Published:Updated:

`` `பிணம் எரிக்கிறதெல்லாம் ஒரு வேலையா?'னு மத்தவங்க கேட்டப்போ...!" - ஜெயந்தியின் சவாலான பணி

``தைரியப்படுத்திட்டு, தனிமையில் நான் பல நாள்கள் அழுதிருக்கேன். எல்லாமே மாறும்னு நம்பிக்கையோடு இருந்தேன். அதன்படி என் பணிகளைப் பலரும் பாராட்ட ஆரம்பிச்சாங்க.’’

`` `பிணம் எரிக்கிறதெல்லாம் ஒரு வேலையா?'னு மத்தவங்க கேட்டப்போ...!" - ஜெயந்தியின் சவாலான பணி
`` `பிணம் எரிக்கிறதெல்லாம் ஒரு வேலையா?'னு மத்தவங்க கேட்டப்போ...!" - ஜெயந்தியின் சவாலான பணி

மின் மயானத்தில் சிதையூட்டும் வேலை. ஆண்களே சவாலாக நினைக்கும் இப்பணியை, மகிழ்ச்சியுடன் செய்பவர் ஜெயந்தி. 2015-ம் ஆண்டு அவள் விகடன் இதழில், `மயான புத்ரி! ஆச்சர்யமூட்டும் ஜெயந்தி' என்ற தலைப்பில் இவரின் வெற்றிகரமான பணி குறித்து முதன் முதலில் கட்டுரை வெளியானது. பிறகு, மற்ற எல்லா மீடியாக்களிலும் புகழ்பெற்றார். வீர தீர செயல் புரியும் சாதனைப் பெண்களுக்கு, ஆண்டுதோறும் `கல்பனா சாவ்லா’ விருது வழங்கும் திட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலதா தொடங்கினார். ஜெயலலிதாவிடமிருந்து அவ்விருதை வென்ற முதல் பெண்ணும் ஜெயந்திதான்.

``காதலிச்சு கலப்புத் திருமணம் செய்துகிட்டதால குடும்பத்தில் பெரும் பிரச்னை. எனக்கு ஆதரவா இருந்த அப்பாவின் மரணத்தால் ரொம்பக் கலங்கினேன். பிறகு, நாமக்கல் மின் மயானத்துல தோட்டப் பராமரிப்பு வேலைக்குச் சென்றேன். அப்பாவின் நினைவாக, இறந்தவங்களின் உடலை சிதையூட்டும் வேலையை ஆர்வத்துடன் செய்ய ஆரம்பிச்சேன். அங்க அஞ்சு வருஷம் வேலை செய்தேன். நிறைய போராட்டங்கள், சிரமங்கள், மனத் திருப்தி, பாராட்டுகள், விருதுகள்னு எல்லாமே கலந்துதான் என் பணி இருந்துச்சு. இந்நிலையில கருத்து வேறுபாடுகள் காரணமாக அப்பணியிலிருந்து விலகினேன். 

பிறகு ,நான் வசிக்கும் கூலிப்பட்டி கிராமத்துல இருக்கும் கோயில் ஒன்றில் ஒரு வருஷம் வேலை செஞ்சேன். சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் ஈஷா அறக்கட்டளை இணைந்து நடத்தும் மின் மயானத்தைத் தொடங்கினாங்க. அங்க வேலை செய்ய எனக்கு அழைப்பு வந்துச்சு. பிறகு, இந்த மின் மயானத்துல ஒரு வருஷமா வேலை செய்துகிட்டு இருக்கேன். இடம்தான் வேறு. ஆனா, பணி அதேதானே? தினமும் ரெண்டு பஸ்ல பயணம் செஞ்சு பணிக்கு வருவது மட்டும் கொஞ்சம் சிரமமா இருக்கு. மத்தபடி சந்தோஷமா வேலை செய்றேன்’’ என்கிற ஜெயந்தி எம்.ஏ பட்டதாரி. 

``பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த நான் கலப்புத் திருமணம் செய்துகிட்டதாலே பெரும் பிரச்னை ஏற்பட்டுச்சு. மேலும், எங்க சமூகத்திலிருந்து சிதையூட்டும் வேலைக்குப் போன முதல் பெண்ணும் நான்தான். அதனால் குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்ப்புகள் புயலைக் கிளப்புச்சு. நேர்மையான வழியில, பிறருக்குக் கெடுதல் நினைக்காம செய்ற எந்த ஒரு தொழிலும் புனிதமானதுதான். ஒரு தொழிலை `இவங்க’தான் செய்யணும்னு எந்த விதிமுறையும் இல்லையே! அதனால புறக்கணிப்புகளைப் பெரிசா எடுத்துக்கலை. ஆனா, `சுடுகாட்டு வேலைக்குப் போறவரோட புள்ளைங்க. பிணம் எரிக்கிறதெல்லாம் ஒரு தொழிலா? இவங்களோடு பழகக் கூடாது’னு சின்ன வயசுல என் புள்ளைங்களும் நிறைய புறக்கணிப்புகளை எதிர்கொண்டாங்க. அப்படிப் பேசியவங்க என் கஷ்ட நிலைகளில் உதவி செய்யலை. 

`நமக்குச் சோறுபோடும் தொழில் இது. இத்தொழிலைச் சுட்டிக்காட்டி உங்களை மதிக்காதவங்களோடு நீங்க பழக வேண்டாம்’னு பிள்ளைகளிடம் சொல்வேன். குழந்தைகளைத் தைரியப்படுத்திட்டு, தனிமையில் நான் பல நாள்கள் அழுதிருக்கேன். எல்லாமே மாறும்னு நம்பிக்கையோடு இருந்தேன். அதன்படி என் பணிகளைப் பலரும் பாராட்ட ஆரம்பிச்சாங்க. புறக்கணிப்புகளும் ஓரளவுக்குக் குறைய ஆரம்பிச்சது. ஆரம்பத்திலிருந்து என்னோட பெரிய நம்பிக்கையே என் கணவரும் குழந்தைகளும்தான். பத்தாவது முடிக்கப்போற என் புள்ளைங்க இப்போ ரொம்பவே பக்குவமாகிட்டாங்க’’ என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெயந்தி. முன்பு திட்டியவர்கள் பலரும் இவரின் பணித்திறனைக் கண்டு இப்போது பாராட்டுகிறார்களாம். தற்போது சேந்தமங்கலம் மின் மயானத்தில் சிதையூட்டும் பணியுடன், மேலாளராகவும் பணியாற்றிவருகிறார்.  

``சுத்தியிருக்கிறவங்க என்ன சொல்லுவாங்களோ... நம்மலால இந்தத் தொழிலைச் செய்ய முடியுமோனு பயந்துகிட்டும் தயங்கிகிட்டும் இருந்தால் நாம வளரவே முடியாது. எனக்குப் பிடிச்ச தொழிலை, சரியான வழியில் செய்றேன். அதனால் கிடைக்கும் மனநிறைவே எனக்குப் போதும். என் அப்பாவின் நினைவால், இந்தத் தொழிலை ரொம்ப நேசிச்சு செய்றேன். இத்தொழில் செய்றதால எனக்கு எந்த ஒரு பயமும் ஏற்பட்டதில்லை. நம்ம எண்ண ஓட்டம் மற்றும் மன ஓட்டத்தின் வெளிப்பாடுதான் எல்லாமே. மத்தவங்க பார்வையில் எப்படியோ... என் பார்வைக்கு மயானம் கோயிலாகவே தெரியுது. இங்க எரியூட்ட வரும் சடலங்கள் எனக்குக் கடவுள்களாகவே தெரியுறாங்க. சவால்களை எதிர்கொள்ள முடியாதவங்களே, குறைகளை முன்வைப்பாங்க. ஆனா, எல்லா விஷயத்தையும் பாசிட்டிவா அனுகிறவங்க பார்வைக்கு எல்லாமே உயர்வானதுதான்.’’ 

நம்பிக்கையுடன் பேசும் ஜெயந்தி, இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களைச் சிதையூட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.