுதியாக இது நடைபெறுகிறது. அதிகப்படியாகக் குவியும் பணமும் அதிகாரமுமே இக்குற்றச் செயல்களுக்கான களமாக இருக்கின்றன. எனவே, இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தயவுதாட்சண்யமின்றி தண்டிப்பதே முதல் தேவையாகும். இத்தகைய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை அனைத்துக் கட்சிகளும் உடனே வெளியேற்ற வேண்டும். புதிய அரசின் முதற்பணியாக பொள்ளாச்சிப் பாலியல் குற்றவாளிகளையும், பல்கலைக்கழக மாணவிகளைப் பயன்படுத்திய குற்றவாளி களையும் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

பெண்கள், குழந்தைகள் நலன் முன்னிலை பெறட்டும்.