Published:Updated:

`இனி இணையத்திலேயே ரிசர்வேஷன் சார்ட்டை பார்க்கமுடியும்' - அசத்தும் ஐ.ஆர்.சி.டி.சி

`இனி இணையத்திலேயே ரிசர்வேஷன் சார்ட்டை பார்க்கமுடியும்' - அசத்தும் ஐ.ஆர்.சி.டி.சி
`இனி இணையத்திலேயே ரிசர்வேஷன் சார்ட்டை பார்க்கமுடியும்' - அசத்தும் ஐ.ஆர்.சி.டி.சி

இந்திய ரயில்களின் டிக்கெட் முன்பதிவு தளமான ஐ.ஆர்.சி.டி.சி-யில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். இதன்படி ரயில்களின் முன்பதிவு பட்டியலை (Reservation Chart) இனி அனைவரும் பார்க்கும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்திலேயே இருக்கும். இந்த முன்பதிவுப் பட்டியல் தயாரானபின் எந்த இருக்கை காலியாக இருக்கிறது என்பதை இதைக்கொண்டு நம்மால் எளிதாகப் பார்க்கமுடியும். மேலும், விமான டிக்கெட் முன்பதிவு போல் உங்களுக்குப் பதிவான இருக்கைகள் ரயிலில் எந்தப் பெட்டியில் எங்கே இருக்கும் என்பதையும் நீங்களே பார்க்கமுடியும் எனத் தெரிவித்துள்ளார் அவர்.

இந்தியாவில் மொத்தம் இருக்கும் ஸ்லீப்பர், 3 AC போன்ற 9 பிரிவுகள்; 120 வகையான பெட்டிகளின் லேஅவுட் அனைத்தையும் உள்ளடக்கி இதைக் கொண்டுவந்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி. முதல் முன்பதிவு பட்டியல் ரயில் அதன் முதல் ஸ்டேஷனில் இருந்து புறப்படுவதற்கு 4 மணிநேரம் முன் வெளியிடப்படும். இரண்டாவது முன்பதிவுப் பட்டியல் 30 நிமிடங்களுக்கு முன் வெளியாகும். இவற்றை ஐ.ஆர்.சி.டி.சி தளத்தின் முகப்பு பக்கத்திலேயே காணலாம். கீழே 'Charts/Vacancy' என்ற பட்டனை இப்போது இந்தத் தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தின்கீழ் காணலாம். இந்த சார்ட்களில் பெயர் எதுவும் காட்டப்படாது. எங்கிருந்து எங்கு வரை முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் பார்க்கலாம். 

மேலும், சமீபத்தில் ரயில்வேயின் வருமானம், சமையலறைகளின் லைவ் கண்காணிப்பு வீடியோ என அனைத்து தகவல்களையும் அனைவரும் பார்க்கும் வகையில் ரயில் திருஷ்டி என்னும் தளத்தை அறிமுகப்படுத்தியது ரயில்வே. வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்த இத்துடன் நிற்காமல் மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம்.