Election bannerElection banner
Published:Updated:

"அந்த தேவியே எங்களுக்கு மகளாக வந்து பிறந்தாள்..." நெகிழும் எழுத்தாளர் தேவிபாலா! #WhatSpiritualityMeansToMe

"அந்த தேவியே எங்களுக்கு மகளாக வந்து பிறந்தாள்..." நெகிழும் எழுத்தாளர் தேவிபாலா!  #WhatSpiritualityMeansToMe
"அந்த தேவியே எங்களுக்கு மகளாக வந்து பிறந்தாள்..." நெகிழும் எழுத்தாளர் தேவிபாலா! #WhatSpiritualityMeansToMe

``நாற்பது ஆண்டுகளாக வாரத்திற்கு ஒருமுறை அதிகாலையில் தவறாமல் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவது வழக்கம். அதேபோல ஆண்டுக்கு ஒருமுறை உறவினர்களுடன் சென்று தங்க ரதம் இழுக்கவும் தவறமாட்டேன்" என்கிறார் தேவிபாலா.


``ன்னுடைய சொந்தப்பெயர் பாலசுப்ரமணியம். திருவேற்காட்டு தேவியின் மீதுள்ள பக்தியால் `தேவிபாலா' எனப் புனைபெயர் சூட்டிக்கொண்டேன். என்னுடைய பெயரில் மட்டும் தேவியைச் சேர்க்கவில்லை. என் வாழ்க்கையை வழிநடத்துபவளும் அந்தக் கருமாரித்தாய்தான். நான் சாதாரண கருவிதான். என்னை இயக்குபவள் அவள்தான் " என்று பரவசமாகப் பேசுகிறார் எழுத்தாளர் தேவிபாலா. சிறுகதை, நாவல், திரைக்கதை, தொலைக்காட்சித் தொடர் எனப் பலதுறைகளிலும் தன் முத்திரை பதித்த எழுத்தாளர் தேவிபாலா. 

கருமாரியம்மன் பற்றி மிகவும் நெகிழ்வாகத் தொடர்கிறார் அவர். 
``என்னுடைய இஷ்டதெய்வம் திருவேற்காடு தேவி கருமாரியம்மன்தான். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நீலகிரியில். அங்கிருக்கிற அரவங்காடு பள்ளியில் படித்தேன். கல்லூரி சேரவேண்டிய நேரம். அப்பாவும் ஊட்டியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டார். சென்னை வண்ணாரப்பேட்டை, தியாகராஜா கல்லூரியில் பி,எஸ்.சி ஹெமிஸ்ட்ரி படித்தேன். படிப்பு முடிந்ததும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். கூடவே கதை, கவிதைகள் எழுதுவதிலும் எனக்கு நல்ல ஆர்வம். 

முதன்முதலாக 1981 - ல் ஒரு சிறுகதையை எழுதி எடுத்துக்கொண்டு திருவேற்காடு தேவிகருமாரியம்மன் பாதங்களில் வைத்து வணங்கிவிட்டு ஒரு பத்திரிகைக்கு அனுப்பினேன். என்னுடைய சொந்தப்பெயர் பாலசுப்ரமணியம். தேவியின் மீது உள்ள பக்தியால் `தேவிபாலா' என எனக்கு நானே நாமகரணம் சூட்டிக்கொண்டு அந்தச் சிறுகதையை அனுப்பினேன். அது பிரசுரமானது. அதன்பிறகு நான் எழுதிய எல்லாக் கதைகளும் அச்சில் வந்தது. ஒன்றுகூடத் திரும்பிவரவில்லை. இன்றுவரை, நான் எழுதும் எழுத்து எனக்குக் கைகொடுப்பதற்கு அந்த அம்பாளின் அருள்தான் காரணம்.

நான் அனுப்பிய `சுமங்கலிப் பிரார்த்தனை' எனும் என் முதல் சிறுகதை `கலைமகள்' பத்திரிகையில் பிரசுரமாகி, எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதைத் தொடந்து நிறைய எழுத ஆரம்பித்தேன். சிறுகதைகள், நாவல்கள் என ஆயிரக்கணக்கில் எழுதிக் குவித்திருக்கிறேன்.

தமிழகத்திலிருக்கும் எல்லா பத்திரிகைகளிலும் என்கதைகள் பிரசுரமாகியுள்ளன. எழுத்துப் பணியிலேயே நல்ல வருமானம் கிடைத்ததால், அரசுப் பணிக்கோ தனியார் துறை வேலைக்கோ நான் முயற்சி செய்யவில்லை. நான் சாதாரண கருவிதான். என்னை இயக்குபவள் அவள்தான். என் வாழ்வில் வரும் சறுக்கல்களுக்கு நானே காரணம். எனக்குக் கிடைக்கும் பணம், புகழ், செல்வம் எல்லாவற்றுக்கும் காரணம் தேவிதான்" 
சில நொடிகள் அமைதியானவர் பக்திப் பெருக்கோடு மீண்டும் தொடர்ந்தார்.  
``கல்யாணமாகி ஆறு ஆண்டுகள் எங்களுக்குக் குழந்தையில்லை. ஒரு முறை நானும் என் மனைவியும் திருவேற்காட்டுக்கு சாமி கும்பிடப் போயிருந்தோம். அப்போது `க்யூ'வில் நின்றிருந்தபோது, ஒரு குழந்தை என்னையும் என் மனைவியையும் தொட்டுத் தொட்டு விளையாடிச் சிரித்தது.  

குழந்தையின் புன்னகையும் சிரிப்பும் எங்களுக்கு அந்தத் தேவியே சிரிப்பது போன்றிருந்தது. எப்போதும் இப்படி நடந்ததில்லை. அன்னையின் அருள் பிரசாதமாக அந்த மாதமே என் மனைவி கருவுற்றார். எங்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். அந்த தேவியே எங்களுக்கு மகளாக வந்து பிறந்தாள் என்று மனம் மகிழ்ந்தோம். என் தாயாரின் பெயர் ரங்கநாயகி. அதையே எங்கள் மகளுக்கும் வைத்தோம்.

மகள் பிறந்த ஆண்டுதான் எனது `மடிசார் மாமி' நாவலாகவும், தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்தது. எனக்கு மேலும் புகழ் சேர்த்தது. அந்தக் கதைநாயகியின் பெயர் என்ன தெரியுமா `ரங்கநாயகி'தான். இந்தத் தொடர், என்னுடைய எழுத்துலக வாழ்வில் புதிய உயரத்தையும் புதிய வெளிச்சத்தையும் தந்தது. 

அதனால்தான் சொல்கிறேன், நான் எல்லாத் தெய்வங்களையும் வணங்கினாலும் திருவேற்காடு கருமாரியம்மன் எனக்கு ஸ்பெஷல்தான். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக வாரத்திற்கு ஒருமுறை அதிகாலையில் தவறாமல் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவது வழக்கம். அதேபோல ஆண்டுக்கு ஒருமுறை உறவினர்களுடன் சென்று தங்க ரதம் இழுக்கவும் தவறமாட்டேன்" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு