Published:Updated:

ஆல்ட்ரோஸ், H7X, 2 எஸ்யூவிகள்... ஜெனிவாவில் அசத்தக் காத்திருக்கும் டாடா!

4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட நெக்ஸான் மற்றும் 4.5 மீட்டர் நீளம் கொண்ட ஹேரியருக்கு இடையே, 4.2 மீட்டர் நீளத்தில் ஒரு மிட் சைஸ் எஸ்யூவியை டாடா பொசிஷன் செய்யவிருக்கிறது டாடா.

ஆல்ட்ரோஸ், H7X, 2 எஸ்யூவிகள்... ஜெனிவாவில் அசத்தக் காத்திருக்கும் டாடா!
ஆல்ட்ரோஸ், H7X, 2 எஸ்யூவிகள்... ஜெனிவாவில் அசத்தக் காத்திருக்கும் டாடா!

டாடா மோட்டார்ஸ்... இந்திய கார் சந்தையில் ஒரு முடிவோடு இருப்பது தெரிகிறது. 2019-ம் ஆண்டை ஹேரியர் எஸ்யூவியுடன் அதிரடியாகத் தொடங்கிய இந்த நிறுவனம், தற்போது தொடர்ச்சியாக 21-வது ஆண்டில் ஜெனிவா மோட்டார் ஷோவில் பங்குபெற முடிவு செய்திருக்கிறது. ஜெனிவாவில் வருகின்ற மார்ச் 7 - 17, 2019 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த சர்வதேச புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், 4 கார்களை டாடா மோட்டார்ஸ் காட்சிபடுத்தும் எனத் தெரிகிறது. இதில் ஆல்ட்ரோஸ் (45X - ப்ரிமியம் ஹேட்ச்பேக்), H7X (பிரிமியம் எஸ்யூவி), மைக்ரோ எஸ்யூவி கான்செப்ட் (Hornbill), மிட்சைஸ் எஸ்யூவி (Blackbird) ஆகியவை அடக்கம். இந்த கார்களில் என்னென்ன ஸ்பெஷல் என்பதைப் பார்க்கலாம்.

டாடா ஆல்ட்ரோஸ் - ப்ரிமீயம் ஹேட்ச்பேக்

டாடாவின் முதல் பிரிமியம் ஹேட்ச்பேக்... வேறென்ன வேண்டும் பரபரப்பைக் கூட்ட? கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், 45X கான்செப்ட் என இந்தக் கார் காட்சிப்படுத்தப்பட்ட முதலே, பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் இறுதி வடிவம், ஜெனிவா மோட்டார் ஷோவில் வெளிவந்துவிடும் எனத் தகவல் வந்திருக்கிறது. கடற்பறவையான Albatross-ன் பெயரிலிருந்து மருவியதுதான் Altroz. இதற்கான விளக்கமாக Agility, Best in Class Performance and In-Cabin Space, Efficiency எனச் சொல்லியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். பெலினோ, எலீட் i20, ஜாஸ் ஆகிய கார்களுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் ஆல்ட்ரோஸ், Impact Design 2.0 கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இரண்டாவது டாடா கார்! பெரிய வீல் ஆர்ச் வைத்துப் பார்க்கும்போது, பெரிய வீல்கள் இடம்பெறலாம். Alfa பிளாட்பார்மில் தயாராகப்போகும் இது, இந்த ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. கேபினில் பிரிமியமான மெட்டீரியல்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம். அடுத்த 2 ஆண்டுகளுக்குள், 250 கி.மீ ரேஞ்ச் கொண்ட ஆல்ட்ரோஸின் EV வெர்ஷன் அறிமுகமாகும்.

‘Humanity Line’ பாணியிலான மெல்லிய க்ரில், பெரிய ஹெட்லைட்ஸ், ஷார்ப்பான முன்பக்க பம்பர், மேல்நோக்கிய Window Line மற்றும் பிரதானமான Shoulder Line, அகலமான ரியர் வியூ மிரர்கள் என டீசரிலேயே காரின் ஸ்டைலிங்கைப் புரிந்துகொள்ள முடிகிறது. மஹிந்திரா KUV 1OO மற்றும் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் போலவே, பின்பக்கக் கதவின் கைப்பிடிகள் C-பில்லரில் இருக்கின்றன. கேபினில் Largest-In-Class Floating டச் ஸ்க்ரீன் சிஸ்டம், அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், T-வடிவ சென்டர் கன்சோல், டச் ஸ்க்ரீனுக்குக் கீழே ஏசி வென்ட்ஸ் என மாடர்ன் அம்சங்கள் இருக்கின்றன. போட்டியாளர்களைப் போலவே, தரமான மெட்டீரியல்கள் மற்றும் ஃப்னிஷ் இருக்கும். இதில் டியாகோவில் இருக்கும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் மற்றும் நெக்ஸானில் இருக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகியவை பொருத்தப்படலாம். BS-VI மாசு விதிகளால் டீசல் இன்ஜின்களின் உற்பத்திச் செலவுகள் அதிகமாக இருப்பதால், இந்த ஹேட்ச்பேக்கில் டீசல் இன்ஜின் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. MT/AT கியர்பாக்ஸ் ஆப்ஷன் தவிர, லேட்டஸ்ட் பாதுகாப்பு வசதிகளும் உண்டு. 

டாடா H7X - பிரிமியம் எஸ்யூவி

மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில், H7X எஸ்யூவி கான்செப்ட் காட்சிபடுத்தப்பட இருக்கிறது. அதற்கான டீசரைத் தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ். பெயருக்கு ஏற்றபடியே, இது ஹேரியர் எஸ்யூவியின் 7 சீட் வெர்ஷன்தான்! கூடுதலாக ஒரு வரிசை இருக்கை சேர்க்கப்படுவதால், காரின் நீளத்தில் 62 மி.மீ அதிகரிக்கப்பட்டிருக்கிறது; ஆனால், வீல்பேஸில் மாற்றமில்லை. 18 இன்ச் அலாய் வீல்கள், FootBoard, ரூஃப் ரெயில், பெரிய Quarter Glass, புதிய டெயில்கேட், வித்தியாசமான முன்பக்கம் என ஹேரியரில் இருந்து H7X எஸ்யூவியை வேறுபடுத்த டாடா சிறப்பாகவே முயன்றிருக்கிறது. 

கேபினில் 3-வது வரிசை இருக்கை காரணமாக பூட் ஸ்பேஸ் குறையும் என்றாலும், அதற்கான ஏசி வென்ட் - சார்ஜிங் பாயின்ட் - கப் ஹோல்டர் எனப் பிராக்டிக்கல் டச் வழங்கப்படும். மேலும், JLR கார்களில் இருப்பதுபோன்ற எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், Rotary Gear Selector வசதிகளும் வழங்கப்படலாம். இதில் ஹேரியரில் இருக்கும் அதே 2.0 லிட்டர் Kryotec டர்போ டீசல் இன்ஜினே பொருத்தப்படும் என்றாலும், அது BS-VI மாசு விதிகளுக்கு ஏற்ப டியூன் செய்யப்படும். 170bhp பவரை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், 6 ஸ்பீடு MT/AT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும். ஹேரியரைவிட 1 லட்ச ரூபாய் அதிக விலையில், வருட இறுதியில் வரலாம். 

டாடா Blackbird - மிட்சைஸ் எஸ்யூவி

4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட நெக்ஸான் மற்றும் 4.5 மீட்டர் நீளம் கொண்ட ஹேரியருக்கு இடையே, 4.2 மீட்டர் நீளத்தில் ஒரு மிட் சைஸ் எஸ்யூவியை டாடா பொசிஷன் செய்யவிருக்கிறது டாடா மோட்டார்ஸ். இரண்டுக்கும் இடையேயான விலை வித்தியாசத்தைக் கருத்தில் கொண்டால், க்ரெட்டாவின் விலையில் Blackbird வெளிவருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! முதலில் இதே விலையில், ஹோண்டா சிட்டிக்குப் போட்டியாக ஒரு செடான் காரைக் களமிறக்கும் முடிவில்தான் டாடா இருந்தது. ஆனால், இந்தியாவில் எஸ்யூவிகளுக்கு இருக்கும் டிமாண்டை வைத்துப் பார்க்கும்போது, எஸ்யூவியின் பக்கமே இந்த நிறுவனம் சாய்ந்துவிட்டது. H4 என்ற குறியிட்டுப் பெயர் கொண்ட இந்த மிட்சைஸ் எஸ்யூவி, ஹேரியர் போலவே Omega பிளாட்பார்மில் தயாரிக்கவே டாடா நினைத்தது. 

ஆனால், காரின் விலை அதிகமாகிவிடும் என்பதால், சிறிய கார்கள் தயாரிக்கப்படும் Alfa பிளாட்பார்மிலேயே Blackbird உற்பத்தி செய்யப்படும். காரின் கூடுதல் அளவுகளுக்கு ஏற்ற மாற்றங்கள், அதில் செய்யப்பட்டிருக்கும். நெக்ஸானின் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள்தான் இங்கும் பொருத்தப்படும் என்றாலும், அவை கூடுதல் பவரை வெளிப்படுத்தும்படி ரீ-டியூன் செய்யப்படலாம். ஹைபிரிட்களுக்குப் பதிலாக, H4 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடலைத் தயாரிக்கும் எண்ணத்தில் இருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் கார்களைப் போலவே, இந்த மிட்சைஸ் எஸ்யூவியும் ஸ்டைலான டிசைனைக் கொண்டிருக்கும். கேபினில் டச் ஸ்க்ரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அதிக சிறப்பம்சங்கள் இடம்பெறும். 2021-ம் ஆண்டில் Blackbird விற்பனைக்கு வரலாம் என்றாலும், அதற்கு முன்பே முற்றிலும் புதிய க்ரெட்டா மற்றும் மாருதி சுஸுகியின் புதிய எஸ்யூவி வெளிவந்திருக்கும்! இந்த மாடலால், டாடாவின் எஸ்யூவி ரேஞ்ச் Complete ஆகியிருக்கும்.

டாடா Hornbill - காம்பேக்ட் எஸ்யூவி

புத்தம்புதிய கான்செப்ட்கள் மற்றும் கார்களை, ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்படுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ் (1999 ஸ்விஸ் மோட்டார் ஷோவில் இண்டிகா அறிமுகமானது). எனவே அதே பாணியில், X445 என்ற குறியிட்டுப் பெயரைக் கொண்ட மைக்ரோ எஸ்யூவியை அங்கே அந்த நிறுவனம் வெளியிட இருக்கிறது. நெக்ஸானுக்குக் கீழே Hornbill பொசிஷன் செய்யப்படும் என்பதுடன், மாருதி சுஸூகி Future S மற்றும் ஹூண்டாயின் மைக்ரோ எஸ்யூவிக்குப் போட்டியாக இது களமிறங்கும். 2023-ம் ஆண்டில்தான் ஹூண்டாயின் மாடல் வெளிவரும் என்பதால், 2020-ம் ஆண்டில் வரப்போகும் டாடாவின் மைக்ரோ எஸ்யூவிக்கு நல்ல முன்னிலை கிடைக்கும். ஆல்ட்ரோஸ் போலவே, Alfa பிளாட்பார்மில்தான் Hornbill தயாரிக்கப்படும். 

இதுவும் Impact Design 2.0 டிசைன் கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்படும் என்பதுடன், ஆல்ட்ரோஸ் விட இதன் வீல்பேஸ் 50 மி.மீ குறைவாக இருக்கும். நெக்ஸானைவிடச் சிறிய சைஸில் X445 இருந்தாலும், எஸ்யூவிக்கான கெத்துடன் இது இருக்கும் எனத் தெரிகிறது. பெரிய வீல்கள், Floating Roof, அகலமான வீல் ஆர்ச், ‘Humanity Line’க்ரில் ஆகியவை அதற்குத் துணைநிற்கும். டியாகோவில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான், இந்த மைக்ரோ எஸ்யூவியிலும் இடம்பெறும். 2020-ம் ஆண்டில் டீசல் இன்ஜினின் விலை அதிகமாகும் சாத்தியம் இருப்பதால், இதில் டீசல் இன்ஜின் வழங்கப்படுமா என்பது போகப் போகத்தான் தெரியும். ஒருவேளை டியாகோவின் 1.05 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படலாம். 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் X445 காட்சிப்படுத்தப்படலாம்.