Election bannerElection banner
Published:Updated:

``அந்த டி.வி. நிகழ்ச்சி, ரொம்ப டென்ஷனாக்கிருச்சு!" -'ரோபோ' சங்கர் #LetsRelieveStress

``அந்த டி.வி. நிகழ்ச்சி, ரொம்ப டென்ஷனாக்கிருச்சு!" -'ரோபோ' சங்கர் #LetsRelieveStress
``அந்த டி.வி. நிகழ்ச்சி, ரொம்ப டென்ஷனாக்கிருச்சு!" -'ரோபோ' சங்கர் #LetsRelieveStress

``அந்த டி.வி. நிகழ்ச்சி, ரொம்ப டென்ஷனாக்கிருச்சு!" -'ரோபோ' சங்கர் #LetsRelieveStress

''நாம எதைக் கொடுக்கிறோமோ அதைத்தான் மற்றவர்களும் நமக்குக் கொடுப்பாங்க. நான் ஒரு ஹேப்பி செல்லர்" என்கிறார் நடிகர் ரோபோ சங்கர். டென்ஷன் மன அழுத்தம் தரும் தருணங்களைத் தான்  கடந்து வந்த விதம் பற்றி இங்கே விவரிக்கிறார்.

``நான் சின்ன வயசிலிருந்தே ஏகப்பட்ட தோல்விகளையும் கஷ்டங்களையும் பார்த்து வளர்ந்தவன். சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் எரியூர் . படித்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்தான். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நான் ஃபெயிலாயிட்டேன். ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. அதற்கப்புறம் யாரையும் சார்ந்திருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன். 15 வயசிலிருந்தே என்னால் செய்யமுடிந்த சின்னச் சின்ன வேலைகளைச் செய்தேன். 

கொஞ்ச நாள் மதுரா கோட்ஸ்ல மூட்டை இறக்கிற வேலை, டீக்கடையில் வேலை, பொருட்காட்சியில் கரும்பு ஜூஸ் கடையில், இப்படிப் பல இடங்களில் வேலை பார்த்தேன். பத்துரூபா பதினைஞ்சு  ரூபாதான்  சம்பளமாக் கிடைக்கும். நான் சொல்றது 1993 - ல் 

அப்புறம் பத்தாவது பாஸ் பண்ணி, ப்ளஸ் டூ  முடிச்சு, பி.ஏ வரலாறு, எம்.ஏ பொருளாதாரம்னு படிச்சேன். காலேஜ்ல படிக்கும்போதே காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திருச்சி ஜிம்முக்குப் போயிடுவேன். 'ஜிம்'மில்  மாஸ்டரா வேலை பார்த்தேன். 

காலையில ஒன்பது மணிக்கு காலேஜ்; திரும்ப அஞ்சு மணிக்கு பழையபடி ஜிம். இரவு எட்டு மணிவரை அங்கே ஜிம்மிலேயே இருப்பேன். அப்புறம் டான்ஸ் க்ளாஸ். டான்ஸ், பாட்டுன்னு இரவு 12 மணி வரை  அப்படியே போகும். அந்தக் காலத்தில் இருந்தே என்னை எப்போதும் நான் பிஸியாகவே வச்சிக்குவேன். அது இப்பவும் தொடருது. அதனால ஸ்ட்ரெஸ், டென்ஷனெல்லாம் கிட்டேயே வராது. வந்தாலும் விரட்டி விட்டுடுவேன். 

ரொம்பவும் டென்ஷனா இருந்ததுன்னு சொல்லணும்னா 2004 'கலக்கப்போவது யார் ?' நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுதான். முதன்முதலா அந்த ஷோ அறிமுகமானபோதே போட்டியில் கலந்துக்கிட்டேன். 

நான் கமல் சாரோட ஃபேன்ங்கிறதால அவரோட வாய்ஸை ரொம்ப விரும்பிப் பேசுவேன். அவர் முன்பாகப் பேசும்போது எதாவது சொல்வாரோன்னு நினைச்சேன். ஆனால், ரொம்பவே பாராட்டினார். இன்னிக்கு டான்ஸ்,  மிமிக்ரி, ஸ்டண்ட் அப் காமெடி, நடிப்புனு பல விஷயங்கள் பண்றேன். அதுவும் 'மாரி' படத்துல தனுஷ்கூட நடிச்சதுக்குப் பிறகு நிறைய படவாய்ப்புகள். 

தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் என்னைப் பலருக்கும் தெரியுது. ஆனா, இதையெல்லாம் பார்க்க, என் இரண்டு அண்ணன்களும் இல்ல. ஹார்ட் அட்டாக்கில இறந்துட்டாங்க அதுதான் என் மனசுக்குத் தீராத வலியாயிருக்கு. ஒரு அண்ணன் 37 வயசிலயும், இன்னொருத்தர் ஐம்பது வயசிலயும் இறந்துட்டாங்க. நான்தான் கடைக்குட்டி. ஆனால், அதையெல்லாம் வாழ்க்கையில் கடந்துதான் ஆக வேண்டியிருக்கு. அதனால் மனசை சும்மா இருக்க விடாமல் எனக்குப் பிடித்த வேலையை அடுத்தடுத்து செய்துக்கிட்டே இருப்பேன். 

ஏதாவது ஒரு பிரச்னையினால் மன அழுத்தமோ, டென்ஷனோ ஏற்பட்டால், அப்படியே அந்தப் பிரச்னையை ஓரம் கட்டிட்டு, காமெடி சானலை ஆன் பண்ணி, பார்த்துக்கிட்டிருப்பேன். இல்ல, நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசிக்கிட்டு ஜாலியா ஒரு ட்ரைவ் போயிட்டு வருவேன். இல்லைன்னா அடுத்து என்ன வேலை பார்க்கணுமோ அதைப் பார்க்க ஆரம்பிச்சிடுவேன். 

உதாரணமா, நாமளே ஒரு பொருளை வீட்டுக்குள்ளேயே எங்கோ ஓரிடத்தில வெச்சிட்டு, மறந்து போயிருப்போம். திடுதிடுப்புனு அந்தப் பொருள் தேவைப்பட, அதைத் தேட ஆரம்பிப்போம். ஆனா, அந்தப் பொருள் கிடைக்கவே கிடைக்காது. நமக்குக் கிடைக்காதபோதுதான் அந்தப் பொருளின் அருமை தெரியும். அந்த எரிச்சலிலேயே தேடுவோம். எல்லாத்தையும் கலைச்சிப் போட்டுட்டு ஒரு குழப்பமான மனநிலையோடு உட்கார்ந்திருப்போம். அதனால் பிரச்னையை தீர்க்கிறதுக்குப் பதிலா பெருசாக்கிடுவோம். 

இதுமாதிரி நேரத்துல நாம் தேடுறதை விட்டுவிட்டு வேற வேலைகள்ல ஈடுபட்டோம்னா, திடீரென்று நமக்கு ஞாபகம் வரும். 'ஆஹா இந்தச் சீட்டை பத்திரமா இருக்கட்டும்னு ஆபீஸ் டிராயர்ல வைச்சிப் பூட்டினோமே'னு ஞாபகம் வரும். அதனால் பிரச்னையை பக்கத்தில் வைத்துப் பார்க்காமல் தள்ளி வைத்துப் பார்த்தோம்னா... நமக்கு வந்த பிரச்னை இருக்கும் இடம் தெரியாமல் போயிடும். நமக்கும் தெளிவான ஒரு ஐடியா கிடைக்கும். 

இன்னொரு விஷயம் நான் ஒரு இடத்துக்குப் போனால் அந்த இடத்தைக் கலகலப்பாக்கி சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்திடுவேன். நாம எதைக் கொடுக்கிறோமோ அதைத்தான் மற்றவர்களும் நமக்குக் கொடுப்பாங்க. நான் ஒரு ஹேப்பி செல்லர். அதனால், மன அழுத்தத்துக்கு 'நோ' சொல்லுங்க. மன மகிழ்ச்சிக்கு 'எஸ்' சொல்லுங்க" என்று கூறி விடை கொடுத்தார் ரோபோ சங்கர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு