Published:Updated:

‘டைல்ஸ் வாங்கினால் எல்.இ.டி டி.வி இலவசம்!’ - ஐ.டி ரெய்டில் சிக்கிய வேலூர் டைல்ஸ் நிறுவனம்

‘டைல்ஸ் வாங்கினால் எல்.இ.டி  டி.வி இலவசம்!’ - ஐ.டி ரெய்டில் சிக்கிய வேலூர் டைல்ஸ் நிறுவனம்
‘டைல்ஸ் வாங்கினால் எல்.இ.டி டி.வி இலவசம்!’ - ஐ.டி ரெய்டில் சிக்கிய வேலூர் டைல்ஸ் நிறுவனம்

வேலூர் மாவட்டத்தில் 5 கிளைகளுடன் இயங்கிவரும் டைல்ஸ் நிறுவனத்தில், வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், பேரணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய 5 இடங்களில், ‘ராயல் டைல்ஸ் பார்க்’ என்ற நிறுவனத்தின் டைல்ஸ் விற்பனை செய்யும் ஷோ ரூம்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 20-ம் தேதி வரை, விழாக்கால சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதாவது, ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் டைல்ஸ் வாங்குபவர்களுக்கு, எல்.இ.டி  டி.வி, வாஷிங் மெஷின், ஏ.சி உள்ளிட்ட விலை உயர்ந்த மின்சாதனப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சலுகைக்கான செலவை, டைல்ஸ் நிறுவனம் கணக்கில் காட்டவில்லை என்றும், வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாகவும் வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, வருமானவரித் துறை அதிகாரிகள், வேலூர் மாவட்டம் ஆம்பூர் கோவிந்தாபுரம் எம்.சி ரோடு, வாணியம்பாடி வளையாம்பட்டு எம்.சி ரோடு, திருப்பத்தூரில் சேலம் மெயின்ரோட்டில் உள்ள புதுப்பேட்டை சிக்னல் எதிரில், பேரணாம்பட்டு டவுன், குடியாத்தம் நேருஜி நகர் ஆகிய 5 இடங்களில் உள்ள  ‘ராயல் டைல்ஸ் பார்க்’ ஷோ ரூம்களில் 27-ம் தேதி அதிரடியாகச் சோதனை நடத்தினர். இதில், வரி ஏய்ப்பு நடைபெற்றதற்கான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.