அதை வீடு என்று சொல்வதற்கில்லை. ஏன், அறை என்றுகூடச் சொல்ல முடியாது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளத்தில் இருக்கும் படிக்கட்டுகளுக்குக் கீழ் உள்ள வெற்றிடத்தில் சுவர் எழுப்பி அறைபோல் மாற்றியிருந்தார்கள். உள்ளுக்குள் படிக்கட்டு வரும் மூலையில் காஸ் அடுப்பையும், மீதி இருக்கும் இடத்தில் ஒரு திவானும் போட்டு வசித்துவந்தது, அங்கு காவலுக்கு இருக்கும் நேபாளக் குடும்பம். திவானிலிருந்து மூன்று அடி முன்னுக்கு வைத்தால் வாசல், அவ்வளவே.

வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த சீமாவின் கண்கள் விரிந்தன. அவ்வளவு அழகான நாய்க்குட்டியை அவள் பார்த்ததில்லை. மொசு மொசு ரோமங்கள் அடர்த்தியாய், நீண்டதாய், முகமே தெரியாத அளவில் சிறிய பந்துபோல் உருண்டு சென்றது. அதன் கழுத்தில் கட்டப்பட்ட பெல்ட்டின் முனையை, மூன்றாவது தளத்தில் வசிக்கும் ரோஹன் பிடித்திருந்தான். அவன் ஆங்கிலத்தில் சொல்ல, கீழ்ப்படிந்து நடந்தது அந்த நாய்க்குட்டி.

சீமா உள்ளே சென்று குனிந்தபடி தன் அம்மாவிடம் தனக்கும் அதுபோல் நாய்க்குட்டி வேண்டும் என நேபாள மொழியில் கேட்டாள். அவள் பேச்சை உதாசீனப்படுத்தி, கால்களை ஒருக்களித்து மடித்து அமர்ந்தபடி சப்பாத்தி சுட்டுக்கொண்டிருந்தாள் உஷா,
சீமாவுக்குக் கோபம் வந்தது. கையில் இருந்த பிஸ்கட்டைத் தூக்கி அம்மாமீது எறிந்தாள். உஷா அடக்க முடியாத ஆத்திரத்துடன் அடிக்கக் கை ஓங்கி, பிறகு தள்ளிவிட்டாள். சீமா, கீழே காற்றுபோல் விழுந்தாள்.

அழுதபடியே மீண்டும் வெளியில் வந்து அங்கு இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டாள். அந்த சோபா, வீட்டை காலிசெய்த ஒரு குடும்பம் வேண்டாம் எனக் கொடுத்துவிட்டுச் சென்றது. அதன்மீது இருந்த உறையின் நிறம் காணாமல் அழுக்கேறிப்போயிருந்தது. உள்ளிருக்கும் பழைய திவானும் யாரோ கொடுத்ததுதான்.

சீமாவுக்கு, ரோஹன் வைத்திருப்பதுபோல் ஒரு நாய்க்குட்டி வேண்டும்; முதல் தளவாசியான சுதீப்பிடம் இருப்பதுபோல் சின்ன கார் வேண்டும்; இரண்டாம் தளத்தில் இருக்கும் ஸ்ரீஜாவிடம் இருப்பதுபோல் சின்ன மூன்று சக்கர சைக்கிள் வேண்டும்; தான்யாவிடம் இருப்பதுபோல் கரடிபொம்மை வேண்டும். இவற்றையெல்லாம் அவள் அம்மா வாங்கித் தருவதில்லை என, பெருங்கவலையில் அழுதுகொண்டிருந்தாள்.

சீமாவுக்கு வயது 5. பன் மாதிரியான உப்பிய வெண்முகம். துருதுருவென பெரிய மனுஷிபோல் இருக்கும் அவளின் செயல்கள். அவள் அழுதபோது பிதுங்கிய கன்னக்கதுப்பில் கண்கள் உள்ளடங்கி மறைந்தன. அவளுக்கு அப்படித்தான், சிரித்தாலோ அழுதாலோ கண்கள் கன்னக் கதுப்புக்குள் மறைந்துவிடும். இவளது அழுகை, அவ்வப்போது வெளியில் வேடிக்கையில் தடைப்பட்டது. பிறகு சில நிமிடங்களில் அழுகையைத் துறந்து வெளியே விளையாடச் சென்றாள்.

உஷா எட்டிப்பார்த்தாள். அவள் சமாதானமாகி விளையாடப் போய்விட்டாள் என நிம்மதியானாள். 4 அடிக்குள் அடங்கிவிடுகிற சிறிய உருவம் உஷாவினுடையது. உஷாவுக்கு ரத்தசோகை வந்ததுபோல் வெளிர் மஞ்சள் நிறம். அந்த நிறத்தை அப்படியே சீமாவுக்கும் கடத்தியிருந்தாள். அவளிடம் கோபத்தைக் காண்பித்துவிட்டோமே என வருத்தமாக இருந்தது. சப்பாத்திப் புகையும், கொதித்த குழம்பின் வாசனையும் அந்த இடத்தை நிரப்பிக்கொண்டிருந்தன.

சப்பாத்தி சுட்டு முடித்ததும் குழம்புப் பாத்திரத்தை மூடிவிட்டு, மேலுள்ள தளங்களுக்கு வீட்டுவேலை செய்ய ஆயத்தமானாள். மதியம்தான் வர நேரிடும். நடுவில் அவ்வப்போது சீமா என்ன செய்கிறாள் என்று ஓரெட்டு பார்த்துவிட்டுப் போவாள். அவள் கிளம்பும் நேரம், அவளின் கணவன் பசந்த் வந்து சேர்ந்தான். அவனிடம் சொல்லாமலே கிளம்பினாள். அவளுக்குக் கணவன்மீது என்றும் மாறாக் கோபம் இருந்தது. சீமா பிறந்ததிலிருந்து வந்த கோபம். அது சற்றும் குறையவில்லை. வருடங்கள் செல்லச் செல்ல, உறைந்த நீர் படிகமாக மாறுவதைப்போல், அவளுடைய கோபம் கெட்டித்துப்போயிருந்தது. அவன் முகத்தைப் பாராமலே சென்றாள். அவனும் கண்டுகொள்ளவில்லை. வெளியில் இருந்த சோபாவில் அமர்ந்து, குடியிருப்புவாசிகள் எவரும் இல்லையென உறுதிசெய்த பிறகு, சாவகாசமாகப் புகைபிடித்தான்.

உச்சிவெயிலில் அந்த நகரில் எவரும் வெளிவரவில்லை. சூரியன் கக்கிய நெருப்புக் கற்றையை, காற்று அள்ளி வீசுவதுபோலிருந்தது. இளநீர் விற்பவர், குப்பை அள்ளுபவர்கள், குல்ஃபி ஐஸ் விற்பவர் வியர்வை பெருக வீதியில் தங்கள் பிழைப்புக்காகச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

மதியப்பொழுதில் உஷாவும் சீமாவும் உக்கிரம் தாங்காமல் துணிகளை நனைத்துப் போடுகிறார்கள். அவை, சில நிமிடங்களில் காய்ந்துவிடுகின்றன.

வீட்டுக்குள் வைத்த மின்விசிறி, வெக்கையைத்தான் மேலும் பரப்பிக்கொண்டி ருந்தது. இருப்பினும் வேறு வழியில்லாமல் அந்த வீட்டுக்குள்ளேயே அவளும் சீமாவும் முடங்கிக் கிடந்தனர்.
மாலையில் சட்டென வெக்கை தணிந்து ஈரம் படர்வது நன்றாக இருந்தது. இல்லையெனில், இரவிலும் தவிக்கவேண்டியதிருக்கும்.

வெயில் தரும் களைப்பில் இரவில் தூக்கம் சீக்கிரம் வருகிறது உஷாவுக்கு. ஆனால், சீமா முன்வைக்கும் கேள்விகளுக்கு தினமும் பதில் சொல்ல வேண்டும். திவானில் இருவரும் படுத்துக்கொண்டி ருந்தார்கள். இரவு விளக்கு இல்லாத இருட்டறையில், அம்மாமீது கால் போட்டுப் படுத்துக்கொண்டு தன்னுடைய கேள்விகளை ஆரம்பித்தாள் சீமா.

``அம்மா, எப்ப எனக்கு நாய்க்குட்டி, கரடி பொம்மையெல்லாம் கிடைக்கும்?’’

``அதுவா, தூரமா ஒரு மலை இருக்கு. அந்த மலையில ஒரு தேவதை இருக்காங்க.’’

``ம்ம்ம்...’’

``யாரெல்லாம் எப்பவும் குறும்பு செய்யாம, அடம்பிடிக்காம நல்ல பிள்ளைகளா இருக்காங்களோ அவங்களைப் பார்த்துட்டே இருப்பாங்க.’’

``எப்படிப் பார்ப்பாங்க, அந்த மலைதான் தூரமா இருக்கே?’’

``அவங்க பறந்துட்டே இருப்பாங்க. அவங்களுக்கு பெரிய றெக்கை இருக்கு.’’

``என் கண்ணுக்குத் தெரியல!’’

``அவங்க யார் கண்ணுக்கும் தெரிய மாட்டாங்க. அதனால்தான் அவங்க தேவதை. குறுக்க பேசாத, சொல்லி முடிக்கிறேன். யாரெல்லாம் அமைதியா, பெரியவங்க பேச்சுக் கேட்டு நல்ல பிள்ளையா இருக்காங்களோ, அவங்க வீட்டுக்கு வந்து அந்தக் குழந்தைக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் வாங்கித் தருவாங்க’’ என்று சொன்னாள்.

``அப்ப, இப்பவும் என்னைப் பார்த்துக்கிட்டு இருக்காங்களா?’’

``ஆமா. நீ குறும்பு, ரகளை பண்ணினா தர மாட்டாங்க.’’

``அப்போ, ரோஹனுக்கு நாய்க்குட்டி அப்படித்தான் கிடைச்சதா? ஆனா, அவன் ரொம்ப குறும்பு பண்ணுவானே!’’

உஷா தூங்கிவிட்டதுபோல் பாசாங்கு செய்தாள்.

சீமா, தனக்கு அறிமுகமான அந்த தேவதையைக் குறித்தும், அவள் தரப்போகும் நாய்க்குட்டியையும், சிறிய காரையும், பொம்மையையும் என்ன செய்வது எனக் கற்பனையில் ஆழ்ந்து, அப்படியே உறங்கிப்போனாள்.

அவளுக்கு, அந்தக் கண்ணுக்குத் தெரியாத தேவதையை மிகப் பிடித்தது. அவள் எப்படி இருப்பார், உயரமா குள்ளமா, முகம் எப்படி இருக்கும், கூந்தல் எப்படி இருக்கும் என அவளுடைய கேள்விப்பட்டியல் ஒவ்வொரு நாளும் நீண்டுகொண்டேபோனது. அந்த தேவதை, மேலே இருப்பதாக நினைத்துக்கொண்டு அங்கு பார்த்துப் பேச ஆரம்பித்தாள். எந்தப் பிள்ளையாவது குறும்பு செய்தால், மேலே பார்த்து அந்த தேவதையிடம் புகார் தெரிவித்தாள். அதைப் பார்த்து அந்தப் பிள்ளைகள் அவளைக் கேலிசெய்தனர்.

சிலசமயம், அந்தத் தரைத்தளத்தில் குடியிருப்பு வாசிகளின் குழந்தைகள் விளையாடும்போது, சீமாவும் அவர்களுடன் சேர்ந்து விளையாடுவாள். அப்போது பிள்ளைகளுக்கிடையே ஏற்படும் சண்டைகளில், இவள்மீது மட்டுமே தவற்றைச் சுட்டிக்காட்டும் நிலை அங்கு இருந்தது. அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அவளிடம் மட்டும் ``அங்க போய் விளையாடு என்ன..!’’ என்று அவளை அங்கிருந்து நாசூக்காய் அகலவைப்பார்கள். அதனால் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் விளையாடும்போது அவள் வேடிக்கை பார்ப்பதுடன் நின்றுகொள்வாள்.

ஒருமுறை அவர்கள் விளையாடிக்கொண்டி ருந்தபோது இவளும் அவர்களுடன் சேர முற்பட்டதால், ஒரு சிறுவன் கோபமாக அவளை ஆங்கிலத்தில் திட்டி, கீழே தள்ளிவிட்டான்.
தான் ஏன் நிராகரிக்கப்படுகிறேன் என்ற பாரபட்சத்தைப் புரிந்துகொள்ள முடியாத அவள், வீட்டுக்குள் சென்று அழுதாள். தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கச் சொல் என்று அம்மாவிடம் முறையிட்டாள். ``அவர்கள் எல்லோரும் கெட்டவர்கள்’’ என்று அழுதுகொண்டே சொன்னாள்.

உஷா அவளை சமாதானப்படுத்தி அருகில் இருந்த ஏரிக்குக் கூட்டிச் சென்றாள். அவ்வப்போது அவள் சீமாவை அந்த ஏரிக்குக் கூட்டிச் செல்வதுண்டு. புறநகர்ப்பகுதியில் இருந்த அவர்களின் இடத்திலிருந்து கொஞ்சம் நடக்கும் தூரத்தில் ஒற்றையடிப் பாதையைப் பிடித்தவாறு சென்றால் அந்த ஏரி வரும். முற்றிலும் நகரமயமாக்கப்படாத, யாரும் பெரிதாக அறிந்திடாத அந்த ஏரி அழகாக இருக்கும். சுற்றிலும், ஊசிமரங்கள் நிறைந்த பெயர் தெரியாத வண்ண வண்ணப் பூக்கள் குழுமி இருக்கும். ஜன நெரிசலிலிருந்து விலகியுள்ள இந்த இடத்துக்கு சீமாவுடன் வந்து அமர்ந்துகொள்வாள் உஷா. எதுவும் பேசாமல் இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கலாம்போலிருக்கும்.

நிறைய கொக்குகளும் பறவைகளும் நீரின் மீது அமர்ந்தும் பறந்தவாறும் இருக்கும். கிரிக்கெட் பூச்சிகளின் சத்தம் காலையிலும் கேட்கும். வெயில் அங்கு தெரியாமல் மிதமாக இருந்தது. ஏரியின் நீர்க்குளுமையும், செழிப்பாக வளர்ந்த பச்சைமரங்களின் வாசனையும் காற்றை ஈரமாகவே வைத்திருந்தன.

உஷா, முட்கள் குத்தாத ஓர் இடத்தைப் பார்த்து அமர்ந்து சீமாவை அணைத்துக்கொண்டு, ``இங்க பாரு, நம்மகிட்ட எல்லோரும் எப்பவும் அன்பாவே நடந்துக்க மாட்டாங்க. மனித குணம் மாற்றமுடையது. இன்று வெறுப்பவர்கள் நாளை அன்பு காமிக்கலாம் அல்லது அன்பை வாரி இறைப்பவர்கள் நாளை வெறுப்பு காண்பிக்கலாம். யாரிடமும் `ஏன் இப்படிச் செய்தாய்?’னு கேட்க, நமக்கு உரிமையில்லை. எதிர்பார்ப்பு இருக்க இருக்க, மனசுல நிம்மதி இல்லாமப்போயிடும். உன்னை யாருக்குப் பிடிக்கலையோ, அவங்க உனக்கு வேண்டாம். உனக்கு அம்மா எப்பவும் இருப்பேன். நீ ஸ்கூல்ல நல்லா படிச்சா, நிறைய ஃபிரெண்ட்ஸ் கிடைப்பாங்க; பெரிய வேலைக்குப் போவ. அப்புறம் பொம்மைக் கார் என்ன, நிஜக் காரே வாங்கலாம். அந்தக் கார்ல அம்மாவைக் கூட்டிட்டுப் போவியா?’’ எனக் கேட்டாள்.

சீமா முல்லைப்பற்கள் தெரிய கன்னக் கதுப்பில் கண்கள் மறையச் சிரித்துத் தலையாட்டினாள்.

உஷாவுக்கு, இவளை எப்படி ஆளாக்கப்போகி றோம் என்று கவலை. இப்பவே அவளுக்கு மூக்குத்தி குத்தவேண்டும் என, பசந்த் கேட்டுக்கொண்டிருக்கிறான். மூக்குத்தி, பெண்ணை அடுத்த கட்டத்துக்குத் தயார்படுத்தும் ஓர் ஆயுதமாகவே அவளுக்குத் தோன்றியது.

நேபாளத்தில் உஷாவுக்கும் அப்படித்தான் 5 வயதில் மூக்குத்தி குத்தப்பட்டது. அவளது ஊர்ப் பள்ளியில் 3-ம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. படிப்பில் படுசுட்டியாக இருந்தாள். மேற்கொண்டு படிக்க, வேறொரு கிராமத்துக்கு மோசமான மலைப்பாதைகளில் செல்ல வேண்டும். மீண்டும் பள்ளியில் தோழிகளுடன் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டாள். ஆனால், அவளுடைய படிப்பு நிறுத்தப்பட்டு ஆடு கோழிகளை வளர்க்கவும், அவளின் தம்பியைப் பார்க்கவும் மட்டுமே அனுமதிக்கப்பட்டாள். குழந்தை மனம் மாறாத 16 வயது தொடக்கத்தில், கல்யாணம் அவளுக்கு முடிந்தது. ஏன், எதற்கு என்ற கேள்விகள் இல்லாத ஊரில், இதுவும் இயல்புதான் என மகிழ்ச்சியாகக் கல்யாணத்தை ஏற்றுக்கொண்டாள் அல்லது ஏற்றுக்கொள்ளச் செய்யப்பட்டாள்.

பசந்த், மிகவும் நல்லவனாகவும் அடிக்கடி ஏதாவது கிண்டலடித்துச் சிரிக்கவைப்பவனாகவும் அவளுக்குத் தெரிந்தான். அவனைப் பிரிய மறுத்தாள். அவளின் அம்மா வீட்டுக்குக்கூட இரண்டு வருடங்களாகப் போகாமல், சாக்குச் சொல்லிக்கொண்டிருந்தாள். மனம் நிறைந்த காதலுடன் அவள் வாழ்க்கையைத் தொடங்கினாள்.

நெற்றிவகிட்டில் ஆரம்பித்து உச்சி வரை அடர்த்தியாகக் குங்குமம் இட்டு, கை தெரியாத கண்ணாடி வளையல்களுடன் அவளுக்கு இருப்பது பிடித்தது. அவன் வெளியூர் சென்றால், வரும் வரை அழுவாள். அவன் பெயரைக் கைகளில் பச்சை குத்திக்கொண்டாள். அவன் இல்லாதபோது, கைகளை வெட்கச் சிரிப்புடன் தடவிக்கொண்டி ருப்பாள். தன்னுடைய பிரசவத்துக்காக மட்டும் அவனைப் பிரிய மனமில்லாமல் தாய்வீடு வந்தாள். வேலை செய்யும் இடத்தில் விடுப்பு இல்லாததால், பசந்தினால் அங்கு அவளைப் பார்க்க வர முடியாததை நினைத்துக் கவலைப்பட்டாள். முயல்குட்டிபோல் அழகான குழந்தையைப் பெற்றெடுத்தபோது, உலகிலேயே தான்தான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்ந்தாள்.

சீமா பிறந்த பத்து நாளில், அடம்பிடித்து கணவன் ஊருக்கு வந்தாள். அங்கு அவளுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. பசந்த் இன்னொரு திருமணம் செய்திருந்தான். உஷாவால் நம்ப முடியவில்லை. அந்த இரண்டாவது மனைவிக்கும் பசந்த் ஏற்கெனவே மணமானவன் என்பது தெரியவில்லை. இவள் ஒரு பக்கமும், அந்தப் புதுப்பெண் ஒரு பக்கமும் மூலையில் அழுதுகொண்டிருந்தார்கள். பிறகு, எங்கு அவன் தன்னை விட்டுச் சென்றுவிடுவானோ என்ற பயத்தில், அந்தப் புதுப்பெண் பசந்துடன் ஒட்டி ஒட்டி விலகாமல் நின்றபடி, உஷாவையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பசந்த், இவளின் அப்பா தன்னைக் கெஞ்சியதாகவும், அதனால் இவளை மணம் செய்ததாகவும் உஷாவை சமாதானம் செய்ய முயன்றுகொண்டிருந்தான். அவள் சமாதானம் ஆகாததால், பொறுமையிழந்து அவளை மாறி மாறி அடிக்கத் தொடங்கினான். இளவரசனாக இருந்த அவன், மெல்ல உருமாறி வாயில் நீண்ட கோரைப்பற்கள் கொண்ட ஓர் அரக்கனாக அவள் கண்முன் தெரிந்தான்.

பிறகு, அவளை அழைத்துக்கொண்டு இந்தியாவில் இந்த நகரத்துக்கு வந்து சேர்ந்தான். சில வாரங்களில் அவன் தன் இரண்டாவது மனைவியையும் வரச்செய்து நான்கைந்து வீதிகளுக்கு அப்பால், வேறோர் அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாகத் தங்கவைத்தான். ஓயாமல் அழுது, பிறகு அந்தக் குட்டைக்குள் உஷா ஊறப் பழகிக்கொண்டாள். காலையில் இங்கேயும், இரவில் அந்த வீட்டிலுமாக பசந்த் இரண்டு இடங்களிலும் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தான்.

உஷாவைத் தனது கட்டுக்குள் வைக்க அவன் எடுக்க வேண்டிய ஆயுதம் அடக்குமுறை என்பதை, முதன்முறை அவளை அடித்தபோது தெளிவாக உணர்ந்துகொண்டான். அதன்பிறகு, அந்த ஆயுதத்தையே அவன் அடிக்கடி எடுக்க ஆரம்பித்தான். உஷாவுக்கு இப்போது பசந்த் வேறொருவனாகத் தெரிந்தான். அவளது பதின்ம வயதில் உண்டான முதல் காதல் பசந்துடனாகவே இருந்தது. அதனால் உண்டான காயமும் மிக ஆழமான வடுவைக் கொடுத்திருந்தது.

உஷாவுக்கு, கண்களில் நீர் வழிந்துகொண்டே யிருந்தது. மிகச்சூடாகக் கன்னங்களை நனைத்தது. சீமா ``அம்மா, கவலப்படாத. கண்டிப்பா கார் வாங்கி உன்னைக் கூட்டிட்டுப் போவேன், சரியா’’ என்று அவள் கண்ணீரைத் துடைத்தாள். வந்த நிலை மாறி, இப்போது இவள் தாயாகி, அம்மாவை சமாதானம் செய்தாள்.

சீமா எப்போதும் சோபாவில் அமர்ந்து, தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள். அவ்வப்போது உள்ளே சென்று அவள் அம்மாவிடம் ``அம்மா, தேவதை சீக்கிரம் வந்துடுவாங்களாம். எனக்கு கார், பொம்மை, நாய்க்குட்டி எல்லாம் தருவாங்களாம். எங்கிட்ட இப்ப சொல்லிட்டு அப்படியே பறந்து போனாங்க’’ என்று அவள் கையை மேலே பறப்பதுபோல் காண்பித்துச் சொன்னாள். உஷா புன்னகையுடன் ஆமோதித்தாள்.

4-வது தளத்தில் உள்ள ஏஞ்சலின் பாட்டிக்கு, சீமாவின் மீது தனிப் பிரியம். அதனால் அவர் வீட்டில் மட்டும் சென்று விளையாடுவாள். ஏஞ்சலின் பாட்டி வீடு, படு சுத்தமாகவும் வாசனையாகவும் இருந்தது. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பிரத்யேக மணம் இருக்கும். அவரது வீட்டின் மணம், இனம் பிரிக்கத் தெரியாத பூக்களின் கலவையான வாசம் கொண்டிருக்கும். வீட்டுக்குள் நிறைய வேலைப்பாடுகள் நிறைந்த உயர்ரக சாமான்கள், கண்ணாடி அலங்கார விளக்குகள் இருந்தன. அவர் அந்த வீட்டில் தனியாக இருக்கிறார். அவரின் ஒரே மகள், மணமாகி சிக்மகளூரில் இருந்தார். அவ்வப்போது காணொலி அழைப்பில் வரும்போது அவரின் மகளிடம் ஏஞ்சலின், சீமாவையும் பேசவைப்பார்.

மூட்டுவலி பெற்ற ஏஞ்சலினுக்கு அருகில் உள்ள பேக்கரியில் பால் வாங்கித் தருவது, காலி நீர் புட்டிகளைக் கீழே கொண்டு வைப்பது என, பலவிதங்களில் சீமா அவருக்கு உதவினாள். தனிமை அவரைத் தின்னாமல் பார்த்துக்கொண்டிருந்தது, அவளுடைய பேச்சு. அவர் வீட்டில் எந்தப் பொருளையும் அவருடைய அனுமதி இல்லாமல் அவள் தொட்டதில்லை. அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்தால் உஷாவிடம் கேட்காமல் வாங்கியதில்லை.

யாரிடமும் எதையும் வாங்கக் கூடாது என சீமாவுக்குக் கண்டிப்புடன் சொல்லிக்கொடுத்தாள் உஷா. வீட்டுவேலைக்குச் செல்லும் இடத்தில் எவராவது மிஞ்சிய உணவையோ பலகாரங்களையோ தந்தால்கூட, வேண்டாம் என்று உஷா சொல்லிடுவாள். மீதம் உள்ளதைத் தருவதற்கும், விருப்பமாகத் தருவதற்கும் வித்தியாசத்தை அறிந்திருந்தாள். அதனால்தான் ஏஞ்சலின் பாட்டி கொடுத்தால் மட்டும் இவள் வாங்கிக்கொள்ளச் சொன்னாள். `இப்படி இருக்கிறப்பவே இவர்களுக்கு இவ்ளோ திமிர்’ என்று ஒருமுறை ரோஹனின் அம்மா தன் தோழியிடம் சொல்லிக்கொண்டி ருந்ததைக் கேட்டாள். இவள் எதையும் மனதில் ஏற்றிக்கொண்டதில்லை. காரணம், அவளுக்கென ஒரு கனவு இருந்தது.

