Published:Updated:

``ஜாக்கி சான், கேழ்வரகு, நாட்டுக்கோழி முட்டை, டாப் 3 ஹீரோஸ்..!'' - ஸ்டன்ட் சில்வாவின் சீக்ரெட்ஸ்

``ஜாக்கி சான், கேழ்வரகு, நாட்டுக்கோழி முட்டை, டாப் 3 ஹீரோஸ்..!'' - ஸ்டன்ட் சில்வாவின் சீக்ரெட்ஸ்
``ஜாக்கி சான், கேழ்வரகு, நாட்டுக்கோழி முட்டை, டாப் 3 ஹீரோஸ்..!'' - ஸ்டன்ட் சில்வாவின் சீக்ரெட்ஸ்

"நேரம் இல்ல, நேரம் இல்லைன்னு பொய் சொல்லாம, எல்லோரும் தினமும் கண்டிப்பா வொர்க் - அவுட் பண்ணுங்க. எவ்வளவு வேலை இருந்தாலும் நம் உடம்புக்கும், மனசுக்கும் ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்க.''

ந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவரான ராஜமெளலியால் 'எமதொங்கா' படத்தில் வாய்ப்பளிக்கப்பட்டு, மற்றொரு பிரமாண்ட இயக்குநரான ஷங்கரால் 'சும்மா சுத்தி சுத்தி அடிக்கிறீயப்பா' என புகழாரம் சூட்டப்பட்டவர் மாஸ்டர் ஸ்டன்ட் சில்வா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தில் தொடங்கி அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் படங்களிலும் சண்டை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகர்கள் தங்களின் எதிரிகளைப் பந்தாட துணை நின்றவர். ஸ்டன்ட் மட்டுமல்லாது தன் நடிப்புத் திறனையும் ஒரு சில படங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.

நேரம் காலமில்லாமல் பறந்து பறந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பவரிடம், இவ்வளவு எனர்ஜிக்கும் என்ன காரணம் எனக் கேட்க, கூலாக தனது ஃபிட்னெஸ் ரகசியங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்,

''எனக்கு இப்ப மட்டுமில்ல, எப்பவுமே ஜிம்முக்குப் போய் வொர்க்-அவுட் பண்ற பழக்கம்லாம் கிடையாது. இந்த ஃபீல்டுல வொர்க் பண்றதால இல்ல, பொதுவாவே உடம்ப ரொம்ப ஃபிட்டா வைச்சுக்கணும்னு நினைப்பேன். காலையில தூங்கி எழுந்ததும் பிரஷ் பண்றோம், குளிக்கிறோம், சாப்பிடுறோம் அதுமாதிரிதான் வொர்க் அவுட்டும். இதுவும் நம் அன்றாடக் கடமைதான். அதை செய்யவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. 

ஸ்டன்ட் யூனியன்ல சேர்றதுக்கு முன்னாடி, நிறைய நேரம் கிடைக்கும், அதனால, காலையில தினமும் பத்துப் பதினைஞ்சு கி.மீட்டராவது ஓடுவேன். அப்போ நான் தங்கியிருந்த சாலிகிராமத்துல இருந்து போரூர் ரவுண்டானா, கிண்டி ரவுண்டானா வரைக்கும் போய்த் திரும்புவேன். அதுபோக, வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரம் ப்ளோர் வார்ம்-அப், எக்சர்சைஸ்ஸும் செய்வேன். 

பொதுவா கராத்தே குங்க்பூ தெரிஞ்சாலே ஸ்ட்ண்ட் மாஸ்டரா ஆயிடலாம்னு ஒருசிலர் தப்பா நினைக்கிறாங்க. அது பத்தாது. சினிமாவுக்கான பயிற்சிகள் நாம எடுத்துக்கணும். ஏன்னா இது நிஜ சண்டை இல்ல. சண்டை போடுற மாதிரி நடிக்கிறது. மத்தவங்க அடிக்கும்போது, எப்படி விழணும், அடிபடாம எப்படி அடிக்கணும், அடிவாங்குற மாதிரி எப்படி நடிக்கணும்னு சினிமா ஸ்டன்டுக்கான பயிற்சிகள் கத்துக்கணும். நான் யூனியன்ல சேர்ந்த அப்புறம்தான் இதெல்லாம் கத்துக்கிட்டேன். அதுதான் அடிப்படை. 

ஸ்டன்ட்ல மட்டும் இல்ல எந்தவொரு விஷயத்துலயும் தொடர்ச்சியான பயிற்சி இருந்தாதான் எக்ஸ்பெர்ட் ஆக முடியும். நான் அந்தப் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக இப்பவரை செஞ்சிட்டு இருக்கேன். அதனாலதான் என்னால ஸ்பீடா, டெக்னிக்கலா வொர்க் பண்ண முடியுதுண்ணு நம்புறேன். பலர் பாதியோட கைவிட்றதாலதான் வெயிட் போடுறது, ஒடம்பு வலிக்கிறது போன்ற பிரச்னைகள்ல மாட்டிக்கிறாங்க. 

அப்ப கிடைச்ச அளவு இப்ப டைம் கிடைக்கிறது இல்ல. அதனால, அதிகபட்சம் மூணு, நாலு கி.மீட்டர் ஓடுறேன். அதுவும் வெளியில இல்ல. கிரவுண்ட்ல, மொட்டை மாடியிலதான். ஷூட்டிங்குக்காக வெளியில போறப்ப, கிடைக்கிற நேரத்துக்கு ஏற்ற மாதிரி ஓடுவேன். ஓடுறதுக்கு ஏற்ற இடம் கிடைக்கலைன்னா ரூமுக்குள்ளயாவது ஓடிடுவேன். ப்ளோர் எக்சர்சைஸ் கண்டிப்பா செஞ்சிடுவேன். அது தவிர பீச்ல போய் ஜிம்னாஸ்டிக் பிராக்டீஸ் செய்வேன். மண்ணுல பண்ணும்போது நமக்கு அடிபடாது, ஆரம்பத்துல என்னை யாருக்கும் தெரியாது அதனால பிரச்னை இல்லை. இப்ப அப்படி இல்ல, மக்கள் ஈசியா கண்டுபிடிச்சுடுறாங்க. அதனால விடியற்காலை 4.30 மணிக்கே போய் 6 மணிக்குள்ள திரும்ப வேண்டியிருக்கு.

சாப்பாட்டைப் பொருத்தவரை, எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது. இட்லி, பொங்கல், தோசை, கேழ்வரகுக் கஞ்சி, கோதுமைக் கஞ்சி இப்படி என்ன கிடைச்சாலும் சாப்பிடுவேன். பீட்ஸா, பர்கர், ஜங் ஃபுட் போன்ற நம் மண்ணுக்குச் சம்பந்தமில்லாததை சாப்பிட மாட்டேன். அதேபோல, பாக்கெட் பால் குடிக்க மாட்டேன். நாட்டுப்பால்தான். நாட்டுக்கோழி முட்டை விரும்பிச்  சாப்பிடுவேன். 

எனக்குத் திருப்தி கிடைக்கிற அளவுக்குச் சாப்பிடுவேன். அதுக்கு ஏற்றமாதிரி வொர்க்-அவுட்டும் பண்ணிடுவேன். அடிபட்டு ஏதாவது காயம் ஏற்பட்டா முறையான ஓய்வு எடுத்துக்குவேன். தேவை இல்லாம ஸ்ட்ரெயின் பண்ணிக்க மாட்டேன். 

ஜிம்முக்குப் போய்தான் வொர்க் அவுட் செய்யணும்னு அவசியம் இல்ல. ப்ளோர் எக்சர்சைஸ் செஞ்சாலே போதும். ஜாக்கிசான்லாம் ப்ளோர் எக்சர்சைஸ் ஸ்பெஷலிஸ்ட்தான். சும்மா சுத்தி சுத்தி அடிக்கலையா. அவரோட பழைய படங்கள்ல அவர் செய்யுற ப்ளோர் வொர்க்-அவுட் எல்லாமே நான் பிராக்டீஸ் செஞ்சிருக்கேன். அவர்தான் என்னோட 'ரோல்மாடல்'. 

நேரம் இல்ல, நேரம் இல்லைன்னு பொய் சொல்லாம, எல்லோரும் தினமும் கண்டிப்பா வொர்க் - அவுட் பண்ணுங்க. எவ்வளவு வேலை இருந்தாலும் நம் உடம்புக்கும், மனசுக்கும் ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்க.'' என்றவரிடம்  உடம்புக்கு வொர்க் அவுட் ஓகே மனசுக்கு என்ன மாஸ்டர் பண்ணுவீங்க எனக் கேட்க, 

''கண்ணை மூடி பேசாம உட்கார்ந்திருப்பேன். நீங்களும் அதையே ஃபாலோ பண்ணலாம்'' என்கிறார் அதிரடி நாயகன் ஸ்டன்ட் சில்வா. 

அடுத்த கட்டுரைக்கு