Published:Updated:

சமத்துவம் எப்போது? - அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!

சமத்துவம் எப்போது? - அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சமத்துவம் எப்போது? - அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!

-சுகிதா சாரங்கராஜ்

சமத்துவம் எப்போது? - அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!

-சுகிதா சாரங்கராஜ்

Published:Updated:
சமத்துவம் எப்போது? - அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சமத்துவம் எப்போது? - அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!

க்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் பெண்கள் குடியரசுத் தலைவராக, பிரதமராக, முதல்வராக என்று பல பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள். அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுக்கு இல்லாத பெருமையாக, பெண்கள் உயர் பொறுப்புகளில் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். `பெண்களுக்கு அதிகாரம் வழங்க மறுக்கப்படுகிறது' என்பது போன்ற குற்றச்சாட்டுகள் இருக்கும்போது அதிகாரம்பெற்ற பெண்கள் என்னவாக இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள் என்பதும் பரிசீலனைக்குரியது. பெண்கள் அதிகாரத்தில் இருக்கும்போது ஊழல், குற்றங்கள் குறைகிறது என்பது உண்மையே. அதேநேரத்தில், ஜெயலலிதா எதிர்கொண்ட சொத்துக்குவிப்பு வழக்கு, மாயாவதி எதிர்கொண்ட தாஜ் காரிடார் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள், மம்தாவைச் சுற்றிச் சுழலும் சாரதா சிட்பண்ட் ஊழல் குற்றச்சாட்டு, சோனியாவின் மீது வைக்கப்படும் நேஷனல் ஹெரால்டு குற்றச்சாட்டு என முக்கியப் பொறுப்புகளிலிருந்த பெண்கள்மீது விழுந்துள்ள ஊழல் கறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண் குடியரசுத் தலைவர்

இந்தியாவின் 12-வது குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் பொறுப்பேற்றார். ராஜஸ் தான் ஆளுநராக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்தவர் பிரதீபா. பீரங்கி வாகனத்தில் ராணுவ உடையில் பயணம் செய்த முதல் குடியரசுத் தலைவர் என்கிற பெருமையும் பிரதீபா பாட்டீலுக்கு உண்டு.  இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் அரசுப் பணத்தை அதிக  அளவில் செலவு செய்தார் என்ற விமர்சனம் எழுந்தது.

சமத்துவம் எப்போது? - அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!

பெண் ஆளுநர்கள்

சரோஜினி நாயுடு தொடங்கி தமிழகத்துக்குப் பொறுப்பேற்ற பாத்திமா பீவி உட்பட  31 பேர் இதுவரை பெண் ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் (பாத்திமா பீவி உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும்கூட). 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, மோடி ஆட்சியில் இதுவரை ஏழு பெண்கள் பா.ஜ.க-வில் இருந்து ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண் சபாநாயகர்கள்

சபாநாயகர்களாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மீரா குமார், பா.ஜ.க ஆட்சியில் இருந்த சுமித்ரா மகாஜன் இருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டார்களா அல்லது தங்களது கட்சிக்கு சாதகமாகச் செயல்பட்டார்களா என்பது அவர்கள் மனசாட்சிக்கே தெரியும்.

பெண் பிரதமர்

முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பொறுப்பேற்றபோது `இந்தியா என்றால் இந்திரா; இந்திரா என்றால் இந்தியா' என்கிற முழக்கம் இந்தியா முழுவதும் வைக்கப் பட்டது. தனது செயல்பாடுகள் மூலம் இரும்புப் பெண்மணியாகவே திகழ்ந்தார் இந்திரா. ஓரிரவில் தனியார் வங்கிகளை தேசியமயமாக்கினார். 1969-ம் ஆண்டு, இந்திரா எடுத்த அந்த முடிவுதான்  இந்தியப் பொருளாதாரத்தை இன்றும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. மன்னர் மானியம் ஒழிப்பு, உணவுக்கு வழிகாட்டும் பசுமைப் புரட்சி, பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தைப் பிரித்துத் தனி நாடாக்கியது போன்ற அதிரடி முடிவுகள் இந்திராவின் தனிப்பட்ட பெருமைகள் மட்டுமே அல்ல... இவையே அரசியலில் பெண்களின் ஆளுமைக்கான  அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தன.

அதே இந்திரா அவசர நிலை பிரகடனத் தைக் கொண்டுவந்தது இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, இந்திராவின் வரலாற்றிலும் கரும்புள்ளி. ஆனால், அந்தத் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டதையும், `தோல்வி அடைவோம்' என்று தெரிந்தும் தேர்தலைச் சந்தித்த துணிச்சலையும் இந்திராவிடமிருந்து அரசியலில் ஈடுபடும் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இழந்த பெயரை மூன்று ஆண்டுகளில் மீட்டெடுத்த சாதுர்யமும் இந்திராவிடம் இருந்தது. பஞ்சாப் பொற்கோயிலில் புகுந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை அகற்ற எடுத்த அதிரடி முடிவான ஆபரேஷன் புளூ ஸ்டார்தான் அவருக்கு ஆபத்தையும் தேடித் தந்தது. ஆபரேஷன் புளூ ஸ்டார் வெற்றிபெற்றது. ஆனால், அந்தத் தடாலடி முடிவுதான் தன் பாதுகாவலர்களாலேயே படுகொலை  செய்யப்பட காரணமாகவும் அமைந்தது.

பெண் கட்சித் தலைவர்

பின்னாளில் இந்திராவின் மருமகளான சோனியா காந்திக்கு, தேர்தல் களத்தில் படுகொலை செய்யப்பட்ட கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு நெருக்கடியான தருணத்தில்,  காங்கிரஸ்  கட்சிக்குத் தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டது. இத்தாலியில் பிறந்தவர் இந்தியாவின் முதுபெரும் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்ததோடு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை அமைத்து காங்கிரஸுக்குப் புது ரத்தம் பாய்ச்சினார் சோனியா காந்தி.

ராஜீவ் மரணத்தையடுத்து, `இனி காங்கிரஸ் அவ்வளவுதான்' என்று நினைத்தவர்களுக் கெல்லாம் காங்கிரஸின் பலம் தானே என்று நிரூபித்ததோடு, `சோனியாதான் காங்கிரஸ்; காங்கிரஸ்தான் சோனியா' என்கிற நிலையையும் உருவாக்கினார். இந்திரா படுகொலைக்குப் பிறகு சீக்கியர்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தபோது சீக்கியரான மன்மோகன் சிங்கைப் பிரதமராக்கியதில் வெளிப்பட்டது சோனியாவின் அரசியல் முதிர்ச்சி. அதே நேரத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ஊழலைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் சோனியா என்கிற குற்றச்சாட்டும் உண்டு.

பெண் முதல்வர்கள்

தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்ற வி.என்.ஜானகி தொடங்கி அதன்பின் வந்த ஜெயலலிதா, டெல்லியில் ஷீலா தீட்சித், குஜராத்தில் ஆனந்தி பென் பட்டேல், ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி, காஷ்மீரில் மெகபூபா முப்தி என்று பெண்கள் மாநிலங்களை ஆண்டதும், ஆண்டு கொண்டிருப்பதும் வரலாறு.

இன்று வரை அவர்களால் பெண்களுக்கு உரிய அங்கீகாரத்தை, தன் அதிகாரத்தைக் கொண்டு வழங்க முடியவில்லை என்பதும் கண்கூடு. தொடர்ந்து பெண்ணுரிமைக் கொள்கைகளை முன்னிறுத்தும் கம்யூ னிஸ்ட்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த மாநிலங்களில்கூட ஒரு பெண் முதல்வரைக்கூட நிறுத்தவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமே.

பெண் அமைச்சர்கள்

வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜின் பணிகளையும், இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் சிக்கல் ஏற்பட்டபோது அவர்களை மீட்க சுஷ்மா எடுத்த முயற்சிகளை யும் நினைவுகூர்வது அவசியம்.

முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பெருமையோடு அந்தப் பதவிக்குப் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன்... சீன எல்லையில் வீரர்களோடு கை குலுக்கியது, பத்திரிகையாளர் சந்திப்பில் கறாராகப் பேசுவது என அவருக்கென்று தனி அடையாளங்களை கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்படுத்திக் கொண்டார். தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்டவர் என்கிற பெருமை இருந்தாலும், தமிழக உரிமை சார்ந்த விஷயங்களில் குறிப்பாக நீட், காவிரி விவகாரங்களில் நிர்மலாவின் பங்கு என்ன என்கிற கேள்வியும் உள்ளது.  ரஃபேல் விவகாரம் தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய, தேதிவாரியான புள்ளி விவரங்களுடனான ஆவேச உரை குறிப்பிடத்தக்கது. நாடாளு மன்றத்தில் வியத்தகு உரையாற்றி, ரஃபேல் ஊழலே நடக்கவில்லை என்று சொன்னவர், மக்கள் மன்றத்தில் சொல்லாதது ஏன் என்பதும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ராகுல் காந்தி பிரசாரங்களில் ரஃபேல் குறித்துப் பேசியபோதும், நிர்மலா சீதாராமனால் ஒரு பிரசாரக் கூட்டத்தில்கூட பதிலடி கொடுக்க முடியவில்லை. கடந்த ஐந்தாண்டுக்கால மோடி ஆட்சியில் எல்லாப் பிரச்னைகளிலும் முன் வரிசையில் நின்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏன் தேர்தல் பிரசாரங்களில் காணப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பேசிய அளவுக்கு அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் என்கிற முறையில் நிர்மலா சீதாராமன் பேசவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமத்துவம் எப்போது? - அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!

புது வரவு

காங்கிரஸின் புது வரவு பிரியங்கா காந்தி. அவருடைய பிரசாரங்கள் இந்தத் தேர்தலில் பெரிய அளவில் பேசு பொருளாகின.  உத்தரப்பிரதேச மாநிலக் கிழக்குப்பகுதி காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பிரியங்கா காந்தி. சமீபத்திய தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமன்றி, கேரளாவின் வயநாட்டிலும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தன் சகோதரருமான ராகுலுக்காகப் பிரசாரம் செய்திருக்கிறார், குழந்தைகளிடம் பேசுகிறார். தொழிலாளர்களுடன் உரையாடுகிறார். வணிகர்களிடம் வர்த்தக நிலைமை குறித்துக் கேட்டறிகிறார். சமீபத்தில் இருளர்களோடு அவர் பேசிக்கொண்டிருந்ததோடு, அவர்களிடமிருந்த பாம்பைக் கையில் பிடித்துப்பார்த்தபோது பாட்டி இந்திராவை நினைவூட்டினார். இருளர் சமூகத்தினரின் குரலைக் கேட்கும் சாமான்யராகவும் சமூகநீதி தளத்தில் தன்னை நிலைநிறுத்துகிறார் பிரியங்கா. பிரசாரங்களின் வாயிலாகக் கட்சிப் பணியைத் தொடங்கியிருக்கும் பிரியங்கா, நாளை தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்த பிறகு எப்படி இருக்கப் போகிறார் என்பதை அறிய நம்மைப் போன்று காலமும் காத்திருக்கிறது.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழக எம்.பி-களில் கனிமொழி, இட ஒதுக்கீடு, நீட், பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா, குழந்தை உரிமை போன்றவற்றில் மாநிலங்களவை விவாதங்களில் தனித்து அடையாளம் காணப்பட்டார். நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேசியபோது, தோழமைக் கட்சிக்காரர் என்றும் பாராமல் அவர் இருக்கைக்கு அருகில் சென்று, ‘என்ன அநியாயம் இது?' என்று கனிமொழி உரக்கக் கேட்டார். இது நாடாளுமன்றத்தில் ஒலித்த கனிமொழியின் குரலாக மட்டுமல்ல;  இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்டோரின் குரலாகவும் பார்க்கப்பட்டது. 

தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (அண்மையில் மறைந்த) வசந்தி ஸ்டாலின், தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், காங்கிரஸில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் போன்றோர் நாடாளுமன்ற விவாதங்களில் தமிழக உரிமை களுக்காகப் பேசியது நினைவுகூரத்தக்கவை.

கட்சிப் பொறுப்புகளில் பெண்கள்

தமிழகக் கட்சிகளில் உயர் பொறுப்புகளில் இருந்த பெண்களும் சொற்பம்தான். இறக்கும் வரை பொதுச் செயலாளராக இருந்தார் ஜெயலலிதா. இப்போது தே.மு.தி.க-வின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தமிழகக் கட்சிகள் பொதுவாக மகளிர் அணியைத் தாண்டி மற்ற அணிகளுக்குப் பெண்களை அணித் தலைவராக நியமிப்பதில்லை.

சுயமரியாதை, பெண்ணுரிமைக்குச் சட்டங்களும் திட்டங்களும் கொண்டுவந்த திராவிட இயக்கத்தைத் தாய்க்கழகமாகக் கொண்ட தி.மு.க-வின்  65 மாவட்டச் செயலாளர்களில் மூன்று பெண்கள்தாம் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக கீதாஜீவன், வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வி, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோரே அவர்கள். சிவகங்கை திருமொழி, கோவை நிலா மணிமாறன், மதுரையில் முன்பு பாண்டியம்மாள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்டச் செயலாளர்களாகப் பெண்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். பா.ம.க-விலும், கமலின் மக்கள் நீதி மய்யத்திலும், நாம் தமிழர் கட்சியிலும் சொற்ப எண்ணிக்கையில் மாவட்ட அளவில் பெண்கள் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா தலைமையிலிருந்த அ.தி.மு.க-வில் ஒரு பெண் மாவட்டச் செயலாளர்கூடக் கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் ஒரு பெண் மாவட்டச் செயலாளர்கூட இதுவரை நியமிக்கப்படவில்லை.

சமத்துவம் எப்போது? - அரசியல் பொறுப்புகளில் பெண்கள்!

தமிழக பா.ஜ.க-வுக்கு மாநிலத் தலைவராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டது, வரவேற்கக்கூடிய விஷயம். அதே கட்சியில் வானதி சீனிவாசனுக்கும் தேசிய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் சட்டமன்றக் கொறடாவாக இருக்கும் விஜயதாரணி, மக்களின் மனத்தில் இடம்பிடித்ததாலேயே தொடர்ந்து மூன்று முறை வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலபாரதி எனப் பெண் எம்.எல்.ஏக்களில் சிலரே தனித்துவத்தோடு செயல்படுவதைக் காணமுடிகிறது. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்காகப் பெருமளவில் சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததில் இவர்களது பங்கு அதிகம்.  இப்படி  விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தமிழகத்தில் அரசியல் பணிகளில் உயர் பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டோ, நியமிக்கப்பட்டோ பெண்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வர்களில் பெரும் பாலான பெண்கள் வாரிசு அடிப்படையில் வந்தவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையே. சாமான்ய கடைக்கோடித் தொண்டராக உள்ள ஒரு பெண், அதிகாரப் பட்டியலுக்குள் வருவதற்கான வாய்ப்புகளைக் கட்சிகள் உருவாக்கியிருக்கின்றனவா என்கிற கேள்வியோடே 33% மகளிர் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை உணர வேண்டியுள்ளது.

கட்சிகளில் நடிகைகள்

வாரிசு அரசியலுக்கு அடுத்தபடியாக, கட்சிப் பொறுப்புகளில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சில நடிகைகள் அரசிய லுக்கு வந்துள்ளனர். குஷ்பு, ஜெயப்பிரதா, ஹேமமாலினி, ரேகா, நக்மா, பிரியங்கா சதுர்வேதி, பூனம் பாஜ்வா, ஊர்மிளா உள்ளிட்ட நடிகைகள் பலருக்கு அவரவர் உள்ள கட்சியில் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் நடிகைகளைத் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதோடு சரி... முக்கியமான பணிகளில் நடிகைகளின் பங்கை அரசியல் கட்சிகள் அனுமதிப்பதில்லை.

பெண் செய்தித் தொடர்பாளர்கள்

குறைவான அளவிலேயே அரசியல் கட்சிகளில் செய்தித் தொடர்பாளர்களாகப் பெண்களை நியமித்திருக்கிறார்கள். அதுவும் தமிழகத்தில் மிக மிகக் குறைவான பெண் செய்தித் தொடர்பாளர்களே உள்ளனர் என்பதை தினமும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் அரசியல் விவாதங்களில் பங்குபெறும் பெண் பேச்சாளர்களை வைத்தே புரிந்துகொள்ள முடிகிறது.

முதலில் கட்சிகளின் உள்ளே பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கத் தொடங்கினால் தான், பின்னர் நாடாளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் பெண்கள் நிறையத் தொடங்குவார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism