‘இன்னா நாற்பது’ தொடரில் அதிகம் பேச வேண்டியது இனிப்பின் சில கசப்பான பக்கங்களைத்தான். உடல் வசீகரம், உள்ளத்தின்  தன்முனைப்பு, துருதுருப்பு, மகிழ்ச்சி என அத்தனை துள்ளல்களையும் மெல்ல மெல்லத் தொலைக்க வைக்கும், உணவின் அதீத இனிப்பு. எல்லோரும் நினைப்பதுபோல இந்த நிகழ்வு சர்க்கரை நோயாய் மட்டுமல்ல, உளவியல் நோயாய், மெல்ல சத்தமில்லாது வளரும் புற்றாய், பலகீனமாய், காதலையும் காமத்தையும்கூட மறக்க வைக்கும் சங்கடமாய் வந்துசேரும்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 2

இனிப்பு ஆபத்தானதுதான். ஆனால், அவசியமானதும்கூட. சின்னதாகத் தும்மல் போட வேண்டுமென்றாலும், மூளையைச் செதுக்கி ஒரு காதல்கதை எழுத வேண்டும் என்றாலும் உடலுக்கும் மூளைக்கும் வேண்டிய ஆற்றலைத் தருவது இனிப்புதான். அந்த இனிப்பு, தும்பைப்பூவின் காம்புக்குழலுக்குள், தென்னை, பனை, கரும்பின் குருத்துக்குள் ஒளிந்திருந்து, நாம் அதைத் தேவைக்கு உறிஞ்சியவரை நாற்பதுகளுக்கு நலமாகத்தான் இருந்தது. குலாப் ஜாமூன் உருண்டைக்கு மேலே கன்ஃபெக்‌ஷனரி சுகர் எனும் நுண்ணிய சர்க்கரைத் துகள்களையும், சாக்லேட்டுக்குள் மக்காச்சோள இனிப்பையும் கொட்டியதில்தான், கணையம் பேய் முழி முழித்து மந்தமாகிப்போனது.

போதாக்குறைக்கு, சமீபமாக வெளிவந்த ஆய்வறிக்கைகள், சர்க்கரை நோய்க்கு இதுவரை சொல்லப்பட்ட இனிப்புக் காரணங்களைத் தாண்டி, காற்று மாசுபடுதலை முக்கியக் காரணமாகச் சொல்லியுள்ளன. அப்பா மரபு, அல்வா மரபு, மன அழுத்தம், செல்லத்தொப்பை... இவை மட்டுமல்ல, காற்றின் குப்பைகூட  சர்க்கரை நோய்க்குக் கணிசமான காரணம் என்கிறது இந்த ஆய்வு முடிவு. அது மட்டுமல்ல, விரல்களில் நடுக்கத்தையும், நடையில் பதற்றத்தையும், விழிகளில் நிலைக்குத்திய பயத்தையும் உருவாக்கும் நடுக்குவாதம் எனும் பார்க்கின்சோனிசம் முதல் பக்கவாதம் வரை காற்று மாசு காரணமாவதை உலக சுகாதார நிறுவன அறிக்கை உரக்கச் சொல்ல ஆரம்பித்து விட்டது. 70 வயதில் வந்த இந்த பார்க்கின்சோனிசம் இப்போது சிலருக்கு 40-ல் வந்திருப்பது வலி நிறைந்த கசப்பான உண்மை. என்ன காரணம்..? காற்றில் கலந்து நிற்கும் ஆபத்தான துகள்களின் (Suspended Particle) அலகு 40 முதல் 50 வரை இருக்கலாமாம். நம்மூரில் அது, 250-300 இருக்கிறதாம். அந்த மிதக்கும் துகள்கள் நம் ஒவ்வொரு சுவாசத்திலும் நுரையீரலிலும் மூளையிலும் ரத்தத்திலும் கணையத்திலும், விதைப்பை சினைப்பை என எல்லாவற்றுக்குள்ளும் போவதுதான் பேரிடரானதற்கான காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 2

இனித் தலைக்கவசம் தலைக்கு மட்டுமல்ல... நம் முகத்தையும் சேர்த்து மறைக்கிற மாதிரி போட்டால், கணையத்துக்கும் மூளைக்கும் நரம்புக்கும்கூடக் கவசம். நடுத்தர வர்க்கத்தின் 20-களில் தொடங்கும் இருசக்கர வாகனப் பயணம், அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தினசரி அத்தியாவசியமாகிறது. கணினிப் பையோ, காதலியோ முதுகில் இனிதாய் இடிக்க இடிக்கத் தொடங்கும் இந்த ஓட்டம், “இதுக்குமேலே நகர்ந்து நான் உட்காரணும்னா பெட்ரோல் டேங்கில உக்காந்துதான் ஓட்டணும்... எடையைக் குறையேன்” எனத் திட்டிக்கொண்டே 40-களில் பயணம் செய்யும் ஆண்களுக்குக் காற்று மாசுபடுதல் காரணமாகவோ, வாழ்வியல் மாசுபடுதல் காரணமாகவோ இனிப்பு சத்தமில்லாமல் ரத்தத்தில் ஏறத்தொடங்குகிறது.

நாற்பதுகளில் இனிப்பு வாராதிருக்க, பத்து வயதிலிருந்தே பராமரிப்பு அவசியமாகும் தருணம் இது. இருபதிலிருந்தே இனிப்பு வாராதிருக்கக் கூடுதல் மெனக்கெடலைக் கொடுத்தாக வேண்டும். ஸ்கூல் விட்டு 3 மணிக்கு வந்த உடனே, முழுதாய் மூன்று மஃபின்களை விழுங்கும் நகர்ப்புறத்துக் குழந்தைகள் இன்று அதிகம். ‘ஏல, கோலிக்காவா, பம்பரமா... நீ எதல எடுத்துட்டு வாரே?’ என, என் ஊரில் அன்று என்னிடம் கேட்ட குழந்தைகளின் குழந்தைகள், ‘நீட் கோச்சிங் நீ எங்கல போறே, எனக்கு நாலு மணிக்கு பிட் ஜீ கிளாஸ் சமாதானபுரத்துல’ என அவங்க மக்காக்களிடம் பேசுவதை நெல்லைக்குப் போகும்போதெல்லாம் கேட்கிறேன். இந்த மஃபின் மன்னர்களும், கோச்சிங் கோழிகளும் நாளைய மருத்துவரா,  ஐ.ஐ.டி-யன்களா... எனக்குத் தெரியாது. ஆனால், சொச்சம் பேர் இனிப்பு நோயாளிகள். மிச்சம் பேர் மன நோயாளிகளாகும் வாய்ப்பு மிக அதிகம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 2

‘இனிப்பு உடலை வளர்க்கும்’ எனச் சித்த மருத்துவ சூத்திரம் சொன்ன காலத்தில் கணையம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், சொன்ன விஷயங்கள் பல, இன்றைய சர்க்கரை நோயின் பின்னூட்டமாக வரும் நோய்களெனச் சொன்ன அறிவியலோடு ஏராளம் ஒத்துப் போகின்றன. உடலின் குறுக்குவாட்டில் கிடக்கும் கணையம், சர்க்கரை நோயிலிருந்து நம்மைக் காக்கும் மிக முக்கிய உறுப்பு. ‘கணையத்தின் பணி, சாப்பிட்ட பலவற்றைச் ஜீரணிப்பதும், அதில் பிரியும் சர்க்கரையைச் சரியாக செல்லுக்குள் தள்ளி ஆற்றலை அளிப்பதும்தான்’ எனக் கண்டறிந்து நூறாண்டு சொச்சம்தான் ஆயிற்று.

