Published:Updated:

``வயலில் கால்பந்து பயிற்சி எடுத்து, தங்கம் வென்றோம்!'' மன்னார்குடி அரசுப் பள்ளி மாணவிகள்

குணநிலா தி

"பள்ளி மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தைப் பார்த்துட்டு, எங்க ஊர் மக்கள் வயலுக்கு நடுவில் கொஞ்சம் இடத்தைக் கொடுத்து, அதை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்திக்கச் சொன்னாங்க. நாங்களும் அங்கதான் பயிற்சி செய்வோம். இந்த வாய்க்காலைத் தாண்டிதான் மைதானத்துக்குப் போகணும். மழைக்காலத்தில் சேரும் சகதியாயிடும். அதனால அப்ப பயிற்சி செய்ய முடியாது."

``வயலில் கால்பந்து பயிற்சி எடுத்து, தங்கம் வென்றோம்!'' மன்னார்குடி அரசுப் பள்ளி மாணவிகள்
``வயலில் கால்பந்து பயிற்சி எடுத்து, தங்கம் வென்றோம்!'' மன்னார்குடி அரசுப் பள்ளி மாணவிகள்

"நெல் அறுவடை முடிஞ்சதும்தான் நாங்க முழுமையா கால்பந்து பயிற்சி எடுக்க முடியும்" என்றனர் பிரியதர்ஷினியும் காவ்யாவும். வயலில் அறுவடை முடிவதற்கும், கால்பந்து விளையாட்டுக்குப் பயிற்சி எடுப்பதற்கும் என்ன தொடர்பு என்ற குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தேன். மன்னார்குடி சவளக்காரன் அரசு ஆதிதிராவிட நல மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள். தேசிய அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் தமிழகத்தின் சார்பில் விளையாடி, தங்கப்பதக்கத்தை வென்று வந்துள்ளனர். இருவரையும் பயிற்சிக்கு நடுவிலே சாதனை தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தனர்.

"நாங்க ரெண்டு பேருமே ப்ளஸ் டூ படிக்கிறோம். ரெண்டு குடும்பமும் விவசாய வேலைதான். எங்களை ஒண்ணு சேர்த்தது கால்பந்து விளையாட்டுதான். சின்ன வயசிலிருந்தே எங்களுக்கு கால்பந்து விளையாடறதுன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா, எங்க கிராமத்தில யாருக்குமே கால்பந்து பத்தி அதிகமா தெரியாது. நாங்க விளையாட போறோம்னு சொன்னப்பக்கூட, எங்கள கேலிதான் செஞ்சாங்க. 'கிராமத்து பொம்பள புள்ளைங்களுக்கு கால்பந்து மேல ஆசை வந்துருச்சு. அதெல்லாம் நடக்காத விஷயம்'னு எல்லாரும் சொன்னாங்க. எங்க குடும்பத்திலேயும் முதல்ல நாங்க சொன்னப்ப விளையாட்டு எல்லாம் வேணாம்னு மறுத்துட்டாங்க. எங்களுக்கும் என்ன செய்யறதுன்னே புரியல. ஆனா, எங்க திறமையை முழுசா நம்பினவர் எங்க பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் சார்தான்.

அவர் கால்பந்து விளையாட்டு வீரர் என்பதால, எங்க ஆர்வத்தைப் புரிஞ்சிகிட்டார். கால்பந்து விளையாட்டை முறையாக ஒரு விஷயமும் விடாம கத்துக்கொடுத்தார். நாங்களும் முழு ஈடுபாட்டோடு கத்துக்கிட்டோம். எங்களுக்குப் பெரிய சவாலா இருந்த விஷயமே மைதானம்தான். ஆமாம், எங்க பள்ளிக்கு எனத் தனியா விளையாட்டு மைதானமே கிடையாது. பள்ளி மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தைப் பார்த்துட்டு, எங்க ஊர் மக்கள் வயலுக்கு நடுவில் கொஞ்சம் இடத்தைக் கொடுத்து, அதை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்திக்கச் சொன்னாங்க. நாங்களும் அங்கதான் பயிற்சி செய்வோம். இந்த வாய்க்காலைத் தாண்டிதான் மைதானத்துக்குப் போகணும். மழைக்காலத்தில் சேரும் சகதியாயிடும். அதனால அப்ப பயிற்சி செய்ய முடியாது.

ஆரம்பத்துல கேலி செஞ்ச ஊர்க்காரங்கக்கூட, நாங்க பயிற்சி எடுக்கிறதைப் பார்த்துட்டு எங்க மீது நம்பிக்கை வெச்சாங்க. பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஒத்துழைப்பு, நாங்க கால்பந்து விளையாட்டுல ஏதாவது சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வரவழைச்சுது. மாவட்ட அளவில் வெற்றிகள் பெற்றோம். மாநில அளவு போட்டிகள்ல கலந்துக்கிறதும், வெற்றிப்பெறதும் பெரும் சவாலா இருந்துச்சு. ஆனாலும் முத்துக்குமார் சார், 'விடா முயற்சிக்கு எப்போதுமே தோல்வி கிடையாது' என்று எப்பவுமே நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லிட்டே இருப்பார். அதுதான் எங்கள சோர்வடையாம வெச்சுது. நாங்க என்ன ஜெயிச்சோங்கிறதை எங்க சாரே சொன்னா நல்லா இருக்கும்" என்று தன்னடக்கத்துடன் கூறினர். 

பிரியதர்ஷினி, காவ்யா ஆகியோரின் வெற்றிப் பயணத்தை வழிநடத்தும் ஆசிரியர் முத்துக்குமாரிடம் பேசினேன். "நான் இந்தப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராகத்தான் பணிபுரிகிறேன். இந்தப் பள்ளிக்கு மைதானம் கிடையாது என்றாலும், மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை விட்டுவிடக்கூடாது என்பதால் என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்துவருகிறேன். அதன் விளைவுதான் இப்போது, திருவாரூர் மாவட்டத்தில் கால்பந்து என்றாலே எங்கள் பள்ளியைச் சொல்லும் அளவுக்கு மாற்றியிருக்கிறோம்.  மாநில அளவில் திருவாரூருக்காக அதிக அளவில் பங்கேற்கு பள்ளியாகவும் இது இருக்கிறது. சென்ற ஆண்டு, மாநில அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் திருவாரூர் மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்தது. தனியார் பள்ளிகளில் தனிப் பயிற்சி அளிக்கப்படும் சூழல் இருந்தும் அரசுப் பள்ளி வென்றது பலருக்கும் ஆச்சர்யம்தான். இந்தப் பெயர் வாங்குவதற்கு பிரியதர்ஷினி, காவ்யாவின் பங்கு முக்கியமானது.

இருவருக்கும் பயிற்சி எடுக்கும்போது அணிந்துகொள்ள ஷீ, டி சர்ட் போன்ற எதுவும் இருக்காது. பள்ளி சீருடையில்தான் எப்போதும் விளையாடுவார்கள். கிடைக்கும் பரிசுத் தொகையில்தான் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்வார்கள். ஆனால், தனக்குப் பிடித்த ஒன்றில் முழு முயற்சி வைத்தால், இவை போன்றவற்றால் வெற்றியைத் தடுக்க முடியாது என்பதே உண்மை. அதற்குச் சரியான உதாரணம்தான் இந்த இருவரும். கோவாவில் நடந்த தேசிய கால்பந்து போட்டியில், தமிழக கால்பந்து அணி சார்பாக, காவ்யாவும் பிரியதர்ஷினியும் இடம்பெற்றனர். இவர்களின் அட்டகாசமான ஆட்டத்திறனால் அந்தப் போட்டியில் தங்கம் வென்றது. அந்த நாள் அரசுப் பள்ளியில் படிக்கும் / படித்த ஒவ்வொருவரும் பெருமையாக உணர வேண்டிய தினம். நாங்கள் பெருமையுடன் இருவரையும் வரவேற்றோம். வறுமையை மீறி, அடிப்படைத் தேவைகள் இல்லாது போனாலும் இந்த மாபெரும் வெற்றியை இவர்கள் பெற்றிருக்கின்றனர். எங்கள் பள்ளி மட்டுமல்ல, இந்த ஊர் மக்களின் பெரும் எதிர்பார்ப்பே இவர்கள் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற வேண்டும் என்பதுதான். அதுவும் பலரின் ஒத்துழைப்போடு நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றவரின் குரலில் பெருமையும் நம்பிக்கையும் வழிந்தன. 

திறமையும் ஆர்வமும் விடா முயற்சியும் இணைந்தால் தடையாக எதுவும் வர முடியாது என்பதை உணர்த்தும் பிரியதர்ஷினிக்கும், காவ்யாவுக்கும் வாழ்த்துகள்.