Published:Updated:

`ஊசி போடும் சிரெஞ்சில் குழந்தைகளுக்கான மிட்டாய்' - கொள்ளிடத்தில் பரபரப்பு!

`ஊசி போடும் சிரெஞ்சில் குழந்தைகளுக்கான மிட்டாய்' - கொள்ளிடத்தில் பரபரப்பு!
`ஊசி போடும் சிரெஞ்சில் குழந்தைகளுக்கான மிட்டாய்' - கொள்ளிடத்தில் பரபரப்பு!

நாகை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் உள்ள சில கடைகளில், மருத்துவர்கள் ஊசி போட பயன்படுத்தும் சிரெஞ்சில் குழந்தைகளுக்கான மிட்டாய் விற்பனை செய்யப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளிடம், ஆச்சாள்புரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் ஊசி போட பயன்படுத்தப்படும் சிரெஞ்ச் போன்ற அமைப்பில் இனிப்பு திரவம் நிரப்பப்பட்டு அதன் நுனி ஒரு சிறிய குப்பியால் மூடப்பட்டு ஒரு மிட்டாய் ரூபாய் 5 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதை அப்பகுதியில் உள்ள குழந்தைகளும், பள்ளி மாணவர்களும் ஆர்வமுடன் வாங்கிச்  சுவைத்து சாப்பிட்டு வருகின்றனர். கொள்ளிடம் பகுதியில் உள்ள சில கடைகளில் மட்டுமே இது போன்ற மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறது.

இதைக் கண்ட சில பெற்றோர்களிடையே, இந்த இனிப்பு திரவம் அடைக்கப்படும் சிரெஞ்ச் மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட சிரெஞ்ச் ஆக இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த இனிப்பு திரவத்தில் ஏதாவது நோய்க் கிருமிகள் தொற்று இருக்குமோ அல்லது ஏதேனும் தீய நோக்கத்தில் குழந்தைகளிடையே இது விற்பனை செய்யப்படுகிறதா? என்ற அச்சங்கள் ஏற்படவே இதைப் பற்றி ஆய்வு செய்யக்கோரி இவ்வூர் மக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

மக்களிடமிருந்து புகார் வந்ததை அடுத்துச் சம்பந்தப்பட்ட கடைகளுக்குச் சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் அங்கு ஆய்வு நடத்தினார். அவரிடம் இந்த சம்பவம் குறித்துக் கேட்டபோது, ``எங்களுக்குப் பொதுமக்களிடமிருந்து குழந்தைகள் சாப்பிடும் இந்த மிட்டாய் பற்றி புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மக்களால் குற்றஞ்சாட்டப்பட்ட மிட்டாய் விற்கும் கடைக்குச் சென்று ஆய்வு நடத்தினோம். அதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சிரெஞ்ச் போன்ற வடிவத்தில் சர்க்கரை கலந்த இனிப்பு நீர் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. அவற்றில் இறக்குமதியாளரின் முகவரி இருந்தாலும் உணவு பாதுகாப்பு துறையின் உரிம எண் இல்லாததால் அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிய இயலவில்லை.  அதேபோல தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள், பேட்ஜ் எண்கள் எதுவும் இல்லாததால் அவற்றைக் கைப்பற்றியுள்ளோம்.

மேலும், இந்த வகை உணவுகள் யாரிடமிருந்து வாங்கப்பட்டது என்கிற விவரத்தைக் கேட்டறிந்து அந்த மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்துக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. அவர்கள் அந்த மொத்த விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். தயாரிப்பு விவரம் முழுமையாக இல்லாத உணவுப்பொருள்களை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது. அதிலும் குழந்தைகள் உண்ணும் உணவுப் பொருள்களை தரம் பார்த்து வாங்கி விற்பனை செய்ய வேண்டும். தவறினால் உரிமம் ரத்து செய்யப்படும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற உணவுப் பொருள்களைக் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் வாங்கி உண்ணும்போது இதைப் பெற்றோர் கவனிக்க வேண்டும். மேலும் பள்ளிக் குழந்தைகளிடையே இது போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருள்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சார்ந்துள்ளது" என்றார்.