Published:Updated:

மனித இனம் புவியில் நிலைத்திருப்பது சாத்தியமா? - விடைசொன்ன கருத்தரங்கு

ஆண் மையமான பண்பாட்டு, வரலாற்றுப் பார்வையை இன்றைய உயிரியல் தகர்த்தெறிந்துள்ளது. உயிரின வரலாற்றில் பெண்மைக்குப் பிறகே `ஆண்’ என்ற பாலினம் உருவாகியிருப்பதற்கான மரபணுவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

மனித இனம் புவியில் நிலைத்திருப்பது சாத்தியமா? - விடைசொன்ன கருத்தரங்கு
மனித இனம் புவியில் நிலைத்திருப்பது சாத்தியமா? - விடைசொன்ன கருத்தரங்கு

றைந்த இயற்பியல் மேதை `ஸ்டீபன் ஹாக்கிங்’ ஒரு நேர்காணலில், மனிதச் சமூகம் இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் உயிர்பிழைத்திருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்றார். புவி வெப்பமயமாதல், அதீத நுகர்வுப் பெருக்கம், இயற்கை வளங்கள் மீதான வரம்பற்ற சூறையாடல் போன்ற நிலவரங்களின் போக்கில் இனி, பூமியில் மானுடத்துக்கு ஓர் எதிர்காலம் உண்டா என்பது குறித்த ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். 

அறிவியல் புலங்களில் நிகழும் கோட்பாடு சார்ந்த புதுநெறிகளும் தொழில்நுட்பம் சார்ந்த உபகரணங்களின் பெருக்கமும் மனிதனையும் பூமியையும் அதிவேக மாற்றங்களுக்குள் உலுக்கிக்கொண்டிருக்கின்றன. சென்ற நூற்றாண்டில் வரலாறுகளைத் தொகுப்பது, ஆவணப்படுத்துவது எனக் கடந்த காலம் குறித்த ஆய்வுகள் முதன்மை செலுத்தின. இந்த நூற்றாண்டில் எதிர்காலவியல் குறித்த ஆய்வுகளே முன்னிலை பெறும். எதிர்காலவியல் ஆய்வுகள் மேற்குலகக் கல்விப் புலங்களில் தீவிரம் கொள்ளத் தொடங்கியுள்ளன. இந்த உரையாடல்களைத் தமிழில் திறந்துவிடும் நோக்கத்துடன் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் `மானுட எதிர்காலவியல் நோக்கில் அறிவியல் உலகப் புதுநெறிகள்’ என்ற புதுமையான தலைப்போடு இரு நாள் தேசிய கருத்தரங்கு அண்மையில் ஒருங்கிணைக்கப்பட்டது. அறிவியல் எழுத்தாளர்கள், துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள் எனப் பலர் தங்கள் ஆய்வுரைகளை வழங்கினர்.

பேரண்டத் தோற்றம் - வரலாறு, வேற்றுக் கோள்களில் வாழ்வதற்கான சாத்தியங்கள், அண்டவெளிப் பயணங்களும் ஆய்வுகளும், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினிகள், நேனோ - தொழில்நுட்பம், மரபணு - உயிர்நகல் தொழில்நுட்பங்கள் (Genetic engineering and Cloning technology), ஸ்டெம் செல் ஆய்வுகள் (Stem Cell research), பருவநிலை மாற்றங்களும் சூழலியல் சவால்களும் போன்ற பல்வேறு புலங்களில் அமர்வுகள் அமைந்தன. நவீன அறிவியலைத் தமிழில் எளிய முறையில் அறிமுகம் செய்வதும் அறிவியல் சார் மனோபாவத்தைச் சமூகத்தில் தீவிரப்படுத்துவதும் கருத்தரங்கின் மைய நோக்கம். இன்றைய அறிவியல் தொழில்நுட்பப் போக்குகளின் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுத் தாக்கங்கள் குறித்த எதிர்காலவியல் உரையாடலை நோக்கி கருத்தரங்க அமர்வுகள் இருந்தன.  

உயிரியலாளரும் சிறுபான்மையின நல அமைச்சகக் கண்காணிப்பு அதிகாரியுமான முனைவர் சுதர்சனம் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். மரபணுவியல் - உயிர்நகல் போன்றவற்றின் தொழில்நுட்பப் பரிசோதனைகளின் அறம் சார்ந்த சிக்கல்கள் குறித்துப் பேசினார். அதே சமயம் மரபணுவியல் ஆய்வுகள் சமூக வரலாற்றையே புதிய முறையில் தொகுத்துக் கொள்வதற்கான புதிய உண்மைகளை வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். ஆண் மையமான பண்பாட்டு, வரலாற்றுப் பார்வையை இன்றைய உயிரியல் தகர்த்தெறிந்துள்ளது. உயிரின வரலாற்றில் பெண்மைக்குப் பிறகே `ஆண்’ என்ற பாலினம் உருவாகியிருப்பதற்கான மரபணுவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இப்படி ஓர் ஆய்வை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வுகுறித்த பார்வைகள் முன்வைக்கப்பட்டன. 

மிஸ்டர் ஜி.கே என்ற காணொலிப் பதிவர் மானுடம் தோன்றியது முதல் அறிவியல் சிந்தனைப் போக்குளின் வழியான மனிதச் சமூக வரலாற்று இயக்கத்தைத் தொகுத்துரைத்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அனுமானித்த ஈர்ப்பலைகள் சமீபத்தில் அமெரிக்காவில் LIGO ஆய்வுக்கூடத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டது. அதன் முக்கியத்துவம் குறித்தும் பிரபஞ்சம் குறித்த கோட்பாடுகளில் அது செலுத்தவுள்ள தாக்கம் குறித்தும் அவர் பேசினார். செவ்வாய்க் கிரகம் குறித்த ஆய்வுகள், மனிதக் குடிபெயர்வுகளுக்கான சாத்தியங்கள், செயற்கை நுண்ணறிவு, வேற்றுலக உயிரிகள் போன்றவற்றைப் பற்றி விரிவாகப் பேசினார். ஐசக் அசிமோவ், ஆர்தர் சி கிளார்க் போன்ற அறிவியல் புனைகதையாளர்களின் அசாத்தியமான அனுமானங்கள் குறித்து பேசியவர், லியோனார்டோ டாவின்சி தன் ஓவியங்களில் வெளிப்படுத்திய பல்வேறு அனுமானுங்கள் பின்னர் அறிவியலில் நிதர்சனமானதைக் குறிப்பிட்டு படைப்பாளியின் உள்ளுணர்வும் கனவும், அறிவியல் உலகில் பின்னர் நடைமுறையாவது குறித்தும் உரையாடினார். 

சென்னை கிறிஸ்துவக் கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் முனைவர் வில்சன் மீநுண்துகள் - நேனோ தொழில் நுட்பம் (Nanobots-Nano technology) ஏற்படுத்திவரும்  புரட்சிகர மாற்றங்கள், இந்தியாவில் பெருகி வரும் இத்துறை சார்ந்த முதலீடுகள், ஆய்வுகள் குறித்துப் பல்வேறு பார்வைகளை முன்வைத்தார். தினசரி வாழ்வின் கேட்ஜெட்ஸ், நுகர்வுப் பொருள்களில் தொடங்கி ராணுவத் தொழில்நுட்பங்கள் வரை நேனோ செலுத்தவுள்ள ஆதிக்கம் குறித்துப் பேசினார்.  

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனின் சூழலியல் சவால்கள் குறித்த பேச்சு அறிவியலின்  சமூக அரசியல் சார்ந்த தாக்கத்தை மையப்படுத்தியது. அறிவியல் ஒரு தொழில்நுட்பமாக, சந்தையாக, பன்னாட்டு முதலாளிகளின் அதிகார வெளியாக மாறும்போது நிகழும் இயற்கை வளச்சுரண்டல்கள், வாழ்வாதார வேட்டையாடல்கள் குறித்த கூர்மையான விமர்சனங்களை முன்வைத்தார். வரம்புக்குட்பட்ட வளங்களின் பூமியில் வரம்பற்ற நுகர்வு, வரம்பற்ற வளர்ச்சி என்பதன் சாத்தியமின்மையை, அதன் பேரழிவுத்தமையைச் சுட்டிக் காட்டினார். 

பேராசிரியர் த.சற்குண பாண்டியன் மருத்துவ மற்றும் உயிர்த் தொழில்நுட்பங்களின் புது நெறிகளைப் பேசினார். உறுப்பு மாற்று சிகிச்சைகள் இன்று மனித மூளையையே உறுப்பு மாற்றம் செய்வதற்கான அசாத்தியமான இடத்திற்கு வந்துள்ளதைக் குறிப்பிட்டார். முற்றிலும் செயலிழந்த ஓர் உடலின் மூளையை அகற்றி அதை மூளைச்சாவு அடைந்த ஓர் ஆரோக்கியமான உடலுக்குள் பொருத்துவதற்கான புதிய நியூரோ தொழில்நுட்பம் குறித்தும் அதே சமயம் அதன் அறிவியல், மற்றும் உளவியல் பிறழ்ச்சிகள் சார்ந்த கேள்விகளையும் அவர் முன்வைத்தார். படைப்பூக்கம் மிக்க ஸ்டெம் செல்களை உடலுக்குள் செலுத்துதல், மரபணுப் பொறியாண்மை செய்தல் முதலியவற்றின் வழி மனித ஆயுளை அதன் இயற்கை வரம்பிலிருந்து கூட்டுவதற்கான பரிசோதனைகளும் தீவிரமடைந்துள்ளன என்றார். நுண் இயந்திரங்கள் – நேனோபோட்களை உடலுக்குள் செலுத்தி புற்று நோயை முற்றிலும் குணப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து விளக்கினார். அதே சமயம் இந்த மருத்துவத் தொழில் நுட்பங்களுக்குப் பின்னால் இயங்கும் நிறுவனங்களின் சந்தை சார்ந்த வேட்கைகளையும் அவற்றின் மீது அரசு மேற்கொள்ள வேண்டிய நெறிப்படுத்தல்கள், மக்கள் நலம் சார்ந்த தொழில்நுட்பக் கொள்கை போன்றவற்றையும் வலியுறுத்தினார். புவியில் மனிதர்களின் எதிர்கால சவால்கள், தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக விளையாட்டு, பரிசோதனைகள் வழி அறிவியல் கருத்தாக்கங்களை எளிய முறையில் புரிய வைத்தல் என்னும் நோக்கில் இயற்பியலாளர் முனைவர் சுப்பையா பாண்டியன் `வேடிக்கையும் விஞ்ஞானமும்’ என்ற அமர்வை நிகழ்த்தினார். 

இளைஞர்களிடையே சமூக விழிப்புணர்வைக் கொண்டுசெல்லும் இலக்குடன் வேதியியல் துறை மாணவர் தீ.சற்குணன் கொண்டுவந்துள்ள 'நீலவிழிகள்' இதழ் கருத்தரங்க நிறைவில் வெளியிடப்பட்டது. கடந்த இரண்டு, மூன்று  நூற்றாண்டுகளாக, ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையிலான நவீன குடிமைச் சமூக உருவாக்கத்தில் அறிவியலின் வரலாற்றுப் பங்களிப்புகள் மறுக்க முடியாதவை. ஆனால், இன்றைய சமூக ஊடகக் கருவிகள், தகவல் பெருக்கங்கள் மீண்டும் புதிய மூடநம்பிக்கைகளை, ஊடகப் புனைவுகளை, வழக்காறுகளை உருவாக்கி வருகின்றன. சமூக ஊடகங்களின் வெகுசனப் பரவலுக்குப் பின், உலகம் உண்மைக்குப் பிறகான ஒரு வரலாற்றுக்கு (post truth world) வந்துவிட்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். இனி மக்களுக்கு உண்மை குறித்த நம்பிக்கையோ தேடலோ இருக்காது. மாறாகப் புனைவுகள், உணர்வெழுச்சிகளுக்குப் பின்னால்தான் மக்களின் நாட்டம் இருக்கும் எனப்படுகிறது. தகவல்களின் பெருக்கம் அதன் நோக்கத்திற்கு எதிராக உண்மையை மறைக்கவே இன்று பயன்படுகிறது. இச்சூழலில் அறிவியல் சார்ந்த மனோபாவத்தை மீட்டெடுப்பதும், `உண்மை’, `நடுநிலை’, `பரிசோதித்தல்’ போன்ற மதிப்பீடுகளைச் சமூகத்தில் தீவிரமாகக் கொண்டுசெல்வதுமான நோக்குடனும் தமிழ்த்துறை இந்த முன்முயற்சியை எடுத்துள்ளது. கருத்தரங்க ஆய்வுரைகளின் தொகுப்பு  விரைவில் நூலாக வெளிவரவுள்ளது.