Election bannerElection banner
Published:Updated:

PUBG-லாம் இப்போ, PAIN-தான் அப்போ! - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

PUBG-லாம் இப்போ, PAIN-தான் அப்போ! - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்
PUBG-லாம் இப்போ, PAIN-தான் அப்போ! - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்

இப்படித்தான் கான்ட்ரா, பெய்ன், ரெஸிடன்ட் ஈவில், காட் ஆஃப் வாரில் ஆரம்பித்து சி.ஓ.சி, மினி மிலிட்டா, பப்ஜி என முரட்டு கேம்களாகவே விளையாடிய 90'ஸ் கிட்ஸ்களில் பலபேருக்கு போருக்குப் போக வேண்டும் என்ற ஆசையிருக்கும். `போர் ஆமாம் போர்' எனக் கொந்தளித்துக்கொண்டிருப்பதும் அவர்களில் சிலர்தான்.

நேற்று பப்ஜி ஆடுகையில், கபாலத்தில் கண நேரத்தில் உதித்தது இந்தச் சிந்தனை, `நாம எப்போ வீடியோ கேம் விளையாட ஆரம்பிச்சோம்?'. `விளையாட ஆரம்பித்தது' என்பதைவிட `பார்க்க ஆரம்பித்தது' என்று சொல்லலாம். எனக்கு ஏழெட்டு வயதிருக்கும், மாமா வீட்டுக்கு தீபாவளியைச் சிறப்பிக்கச் சென்றிருந்தோம். அங்குதான் வீடியோ கேம் கன்சோலை முதன்முறையாகப் பார்த்தேன். கீபோர்டுபோல் இருக்கும். சிப் செருகி விளையாடுவோமே, அந்த மாடல் கான்சோல்.

ஒரு பக்கம் அம்மாவும் அத்தையும் அதிரசத்துக்கு மாவு கலக்கும் வேலையில் கரைந்துவிட, இன்னொரு பக்கம் மாமாவும் அப்பாவும் வீடியோ கேம் ஆட அமர்ந்தனர். நான் அப்பாவின் மடியில் அமர்ந்தேன். BATTLE CITY-யில் இரண்டு பிளேயர்கள் போட்டு விளையாடத் தொடங்கினார்கள். இருவரும் விடிய விடிய திணறத் திணற டாங்கிகளைச் சுட்டுத்தள்ளியதில், அந்தத் தீபாவளி சிவராத்திரியாகிப்போனது. இடையிடையே ஸ்டார்ட்/பாஸ் செய்வதும், கேம் ஓவரானால் ரீஸ்டார்ட் செய்வதும் மட்டும்தான் எனக்கு ஒதுக்கபட்ட வேலை.

``நானும் விளையாடுவேன்" என்று நான் அனத்தாமல் இருக்க, ``நீதான் நடுவுல இருக்கும் அந்தக் கழுகு. உன்னைக் காப்பாத்ததான் நாங்க சண்டைபோடுறோம். நீ நகர்ந்துடாத..." என சீரியஸாகக் கட்டளையிட்டு, ஒயர் செருகாத ஜாய் ஸ்டிக் ஒன்றையும் என் கையில் கொடுத்திருந்தார்கள். நானும் ஜாய் ஸ்டிக்கும் கையுமாக விடிய விடிய காத்துக்கொண்டிருந்தவன், காலையில் தூங்கிப்போனேன். மாலை, வாயில் அதிரசத்தைக் கடித்துக்கொண்டு ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இந்த முறை `சூப்பர் மேரியோ'. பேட்டில் சிட்டியில் எப்படி நான் கழுகுக் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தேனோ, அதுபோல் சூப்பர் மேரியோவில் நான்தான் அந்த பிரின்ஸஸ். அந்த பிரின்ஸஸை, கடைசி வரை அவர்களும் பார்க்கவில்லை; நானும் பார்க்கவில்லை.

``Thank you Mario! but our princess is in another castle!"

- தோழர் டோடு

மாமாவுடன் 2nd Player-ஆக விளையாடிய அப்பாவுக்கு, சிங்கிள் பிளேயராக விளையாடும் ஆசை வந்துவிட்டது. வீடு திரும்பும்போது புது வீடியோ கேமுடன் திரும்பினோம். `இந்த ஒரு கேசட்டில், 99,99,999 கேம்கள் இருக்கின்றன' எனப் போட்டிருக்கும். உண்மையில், 9 கேம்கள்கூட உருப்படியாய் இருக்காது. உக்கிரமாகி 100மீ ரேஸ் எல்லாம் வெறித்தனமாய் உட்கார்ந்து விளையாடியிருக்கிறேன். வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி வீட்டில் கொடுக்கும் 1 ரூபாய், 2 ரூபாய் பாக்கெட் மணியை ஒரு மாதகாலம் சேமித்துவைத்து, கேம் கேசட்கள் வாங்கும் பழக்கம் ஆரம்பித்தது. கான்ட்ரா, புரூஸ் லீ, பாம்பர் மேன் என ஜாய் ஸ்டிக்கும் கையுமாகவே வாழ்க்கை நகரத் தொடங்கியது. ஒருநாள் கனவே, கட்டம் சேர்க்கும் விளையாட்டாக (TETRIS) வந்தது. அதிலிருந்து பீதியாகி, விளையாடுவதைப் பாதியாகக் குறைத்துவிட்டேன். யெஸ், ஒருகாலத்தில் ஐ'யம் வீடியோ கேம் பைத்தியம். ஆனால், நானே பார்த்துப் பயந்த `வீடியோ கேம் பைத்தியம்' ஒருவன் இருந்தான். அவன் ராஜ்குமார்.