இன்சுலின் கண்டறிந்து சரியாக நூறாண்டுகள் ஆகின்றன. பல மில்லியன் மக்களைக் காப்பாற்றிவரும் மருத்துவ  உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு அது. அது கண்டுபிடிக்கப்பட்ட கதையே  சுவாரஸ்யமானது. அறுவைசிகிச்சை மூலம் கணையம் நீக்கப்பட்ட நாய், நிறைய தாகமும் பசியுமெடுத்து, நிறைய சிறுநீர் கழித்து, பின் மெலிந்து, கடைசியாக இறந்ததையும்  கண்டறிந்த பின்தான் நவீனம் கணையத்துக்கும் சர்க்கரைக்குமான சம்பந்தத்தை அறிந்தது. உடனே, நாய், பன்றியின் கணையங்களை வெட்டிச் சேகரித்து அதன் சத்தைப் பிழிந்துதான் முதலில் இன்சுலினைத் தயாரித்தார்கள். இப்போது அப்படியில்லை. ‘ஈ -கோலை’ எனும் பாக்டீரியாவின்மூலம் எக்கச்சக்கமாக இன்சுலினைச் சுரக்கச்செய்து பயோரியாக்டரில் பிரித்து எடுக்கிறார்கள். இருக்கட்டும்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 2

நம் இளைய தலைமுறையின் கணையத்தை நாம் சத்தியமாய்க் காப்பாற்றியே ஆகவேண்டும். அத்தனை துரித உணவும், சொக்கவைக்கும் வெளிநாட்டு இனிப்பும் கணையத்தையே அதிகம் குறிவைக்கின்றன. பத்திலும் இருபதிலும் இதைப் புரிந்து, கவனமாக இல்லாதவரை நாற்பதில் அல்லது அதற்கு முன்னதாகவே சர்க்கரை குறிவைத்து விடுகிறது.

என்ன செய்யலாம்?

உணவிலிருந்தே தொடங்குவோம். இனி வரும் உணவு எப்படி இருக்க வேண்டும் என உலகின் பல குழுக்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளன. ‘EAT Lancet Global Commission’ எனும் அமைப்பு 2050-க்குள் உணவில் பெருமாற்றம் கொணர்ந்தாக வேண்டும் என 32 பக்க அறிக்கையைத் தற்போது சமர்ப்பித்துள்ளது. 16 நாடுகளைச் சேர்ந்த, 37 மருத்துவ, உணவியல் மற்றும் சூழலியல் அறிஞர்களின் மிக முக்கியக் கூட்டறிக்கை அது. நம் நாட்டில் கோக், பெப்சி மற்றும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக முதலில் அறிவியல் குரல் கொடுத்த, `டவுன் டு எர்த்’ நூலின் ஆசிரியரும் `சென்டர் ஃபார் சயின்ஸ் அண்டு என்விரான்மென்ட்’ அமைப்பின் தலைவருமான டாக்டர் சுனிதா நாராயண் அக்குழுவில் இருக்கிறார்.
 
அந்த அறிக்கையின் சாராம்சம் இதுதான். ‘உன்னையும் காப்பாற்ற வேண்டும்; இந்த உலகையும் காப்பாற்ற வேண்டும். இரண்டுக்குமான கொள்கையை ஒவ்வொரு நாடும் முன்னெடுக்க வராவிட்டால், ஐ.நா சபை (United Nations sustainable development goals) ஒப்பந்தம், பாரிஸ் ஒப்பந்தம் இரண்டையும் சத்தியமாக நிறைவேற்ற முடியாது’ என்கிறது அந்த அறிக்கை. ‘தட்டில் இனி அதிகம் தாவர உணவுகளும் குறைவான மீன் புலால் புரதமும் பரிமாறப்படவேண்டும்’ என்று வலியுறுத்துகிறது அந்த அறிக்கை. ‘நேர் சர்க்கரை தரும் தானியங்கள், சிவப்புப் புலால் எனும் இறைச்சி குறைக்கப்பட வேண்டும். உலகின்  எல்லாப் பகுதிக்கும் பொதுப்படையான உணவு தவறானது. வாழும் நிலம், உழைப்பு, மரபு, தட்பவெப்பம் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் கவனப்படுத்தப்படுகிறது. பல விஷயங்கள் அதில் முக்கியமானதாகப் பட்டாலும்  “இந்த அறிக்கை, சரியாக ஆராயப்படாமல் வந்திருக்கிறது. ‘வேகனிசம்’ எனும் பாலில்லா மரக்கறி உணவையும் ‘வெஜிடேரியனிசம்’ எனும் முழு மரக்கறி உணவையும் முன்னிறுத்துகிறது. மீனைத் தவிர பிற இறைச்சிப் புரதங்களின் பயனை இவர்கள் ஏன் பெரிதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?” என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. எப்படியாகினும் ‘EAT - lancet’ அறிக்கை, இனி ஒட்டுமொத்த நாடுகளின் உணவுக்கொள்கையில் பெரும் தாக்கத்தைத் தரப்போகிறது.

இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 2


அந்தத் தாக்கம் வரும்போது வரட்டும். நாம் சில தாக்கத்தை இப்போதைக்கு ஏற்படுத்தலாம். உணவுப்பரிமாறலில், தட்டு கரண்டிப் பயன்பாட்டில் தடாலடியாகச் சில மாற்றங்களைக் கொண்டுவந்தே ஆகவேண்டியுள்ளது. சின்ன சைஸ் திருநெல்வேலிச் சொளவு(முறம்) போல இருக்கும்  ‘அன்னக்கரண்டி’யில் இனி யாருக்கும் சோறு பரிமாறாதீர்கள். சோற்றுக் கரண்டி டேபிள் ஸ்பூனாக மாறட்டும். ஸ்பூனில் துளி துளியாகச் சோற்றைப் பரிமாறிக் களைத்தோ, அதனால் கைக்கு வரும் வலியாலோகூட சோற்றின் அளவு குறையும். முட்டைகோஸ் பீன்ஸ் பொரியலில் சாம்பார் ஊற்றிப் பிசைந்து, தூய மல்லிசம்பாச் சோற்றைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். முளைக்கட்டிய  பாசிப்பயறு சுண்டலுக்கு, அயிரைமீன் குழம்பினை அளவாய் ஊற்றிச் சாப்பிடலாம்.

ஆம்! இனி இப்படிப் பரிமாறிப்பாருங்கள். 25 வயசுக்கு மேல் இப்படித்தான் பரிமாற வேண்டும். சோறு சிறிய கிண்ணத்திலும் கீரைகளும் காய்களும் அளவுச்சாப்பாடு எடுத்துவரும் குழித்தட்டிலும் இனி இருக்கவேண்டும். பிடிக்காத காயைச் சீண்டாத சேட்டைக்காரப் பிள்ளை மாதிரி சோற்றைச் சீண்டாமல், காய்கறியை மட்டும் சாப்பிட்டு எழுந்தால்கூட, நீர் சமர்த்துதான். `அப்படியென்றால், சர்க்கரைச் சத்துக்கு?’ என அவசரமாய்க் கேட்க வேண்டாம். அத்தனை காய்கறிகளிலும் கணிசமாகச் சர்க்கரை உள்ளது. நாரோடு நாராக இருக்கும் அந்தச் சர்க்கரை மெல்ல மெல்ல ரத்தத்தில் சேரும்; ஆற்றல் தரும்.

இன்னும் என்னென்ன சாப்பிடலாம்... என்னென்ன பழங்கள் எனக்கானவை... நடை... உடை... அனைத்தையும் அடுத்தடுத்து பேசுவோம்.

- இனியவை தொடரும்...


கு.சிவராமன், ஓவியம்: சந்தோஷ் நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism