Published:Updated:

பிரதமர் தொடங்கிவைத்த தனுஷ்கோடி ரயில்பாதைத் திட்டம்... அடுத்தகட்டம் என்ன?

பிரதமர் தொடங்கிவைத்த தனுஷ்கோடி ரயில்பாதைத் திட்டம்... அடுத்தகட்டம் என்ன?

`ராம் சேது’ என்று அழைக்கப்படும் நாட்டின் நிலப்பரப்பு எல்லையான தனுஷ்கோடியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு சுமார் 17.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதைக்கான பணிகள் 208 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

பிரதமர் தொடங்கிவைத்த தனுஷ்கோடி ரயில்பாதைத் திட்டம்... அடுத்தகட்டம் என்ன?

`ராம் சேது’ என்று அழைக்கப்படும் நாட்டின் நிலப்பரப்பு எல்லையான தனுஷ்கோடியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு சுமார் 17.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதைக்கான பணிகள் 208 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

Published:Updated:
பிரதமர் தொடங்கிவைத்த தனுஷ்கோடி ரயில்பாதைத் திட்டம்... அடுத்தகட்டம் என்ன?

நாட்டின் துறைமுக நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவந்த தனுஷ்கோடி நகரம், ஆழிப் பேரலையின் கோரப்பிடியில் சிக்கி உருக்குலைந்துபோனது. தற்போது, கடலுக்குள் மூழ்கி 55 ஆண்டுகளுக்குப் பின், அந்த நகரத்குச் செல்ல ரயில் பாதை அமைக்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். 

ஆங்கிலேயர்களின் கடல்வழிப் பயணத்தின் முக்கியத் தலமாக விளங்கியது தனுஷ்கோடி. இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டின் பிரதான துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியது. இந்தியாவிலிருந்து இலங்கை செல்பவர்கள், பெரும்பாலும் தனுஷ்கோடிவரை ரயிலில் பயணித்து, பின்னர் அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னார் செல்வது வழக்கம். சென்னையிலிருந்து செல்லும் இந்த ரயிலுக்கு `போட் மெயில்’ எனப் பெயர். இந்த ரயிலில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை செல்ல அனுமதி பெற்றிருப்போர் தனுஷ்கோடி துறைமுகத்திலிருந்து `இர்வின்’, `கோசின்’ என்ற பெயர் கொண்ட இரு கப்பல்கள் மூலம் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மேலும், யாத்திரிகர்கள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்காக ‘வாட்டர் டாங்’ எனப்படும் பயணிகள் ரயிலும் நாள்தோறும் இயங்கிக்கொண்டிருந்தது. இலகுவாகவும் குறைந்தக் கட்டணத்திலும் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் மக்கள் சென்றுவந்த பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது, 1964-ம் ஆண்டு வங்கக் கடலில் வெகுண்டெழுந்த ஆழிப் பேரலை. அந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி, நள்ளிரவு இந்த ரயில் சென்றுகொண்டிருந்த சமயத்தில், தனுஷ்கோடிக்கு சில நூறு அடி தூரம் இருந்த நிலையில் பலத்த காற்றுடன், கனமழையும் கொட்டத் தொடங்கியது. இதனால் ரயில் தொடர்ந்து செல்வதற்கான அனுமதி சிக்னல் கொடுக்கப்படவில்லை.

கடும் இருட்டில் மழையும் கொட்டியதால் ஓட்டுநரால் ரயில் சிக்னலைப் பார்க்க முடியவில்லை. இதனால் பயணிகள் ரயில் தனுஷ்கோடியை நோக்கிச் செல்ல, அந்த நேரத்தில் எழுந்த ஆழிப்பேரலை ரயிலின் 6 பெட்டிகளை ஆழ்கடலுக்குள் இழுத்துச் சென்றது. நள்ளிரவு நேரம் என்பதால் ஜன்னல்கள், கதவு என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், ரயிலில் பயணித்த 115 பேரும் பரிதாபமாகப் பலியானார்கள். ஆழிப்பேரலையின் இந்தக் கோரத் தாண்டவம் பற்றிய செய்திகூட 2 நாள்களுக்குப் பின்னரே அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியவந்தது.

நள்ளிரவில் பொங்கி எழுந்த ஆழிப் பேரலையின் ஆக்ரோஷத்தால் துறைமுக நகரமான தனுஷ்கோடி உருக்குலைந்துபோனது. அரசு அலுவலகங்கள், இருப்புப்பாதை, தார்ச்சாலை, துறைமுகம், ரயில், மீனவர் வாழ்விடங்கள், கோயில், தேவாலயம் என எதுவும் தப்பவில்லை. அதன் விளைவாகத் தனுஷ்கோடி வாழத் தகுதியற்ற பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கடலையே தங்கள் தாயின் மடியாகக் கொண்ட மீனவர்கள் பலர் இன்றளவும் தனுஷ்கோடியில் வாழ்ந்து வருவதுடன், புயலின் எச்சங்களாக நிற்கும் கட்டடங்களையும் அதைச் சீர்குலைத்த கடல் அலைகளையும் கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் அங்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு அழிந்துபோன தனுஷ்கோடி சாலையை மீண்டும் ஏற்படுத்தத் திட்டமிட்டது. இதன் விளைவாகத் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்திலிருந்து அரிச்சல்முனைவரை, சுமார் ஒன்பதரை கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலையை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஏற்படுத்தினர். 70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்தச் சாலையைப் பிரதமர் நரேந்திர மோடி, 2017  ஜூலை 27-ம் தேதி அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

இந்நிலையில் `தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்’ என்ற நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்தினர். அதன் பயனாக ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைப்பதற்கான திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி, கன்னியாகுமரியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். 

`ராம் சேது’ என்று அழைக்கப்படும் நாட்டின் நிலப்பரப்பு எல்லையான தனுஷ்கோடியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு சுமார் 17.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதைக்கான பணிகள் 208 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ரயில் வழித்தடத்தில் கடல்நீர் செல்லும் வகையில் 31 சிறு பாலங்களும் 10 சாலை மேம்பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. மேலும் ராமனின் வில்லினைப் போன்று அமைந்திருக்கும் தனுஷ்கோடி பகுதியைச் சித்திரிக்கும் வகையில் ரயில் நிலையமும் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 55 ஆண்டுக்காலமாக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்த ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் போக்குவரத்துக்கான கனவு நனைவாகப்போகிறது. அதேநேரத்தில் மற்ற ரயில் திட்டங்களைப்போல் சிறிது சிறிதாக நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுக்காலம் திட்டப்பணியை இழுத்தடிக்காமல், இந்தத் திட்டத்துக்காக மதிப்பிடப்பட்டுள்ள முழுத் தொகையையும் ஓரிரு கட்டங்களில் ஒதுக்கீடு செய்து, விரைவாக ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

மேலும், தனுஷ்கோடிக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்படுவதன் மூலம் அடுத்தகட்டமாக தனுஷ்கோடி - தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்தையும் தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எளிமையான முறையில் பயண வசதி கிடைக்கும் என்பதுடன் பொருளாதார ரீதியாகவும் ராமேஸ்வரம் தீவு முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரயில்வே துறைக்கு இத்திட்டத்தின் மூலம் நல்ல வருவாயும் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.