Published:Updated:

தங்கம் எனக்கே ஆச்சர்யம்!

தங்கம் எனக்கே ஆச்சர்யம்!
பிரீமியம் ஸ்டோரி
தங்கம் எனக்கே ஆச்சர்யம்!

தங்கம் எனக்கே ஆச்சர்யம்!

தங்கம் எனக்கே ஆச்சர்யம்!

தங்கம் எனக்கே ஆச்சர்யம்!

Published:Updated:
தங்கம் எனக்கே ஆச்சர்யம்!
பிரீமியம் ஸ்டோரி
தங்கம் எனக்கே ஆச்சர்யம்!

முப்பது வயதில் ஓய்வை அறிவித்து டிராக்கிலிருந்து வெளியேறினார் மின்னல் மனிதன் உசேன் போல்ட். இருபதுகளின் இறுதியை எட்டும்போதே தடகள வீரர்கள் எடுக்கும் முடிவுதான். எப்பேர்ப்பட்ட ஜாம்பவானாக இருந்தாலும்! ஆனால், முப்பதில்தான் தன் டிராக் ரெக்கார்டைத் தொடங்கியிருக்கிறார் இந்த அதிசயப் பெண். கோமதி... கடந்த மாதம் தமிழகத்தின் முகம் இவர்தான். கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளது இந்த 30 வயதுப் புயல்.  

தங்கம் எனக்கே ஆச்சர்யம்!

தங்கம் வென்றது மட்டுமல்ல, தன் தடகள வாழ்க்கையின் மிகச் சிறந்த பெர்ஃபாமன்ஸையும் (2:02:70 நிமிடங்கள்) பதிவு செய்து ஆச்சர்யப்படவைத்திருக்கிறார் கோமதி. பாராட்டுகளாலும் வாழ்த்துகளாலும் நனைந்து கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

’’தங்கம் வென்ற தருணம் எப்படி இருந்தது... போட்டிக்கு முன் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?’’

‘‘யாருக்குமே என்மீது பெரிதாக நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. என் பயிற்சியாளர் மட்டும் ‘நிச்சயமாக நீ தங்கம் வெல்வாய்’ என்று சொல்லியிருந்தார். ஆனால், நான் தங்கத்தை எதிர்பார்க்கவில்லை. பொதுவாக எனக்கு தேசிய போட்டிகளிலெல்லாம் வெள்ளிப்பதக்கம்தான் கிடைக்கும். இந்த முறையும் அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன். தகுதிச் சுற்றில் இரண்டாவதாக வந்திருந்ததால், வெள்ளி மீது நம்பிக்கையும் இருந்தது. ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தால் தங்கமே வென்றுவிட்டேன்.’’

‘‘கடைசி 150 மீட்டரில் என்ன நடந்தது. அதுவரை மிகவும் பின்னால் இருந்துவிட்டு, எப்படி முதலாவதாக வரமுடிந்தது?’’


‘‘800 மீட்டரைப் பொறுத்தவரை, தொடக்கத்தில் வேகமாக ஓடி லீடிங் எடுத்தாலெல்லாம், ரேஸை சரியாக முடிக்க முடியாது. நிதானமாகத்தான் தொடங்கவேண்டும். அதில் நான் தெளிவாக இருந்தேன். அதுமட்டுமல்லாமல், இங்கு உள்ளிருந்து வெளியே வருவதும் சிரமம் என்பதால், முதல் லேனை ஒட்டிச் செல்லக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தேன். அதனால் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் ஓடிக்கொண்டிருந்த சீன வீராங்கனை மிகவும் சிரமப்படுவதுபோல் உணர்ந்தேன். அந்த நேரத்தில், இன்னொருவர் நம்மை முந்துகிறார் என்ற உணர்வும் ஏற்பட்டால் அது நம்மை இருக்கமடையச்  செய்யும். நான் அப்படியேதும் உணராமல் இருந்ததால், கடைசியில் நன்கு வேகமெடுக்க முடிந்தது. ஆனால், முடிக்கும் வரையுமே இரண்டாவது இடத்தில் இருப்பதாகத்தான் நினைத்திருந்தேன்.’’ 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கம் எனக்கே ஆச்சர்யம்!

‘‘உங்கள் தடகள வாழ்க்கை மிகவும் தாமதமாகத்தானே தொடங்கியது?’’

‘‘ஆம், மிகவும் தாமதமாக. கல்லூரி வரையுமே நான் போட்டிகளில் பங்கேற்றதில்லை. பள்ளி அளவில் கலந்து கொண்டேனே தவிர, புரொஃபஷனலாக எந்தத் தொடரிலும் பங்கேற்றதில்லை. முதல் போட்டியில் பங்கேற்கும்போதே கிட்டத்தட்ட 20 வயது ஆகியிருந்தது.’’

‘‘உங்களுடைய முதல் போட்டி அனுபவம் பற்றி...’’


‘‘என்னுடைய முதல் போட்டியில் நான் பங்கேற்கவேயில்லை. (லேசாகச் சிரித்துவிட்டுத் தொடர்கிறார்) அது ஜூனியர் நேஷனல்ஸ் தொடர். அப்போது எனக்கு போட்டி எப்படித் தொடங்கும் என்பது பற்றியெல்லாம் பெரிதாகத் தெரியாது. என் பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டிருக்கும்போது, நான் வேறு எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுவிட்டேன். உடன் வந்திருந்த ஜூனியர் ஒருவன் வந்து சொல்லித்தான், என் பெயரை அழைத்ததே தெரியும். அதன்பிறகு மனசைத் தேற்றிக்கொள்ள 200 மீட்டரில் பங்கேற்றேன். எல்லாமே தாமகத்தான் தொடங்கியது!  (மீண்டும் சிரிக்கிறார்)’’

‘‘2016 காலகட்டத்தில் காய்ச்சல், காயம் என தொடர்ச்சியாக அவதிப்பட்டீர்கள். அது உங்கள் கரியரில் பெரிய தாக்கம் ஏற்படுத்திவிட்டதாக நினைக்கிறீர்களா?’’

தங்கம் எனக்கே ஆச்சர்யம்!

‘‘ஊட்டியில் கேம்ப்பில் இருந்தபோது, அந்த கிளைமேட் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் காய்ச்சலால் அவதிப்பட்டேன். அதிலிருந்து மீண்டுவந்தவுடனேயே ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்கவேண்டியிருந்தது. துரதிஷ்டவசமாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த சில மாதங்களிலேயே காயம் ஏற்பட்டது. 6 மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று பயிற்சியாளர்கள், மருத்தவர்கள் சொல்லியும் கேட்காமல், போட்டிகளில் கலந்துகொண்டேன். அவற்றில் வெற்றி பெற்றிருந்தபோதும் காயம் தீவிரமாக, அது 1 வருடம் ஓய்வில் இருக்கவைத்து விட்டது. இந்த நாள்கள் இருந்திருந்தால் நிச்சயம் என்னால் இன்னும் குறைந்த நேரத்தில் முடித்திருக்க முடியும்.’’

‘‘அந்தக் காயத்துக்குப் பிறகு உடனடியாக உங்களால் உடனடியாக மீண்டுவர முடிந்ததா?’’


‘‘ஆமாம். ஓய்வுக்குப் பிறகு பயிற்சிக்குச் செல்லவேண்டுமென்று என் அலுவலகத்தில் கேட்டேன். எனக்கு விளையாட்டுதான் எல்லாமே என்று உணர்ந்தவர்கள், உடனே அனுமதி அளித்தனர். அதன்பிறகு, புதிய பயிற்சியாளரிடம் சேர்ந்தேன். முதல் தொடரில், 800 மீட்டரில் பங்கேற்க எனக்குத் தயக்கமாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பங்கேற்கும் முதல் தொடரிலேயே ஜூனியர்கள் நம்மை முந்திவிட்டால், மனதுக்குள் பெரிய கேள்வி எழுந்துவிடும். அதனால் 1500 மீட்டரில்தான் பங்கெடுத்தேன். கொஞ்ச காலம் 1500 மீட்டர் பயிற்சிதான் எடுத்துக்கொண்டிருந்தேன். அடுத்தத் தொடரில், 2:08 நிமிடங்களில் 800 மீட்டரை நிறைவு செய்யவும் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. பயிற்சியைத் தீவிரமாக்கிவிட்டேன்.’’

‘‘2:08 டூ 2:02... குறைந்த இடைவெளியில் எப்படி சாத்தியமானது?’’


‘‘பயிற்சியைத் தவிர வேறென்ன காரணமாக இருக்க முடியும்! ஒரு கட்டத்தில் ஊட்டியில் கேம்புக்குப் போக முடியாத சூழ்நிலை. அங்கு டிராக்கில் சில சிக்கல்கள் இருந்தது. அதனால் பெங்களூரில் தனியாகவே பயிற்சி மேற்கொண்டேன். ஃபாஸ்ட் ரன்னர்களை ஃபாலோ செய்து ஓடத் திட்டமிட்டேன். பூவம்மா (ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர்) போன்ற ஒரு அத்லெட் அதற்கு ஒத்துக்கொண்டு எனக்கு உதவி செய்தார். அதெல்லாம் மிகப்பெரிய விஷயம்! அவரைப் போன்ற வீராங்கனைகளோடு பயிற்சி செய்தது என் வேகத்தை வெகுவாக அதிகரித்தது.’’ 

தங்கம் எனக்கே ஆச்சர்யம்!

‘‘ஆண்களோடும் பயிற்சி மேற்கொண்டீர்களாமே?’’

‘‘ஆம். வேகம் மட்டும் போதாது என்று தோன்றியது. ஸ்டாமினாவை அதிகப்படுத்துவது முக்கியம் என்று முடிவு செய்தேன். அதனால் 15 கிலோ மீட்டர் ரன்னர்களோடு சேர்ந்து ஓடத் தொடங்கி
னேன். அவர்களுக்கு ஓரளவு என்னால் ஈடு கொடுக்க முடிந்தது. என் ஸ்டாமினாவைப் பார்த்து, ‘மாரத்தான் ஓடலாமே. செலவுக்கு உதவுமே’ என்றுகூட அந்தத் தம்பிகள் கேட்டார்கள். நம் லட்சியம் எப்போதுமே பதக்கத்தில்தான். என்றுமே பணத்தில் இருந்ததில்லை. அதனால், அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால், அந்தப் பயிற்சி என் ஸ்டாமினாவை அதிகப்படுத்தியதோடு, நம்பிக்கையையும் கூட்டியது!

‘‘ஜூனியர்களிடம் தோற்று விடக் கூடாது என்பதால் தயங்கியதாகச் சொன்னீர்கள். ஆனால், ஒவ்வொரு பயிற்சியின்போதும், ட்ரையல்களின்போதும் அவர்களோடுதானே ஓடவேண்டியிருக்கும். மனதளவில் அது ஏதேனும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதா?’’

‘‘அந்தத் தயக்கம் எப்போதுமே இருக்கத்தான் செய்தது. ஏனெனில், அது நம் மீதே ஒரு கேள்வியை எழுப்பிவிடும். ஜூனியர்களில் திறமையானவர்கள் நிறைய இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களுக்குப் பின்னால் வந்துவிட்டால், அது நம்பிக்கையைக் குலைத்துவிடும். அதிலும் குறிப்பாக, காயத்திலிருந்து திரும்பியபோது அந்தத் தயக்கம் அதிகமாகவே இருக்கத்தான் செய்தது.  போகப்போக, இவற்றால் பெரிய தாக்கம் ஏற்படாததுபோல் பார்த்துக்கொண்டேன். பயிற்சிகளின்போது எனக்கும் ஜூனியர்களுக்குமான வொர்க் அவுட்களில் வேறுபாடு இருக்கும். எனக்குக் கடுமையான வொர்க் அவுட்கள் இருக்கும். ஜூனியர்களுக்கு அப்படியில்லை. அதனால், டைமிங்கில் வேறுபாடு இருப்பது சகஜம் என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டது.’’ 

தங்கம் எனக்கே ஆச்சர்யம்!

‘‘வெற்றிகள் தாமதமாகும்போது, வயதும் கூடிக்கொண்டே இருக்கும்போது, பொதுவாகவே உள்ளுக்குள் ஒரு கேள்வி எழும். நம் முடிவுகள் பற்றிச் சந்தேகம் எழும். அப்படியான தருணத்தைச் சந்தித்திருக்கிறீர்களா?’’

‘‘நிச்சயமாக இல்லை. ஏனெனில், விளையாட்டின் மீதான என் காதல் அலப்பரியது. எப்போதுமே குறையாத ஒன்று. ‘யாரையாவது காதலிக்கிறாயா’ என்று என் தோழிகள் விளையாட்டாகக் கேட்பார்கள். விளையாட்டைக் காதலிக்கிறேன் என்றுதான் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்வேன். அந்தக் காதல் எனக்கு அளவுகடந்த நம்பிக்கையை அளித்துள்ளது. எத்தனை காலம் ஆனாலும் ஒரு சர்வதேச பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதுதானே இப்போது என்னை இங்கு உங்கள் முன்னால் உட்காரவைத்திருக்கிறது!’’

‘‘பொதுவாக தடகள வீரர், வீராங்கனைகள் 30 வயதைத் தொட்டவுடன் ஓய்வை நோக்கித்தான் நகர்வார்கள். உசைன் போல்ட் கூட முப்பதில் ஓய்வு பெற்றார். ஆனால், முப்பதில் உங்களுடைய மிகச் சிறந்த பெர்ஃபாமன்ஸைக் கொடுத்திருக்கிறீர்களே?’’

‘‘வயதுக்கும் லட்சியத்துக்கும் என்ன இருக்கிறது. இங்குதான் 30 வயது என்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. என்னோடு 800 மீட்டரில் பங்கேற்று வெண்கலம் வென்ற கஜகஸ்தான் வீராங்கனைக்கும் என் வயதுதான். அதைக் கேட்டபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பி.டி.உஷா, ஷைனி வில்சன் போன்ற சாம்பியன்களும் 30 வயதைக் கடந்த பிறகுதான் நிறைய வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். சாதிக்கவேண்டும் என்ற எண்ணம்தான் நமது செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. வயது வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது இல்லை என்று நான் நம்புகிறேன்.’’

மு.பிரதீப்கிருஷ்ணா - படங்கள்: க.பாலாஜி