3-வது தளத்தில் ஒரு குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம், தரைத்தளம் வரை ஆரவாரமாகக் கேட்டது. சீமாவையும் வரச்சொல்லியிருந்ததால், அவள் சென்று ஒதுங்கி நின்றபடி கவனித்தாள். சிவப்பு மற்றும் ரோஸ் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட பெரிய கவுனை அணிந்திருந்தாள் அந்தச் சிறுமி. அவளைப் போன்ற உடை மற்றும் உருவத்திலேயே செய்த பெரிய கேக், மேசையில் இருந்தது. கண்ணாடிக் குடுவைகளில் பல நிறப் பழச்சாறுகள் ஒருபக்கம் வைத்திருந்தனர். எல்லாக் குழந்தைகளும் பிறந்தநாள் தொப்பி அணிந்து, பாட்டுக்கு மழலைக் குதூகலிப்புடன் ஆடிக்கொண்டிருந்தார்கள். திடீரென மேலிருந்து பட்டென்ற சத்தத்தில் வெள்ளை நிறத்தில் பஞ்சு பஞ்சாய்ப் பறக்க, கூடி இருந்தவர்களின் கைத்தட்டல்களுடன் அந்தச் சிறுமி கேக்கை வெட்ட ஆரம்பித்தாள். முதலில் சீமா அந்தச் சத்தத்தில் மிரட்சியாகி, பிறகு நடந்த நிகழ்வுகளில் ஆச்சர்யமும் சிரிப்புமாய் பிரமிப்பானாள். அவளால் எவருடனும் சென்று இணைய முடியவில்லை. இது அவர்கள் இவளிடம் வரைந்த எல்லைக்கோடு என்பது மட்டும் தெளிவாக அவளுக்குப் புரிந்திருந்தது. சீமாவுக்கும் அப்படிக் கொண்டாட வேண்டும் என ஆசை வந்தது. இவளுடைய பிறந்தநாளுக்கு இவளுக்குப் பிடித்தபடிக்குப் புதுத்துணி வாங்கித் தந்து, வீட்டில் சோமாஸ் செய்து தருவாள் உஷா.

திடீரென ஒரு நாள் கேட்டாள், ``அம்மா, என் பிறந்தநாளை ஏன் கொண்டாடுறதில்ல?’’

`` ஏன், உனக்குப் புதுத்துணி வாங்கித் தர்றேனே!’’

``இல்லை... அன்னைக்கு தான்யா பிறந்தநாளுக்குப் போனேன்ல, அந்த மாதிரி ஏன் எனக்குச் செய்யறதில்ல?’’

உஷாவுக்குக் கோபம் வந்தது. பட்டென அவளை அடித்தாள். ``இங்க பாரு, இதுகூட இல்லாம ரோட்ல படுத்துத் தூங்கிறவங்களும் இருக்காங்க. அதனால இந்த வாழ்க்கைக்கே கடவுளுக்கு நாம நன்றி சொல்லணும்’’ என்று கொஞ்சம் கடுமையாகவே சொன்னாள்.

சீமா சரி என்று தலையாட்டிக்கொண்டு, அமைதியாக இருந்தாள். சில நொடிகள் கழித்து, ``அம்மா, அந்த தேவதையோட பேர் என்ன?’’ என்று சீமா கேட்டாள்.

உஷாவுக்குச் சிரிப்பு வந்தது. குழந்தைகள் எதையும் பெரிதுபடுத்துவதில்லை. `இவளிடம் ஏன் வியாக்கியானம் பேசுகிறோம்?’ என உஷாவுக்குத் தோன்றியது.

அன்று மாலை, மனது கேளாமல், அவளுக்குப் பிடித்தமான ஜிலேபிக் கடைக்குக் கூட்டிச் சென்றாள். மெல்லிய பொன்னிற இழைகளால் ஆன ஜிலேபியை நெய் மணக்க சூடாகச் சாப்பிடுவது அவர்கள் இருவருக்குமே பிடித்த ஒன்று.

ஏஞ்சலின் பாட்டியின் வீட்டுவேலைக்குப் போகும்போதெல்லாம், அவர் சீமாவைப் பற்றியும் அவளுடைய வளர்ப்புமுறையைப் பற்றியும் பெருமையாகச் சொல்வார். அவளைப் படிக்கவைக்கச் சொல்லி வற்புறுத்தினார்.

அவளுக்கும் சீமாவைப் படிக்கவைக்க வேண்டும் என ஆசைதான். ஆனால் பசந்த், சீமாவை ஊரில் கொண்டுபோய் தாத்தா பாட்டியிடம் விட வேண்டும் எனக் குறியாய் இருந்தான். அவளுக்கு விருப்பமில்லை. ஆளரவமற்ற கிராமம். பள்ளி, மருத்துவமனைகூட இல்லாத அந்த மலைப்பிரதேசத்தில் அவளையும் விட்டு, இவளுடைய வாழ்க்கைப் பிரதிபோல் மற்றுமொரு வாழ்வை சீமாவுக்குத் தந்திட விருப்பமில்லை. ``இங்கேயே படிக்கவைக்கலாம்’’ எனச் சொன்னாள்.

``படிப்பு நமக்கெலாம் எதுக்கு..? இங்க படிக்கவைக்க நிறைய பணம் வேணும். அவள் வளர்ந்ததும் கல்யாணம் செய்யவே நாம் ரெண்டு பேரும் இப்ப இருந்து வேலை செய்தாக வேண்டும்’’ என்று சொன்னான். அவன் சொன்னதில் ஓரளவு உண்மை இருந்ததை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த நகரத்தில் உள்ள பள்ளிகள், அவளிடம் இருப்பதைவிட மூன்று மடங்கு பணத்தைக் கேட்கின்றன. அரசுப் பள்ளிகளில் மொழியும் தூரமும் பிரச்னையாக இருந்தன. ஆனால், ஊரில் மட்டும் கொண்டுபோய் விடக் கூடாது என்பதை உறுதியாகச் சொன்னபோது, அவனுக்குக் கோபம் தலைக்கேறி அவள் வாயைப் பார்த்தே அடித்தான். உஷாவுக்கு உதடு கிழிந்து ரத்தம் வந்தது. அவன் கட்டளையிடுவதைச் செய்வது மட்டுமே அவளுடைய வேலை என்று சொன்னான்.

ஒருநாள் அவன் ரயில்நிலையம் சென்று, நேபாளம் போவதற்கான பயணச்சீட்டை வாங்கி வந்தான். அடுத்த வாரம் அவளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வரும்படி அவளுக்குக் கட்டளையிட்டான். உஷாவுக்குத் தூக்கமே வரவில்லை. இரவெல்லாம் அந்த இருட்டறையில் தனியாக விழித்திருந்தாள்.

`ஏன் என் வாழ்க்கையை என்னைச் சார்ந்த ஆண்களே தீர்மானிக்கிறார்கள்? என் படிப்பின் அளவை, திருமண வயதை, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதை ஆண்களே இதுவரை தீர்மானித்திருக்கிறார்கள். யோசித்துப்பார்த்தால், இயல்பு என்ற போர்வையில் இப்படியான வற்புறுத்தலுக்குப் பழக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இதற்கெல்லாம் கேள்விகள் கேட்காமல், அறியாமையில் நானும் உடன்பட்டிருக்கிறேன். ஒருவேளை கேட்டிருந்தால், எத்தனை துவேஷங்களை என்னை நோக்கி வீசியிருக்கும் இந்தச் சமூகம்? இந்தக் குழந்தை ஏன் பிறக்க வேண்டும்? நீ கனவு காணாதே... இதன்படி செய் என்று கட்டளையிட்டு இவளைச் சிறு கூண்டுக்குள் அடைத்துவிட வேண்டுமா? அவள் திசையை நிர்ணயிப்பதற்கு நான் யார், இவன் யார்?’ சீமாவின் அருகில் உற்றுப்பார்த்தாள். மெழுகு பொம்மைபோல் லேசாக உதடு பிரிந்து தூங்கிக்கொண்டிருந்தாள். உஷா அழத் தொடங்கினாள். கண்கள் தகதகவென எரிந்தன. யோசித்து யோசித்து தினமும் தலைவலி வந்தது.
ஊருக்குப் போவதற்குச் சில நாள்களுக்கு முன் ஓர் இரவில், பசந்த் அந்த வீட்டுக்குச் சென்றதும், மறுநிமிடம் உஷா இருவருடைய உடுப்புகளையும் எடுத்து ஒரு பையில் வைத்தாள். அவளையும் தயார்செய்தாள்.

``எங்கமா போறோம்?’’

``பேசாம இரு’’ அடக்கினாள்.

இரவு 10 மணி வாக்கில், தெரிந்தவர்கள் யாரும் தென்படுகிறார்களா எனப் பதற்றமாகப் பார்த்தபடியே அவசரமாகத் தெருமுனை வரை நடந்து, அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி, பேருந்து நிலையம் நோக்கிச் சென்றார்கள். சீமா ஒன்றும் புரியாமல் மிரட்சியாகவே இருந்தாள். அவளுக்குச் சில வாரங்களாகவே இப்படித்தான். அவளின் அப்பா அம்மாவுக்குள் நடந்த சண்டை தம்மைப் பற்றிய பிரச்னைதான் எனத் தெரிந்தது.

அவர்கள் குடியிருப்பின் எதிர் வளாகத்தில் கூர்க்காவாக இருக்கும் வினோத்தின் மகள் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் சீமாவுடன்தான் விளையாடுவாள். அவள், நேபாளத்தில் எங்கோ தூரமாக உள்ள ஒரு பள்ளி விடுதியில் வளர்வ தாகவும், அங்கு அவளை அதிகாலையில் எழுப்பிவிடுவார்கள், மாலையில் விளையாடக் கூடாது, படிக்கவில்லையென்றால் அடிப்பார்கள் எனவும் இன்னும் பலப்பல சோகக் கதைகள் சொன்னதால், அவளைப்போன்றே தன்னையும் எங்கேயாவது சேர்த்துவிடுவார்களோ என சீமா பயந்துகொண்டிருந்தாள். ஓயாமல் பேசுபவள் சமீபத்தில் அமைதியாக இருந்தாள். அவளுடைய தேவதையும் நாய்க்குட்டியும் பொம்மையும் அவள் கண்களுக்கு, பிறகு காணாமல்போயின. எங்கோ அம்மா தன்னை விடப்போகிறாரோ என பயம் வந்தது.

உஷா அந்தப் பேருந்துநிலையத்தை அடைந்ததும், குறிப்பிட்ட ஒரு பேருந்தை விசாரித்தாள். அவளின் கண்களிலும் பதற்றம் இருந்தது. கைகள் நடுங்கியபடி இருந்தன. முதன்முறையாக தனியாக வருகிறாள். அந்த ஊர் பற்றி எப்படி, எங்கு எதுவும் தெரியாது. ஆனால், ஏதோ ஒன்று இதைச் செய்யும்படி ஆழ்மனம் சொல்ல, கீழ்ப்படிந்து செய்தாள்.

அந்தப் பேருந்தைக் கண்டறிந்து அவளுடைய இருக்கைகளை உறுதிசெய்த பிறகு, சென்று இருவரும் ஏறி அமர்ந்தார்கள். இதயம் பல மடங்கு வேகமாக அடித்துக்கொண்டிருந்ததை தன் காதுகளாலேயே கேட்டாள்.

``என்னை எங்காவது கொண்டுபோய் விடுறீங்களா?’’ சீமா கேட்டாள்.

உஷா பதில் சொல்லாமல் எப்போது வண்டி கிளம்பும் எனப் பார்த்துக்கொண்டிருந்தாள். எங்கு அவன் வந்துவிடுவானோ என்ற பயம் அவளைத் துளைத்துக்கொண்டிருந்தது.

வண்டியைச் சில நிமிடங்களில் எடுத்ததும், உஷாவுக்கு மனசு ஆசுவாசமானது. பேருந்து, நகரம் தாண்டி இருளடைந்த வெட்டவெளிக்கு வந்ததும்தான் பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்தாள்.
``மா, எனக்கு நாய்க்குட்டி, பொம்மை எல்லாம் வேண்டாம். நீங்கதான் வேணும். என்னை எங்கயும் விடாதீங்க’’ சீமா அழத் தொடங்கினாள்.

அவளை வாரி எடுத்து, பலூன் மாதிரியான கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

``உன்னை விட்டு நான் எங்கும் போக மாட்டேன். இப்போ அமைதியா தூங்கு’’ என்று சொல்லி, அவளைத் தனது மடியில் கிடத்தித் தட்டினாள்.

உஷாவுக்கு, நடுக்கம் மெல்லக் குறைந்து, மூச்சு சீரானது. உஷா, சீமாவின் நிலையை ஏஞ்சலின் பாட்டியிடம் வருத்தமாகச் சொன்னபோது ``கவலைப்படாதே, உனக்கு பிரச்னை இல்லை யென்றால் ஒன்று சொல்றேன் கேள். என் பொண்ணு வீட்டுக்குப் போ. அவளுக்குக் குழந்தை இல்லை. அவளுக்கு சீமாவையும் ரொம்பப் பிடிக்கும். இவளை வளர்க்க அவளும் பிரியப்படுவாள். உனக்கும் வேலை தரச் சொல்றேன். அவளையும் படிக்கவைக்கலாம். உன் கணவனிடம் கேட்டுவிட்டுச் சொல்’’ என்றார். ஆனால், எந்தக் காரணம்கொண்டும் இந்த விஷயத்தையோ, தான் அங்கு செல்வதைப் பற்றியோ அவள் கணவன் பசந்திடம் சொல்லக் கூடாது என்ற ரகசிய உடன்படிக்கை செய்துகொண்ட பிறகுதான் இந்த முடிவுக்கு வந்தாள் உஷா. அதன்பிறகு அவர் எடுத்துத் தந்த பயணச்சீட்டு, அவர் மகளுடைய விலாசம் எல்லாமே துரிதமாகவும் ரகசியமாகவும் நடந்தன. அவளுடைய அலைபேசியை அங்கேயே விட்டுவிட்டுத்தான் வந்தாள்.

உஷாவுக்கு இப்போது எங்கிருந்தோ ஒரு முரட்டு தைரியம் வந்திருந்தது. இதுவரை அவள் சுவாசித்திராத இந்த எல்லையற்ற காற்றை நுரையீரல் வரை நீண்ட மூச்சில் அடைத்துக்கொண்டாள். அன்பை எறிந்து, துரோகத்தை அளித்து, வன்முறையைப் பழக்கியவனிடம் இனி எப்போதும் வரக் கூடாது. மறுநாள் காலை தன்னைக் காணாமல் பதறுவான். ஊரெல்லாம் தேடுவான். காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். தேடட்டும், பதறட்டும்... எதிர்கொண்டுவிடலாம் என்று தைரியப்படுத்திக்கொண்டாள். அந்தப் பேருந்து சீராக ஓடிக்கொண்டிருந்தது. பதற்றம், களைப்பு தணிந்து இருவரும் தூக்கத்தில் தங்களுக்கான கனவில் ஆழ்ந்து லயித்தார்கள். அந்த தேவதை அவர்களுடனே பறந்து வந்து கொண்டிருந்தது.

ஓவியங்கள்: ஸ்யாம்