I don't stop when I'm Tired. I Stop when I'm Done. 

- தோழர் ராஜ்குமார்

ராஜும் நானும் ஒன்பதாப்பு, பத்தாப்பு ஒன்றாகப் படித்தோம். பத்தாப்பில் அவன் பாஸாகியிருந்தால் +1, +2வும் ஒன்றாகப் படித்திருப்போம். என்ன செய்ய, விதி விளையாடிவிட்டது. மன்னிக்கணும், வீடியோ கேம் விளையாடிவிட்டது. காலை 5 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு 4.30-க்கே எழுந்து அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு, பிளே ஸ்டேஷனை ஆன்செய்வான். இப்படியே மாதக்கணக்கில் பிளே ஸ்டேஷனில் மூழ்கித் தத்தளித்துக்கொண்டிருந்தவன், பள்ளிப் பக்கமே வரவில்லை.

ரெசிடென்ட் ஈவிள், ஜிடிஏ, பிரயன் லாரா என கேசட் தேயத் தேய வாங்கி விளையாடினான். ஒருநாள், அணுகுண்டிலிருந்து புகை கிளம்புவதுபோல அவனின் பிளே ஸ்டேஷன் புகைந்திருக்கிறது. அப்போதும் ஒரு கையால் பரீட்சை அட்டையை வைத்து வீசிக்கொண்டு இன்னொரு கையால் விளையாடியிருக்கிறான். அடுத்த பத்து செகண்டில் பிளே ஸ்டேஷன் பற்றி எரிந்து, அந்த ஒட்டுமொத்த ஏரியாவுக்கே கரன்ட் கட்டாகிவிட்டது. பதறிப்போனவன், பிளே ஸ்டேஷனை பரணில் தூக்கிப் போட்டுவிட்டு கமுக்கமாய்ப் படுத்துவிட்டான். அன்றிலிருந்து அவன் பிளே ஸ்டேஷனைத் தொடவேயில்லை.

``எல்லாத்துக்கும், இந்தப் பரணிப்பயதான் காரணம்!"

- தோழர் கஞ்சா கறுப்பு

பிளே ஸ்டேஷன் மீதான பிரேமத்தால் ஏரியா நண்பர்களுக்கு ஒரு சம்பவம் நடந்தது. 6 பேர்கொண்ட குழு அது. `பெயின்' என்றால் பேய்த்தனமாக விளையாடுவார்கள். அரை மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம். கடுகு டப்பாவுக்குள் கையை விட்டு காசு தேத்திவிடுவார்கள். அவர்களில் கோகுல் என்கிற விஷக்கிருமி ஒருவன் இருந்தான். ஒயர்களிலிருந்து காப்பர் கம்பிகளை உரித்து, உருக்கி, எடைக்குப் போட்டு, காசு பார்ப்பதுதான் அவன் வேலை. அந்தக் குழுவின் மெயின் ஸ்பான்ஸர்.

ஒருநாள், காப்பர் கம்பி உருண்டையை தன் டவுசர் பாக்கெட்டில் போட்டிருந்தான் கோகுல். கம்பியோ, காட்டக்கூடாத இடத்தில் வேலையைக்காட்டிவிட, வெளியில் காட்ட முடியாத அந்த இடம் புண்ணாகிவிட்டது. வீட்டிலிருந்து ஒரு வாரத்துக்கு வெளியவே வரவில்லை, ஓய்வில் இருந்தான். இதனால், விளையாட காசு இல்லாமல் திண்டாடிய நண்பர்கள், விரக்தியில் திட்டம் ஒன்று தீட்டினர். கடையின் சாவிக்கொத்தில் தொங்கும் எக்ஸ்ட்ரா சாவியை, கடைக்காரர் அசந்த நேரம் கழற்றியிருக்கிறார்கள். இரவு 12 மணிபோல இவர்களாகவே கடையைத் திறந்து கேம் ஆடியிருக்கிறார்கள். ஆர்வத்தில் நேரம் காலம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்க, மறுநாள் விடிந்து, கடைக்காரர் அவரின் நண்பர்களோடு வந்திருக்கிறார். அப்புறம் என்ன, அன்று முழுவதும் கடையை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு, மதிய சாப்பாடெல்லாம் வாங்கிக் கொடுத்து தெளியவைத்துத் தெளியவைத்து அடித்துத் துவைத்திருக்கிறார்கள். கடைசியாக, 12 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணி வரை விளையாடியதற்குக் காசையும் வாங்கிவிட்டுதான் அனுப்பினார்கள். அடுத்த நாளே நண்பர்களின் பெற்றோர்கள் அமளிதுமளியில் இறங்க, கடை காலவரையின்றி மூடப்பட்டது.

பிளே ஸ்டேஷனில் போடும் சண்டையைவிட, அதை வைத்து நிஜத்தில் நடக்கும் சண்டைகள்தான் மிகக் கொடுமை. என் மாமா ஒருவர், அவருக்கும் எனக்கும் சரியாக 6 வயது வித்தியாசம். ஒருநாள், ஆர்கேட் மெஷினில் 5 ரூபாய் காயின் போட்டு `டெக்கன்' விளையாடினோம். டெக்கனில் அவர் ஜெகஜாலக்கில்லாடி. 'கான்'னை வைத்தே 'பெர்ஃபெக்ட்' அடிப்பார். அன்று எதை எதையோ எக்குத்தப்பாய் அழுத்தி தெரியாத்தனமாய் அவரை ஜெயித்துவிட்டேன். மாமாவின் முகத்தில் கொலைவெறி. பாக்கெட்டில் இருந்த 30 ரூபாயையும் ஆர்கேட் மெஷினுக்கு அழுது, என்னைப் பொளபொளவெனப் பொளந்தார். பிறகுதான், ஆவேசமாய் இருந்த மனிதர் கொஞ்சம் கொஞ்சமாய் ஆசுவாசமானார்.

இதேபோல், நான் வைத்திருந்த ப்ரிக் கேம் வீடியோ கேமை என் சித்தப்பா மகன் உடைத்துவிட்டான். பெட்ரூமுக்குக் கூட்டிப்போய் வாயைப் பொத்தி ஊமைக்குத்துக் குத்திவிட்டு வந்தேன். இப்போது அவனைப் பார்த்தாலும் குற்ற உணர்வாய் இருக்கிறது. அரசு கொடுத்த லேப்டாப்பில் கேம் ஏற்றி விளையாட இடமில்லை எனப் புத்தகங்களின் PDF, டிக்‌ஷனரியையெல்லாம் CTRL+ALT+DLT செய்திருக்கிறேன். அந்த லேப்டாப்பை வைத்து உருப்படியாய் ஏதேனும் செய்ததைவிட, EA கிரிக்கெட்டும் NFS-ம் விளையாடி உருப்படாமல்போனதுதான் அதிகம்.

90'ஸ் கிட்ஸான நாம்தான் கையடக்க ப்ரிக் கேம், வீடியோ கேம், நின்டென்டோ கன்சோல், பிளே ஸ்டேஷன் 1, 2, 3, எக்ஸ் பாக்ஸ், மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் என வீடியோ கேமின் பல பரிமாணங்களைப் பார்த்திருக்கிறோம்; இன்றும், விளையாடிக்கொண்டிருக்கிறோம். வீடியோ கேம்கள், நமக்கே தெரியாமல் நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை மௌனமாகத் தின்று செரித்துள்ளன. வீடியோ கேம் டெஸ்டிங் வேலைக்குச் செல்வதே எனது லட்சியமாகவும் இருந்தது. ரோட் ராஷில் பைக் ஓட்டிய எல்லோருக்கும், பக்கத்து பைக்கை எத்திவிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். NFS விளையாடிய எல்லோருக்கும் டஜன் போலீஸ்காரர்களுக்கு தண்ணிகாட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். GTA விளையாடியவர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

``ஒருவேளை ஸோம்பிக்கள் இந்த உலகத்தைத் தாக்கவந்தால், எல்லோரும் அச்சத்தில் ஓடி ஒளிவார்கள். ஆனால், கேமர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால், அப்படி ஒரு நாளுக்காகத்தான் அவர்கள் வாழ்க்கை முழுக்கக் காத்திருப்பார்கள்."

- தோழர் ஹிலாரியஸ் இடியட்

இப்படித்தான் கான்ட்ரா, பெய்ன், ரெஸிடன்ட் ஈவில், காட் ஆஃப் வாரில் ஆரம்பித்து சி.ஓ.சி, மினி மிலிட்டா, பப்ஜி என முரட்டு கேம்களாகவே விளையாடிய 90'ஸ் கிட்ஸ்களில் பலபேருக்கு போருக்குப் போக வேண்டும் என்ற ஆசையிருக்கும். `போர் ஆமாம் போர்' எனக் கொந்தளித்துக்கொண்டிருப்பதும் அவர்களில் சிலர்தான்.

நண்பர்களே, நம் கையில் இருப்பது வெற்று ஜாய் ஸ்டிக்தான். நாம்தான் அந்தக் கழுகு என்பதே ஏமாற்றுவேலை. புரிந்துகொள்ளுங்கள், அனத்தாமல் இருங்கள். GAME OVER!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு