Election bannerElection banner
Published:Updated:

``வாலன்டியரா வந்தேன்... இனி, இதான் வாழ்க்கை!" - சிக்கிம் பள்ளியில் தமிழ்ப் பெண் பூஜா

``வாலன்டியரா வந்தேன்... இனி, இதான் வாழ்க்கை!" - சிக்கிம் பள்ளியில் தமிழ்ப் பெண் பூஜா
``வாலன்டியரா வந்தேன்... இனி, இதான் வாழ்க்கை!" - சிக்கிம் பள்ளியில் தமிழ்ப் பெண் பூஜா

15 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கிராமக் குழந்தைகளின் கரங்களில் விவசாயக் கருவிகளே பிரதானமாக இருந்திருக்கின்றன. இன்றோ பேனா, பென்சில், புத்தகம் பிடித்து, கல்வி அறிவுபெறும் தலைமுறையினராகக் குழந்தைகள் மிடுக்குடன் நடைபோடுகின்றனர்.

னிமலைகளுக்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தீவுகள் போன்று 100 வீடுகள். அவற்றின் மீது பனிப்போர்வை போர்த்தியதுபோல பனித்துளிகள். சாலைகளைச் சுற்றிலும் அழகிய நீரூற்று உள்ளிட்ட இயற்கைக் காட்சிகள் நிறைந்திருக்கின்றன. பொழுது விடிந்ததும் காலை 6 மணிக்கு ஆண்கள் விவசாயப் பணிகளுக்குக் கிளம்புகிறார்கள். பின்னர் 8 மணிக்குப் பெண்களும் விவசாய வேலைக்குக் கிளம்புகிறார்கள். மறுபுறம் அவர்களின் குழந்தைகள் உற்சாகமாகப் பள்ளிக்குக் கிளம்புகிறார்கள்.  

இது, சிக்கிம் மாநிலத்தின் புரியாகாப் (Buriakhop) கிராமத்தின் இன்றைய நிலை. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கிராமக் குழந்தைகளின் கரங்களில் விவசாயக் கருவிகளே பிரதானமாக இருந்திருக்கின்றன. இன்றோ பேனா, பென்சில், புத்தகம் பிடித்து, கல்வி அறிவுபெறும் தலைமுறையினராகக் குழந்தைகள் மிடுக்குடன் நடைபோடுகின்றனர். இந்த அழகிய மாற்றங்களின் பின்னணியில் இலவசக் கல்வி வழங்கப் பலரும் சேவையாற்றிக்கொண்டிருக்கும் ஆச்சர்யமான விஷயங்கள் நடைபெற்றிருக்கின்றன. அமைதியான சூழலில், `சிக்கிம் இமாலியன் அகாடமி' பள்ளி சிறப்பாகச் செயல்படுகிறது. இதில் மழலைகள் கல்வி கற்கும் அழகு ரசிக்க வைக்கிறது.

இப்பள்ளியின் நிர்வாக இயக்குநர், பூஜா. மும்பையைச் சேர்ந்த இவரின் பூர்வீகம், சேலம். இன்ஜினீயரிங் பட்டதாரியான இவர், 13 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றிவருகிறார். ``நேபாளி மொழி பேசுற இம்மக்களில் பெரும்பாலானோர், லெப்சா மற்றும் புடியா இனத்தைச் சேர்ந்தவங்க. விவசாயம், விறகு வெட்டுவது, கால்நடை வளர்ப்புதான் இம்மக்களின் பிரதான தொழில். படிப்பறிவு, பார்வர்டு திங்கிங் மற்றும் விழிப்புணர்வு இல்லாத இம்மக்களுக்குப் படிப்பின் நுகர்வு அறவே கிடையாது. அதனால தங்களோட குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்கணும்ங்கிற ஆர்வமுமில்லை; அதற்கான வசதியுமில்லை. இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுல இருக்கிற கவர்ன்மென்ட் ஸ்கூலுக்குக் குழந்தைகளை தனியா அனுப்பவும் பெற்றோருக்கு பயம். இக்காரணங்களால், விவசாய வேலைக்குப் போறப்போ குழந்தைகளையும் உடன் அழைச்சுகிட்டுப்போயிடுவாங்க. குழந்தைகளும் விவசாய வேலைகளைச் செய்துட்டு இருந்திருக்காங்க.

இப்படி இருந்த இக்கிராமத்தின் நிலையை, இப்பகுதிக்குச் சுற்றுலா வந்த இரண்டு டச்சுக்காரப் பெண்கள் பார்த்து வருத்தப்பட்டிருக்காங்க. மேலும், `குழந்தைங்க கல்வி கற்று நல்ல நிலைக்கு உயரணும். பெற்றோர்களைப் போலவே இளைய தலைமுறையும் கூலி வேலை செய்து கஷ்டப்பட வேண்டாம்'னு நினைச்சிருக்காங்க. ஊர் பிரமுகர்களிடம் பேசி, நிலம் வாங்கி, கட்டடம் கட்டியிருக்காங்க. 2003-ம் ஆண்டு, `சிக்கிம் இமாலியன் அகாடமி'ங்கிற இந்த ஸ்கூலைத் தொடங்கியிருக்காங்க. பிறகு பலரின் முயற்சியால், படிப்படியாக இந்த ஸ்கூல் வளர்ந்திருக்கு. இதுக்கிடையே மெக்கானிக்கல் இன்ஜினீயரா வேலை செய்துகிட்டு இருந்த நான் இந்த ஸ்கூலுக்கு வாலன்டியரா வந்தேன். இந்தச் சூழல் எனக்குப் பிடிச்சுப்போக, நிரந்தரமா இங்க வேலைக்குச் சேர்ந்துட்டேன்" என்கிறார். 

எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை 35 குழந்தைகள் இப்பள்ளியில் படிக்கிறார்கள். ஹாஸ்டல் வசதியும் உள்ளது. ``பல மாநிலங்களையும் சேர்ந்தங்களும் இப்பள்ளிக்கு வாலன்டியரா வந்து, பாடம் சொல்லிக்கொடுப்பாங்க. அவங்களில் பலரும் ஐடி ஊழியர்கள் மற்றும் பிசினஸ் செய்றவங்கனு நல்ல நிலையில் இருக்கிறவங்கதான். தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் இந்த ஸ்கூலுக்கு வாலன்டியராக வருவாங்க. நிர்வாக வேலைகள் தவிர நானும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறேன். முழுக்கவே இலவசக் கல்விதான். மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமே எங்க நோக்கம். இதற்காகப் பலரிடமிருந்து கிடக்கும் உதவித்தொகையைப் பெற்றுதான் ஸ்கூலை நடத்துறோம். எனவே, இக்கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியுடன் படிக்க அனுப்புறாங்க. இப்போ பள்ளியை விரிவுபடுத்தும் முயற்சியையும் செய்திட்டிருப்பதால் விரைவில் குழந்தைகள் எண்ணிக்கை உயரும்.

பனிமலைகளுக்கு மத்தியில எந்த ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான வாழ்க்கை. குழந்தைகளின் பரிசுத்தமான அன்பு. இதுக்கு மேல அற்புதமான ஓர் வாழ்க்கை வேணுமா? அதனாலதான் இந்த ஸ்கூலும், குழந்தைகளும்தான் என் வாழ்க்கைனு முடிவெடுத்துட்டேன். http://www.sikkimhimalayanacademy.org/ என்ற இணையதளத்தில் எங்க ஸ்கூலைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்" என்கிறார், பூஜா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு