நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

டேர்ம் இன்ஷூரன்ஸ்... குடும்பத்தைக் காக்கும் பாராசூட்!

டேர்ம் இன்ஷூரன்ஸ்... குடும்பத்தைக் காக்கும் பாராசூட்!
பிரீமியம் ஸ்டோரி
News
டேர்ம் இன்ஷூரன்ஸ்... குடும்பத்தைக் காக்கும் பாராசூட்!

புனீத் நந்தா, துணை நிர்வாக இயக்குநர், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ்

விண்ணிலிருந்து குதிக்கும் விளையாட்டு வீரர்கள் பாராசூட் இல்லாமல் குதிப்பார்களா? நிச்சயமாகக் குதிக்கமாட்டார்கள்.   பாதுகாப்பான முறையில் தரையிறங்கவே அவர்கள் விரும்புவார்கள். ஆயுள் காப்பீடு என்பது ஒரு குடும்பத்தில் வருமானத்தை ஈட்டும் நபர் எதிர்பாராத வகையில் இறந்தால், அந்தக் குடும்பத்தைப் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கும் ஒரு பாராசூட் எனலாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்... குடும்பத்தைக் காக்கும் பாராசூட்!

இந்தியர்கள் பணத்தைச் சேமிப்பதில் கில்லாடிகள். ஆனால், மிகப் பெரிய அளவில் பணத்தைச் சேமிக்க நீண்ட காலமும் ஒழுக்கமும் தேவை. வாழ்க்கை என்பது கணிக்க இயலாதது;  அமைதியான வாழ்க்கை எந்த நேரமும் சூறாவளியாக மாறி, நமது சேமிப்பினைச் சீர்குலைத்து விடும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்

இதுபோன்ற சூறாவளியைக் கையாள உதவும் இன்ஷூரன்ஸ் (Term Insurance) பாலிசிதான் டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது. மென்பொருள் வல்லுநரான      30 வயது மகேஷையும், குடும்பத் தலைவியான அவரின் மனைவி 29 வயது தீப்தியையும் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். மகேஷ் ரூ.50 லட்சத்துக்கான வீட்டுக் கடனை வாங்கியிருந்தார். குடும்பத்தின் சேமிப்புக்காக மாதந்தோறும் 15,000 ரூபாயை ஒதுக்கிவந்தார்.

எதிர்பாராமல் நடந்த சில நிகழ்வுகளால் மகேஷ் இப்போது உயிருடன் இல்லை. இந்த நிலையில், வீட்டுக் கடனுக்கான மாதாந்தரத் தவணைத் தொகையைச் செலுத்தி வீட்டைத் தக்கவைப்பது எப்படி, எந்தவிதமான வருமானமும் இல்லாமல் வாழ்க்கையைத் தொடர்வது எப்படி, எதிர்காலச் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் என்னவாகும், நிலையான வருமானம் இல்லாத நிலையில் செலவுகளை எப்படி எதிர்கொள்வது  என்பதுபோன்ற கேள்விகள் தீப்தியின்முன் எழுந்தன.

இதேநேரத்தில் மகேஷ் ரூ.1 கோடிக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்து, அதனால் பயனடையும் நபராக தீப்தியைச் சேர்ந்திருந்தால், அவருக்குக் காப்பீடு செய்யப்பட்டிருந்த தொகை முழுமையாகக் கிடைத்திருக்கும். இதன்மூலம் அவர் வீட்டுக் கடனை அடைத்து, தினசரிச் செலவுகளை எதிர்கொண்டு, சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களைத் தொடர்ந்திருக்க முடியும். கையில் கிடைக்கும் மிகப் பெரிய தொகையைக்கொண்டு, எதிர்காலம் குறித்து திட்டமிடத் தேவையான நேரம் அவருக்குக் கிடைத்திருக்கும். டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டமானது, ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபர் திடீரென்று இறந்துபோனால், அந்தக் குடும்பம் பொருளாதாரச் சீரழிவில் சிக்கிக்கொள்வ திலிருந்து மீட்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஈட்டும் மாற்றுவழியாகச் செயல்படும்.

பிரீமியம்

டேர்ம் பிளானுக்கான பிரீமியம் மிகக் குறைவு. 30 வயதுள்ள ஒருவருக்கு ரூ.1 கோடி ரூபாய்க்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க ஆண்டுக்கு 8,000 ரூபாயிலிருந்து ரூ.12,000 வரை பிரீமியம் செலுத்தினால் போதும். இந்த பாலிசியில், பாலிசி காலத்தில் இன்ஷூரன்ஸை எடுத்திருப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டுமே குடும்பத்துக்கு இழப்பீடு கிடைக்கும். பாலிசி முடிவில் தொகை எதுவும் கிடைக்காது.  

ரூ.10 லட்சம் மதிப்புள்ள காருக்கான பிரீமியத் தொகையாக ரூ.25,000 செலுத்துவதை ஒப்பிட்டுப் பார்த்தால், இது மிகவும் குறைவான தொகையாகும். ஒரு குடும்பத்திலுள்ள வருவாய் ஈட்டும் நபர், டேர்ம் பிளான் எடுக்கும்முன் ஒரு காரை வாங்குகிறார் எனில், அவர் தன் குடும்பத்தைவிட காருக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் என்று அர்த்தம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்... குடும்பத்தைக் காக்கும் பாராசூட்!

சிக்கலான நோய்கள்... ஹெல்த் இன்ஷூரன்ஸின் பயன்கள்

இன்றைய வாழ்க்கை முறையில், சிக்கலான நோய்கள் (க்ரிட்டிக்கல் இல்னஸ்) மனிதர்களை எதிர்பாராத விதத்தில் தாக்குவது அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், சிக்கலான நோய்கள் ஏற்படும்போது நிதி உதவிகளை வழங்கும்விதமாக தங்களின் காப்பீட்டுத் திட்டங்களை வடிவமைத்துள்ளன. மாரடைப்பு, மார்பகப் புற்றுநோய், கருப்பை கர்ப்பப்பைவாய் புற்றுநோய்கள், பார்கின்சன்ஸ், அல்ஸைமர் உள்ளிட்ட பொதுவான சிக்கலான நோய்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வருகின்றன.

எனவே, மகேஷ் ஏன் சிக்கலான நோய்களை உள்ளடக்கிய காப்பீட்டைச் செய்திருக்கக்கூடாது? எந்தவகையில் இது அவருக்குப் பயன் அளித்திருக்கும்?

சிக்கலான நோய்களுக்கான ரூ.30 லட்சம் காப்பீட்டுடன்கூடிய ரூ.1 கோடிக்கான டேர்ம் பிளானை மகேஷ் வாங்கியிருந்தால், காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு நோயால் மகேஷ் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அவருக்கு ரூ.30 லட்சத்தை அளித்திருக்கும். இந்தக் காப்பீட்டுத் தொகையானது அவரது வங்கிக் கணக்குக்கு வரும் என்பதால், நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ பணத்தைத் திரட்ட வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதில் அவர் கவனம் செலுத்தியிருக்க முடியும்.

விபத்தில் இறந்திருந்தால் கிடைக்கக்கூடிய பலன்கள்

காப்பீடு செய்துகொண்டவர் திடீரென விபத்தில் பலியானால் அவரின் குடும்பத்தினர் பலனடையும் வகையில் ஆயுள் காப்பீட்டில் வழி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆயுள் காப்பீட்டைவிட அதிக அளவிலான தொகை கிடைக்கும். ஒட்டுமொத்த பிரீமியத் தொகையுடன் ஒரு குறிப்பிட்ட அளவுக்கான சிறிய தொகையை பிரீமியமாகச் செலுத்தினாலே இந்த பலன்களைப் பெறலாம்.

உதாரணமாக, மகேஷ் 30 ஆண்டு காலத்துக்கான ரூ.1 கோடிக்கான டேர்ம் காப்பீட்டை செய்வதுடன் ஆண்டொன்றுக்கு ரூ.1,400 செலுத்தி, ரூ.25 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டையும் செய்திருக்கலாம். இதன்மூலம் மகேஷ் விபத்தில் இறந்திருந்தால், அவரது மனைவி தீப்திக்கு ரூ.1.25 கோடி இழப்பீடாகக் கிடைத்திருக்கும்.

இந்த நவீன காலத்துக்கேற்ற டேர்ம் பிளான்கள், ஒரு குடும்பத்தைப் பொருளாதார சீர்குலை விலிருந்து காப்பதற்குத் தேவையான பாதுகாப்புத் திட்டங்களை வழங்குகின்றன. டேர்ம் பிளான் ஒரு குடும்பத்துக்கான மாற்று வருவாய் வழிகளைக் கொண்டுவருகிறது. எனவே, வருவாயை ஈட்டும் ஒவ்வொரு தனிநபரும் டேர்ம் இன்ஷூரன்ஸை எடுத்து, குடும்பத்தைக் காக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!