Published:Updated:

``அடுத்த வேளைக் கஞ்சியில்ல... விமானம் ஏறிப்போய் விளையாடணும்!’’ - மூத்தோர் தடகள ரேவதி

"என் மகன் படிக்கும் பள்ளியில் பயிற்சி எடுத்துக்கிட்டு, 8 வருஷத்துக்கு முன்னாடி மூத்தோர் தடகள போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன். 2012-ம் வருடம் ஈரோட்டில் நடந்த போட்டியில் மாவட்ட அளவில் 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் இரண்டாம் இடங்களை பிடிச்சேன்."

``அடுத்த வேளைக் கஞ்சியில்ல... விமானம் ஏறிப்போய் விளையாடணும்!’’ - மூத்தோர் தடகள ரேவதி
``அடுத்த வேளைக் கஞ்சியில்ல... விமானம் ஏறிப்போய் விளையாடணும்!’’ - மூத்தோர் தடகள ரேவதி

``சின்ன வயசுல டாக்டராகணும்னு நினைச்சேன் நடக்கலை, கணவரோட கடைசி வரைக்கும் வாழணும்னு நினைச்சேன். ஆனா, என்னையும் பிள்ளையையும் தவிக்கவிட்டுட்டு அவர் போய் சேர்ந்துட்டார். தம்பி தயவுல வாழ்ந்துகிட்டு இருக்கோம். ஊர்க்காவல் படையில் இருக்கேன். அதுல, மாசத்துக்கு 5 டியூட்டி கிடைச்சாலே அதிசயம். மத்த நாள்கள்ல வயிற்றுப்பாட்டுக்கு கூலி வேலைக்குப் போறேன். கிடைக்கிற கேப்புல என் மகன் படிக்கும் பள்ளியில் பயிற்சி எடுத்துக்கிறேன். ஆந்திராவுல நடந்த தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் வந்தேன். கோல் ஊன்றி தாண்டுதலில் இரண்டாமிடம்,100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாவது இடம்னு வந்தேன். மலேசியாவில் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகி இருக்கிறேன். அங்க பரிசு வாங்க நான் கடுமையா பயிற்சி செய்யணும்னு இல்லை. ஆனா, குடும்ப வறுமை என்னைக் கூலி வேலை பார்க்கதான் தினமும் அனுப்புது’’ என்று ஆற்றாமையாகப் பேசுகிறார் ரேவதி.

45 வயது நிரம்பிய விதவைப் பெண்ணான ரேவதி, கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நங்கவரத்தைச் சேர்ந்தவர். கண்கள் முழுக்க கனவுகள் நிறைந்த கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் சாதாரண குடும்ப பெண்தான் இவர். ஆனால், வாழ்வில் அடுத்தடுத்து இவர் சந்தித்த அனைத்தும் அல்லாட வைக்கும் அல்லல்களைத்தான். இந்தக் கஷ்டத்திலும் தன்னிடம் சாதிக்க திராணி இருக்கிறது என்பதை நிரூபிக்கத் துடித்தவர், அவரைச் சந்தித்தோம்.

``எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை சார். டாக்டராகணும்னு நினைச்சேன். படிக்கிற காலத்துலேயே படிப்புல மட்டுமல்ல, சகல விளையாட்டுகளிலும் நான்தான் நம்பர் ஒன். ஆனா, என்னோட பொறந்தவங்க ஒரு பெண், அஞ்சு ஆண்னு மொத்தம் 6 பேர். குடும்ப வறுமை, பத்தாவது பாஸான என்னை `பொட்டப்புள்ளைக்கு படிப்பு எதுக்கு’னு சொல்லிப் படிப்பை நிறுத்திட்டாங்க. என் சிறகுகள்ல ஒண்ணு முறிஞ்சதா நினைச்சு மனசு வலிச்சது. குடும்ப வண்டியை ஓட்ட கூலி வேலைக்குப் போனேன். பெருமாளுக்கு என்னைக் கட்டி வச்சாங்க. ஒரு பையன் பொறந்தான். ஆனா, 2003-ல என் கணவர் திடீர்னு நோய்வாய்ப்பட்டு இறந்து போய்ட்டார். படிக்க வேணாம்னு என்னை தடுத்தப்பவே என் இறகுகளைப் பிடுங்கின மாதிரி உணர்ந்தேன். என் கணவர் இறப்புக்கு அப்புறம் சிறகே இல்லாத பறவை மாதிரி ஃபீல் பண்ணேன்.

அப்பாவும் இறந்து போக, வயசான அம்மா, கல்யாணம் ஆகாத அண்ணன், தம்பியோட ஒண்ணா வாழறேன். இந்த ஓட்டை உடைசல் வீட்டைத் தவிர எனக்கு நிரந்தர வருமானத்துக்கே வழியில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் குளித்தலையைச் சேர்ந்த கமாண்டர் ஹரிஹரன் சார் 2011-ம் ஆண்டு ஊர்க்காவல்படையில் எனக்கு வேலை வாங்கித் தந்தார். அங்கே மாசத்துல 5 நாள்தான் வேலை கிடைக்கும். அப்பத்தான் எனக்குள்ள இருந்த சின்ன வயசு திறமையான விளையாட்டுக்கு உயிர் கொடுக்கிற தருணம் வந்தது.

என் மகன் படிக்கும் பள்ளியில் பயிற்சி எடுத்துக்கிட்டு, 8 வருஷத்துக்கு முன்னாடி மூத்தோர் தடகள போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன். 2012-ம் வருடம் ஈரோட்டில் நடந்த போட்டியில் மாவட்ட அளவில் 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் இரண்டாம் இடங்களை பிடிச்சேன். அதற்குப் பிறகு, எல்லா வருடமும் மாநில அளவில் 100, 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், கோல் ஊன்றி தாண்டுதல்ன்னு பல போட்டிகளில் முதல், இரண்டாவது, மூன்றாவதுனு இதுவரைக்கும் இருபதுக்கும் மேற்பட்ட பரிசுகளை வாங்கியிருக்கேன். அதேபோல், தேசிய அளவில் இதுவரை 12 பரிசுகளை வாங்கியிருக்கேன். சில நாள்களுக்கு முன்னாடி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற 40 வது ஆண்டு மூத்தோர் தடகள போட்டியில்தான் 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் வந்தேன். கோல் ஊன்றித் தாண்டுதலில் இரண்டாமிடம்,100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம் வந்தேன். இப்போது, வரும் செப்டம்பர் மாதம் மலேசியாவுல  நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துக்க தேர்வாகியிருக்கேன். 

ஒவ்வொரு போட்டிக்குப் போறதுக்காக பணம் சேர்க்கிறதுக்குள்ள நான் படுற பாடு அவ்வளவு வேதனையானது சார். ஹரிஹரன் சார் இல்லைன்னா, எனக்கான சாதனைகள் சாத்தியமே இல்லை. அவர்தான் பொருளாதார ரீதியில் முடிந்த உதவிகளைப் பெற்றுத் தருவார். இப்போ சர்வதேச அளவில் எனக்குச் சாதிக்க ஒரு வாய்ப்புக் கிடைச்சுருக்கு. ஆனா, அந்தக் கனவை என் வறுமை தின்னுருமோன்னு பயமா இருக்கு. அடுத்த வேளைக் கஞ்சிக்கே வழியில்லை. விமானம் ஏறி போகணுமே! தவிர, சர்வதேச அளவில் சாதிக்க உடளவில் தெம்பு வேணும். அதற்கு நல்ல சாப்பாடு சாப்பிடணும். நான் சாப்பிடும் அதிகபட்ச நல்ல சாப்பாடு ரேஷன் அரிசி சோறுதான். நல்ல பயிற்சி வேணும். ஷூ வேணும். ஆனா, எதற்கும் வழியில்லை. இந்தா இன்னைக்குகூட கூலி வேலைக்கு போய்ட்டு, இப்போதான் வந்தேன். என் கனவுகள் கைகூடுற நேரத்துல கண் முன்னால நிக்குற வறுமை அரக்கன் அதை பிச்சு ஏறிஞ்சுருவானோன்னு நித்தம் நித்தம் உள்ளம் வெம்பிப் போறேன் சார். ஆனா, யாருக்கும் கிட்டாத மனத்திடம் எனக்கிருக்கு. அது என்னை எல்லா தடைகளையும் கடக்க வச்சு, வெற்றிக்கோட்டை தொட வைக்கும்’’ என்று தன்னம்பிக்கையை வார்த்தைகளுக்கிடையே விசிறிவிட்டு முடிக்கிறார்.