Election bannerElection banner
Published:Updated:

காமமும் கற்று மற 10 - கருத்தரித்தல் பிரச்னைகளும் தீர்வுகளும்!

காமமும் கற்று மற
காமமும் கற்று மற

கூடற்கலை - 10

`ஒத்த சொல்லால
என் உசுரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்டைக் கண்ணால
என்னை தின்னாடா...
பச்சைத்தண்ணிபோல்
அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்னைக் கொன்னாடா...’

- கவிஞர் சினேகன்

`இ
ன்று பட்டினியால் இறந்துபோகிறவர்களைவிட, உடல் பருமனால் இறந்துபோகிறவர்களின் எண்ணிக்கை அதிகம்’ - உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari) தன் `ஹோமோ டியஸ்’ (Homo Deus) புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.இதயப் பிரச்னை முதல் எலும்புத் தேய்மானம்வரை பல நோய்கள் வருவதற்குக் காரணம் உடல் பருமன். இது, கருத்தரிப்பதிலும் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். காரணம், அது குறித்த விழிப்பு உணர்வு இல்லாமை. அண்மைக்காலமாக உடல் பருமனால் கருத்தரிக்க முடியாமல் போவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. 

காமமும் கற்று மற 10 - கருத்தரித்தல் பிரச்னைகளும் தீர்வுகளும்!

`கல்யாணத்துக்கு முன்னாடி அவ்ளோ ஸ்லிம்மா இருந்தா டாக்டர். இப்போ, இப்படிப் பெருத்துட்டா. அவ மேல ஈர்ப்பே வர மாட்டேங்குது. எப்பவாவது அவகூட உறவுவெச்சுக்கிட்டாலும், வேண்டா வெறுப்பாதான் அது நடக்குது’’ என என்னிடம் குறைபட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகம். இவர்களில், பெண்களும் அடக்கம்.

உடல் பருமன் காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியர் இங்கே அதிகமிருக்கிறார்கள் அல்லது ஒரு வீட்டுக்குள் இருந்தாலும், தனித்து வாழ்பவர்களாக இருக்கிறார்கள். வெறுமனே தூங்குவதற்கு மட்டும் பயன்படுகிறது அவர்களின் படுக்கையறை.

பெண்கள் அதிக எடையுடன் இருப்பதைக் குறையாகச் சுட்டிக்காட்டும் நாம், ஆண்கள் விஷயத்தில் அதைத் தவிர்த்துவிடுகிறோம். உடல் பருமனால் உண்டாகும் கருத்தரித்தல் பிரச்னைக்கு ஆண், பெண் பாரபட்சம் இல்லை. அதிக உடல் எடைகொண்ட ஆண்களின் விந்தணுக்களின் தரமும், அவர்களின் உடலுறவு நாட்டமும் குறைவாகவே இருக்கும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

ஒரு கரு உருவாவதற்கு ஆரோக்கியமான கருமுட்டையும் விந்தணுவும் மிகவும் அவசியம். இவை தவிர கருவுறும் பெண்ணின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கரு உருவாகாமலிருக்க பொதுவாகச் சொல்லப்படும் காரணங்களான மனச்சோர்வு, சர்க்கரைநோய் ஆகியவற்றைத் தாண்டி, மிகப் பெரிய பங்குவகிக்கிறது உடல் எடை.

கார்த்திக் குணசேகரன்
கார்த்திக் குணசேகரன்

பெண்களுக்கு ஏற்படும் கருத்தரித்தல் பிரச்னைகள்

ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் உட்பட சில ஹார்மோன்களால்தான் பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஹார்மோனும் சரியான விகிதத்தில் இருப்பதுதான், பெண்ணின் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம்.

அதிகமான உடல் எடைகொண்ட பெண்களின் கொழுப்புத் திசுக்களிலிருந்து ‘லெப்டின்’ என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இது, அடிவயிற்றில் கொழுப்பாகத் தங்கும். இது மாதவிடாய் சுழற்சியை பாதித்து, கருவுறுதலை தாமதப்படுத்தும். இதனால், ஹார்மோன்களின் சமநிலை தவறி, கருத்தரித்தலில் சிக்கல் ஏற்படலாம். மற்றொரு முக்கியமான விஷயம், இது இன்சுலின் சுரப்பையும் பாதிக்கும். இதனால், ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களைப் பிணைக்கும் வேலையைச் செய்யும். இதனால், `செக்ஸ்-ஹார்மோன் பைண்டிங் குளோபுலின்’ என்ற புரதத்தின் அளவும் குறையும்.

மாதவிடாய்ச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் இந்த ஹார்மோன்களின் சமநிலை பாதிப்பதால், கருமுட்டையே உருவாகாத நிலைகூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிக உடல் எடைகொண்ட பெண்களுக்கு கருமுட்டைகள் உருவானாலும், அவற்றின் தரம் குறைவாக இருப்பதற்குச் சாத்தியங்கள் அதிகம். பிஎம்ஐ அளவு 29-க்கும் அதிகமாக உள்ள பெண்களுக்கு கருமுட்டை உருவானாலும், 12 மாதங்களுக்குள் அவர்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் நான்கு சதவிகிதம் குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பெண்களில், 5 - 10 சதவிகித அளவுக்காவது எடை குறைப்பவர்களுக்கே கருவுறுதலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் பருமனுள்ள பெண்கள் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றாலும், பிரசவத்தின்போது அதிகமான சிக்கல்கள் ஏற்படுகின்றன.

ஆண்களுக்கு ஏற்படும் கருத்தரித்தல் பிரச்னைகள்

ஹார்மோன் கோளாறு, உடலுறவில் நாட்டமின்மை, உறக்கமில்லாதது, சர்க்கரைநோய் உட்பட பல காரணங்களால் ஆண்களுக்குக் கருத்தரித்தல் குறைபாடுகள் ஏற்பட்டாலும், உடல் பருமனும் முக்கியப் பங்குவகிக்கிறது.

ஆய்வுகளின்படி, சராசரியைவிட 10 கிலோ எடை அதிகமுள்ள ஆண்களின் கருவுறுதலுக்கான வாய்ப்பு 10 சதவிகிதம் குறைகிறது. மேலும், செயற்கைக் கருவுறுதலில், பெண்களைப்போலவே அதிக எடையுள்ள ஆண்களின் குழந்தைகள் உயிருடன் பிறப்பதற்கே பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்கு விந்தணுவின் தரம் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், விந்தணுவின் அமைப்பே மாறுவதும் ஒரு காரணம்.

காமமும் கற்று மற 10 - கருத்தரித்தல் பிரச்னைகளும் தீர்வுகளும்!

என்ன செய்யலாம்?

உடலிலிருக்கும் ஏதோ ஒரு சிக்கலின் வெளிப்பாடுதான் பருமன். அது, ஹார்மோன் கோளாறாக இருக்கலாம்; அதிகக் கொழுப்புச்சத்தாக இருக்கலாம். எதுவெனக் கண்டுபிடித்து சீர்செய்வதன் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். உடல் பருமன் உள்ளவர்கள், குறைந்தபட்சம் ஏழு சதவிகித அளவுக்காவது எடையைக் குறைத்தால்தான், கருத்தரித்தல் குறைபாட்டிலிருந்து தப்பிக்க முடியும். இதற்கு, வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிட உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

எடைக் குறைப்பு என்பது அழகு சம்பந்தப்பட்டது மட்டுமில்லை, ஆரோக்கியமான உடல் மற்றும் குழந்தைப்பேறு தொடர்பானதும்கூட என்ற புரிந்துணர்வு வரவேண்டியது அவசியம்.

- கற்போம்...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு