Published:Updated:

உடலை மட்டுமல்ல உறவையும் வலுப்படுத்தும் ஜோடி ஃபிட்னஸ்!

பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளும் தம்பதியரின் உறவு மேலும் பலப்படும். நல்ல ஜோடி எனப் பலரும் பாராட்டும்போது அது பாசிட்டிவிட்டியை உங்களுக்கு அதிகரிக்கும். ஜோடி ஃபிட்னஸ் உடற்பயிற்சியின்போது ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டுமென்பதால், அந்த பழக்கம் வீட்டு வேலைகளையும் பகிர்ந்து கொள்ளும் பக்குவத்தை உருவாக்கும். 

உடலை மட்டுமல்ல உறவையும் வலுப்படுத்தும் ஜோடி ஃபிட்னஸ்!
உடலை மட்டுமல்ல உறவையும் வலுப்படுத்தும் ஜோடி ஃபிட்னஸ்!

ணவனும் மனைவியும் கைகோத்துச் செல்ல, இன்றும்கூட மனத்தடை இருக்கிறது. ஆனால், இந்த ஜெனரேஷன் ஜோடிகள் அதை உடைக்கிறார்கள். வீட்டோடு முடிந்துவிடும் நல்லுறவுக்கான அன்யோன்யத்தை, பொது இடங்களுக்கு எடுத்துச் செல்ல துணிந்திருக்கின்றனர். மனைவி என்பவள் பொது இடங்களில் ஒதுங்கி நிற்கவேண்டியவள் என்ற சூழலை அது மாற்றுகிறது.

ஜோடியாக கடற்கரைக்குச் செல்வது, ஜோடியாக சினிமாவுக்குச் செல்வது, ஜோடியாக வேலைக்குச் செல்வது, ஜோடியாக ஷாப்பிங் செல்வது எனப் படிப்படியாக  முன்னேறி, ஜோடியாக ஜிம்முக்குச் செல்லும் போக்கு இன்று அதிகரித்துக் காணப்படுகிறது. சமீபகாலமாக உடற்பயிற்சி நிலையங்களில் `ஜோடி ஃபிட்னஸ்’ பயிற்சிக்கு செம வரவேற்பு!

ஜோடி ஃபிட்னஸில் இருக்கும் முக்கியமான கான்செப்ட், இருவரும் ஒருவருக்கு ஒருவர் அரவணைத்து, உதவி செய்து, ஒற்றுமையாய் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்பதுதான். ஒற்றுமை, உதவும் மனப்பான்மை, அரவணைத்தல் ஆகிய அனைத்தும் இல்லற வாழ்க்கைக்கு அடிப்படையான விஷயங்கள். உடற்பயிற்சியில் அவற்றைக் கற்கும்போது, அது வீடுகளிலும் பிரதிபலிக்கும்.

ஸ்பெஷல் ஒர்க்அவுட்!

வழக்கமானதைவிட வித்தியாசமான ஒர்க்அவுட்களையே ஜோடிகள் விரும்புகின்றனர் என்பதால் புதிய உடற்பயிற்சி முறைகள் அறிமுகமாகியுள்ளன. ஜோடி உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, பார்ட்னர் ஹீல் டேப், ஸ்குவாட் ஜம்ப், டிரைசெப்ஸ் கிக்பேக், பார்ட்னர் பிரஸ் அண்ட் ரோ, வீல்பாரோ புஷ் மற்றும் ரீச் அண்ட் டச் பிளாங்க் என இருவரும் இணைந்து செய்யும் வகையில் பல உடற்பயிற்சி முறைகள் இருக்கின்றன.

அதேபோல ப்ரீனெமி பார்ட்னர் ஒர்க்அவுட், குபிட் கிராஸ்பிட் ஒர்க்அவுட், பார்ட்னர் டிரேக் ஒர்க்அவுட், பார்ட்னர் பால் ஒர்க்அவுட் என, வித்தியாசமான பல ஒர்க்அவுட் முறைகளும் ஜோடி ஃபிட்னஸ் கான்செப்ட்டில் இருக்கின்றன. இவற்றின் சிறப்பு என்னவென்றால், அவை துணையுடன் செய்வதற்கு ஏற்றவை.

ஒவ்வொரு உடற்பயிற்சி முறைக்கும் வெவ்வேறு பலன்கள் இருக்கின்றன. மனைவியின் இடுப்புச் சுற்றளவைக் குறைக்க நினைக்கும் ஆண்கள், கணவரின் தொப்பையைக் குறைக்க விரும்பும் பெண்கள் என இருவரும் அவரவருக்கான உடற்பயிற்சி முறைகளைத் தேர்வுசெய்து ஜோடியாய்ச் செய்யலாம். 

தனியாகச் செய்யப்படும் உடற்பயிற்சி, நாளடைவில் அலுப்பை உண்டாக்கிவிடும். இதனால் பலரும் உடற்பயிற்சியை சில வாரங்களிலேயே கைவிடுகின்றனர். ஜோடியாகச் செய்யும்போது ஒரு கம்பானியன்ஷிப் உண்டாகிறது. ஒருவர் சோர்வடையும்போது மற்றவர் ஊக்கப்படுத்த அது அலுப்பை நீக்குகிறது. அதுமட்டுமல்ல, யார் நன்றாக ஒர்க்அவுட் செய்கிறார் என்பதில் உற்சாகமான ஒரு போட்டியும் உருவாகிறது. இதனால் குறுகிய காலத்திலேயே உடலில் எதிர்பார்க்கும் ஃபிட்னஸை எட்டமுடிகிறது. மேலும், மனநலமும் கூடுகிறது என்கின்றனர் பயிற்சியாளர்கள்.

உடலை மட்டுமல்ல, உறவையும் வலுப்படுத்தும்!

``ஜோடி ஃபிட்னஸ் டிரெயினிங்கின் ப்ளஸ் பாயின்ட், அது உடலை மட்டுமல்ல, உறவையும் வலுப்படுத்துகிறது என்பதே. தனியாக உடற்பயிற்சிகளைச் செய்வதைவிட, கணவன் - மனைவியாக, காதலன் - காதலியாக இணைந்து, ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொடுத்து பயிற்சி செய்வதால், உடனடி ரிசல்ட் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடினமான உடற்பயிற்சிகளைக்கூட எளிதாகவும், ஆனந்தமாகவும், சோர்வின்றியும் அவர்களால் செய்ய முடியும். இதனாலேயே நம் மக்களுக்கும் இது பிடித்திருக்கிறது. சென்னை, கோவை போன்ற மெட்ரோ சிட்டிகளில் கணவன் - மனைவி இருவருமாகச் சேர்ந்தே ஜிம்முக்குச் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். இங்கு அவர்களுக்கான பிரத்யேக ஜிம்கள் இல்லை என்றாலும், வழக்கமான ஜிம்களிலேயே ஜோடி ஃபிட்னஸ் முறைகளை நாங்கள் சொல்லித்தருகிறோம்" என்றார் சென்னையில் உள்ள ஃபிட்னஸ் இன்ஸ்ட்ரக்டர் கார்த்திக் ரேண்டி.

அன்யோன்யம் வளரும்

ஜோடியாக உடற்பயிற்சி செய்யும்போது சில நேரம் ஒருவருக்கொருவர் உதவும் வகையில் உடற்பயிற்சிகளைச் செய்ய நேரிடும். பொதுவாக, இந்தியத் தம்பதியர் தமது நெருக்கத்தைப் பொதுவெளியில் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. இது கணவன்-மனைவிக்கு இடையில் ஓர் இடைவெளியை நிரந்தரமாக உருவாக்கிவைப்பதாக ரிலேஷன்ஷிப் கவுன்சிலர்கள் குறிப்பிடுகின்றனர். பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளும் தம்பதியரின் உறவு, மேலும் பலப்படும். `நல்ல ஜோடி' எனப் பலரும் பாராட்டும்போது அது பாசிட்டிவிட்டியை உங்களுக்கு அதிகரிக்கும். உடற்பயிற்சியின்போது ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும் என்பதால், அந்தப் பழக்கம் வீட்டு வேலைகளையும் பகிர்ந்துகொள்ளும் பக்குவத்தை உருவாக்கும். 

ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக்கொள்வதால் கலோரிகள் எரிக்கப்படுவது நாம் அறிந்த செய்திதான்! ஜோடியாக உடற்பயிற்சி செய்யும்போது முத்தங்களைப் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் வெளிநாடுகளில் இருக்கிறது. இது அவர்களின் உடற்பயிற்சிக்கு தனி உத்வேகத்தை அளிப்பதாகவும், மிகவும் சுறுசுறுப்பாக உடற்பயிற்சிகளைச் செய்ய உதவுவதாகவும் அவர்கள் கருதுகின்றனர். அதனால், வீட்டுக்குள் ஒர்க்அவுட் செய்யும்போது தம்பதியர் முயன்றுபார்க்கலாம். 

50 கிலோ தாஜ்மகால் எனக்கே... எனக்கா!

`வெயிட்’ எக்ஸர்சைஸ் பண்ண நினைக்கும் ஆண்களுக்கு, மனைவிதான் வெயிட் என்பது குதூகலமான செய்தி. பார்ட்னர் தன்னைத் தூக்கிக்கொண்டு உடற்பயிற்சிகள் செய்வதை, பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்பது கிசுகிசு. இந்த உடற்பயிற்சிகள் செய்யும்போது இருவருக்கும் இடையே கெமிஸ்டரி கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெயிட் தெரியாது. அதிக வெயிட் தூக்கி உடற்பயிற்சி செய்யும்போது சீக்கிரமே சோர்வு ஏற்பட்டுவிடும். ஆனால், உங்கள் அன்புக்குரியவரே `வெயிட்’டாக மாறுவதால், `கையில் மிதக்கும் கனவா நீ... கைகால் முளைத்த காற்றா நீ!' எனப் பாடுவீர்கள்.

பிளஸ் பாயின்ட்ஸ்

* கணவன்-மனைவிக்குமான குவாலிட்டி டைம் கிடைப்பது அரிதான விஷயமாக இருக்கும்போது, ஜோடி ஃபிட்னஸ் பயிற்சியை தம்பதியர், அவர்களுக்கான நேரமாக மாற்றிக்கொள்ள முடிகிறது. 

* தன் மனைவியின் உடலை தன் விருப்பத்துக்கு ஏற்ப கணவனும், கணவரின் உடலை தன் விருப்பத்துக்கு ஏற்ப மனைவியும் ஃபிட்டாக்கிக்கொள்ளலாம். 

* ஃபிட்னஸ் குறைபாடு பெரும்பாலும் உறவிலும் விரிசலை ஏற்படுத்துகிறது. அன்ஃபிட்டாக இருந்தால் தாம்பத்திய வாழ்க்கையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தத் தலையாய பிரச்னை, சீர்செய்யப்படுகிறது.  

* பெண்கள் தனியாக ஃபிட்னஸ் சென்டர்களுக்குச் செல்லும்போது கிடைக்காத செளகரியம், ஜோடியாகச் செல்லும்போது கிடைப்பதாக உணர்கின்றனர். தன் துணையுடன் இருப்பதால், உடல் குறித்தும் உடை குறித்தும் கவலைகள் விலகி, அவர்களால் உடற்பயிற்சிகளில் கவனத்தைக் குவிக்க முடிகிறது.

இவ்வளவு சொன்ன பிறகு இன்னுமென்ன தயக்கம்... இன்றே ஜோடி ஃபிட்னஸ் தெரபிக்குத் தயாராகுங்கள்!